Language Selection

எல்லாளன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1983 இல் 13 இராணுவத்தினரின் கொலையும் மக்கள் போராட்டமும்

1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய பல இடங்களையும் அவர்கள் ஏற்படுத்திய பல அழிவுகளையும் நாம் பார்த்தோம். வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எமக்குள் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

1983 இனப்படுகொலைகளின் பின் இயக்கத்தில் சேர வேண்டும் என்ற முடிவில் இருந்த எனக்கு புலிகளுடன் சேர வேண்டும் என்ற துளி ஆசையும் இல்லாததிற்கு இந்தத் தாக்கம் ஒரு பெருங் காரணமாகும். அத்துடன் வேறு காரணங்களும் இருந்தன. GUES போன்றவற்றில் வேலை செய்ததால் மக்கள் போராட்டம் சம்பந்தமான குறைந்தபட்ச அரசியல் அறிவும் இருந்தது. அரசியல் கொள்கைகள், தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்தபட்ச அறிவு இருந்தது. போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் எனக்கேற்பட்டிருந்தது.

ஏன் ரெலோவில் சேர்ந்தேன்?

நான் ஏன் ரெலோவிற்குப் போனேன் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலாவது, குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை அவர்களின் நீதிமன்ற உரையும் அந்த உரையை எழுதியவர்களின் எதிர்காலப் பார்வையும் அப்போது என்னைக் கவர்ந்தன. இரண்டாவது, புலிகளைத் தவிர்த்ததற்குரிய காரணம் போராட்டத் தலைமைத்துவம் ஒருவர் சம்பந்தப்பட்டதும், வன்முறையில் மட்டுமே நம்பிக்கை கொண்டதும், அரசியல் அறிவற்ற தன்மையும், ஆகும்.

(தங்கத்துரை)

ஈ.பி.ஆர்.எல்.எஃவ், ஈரோஸ், போன்றவற்றின் ஈழம் (மலையகம் உட்பட) போன்றவற்றில் பெரிதாக விருப்பம் இருக்கவில்லை. GUES மாணவர் அமைப்பாக இருக்கும் போது அவர்களுடன் வேலைசெய்த நான் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தமிழீழ வரைபடத்தினைக் கீறிக் காட்டியபோது குழப்பமடைந்தேன். மலையகம் உட்பட ஈழம் என்பதில் ஆரம்பத்தில் எனக்கு பெரிய கருத்துக்கள் இருக்கவில்லை. இலங்கை வரைபடத்தில் அவர்களின் ஈழத்தினைக் காட்டியபோது ஆசையாகத்தான் இருந்தது. ஏனெனில் இலங்கைத்தீவின் அரைவாசிக்கு மேற்பட்ட பகுதி ஈழத்தில் இருந்தது.

அவர்கள் கூட நிலத்திற்கு ஆசைப்படுகிறார்கள் போலத் தென்பட்டது. இருக்கின்ற நிலம் தினமும் பறிபோகும் போது அதைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக மலையகத்தினையும் இழுத்து வைப்பது என்னவென்று புரியவில்லை. அது நடக்கின்ற காரியமா என்பது அடுத்த விடயமாகத் தென்பட்டது.

புளொட் எனது ஊரில் அந்தக் காலகட்டத்தில் வேலை செய்யவில்லை. அவர்களின் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்கு மேலாக முக்கியமான காரணம் எமக்கு தொடர்பை ஏற்படுத்திய முன்னாள் GUES தோழர் ரெலோவைச் சிபார்சு செய்தார். ரெலோ என்ற கவர்ச்சியினாலும் தங்கத்துரையின் தலைமையில் ரெலோ இயங்கியது எனவும் விளக்கமளிக்கப்பட்டதாலும் அதில் எனக்கு பிடிப்பு ஏற்பட்டது.

அந்தக் காலத்தில் முற்போக்கு அமைப்புக்கள் எனக் கருதப்பட்ட தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (பின்னர் என்.எல்.எஃவ்.ரி) பாதுகாப்புப் பேரவை என்பன நான் கேள்விப்படாத பெயர்களாகவே இருந்தன.

1983 செப்ரெம்பர் மாதம். ஒரு திங்கள் மாலை. கல்லூரி மைதானத்தில் வழமை போல் நாட்டு நிலைமைகளை நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது இயக்கமொன்றில் சேரவேண்டும் என்ற எண்ணத்தை நான் சொன்னேன். அது பலராலும் வரவேற்கப்பட்டாலும் எந்த இயக்கம் நல்லது, எதில் சேருவது என்பவை பிரச்சினைகளாக இருந்தன. இருந்தும் தெரியாத இயக்கத்தைப் பற்றி அறியவும் அதைத் தொடர்பு கொள்ளவும் முயற்சிகள் எடுத்தோம்.

