இது ருசியாவுக்குரியதும், லெனினிய காலத்துக்குரியதுமா சுயநிர்ணயம்? சுயநிர்ணயத்தை மறுப்பவர்கள் மத்தியில், இப்படியான தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் சரியானதா?
லெனின் தேசிய இயக்கம் தோன்றுவதற்கான அரசியல் அடிப்படையை "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" என்ற நூலில் எடுத்துக் காட்டுகின்றார். "உலகமுழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றிகொள்ளும் காலகட்டம் தேசீய இயக்கத்துடன் இணைந்துள்ளது" என்றார். மேலும் அவர் உலகம் முழுவதும், அதாவது "பூர்ஷ்வா ஐனநாயகம்" உருவாகாத நாடுகளுக்கு பொருந்தும் என்று கூறினார். இந்த வகையில் "எல்லாத் தேசீய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது - ஏனென்றால் பூர்ஷ்வா ஐனநாயகச் சீரமைப்பு இன்னும் முற்றப்பெறவில்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகமானது முரண்பாடற்ற முறையில், தீவிரமாக, மனப்பூர்வமாக தேசீய இனங்களுக்கு சம உரிமைக்காக போராடுகின்றது." என்றார். இந்த வகையில் "ருசியாவில் தேசீய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. அது இந்த நாட்டுக்கு மட்டுமே உரித்தான அம்சமும் அல்ல." என்றார். இந்த அடிப்படையில் இன்று நாம் ஆராய வேண்டும். லெனினிய காலத்துக்குரியது அல்ல சுயநிர்ணயம். முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகம் எங்கெல்லாம் இன்னும் முற்றுப்பெறவில்லையோ, அங்கெல்லாம் சுயநிர்ணயம் பொருந்தும். சுயநிர்ணயம் காலவதியாவதற்கு
1. உலகம் முழுக்க நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவம் வெற்றிகொண்டு இருக்க வேண்டும்.
2. அல்லது எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை கடந்து இருக்கவேண்டும்.
3. அல்லது, புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தைக் கடந்து இருக்க வேண்டும்.
இன்று உலகம் தளுவிய அளவில், முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தை பல நாடுகள் கடந்துவிடவில்லை. முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகரக் கட்டத்தை தடுக்கும் வண்ணம்
1. நிலப்பிரபுத்துவம் தொடங்கி அதன் எச்சசொச்சங்கள் பல நாடுகளில் பல்வேறு அளவில் தொடர்ந்து காணப்படுகின்றது.
2. தரகுமுதலாளித்துவமும், தேசங்கடந்த பன்நாட்டு மூலதனமும் பல நாடுகளில் காணப்படுகின்றது.
உலக முழுவதும் தேசிய முதலாளித்துவம் வெற்றிபெற முடியாத வண்ணம் ஏகாதிபத்தியம் தடுத்து நிறுத்தியதன் மூலம், தேசிய(இன) முரண்பாடு இன்னமும் காலவாதியாகிவிடவில்லை. ஏகாதிபத்தியங்கள் தங்கள் காலனிகளையும், அரைக்காலனிகளையும் நவகாலனியாக்கியதன் மூலம் இதை தடுத்து நிறுத்தியது. இப்படி அரசியல் சுதந்திரத்தை தேசங்களுக்கு வழங்கியதன் மூலம், காலனிகளின் அரசியல் சுயநிர்ணயக் கோரிக்கையை இல்லாததாக்கி பொருளாதாரரீதியான சுயநிர்ணயத்தை மறுத்தது. இதன் மூலம் தேசிய முதலாளித்துவத்தை மறுதளித்தது. காலனி காலத்தில் உட்புகுந்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் தரகு முதலாளித்துவத்தை உருவாக்கியதன் மூலம், தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தடுத்தது. இதை தக்கவைக்கும் அரசியல் சுதந்திரத்தையே வழங்கியது.
இதனால் அரசியல் சுதந்திரம் பெற்ற நாடுகளின், சுயநிர்ணயத்துக்கான போராட்டம் ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு எதிரான போராட்டமாகக் காணப்படுகின்றது. இந்த முரண்பாட்டைக் கையில் எடுக்காத பல்தேசிய இனங்கள் கொண்ட நாடுகளில், தேசிய இனப் போராட்டங்களாக மாறுகின்றது.
இன்று தேசிய இனங்களின் போராட்டங்கள் தோன்றுவதற்கான லெனின் காலத்திய காரணங்கள், வேறுபட்ட சமூகப் பொருளாதாரச் சூழலுடன் தொடர்ந்து நீடிக்கின்றது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குரிய அரசியல் அடிப்படைகள் தான், தேசிய இனப் போராட்டத்திற்கான கூறுகளாக தொடர்ந்து நீடிக்கின்றது. லெனின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க முன்வைத்த சுயநிர்ணய சமூகப் பொருளாதார அரசியல் அடிப்படைகள், இன்னும் காலாவதியாகிவிடவில்லை. அவை தொடர்ந்து பவ்வேறு நாடுகளில் மாறுபட்ட தன்மையுடன் தொடர்ந்து நீடிக்கின்றது.
