அமெரிக்காவையும், அதன் தலைமையிலான ஐ.நாவையும் மீண்டும் நம்ப வைப்பதன் மூலம், மக்களின் கழுத்தை மீண்டும் ஒருமுறை அறுக்க முனைகின்றனர். மகிந்த நடத்திய இனவழிப்பு வெறியாட்டம் போல், ஐ.நா சார்ந்த நம்பிக்கை என்பது இனவழிப்புக்கு உடந்தையாக இருக்கும் அரசியல் செயலாகும். அன்று தமிழ் மக்களை இலங்கை அரசு பலியெடுக்க, தேசியத்தின் பெயரில் பலி கொடுத்த அதே அரசியல். அதே நபர்கள், அதே அரசியல் வேஷங்களுடன், அன்று போல் இன்று, மீண்டும் அமெரிக்கா ஐ.நா என்று மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்களை தமிழ் மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழிப்பதற்கான தீர்மானமும், அதற்கான போராட்டமும் தான் அமெரிக்கா தலைமையில் இன்று நடக்கின்றது. 1983 களில் தமிழ் மக்களுக்கான போராட்டத்தின் பெயரில் இந்தியா வழங்கிய அரசியல் வழிகாட்டல்கள், இராணுவப் பயிற்சிகள், ஆயுதங்கள் முதல் பணமும் தான் தமிழ் மக்களின் போராட்டத்தையே அழித்தது. இந்தியாவின் இந்தச் செயலைச் சுற்றிய ஆதரவு தான், சொந்த மக்களின் போராட்டத்தை இல்லாமலாக்கியது. இறுதியில் இனத்தையே அழித்தது. இங்கு மகிந்த அரசு ஒரு கருவி. மக்களை அவர்களின் சொந்தப் போராட்டத்தில் இருந்து அன்னியமாக்குகின்ற, மக்கள் தமக்காக தாம் போராட வேண்டும் என்ற மனித உணர்வைச் சிதைக்கின்ற அரசியலுக்கு, 1983 இல் இந்தியா தலைமை தாங்கியது. அதேபோல் 2013 இல் அமெரிக்கா தலைமை தாங்குகின்றது. ஒரே வேலையைத் தான், இந்தியாவின் ஆசியுடன் இன்று அமெரிக்கா செய்கின்றது.

பேரினவாத குடும்ப சர்வாதிகார பாசிச அரசுக்கு எதிராக, இலங்கை வாழ் மக்கள் அரசியல் விழிப்பு பெற்றுவரும் இன்றைய நிலையில், அதை முறியடிக்கும் அரசியல் முன்நகர்வு தான் இது. மக்கள் தமக்கு இடையில் இனம் கடந்து, அரசுக்கு எதிராக சர்வதேசிய உணர்வு பெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான அரசியலுடன் போராட்டம் நடக்கின்றது. ஏதோ அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து கொண்டுவரும் ஐ.நா தீர்மானம், தமிழ் மக்களை மீட்கவும், மகிந்தா குடும்பத்தை தண்டிக்கவும் போவதாக காட்டி கூத்தாட வைக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால்களுக்கு முன்னம் இதே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தை நம்பி, தமிழ் மக்களை பலியிட்டும் இறுதியில் புலித் தலைமையை காட்டிக்கொடுத்தும் துரோக அரசியல் நடத்தியதன் மூலம் இன அழிப்பை நடத்த உதவியவர்கள் தான், மீண்டும் அமெரிக்கா, இந்தியா என்கின்றனர்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் முதல் அனைத்து மனிதவுரி;மை மீறல்களையும் தனித்து இலங்கை செய்யவில்லை. இந்தியா முதல் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மட்டுமின்றி அமெரிக்க நலனுடன் முரண்படும் சீனா, ருசியா வரை, இந்தக் குற்றத்தை செய்ய துணையாக நின்றன. அவர்கள் தான் ஐ.நா தீர்மானத்தையும் கொண்டு வருகின்றனர்.

அன்று இலங்கை மற்றும் அந்தப் பிராந்தியம் மேலான மேலாதிக்கம் சார்ந்து இந்த நாடுகள், பரஸ்பரம் இனவழிப்புக்கு உதவின. இதன் மூலம் இலங்கையை மேலாதிக்கம் செய்ய இந்த நாடுகள் முனைந்தன. இலங்கையின் இனவழிப்புக்கு உதவியதன் மூலம், தனித்து ஒரு முகாம் சார்ந்த மேலாதிக்கத்தை இலங்கையில் நிறுவிவிடமுடியவில்லை. இலங்கை மீதான இந்த மேலாதிக்கத்துக்கான போராட்டம் தொடருகின்றதால் தான், அது இன்று போர்க்குற்றம் தொடர்பான ஒன்றாக தன்னை வெளிப்படுத்துகின்றது. அன்று இன அழிப்புக்கு உதவியது போல், போர்க்குற்றத்தை மூடிமறைக்க உதவுவதன் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் நிறுவ முனைகின்றது. போர்க்குற்றத்தை பேசி, அதை மூடிமறைக்க உதவுவதன் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவ முனைகின்றனர். இன்று நடத்து கொண்டிருப்பது இதுதான்.