அந்தநேரத்தில் தான் ரெலோவின் தொடர்பு எமக்குக் கிடைப்பதற்கு எனது மத்திய கல்லூரியில் படித்த நண்பர் றோயன் என்பவர் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் ரெலோவைச் சேர்ந்த சிவபெருமான் என்பவரை எம்மிடம் கூட்டி வந்தார். ஆனால் றோயன் எம்முடன் நின்று கதைக்கவில்லை. ஏன் எனக் கேட்டபோது தான் எல்.ரி.ரி.யில் அவசரப்பட்டுச் சேர்ந்து கையெழுத்தும் வைத்துக் கொடுத்து விட்டதாகவும் இனி அங்கு வரமுடியாதென்றும் கூறினார். இன்று வரை அவரை மீண்டும் சந்திப்பதற்கு முயற்சி செய்கிறேன். இவர் மாவீரர் பட்டியலிலும் இல்லை. வெளியேறியதாகவும் இல்லை.

எம்மில் நால்வர் ரெலோ பிரதிநிதியைச் சந்திப்பதற்காக ஆவலாக இருந்தோம். நாம் ரெலொ இயக்கத்தின் செயற்பாடுகள் திட்டங்கள் மற்றும் இயக்க கொள்கை என்பவற்றை கேட்க வேண்டும். அதற்கு இயக்கம் தரும் விளக்கங்களைக் கேட்க வேண்டும். அதைக் கேட்டு நாங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே. ஆனால் வந்த ரெலோ பிரதிநிதி கேட்ட கேள்விகளும் நடந்து கொண்ட முறைகளும் அவரிடம் இருந்து நாம் எப்போ தப்பி ஓடுவோம் என்ற மாதிரி எமக்கிருந்தது.

அவர் எம்மிடம் கேட்ட கேள்விகள் ஒவ்வொருவரின் உயரம், நிறை என்பதாகவும், எப்போது நாம் ஆயுத பயிற்சிக்கு தயார் எனவும், நாம் தயாரானால் தன்னுடன் அப்போதே கூட்டிச் செல்வதாகவும் கூறினார். அதைக் கேட்டவுடன் நாம் சிரித்துக் கொண்டே யோசித்துச் சொல்லி அனுப்புகின்றோம் என்று கூறிவிட்டுத் தப்பினோம் பிழைத்தோம் என ஓடிவந்து விட்டோம். அவ்வாறு கதைத்த நால்வரில் மூவர் வெளிநாடு சென்று விடவேண்டும் என்ற நோக்கத்துடன் தமது வேலைகளைக் கவனிக்க தொடங்கினார்கள். அதனால் நான் தனியாக கல்லூரி மண்டபத்தில் நிற்பதைத் தவிர்த்துக் கொண்டேன். ஏனெனில் என்னிடம் உயரம், நிறை என்று கேட்டவர் வந்து கூட்டிக்கொண்டு போய் விட்டால் எனது வாழ்க்கை அவ்வளவு தான் என்று பயந்தேன்.

அதன் பின் நான் யாழ்ப்பாணம் செல்வதைத் தவிர்த்துக் கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இராணுவத்தின் சோதனைகள் இருந்தன. அடையாள அட்டையுடன் அவர்கள் முன்னால் சென்றாலும் அவர்கள் எங்களை அடிப்பது சர்வசாதாரணம். எனவே யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவை போவது, மற்ற நேரங்களில் எனது கிராமத்தில் நின்றபடியே பாடசாலை பஸ்களின் பின்னால் செல்வது தான் எமது பொழுதுபோக்காக இருந்தது. காலையில் மாணவிகள் பாடசாலைக்கு செல்கின்றார்களா என்று பாடசாலை பஸ் வருமுன் சைக்கிளில் செல்வோம். பின்னர் தேநீர் அருந்தி விட்டு பாடசாலை பஸ் பின்னேரம் வரும்போது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பஸ்ஸைப் பின் தொடர்வோம்.

அதைவிட ஏதாவது அமைப்புக்கள் வந்து, கூட்டம் கூடினால் போய் அவர்களின் கருத்துக்களைக் கேட்போம். அவ்வளவு தான். அப்போது என்னையும் வெளிநாடு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து கொண்டிருந்தன. என்னைப் பொறுத்தவரையில் இயக்கத்தினுள் சேர்ந்து போராட வேண்டும். அல்லது வெளிநாட்டிற்குப் போய் வீட்டாரைக் கவனிக்க வேண்டும். அந்த இரண்டு நோக்கங்கள் என்னிடம் இருந்தாலும், உண்மையில் ஊரில் நின்று ஏதாவது படிக்க வேண்டும். அல்லது உழைக்க வேண்டும் என்ற கருத்தும் என்னிடம் இருந்தன. உண்மையில் ஊரில் நிற்க வேண்டும் என்பதே எனக்கிருந்த ஆசை. ஏனெனில் எனது மண்ணையும் நண்பர்களையும் விட்டுப்பிரிய எனக்கு மனமில்லை.