மென்மையானதும் ஆனால் மிரட்டுகின்ற இராஜதந்திரம் மூலம், இலங்கை மேலான மேலாதிக்கத்தை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து முன்வைக்கின்றது. "அணிலை ஏற விட்டு அண்ணாந்து பார்க்கும் நாய் போல்", இந்த அமெரிக்கா இந்தியாவின் தீர்மானத்தின் பின்னால் போராட்டம் நடத்துகின்றனர். இந்தத் தீர்மானம் பேரினவாதப்பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்கும் என்றும், போர்க்குற்றவாளி ராஜபக்ச குடும்பம் முதல் அரசு இயந்திரமே தண்டிக்கப்படும் என்று நம்பவைத்து, தமிழ் மக்களின் கழுத்தை அறுக்கும் போராட்டம் தான் இது. இதுவே ஐ.நா தீர்மானத்துக்கு பின்னால் செல்ல வழிகாட்டும் அரசியலாகும்.

 

தமிழக மாணவர்களின் உணர்வுகள் சரியானதா?

 

தமிழ் மக்களை மீண்டும் நம்பவைத்து அவர்களின் கழுத்தை அறுக்கும் அலுக்கோசுத்தனத்துக்குத் தான், தமிழக மாணவர்களின் போராட்டங்கள் உதவுகின்றது. 1983 இல் இதே தமிழக மக்களின் உணர்வுகள், இந்திய மேலாதிக்க நலன் சார்ந்த இந்திய மேலாண்மைக்கு உதவியது. இதன் மூலம் தமிழ்மக்களின் சொந்தப் போராட்டங்கள் காயடிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு, அவர்களது சொந்தப் போராட்டத்துக்கு உதவவேண்டிய மனித உணர்வுகள், தவறான கோசங்கள் தவறான பார்வைகள் மூலம் இந்திய மேலாதிக்க நலனுக்கு உதவியது. இதன் மூலம் தமிழ் மக்களின் சொந்த போராட்டத்தை சிதைத்து, மக்களை பலி கொடுத்தவர்களை தமிழ் மக்களின் மீட்பாளராகக் காட்டியே இனவழிப்புக்கு உள்ளாக்கினர். 2013 இல் இலங்கை மக்களை அமெரிக்கா பின்னால் அணிதிரண்டு போராடுமாறு கூறுவதன் மூலம், அந்த மக்களிடமிருந்து எழுகின்ற தொடர்ச்சியான புதிய போராட்டங்களை அழித்துவிடுகின்ற அலுக்கோசு கோசங்களுடன் இன்று தமிழக மாணவர்கள் போராடுகின்றனர். இதனால் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மற்றவனை நம்பி, மீண்டும் ஒரு இன அழிவுதான்.

உணர்வுகள், உணர்ச்சிகள் மக்களை சார்ந்ததாக, அதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். அதற்கு குழிபறிக்கின்ற, மற்றொரு மேலாதிக்கத்துக்கு உதவுவதாக அது இருக்கக் கூடாது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவரும் அமெரிக்காவும், இந்தியாவும், ஐநாவும் சேர்ந்து செய்யாத போர்க்குற்றத்தை, இலங்கை செய்துவிட்டது. இலங்கை அரசு இவர்களுடன் இணைந்து இலங்கையில் செய்த போர்க்குற்றம் போல், அமெரிக்காவும், ஐநாவும் உலகயளவில் போர்க்குற்றங்களை செய்து வருபவர்கள் தான். இவர்களை நம்பி தமிழ் மக்கள் தங்கள் சொந்தப் போராட்டத்தை கைவிடக் கோருவதும், சொந்தப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்க வைப்பதும் தான், தமிழக மாணவர் போராட்டம் முன்வைக்கும் அரசியலும், அரசியல் கோசங்களும்.

இன்று இதற்கு என்ன தீர்வு

இலங்கை மக்கள் சின்னதாகத் தன்னும் அவர்கள் எடுத்து வைக்கும் சிறிய காலடிகளை ஆதரித்து போராட வேண்டும். அதற்கு உதவும் வண்ணம் கோசங்கள் அமைய வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக, தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் அவசியத்தை முன்னிறுத்திப் போராட வேண்டும். அப்படிப்பட்ட போராட்டங்களை ஆதரித்து, அதற்கு குரல் கொடுத்துப் போராட வேண்டும். இலங்கையில் போராடும் சரியான அரசியல் சக்திகளை இனம்காட்டி, அதன் பின் அணிதிரண்டு போராடுமாறு கோரவேண்டும். இந்தியா அமெரிக்கா தங்கள் சொந்த நலனில் நின்று, மக்களுக்கு எதிராக தலையிடுவதற்கு எதிராகப் போராட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தைப் பயன்படுத்தி அதை அரசியல் நீக்கம் செய்யும் வகையில் இலங்கைக்கு உதவுவதன் மூலம் மேலாதிக்கத்தை நிறுவும் சதிக்கும், அந்த அரசியலுக்கும் எதிராகப் போராட வேண்டும்.

இவை அல்லாத அனைத்தும் இலங்கை தமிழ் மக்களை இந்த கொலையாளிகளை நம்பவைத்து, மீளவும் கழுத்தை அறுக்கின்ற அரசியலாகவே தொடரும்.

 

பி.இரயாகரன்

16.03.2013