1983 டிசம்பர் மாதமளவில் மீண்டும் ரெலோ உறுப்பினர் இருவர் கெலன் மற்றும் பறுவா மோகன் (இவர் ரெலா இயக்க தலைவராய் இருந்த ஒபரோய் தேவனின் தம்பி) எனது வீடு தேடி வந்து என்னுடன் மீண்டும் கதைத்து வேலை செய்யவேண்டும் என்றார். அப்போது நான் அவருக்கு முன்பு நடந்தவற்றைக் கூறினேன். அத்துடன், நான் ஊரில் நிற்க விரும்புகிறேன் என்றும் ரெலோவைப் பற்றி மேலும் அறிய வேண்டும் என்றும் கூறினேன்.

இயக்கத்தினருக்கு மக்கள் மத்தியில் இருந்த புனித ஸ்தானம்

இந்தக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் இயக்கத்திற்கு வேலை செய்பவர்களைப் புனிதமாகப் பார்க்கும் நிலை இருந்தது. அதனால் எப்போது எனது தொடர்புகளை இயக்கத்துடன் வைத்துக் கொண்டேனோ அன்றிலிருந்து பாடசாலை பஸ்களின் பின்னால் செல்லும் வழக்கத்தையும் நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பதையும் விட்டு விட்டேன். எனது வாழ்க்கையில் புதுவித அர்த்தம் இருப்பதாகவே உணர்ந்தேன். உதாரணமாக, நான் எந்தப் பெண்ணுடன் பழக வேண்டும் என்றிருந்தேனோ அதே பெண் என்னுடன் பழகிய போது என்னுடைய பழக்கம் அந்தப் பெண்ணிற்கு ஆபத்தாக வந்து விடும் என்று எண்ணி நான் விலகியே விட்டேன்.

எனது வயதுக் கோளாறு பலமுறை வந்து போய்க் கொண்டிருந்தாலும் ஸ்தாபனத்தின் பெயர் கெடாமல் எல்லாவற்றையும் தவிர்த்துக் கொண்டேன். மக்கள் தமது பிரச்சினைகள் எல்லாவற்றையும் எம்மால் தீர்க்கப்பட வேண்டும் என்றே விரும்பினர். காணிப் பிரச்சினை, வேலிப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை என்று பலவற்றையும் தீர்க்குமாறு எங்களைக் கேட்டனர். நான் அதற்கு மறுத்து அந்தப் பிரச்சினைகளை அவர்களையே தீர்க்குமாறு கேட்டபோது மற்ற இயக்கங்கள் எல்லாம் தீர்க்கின்றன, ஏன் உங்களால் அவற்றைத் தீர்க்க முடியாதா எனக் கேட்டார்கள்.

உதாரணமாக, எனது அயல் கிராமமான உரும்பிராயில் ரெலோவின் கலண்டர்களை விற்கச் சென்றோம். அந்தக் கிராமம் முழுவதும் புளொட் ஆதரவாளர்களாகவே காணப்பட்டனர். எனினும் பலர் எமது கலண்டர்களை வாங்கி ஆதரவு அளித்தார்கள். அதன் மூலம் பல மக்களை ரெலோவினது வேலைப்பாடுகளுக்குள் இணைக்கக் கூடியதாக இருந்தது. ஒருவர் என்னிடம் கலண்டர் ஒன்றை வாங்கினார். தான் பல விடயங்கள் கதைக்க வேண்டும் என்றும் என்னை எமது தோழர்களுடன் வருமாறும் கூறினார்.

நாம் அவர் வீட்டிற்குச் சென்று, அவரின் பிரச்சினைகளைச் சொல்லச் சொன்னபோது நாம் எதிர்பார்த்தது என்னவோ அவர் சொன்னது என்னவோ வேறு. அதாவது, தனது அயலவருடன் (அவரின் தம்பி) உள்ள வேலிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறும் அதைச் செய்தால் எங்களுக்குப் பணம் தருவதாகவும் கூறினார். குறைந்தது ஒருநாள் துவக்குடன் வந்து தனக்காகக் கதைக்கும்படி கூறினார். நானோ துவக்கை தூக்கியதே கிடையாது.

அதற்குள் அவரது பிரச்சினை பெரிதாக வளர்ந்து விட்டது. அப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்றும் எமக்கு அனுபவம் காணாது என்றும் நீங்கள் கிராம மட்டத்துப் பெரியவர்களுடன் பேசித் தீர்க்குமாறும் கூறினோம். ஒரு வாரத்தின் பின் அந்த நபர் எனது வீடு தேடி வந்து விட்டார். அப்போது தான் எனக்கு நிலைமை விளங்கியது. இனிமேலும் நான் வீட்டில் இருந்து கொண்டு வேலை செய்ய முடியாது என்று. இந்த நிலையில் எனது வீட்டிலும் எனது அரசியல் வேலை தொடர்பாகப் பிரச்சினைகள் எழுந்தன. அதனால் எனது பிரதேசத்தை விட்டு விலகி கிழக்கு மாகாணத்திற்கு வேலை செய்வதற்குரிய ஆயத்தங்கள் செய்தேன். எனவே எனது அண்ணையிடம் செல்வதாகக் கூறிக் கொண்டு கிழக்கு மாகாணத்திற்கு சென்றேன். எனது அண்ணை கிழக்கு மாகாணத்தில் வேலை செய்ததினால் அது பிரச்சினையாகவே அமையவில்லை.

எனது கிழக்கு மாகாணப் பயணம் எதிர்பார்த்தது போல் நன்றாக அமையவில்லை. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் குழுவினரின் காத்தான்குடி வங்கிக் கொள்ளையினால் கிழக்கு மாகாணம் சோதனை இடப்பட்டுக் கொண்டிருந்த வேளை அது. அதனால் விசேஷமாக யாழ்ப்பாணத்து மக்களின் வீடுகள் சோதனைக்காளாயின. வட மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வந்த பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் எனது பயணம் எனது அண்ணையைப் பயமடையச் செய்தது. அவருக்கே பாதுகாப்பு பிரச்சினையாக இருந்தது. அதனால் அவர் என்னை வேறெங்காவது போகுமாறு சொன்னார்.

ஒருவாரத்தின் பின்னர் தப்பினேன் பிழைத்தேன் என்று ஊர் வந்து சேர்ந்தேன். வீட்டில் நான் நிற்பதால் பலருக்கு பிரச்சினையாக அமைந்ததால் வீட்டில் படுப்பதைத் தவிர்த்துக் கொண்டேன். இராணுவத்தின் சோதனைக் காலகட்டத்தில் உயிரைக் கையில் பிடித்த வண்ணம் எனது அரசியல் வேலைகள் அமைந்தன. எமது ஊரில் இராணுவ சோதனை நடைபெற்று பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். எவரைச் சித்திரவதை செய்தாலும் எவருமே என்னையோ மற்ற விடுதலை இயக்க உறுப்பினர்களையோ காட்டிக் கொடுக்கவில்லை. பலருக்கும் ஊரில் இயக்கவேலை செய்பவர்களைத் தெரிந்திருந்தாலும் எவருமே எமது பெயரைச் சொல்லவில்லை.

உதாரணமாக, ஒருநாள் எமது ஊர்ச்சந்தியில் நின்ற இளைஞர்கள், கடைக்காரர்கள் எல்லாரையும் இராணுவம் பிடித்து அடித்துச் சித்திரவதை செய்து நாம் ஒட்டியிருந்த போஸ்ரர்களைக் கிழித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் நான் அவர்களின் சோதனைகளுக்கூடாக சைக்கிளை உருட்டிக் கொண்டு சென்றேன். எவருமே என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை. உண்மையில் மக்கள் தான் தியாகம் செய்தனர்.

எங்கள் கிராமத்தில் ஒருமாதத்தின் பின் எல்.ரி.ரி.யினர் பத்திரிகைகளை, கலண்டர்களை விற்பனை செயதனர். அதனை வைத்திருந்த நண்பர்கள் இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவுடன் அவர்கள் காட்டிக் கொடுத்தவர்களில் என்கிராமத்தில் இயக்கம் என நன்கு அறியபட்ட நானும் என்னுடன் வேலை செய்த ரெலோ தோழர்களும் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் ஐச் சேர்ந்தவர்களும் இருந்தோம். அதனால் தலைமறைவாக வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. தலைமறைவாக விரும்பாத தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ரெலோவினர் அரசியல் வகுப்புக்களை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். எனவே, ரெலோவின் அரசியல் பிரிவில் சேருவதற்கான விருப்பத்தினை எனது பொறுப்பாளரிடம் நான் தெரிவித்தபோது அவர் இந்தியா போவதற்கு ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார்.

தொடரும்

1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1

2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2