இந்த நாடுகளில் காணப்படும் தரகு முதலாளித்துவமும், பன்நாட்டு மூலதனமும் ஏகாதிபத்திய தன்மை கொண்டதால், தேசிய முதலாளித்துவத்தின் இடைவிடாத போராட்டம் வெல்ல முடியாத முரண்பாட்டைக் கொண்டதாகவே தொடர்ந்து நீடிக்கின்றது. இதை இருபதாம் நூற்றாண்டு "பூர்ஷ்வா ஐனநாயகத்துக்கான" சுயநிர்ணயமாக குறுக்க முடியாது. லெனின் கூறியது போல் "இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசீய இனங்களின் அரசியல் சுயநிர்ணயக் கோட்பாடு அல்லது பிரிந்து போகும் உரிமை கிழக்கு ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் தேவையில்லாதது என்று இண்டர்நேஷனன் கருதலாம் என்பது இதன் பொருளா? இப்பொருள் கொள்வது மடமையின் உச்ச நிலையாயிருக்கும்... பூர்சுவா-ஜனநாயகச் சீரமைப்பு நிறைவெய்திவிட்டது என்று நாம் (கோட்பாட்டு ரீதியில்) ஒத்துக் கொள்வதற்குச் சமமாகும்." என்று இதை எடுத்துக் காட்டுகின்றார். இதை மறுத்தால் இலங்கையில் "பூர்சுவா-ஜனநாயகச் சீரமைப்பு" முடிந்துவிட்டதாக விளக்கிவிடுவதாகும். இந்த அடிப்படையில் இதை ஆராயவேண்டும்.
இந்தவகையில் இலங்கையில் தேசிய இயக்கம் இல்லையா? அவை ஏன் தோன்றுகின்றது என்று ஆராய வேண்டும். இலங்கையில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை அழிந்து சிறு மூலதனமாக மாறியதன் மூலம், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குரிய உற்பத்தியும், பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளும் உருவாகிவிடவில்லை. மாறாக நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்ச பண்பாட்டுக் கூறுகள் தொடர்வதுடன், தரகு முதலாளித்துவமும், பன்நாட்டு மூலதனம் சார்ந்த ஏகாதிபத்திய பண்பாட்டு கூறுகளும் இணைந்து செயற்படுகின்றது. ஜனநாயக பண்பாட்டு கூறு உருவாவதற்கு இதுவும் தடையாக இருக்கின்றது. தேசிய மூலதனம் உருவாவதற்கு இவை தடையாக இருக்கின்றது. இந்த வகையில் இலங்கையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முடிவுக்கு வந்துவிடவில்லை. இதுவே தேசிய இன முரண்பாட்டுக்கான அரசியல் அடிப்படையாக தொடர்ந்து இருக்கின்றது.
எந்த தத்துவத்தையும் கோட்பாட்டையும் பிரயோகிக்கும் போது, குறிப்பாக அந்த நாட்டின் சூழலுடன் வேறுபடும். இந்தக் காரணம் தத்துவத்தின் அடிப்படையை மறுப்பதாக இருக்க கூடாது. தத்துவங்கள் கோட்பாடுகள் என்பது சமூக பொருளாதார முரண்பாடுகள் மீது உருவாக்கப்பட்டது. உதாரணமாக சுரண்டல் சமூக அமைப்பு உள்ள வரை, மார்க்சியம் காலாவதியாகிவிடாது. மார்க்சியப் பிரயோகம் என்பது, நாட்டுக்கு நாடு வேறுபடுவதுடன், காலத்துக்கு காலம் வேறுபடும். ஏனெனின் எல்லாம் இயங்கிக் கொண்டும், மாறிக்கொண்டும் இருப்பதால், மார்க்சியம் அதற்கு ஏற்ப தன்னை வளர்த்துக் கொள்கின்றது. இங்கு சமூக அடிப்படை மாறாத வரை, மார்க்சிய அடிப்படை மாறாது. சமூக அடிப்படைகள் மீதுதான் தத்துவம் இயங்குகின்றது. சமூக அடிப்படை மாறினால், தத்துவம் காலாவதியாகிவிடும். இந்த வகையில் தான் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் கூட.
லெனினுக்கு பிந்தைய காலத்தில் சுயநிர்ணய உரி;மைக்கான அரசியல் அடிப்படை, இன்று இல்லாது போய் சுயநிர்ணயம் காலாவதியாகிவிட்டதா? இல்லை. சுயநிர்ணயம் லெனினிய காலத்துக்குரிய ஒன்றல்ல. சுயநிர்ணயத்தை மறுத்தும், திரித்த போதும், லெனின் நடத்திய போராட்டத்தின் போது இதை எடுத்துக் காட்டுகின்றர்.
"1.சர்வதேச ஜனநாயகத்தின் வரலாறு முழுவதிலும், சிறப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்காலத்திருந்து தேசீய இனங்களின் சுயநிர்ணயம் என்றால் சுயேச்சையான தேசீய அரசு ஒன்றை அமைத்துக்கொள்ளும் அரசியல் சுயநிர்ணயம் என்றுதான் துல்லியமாகப் பொருள் கொள்ளப்பட்டது என்பதை அவர்கள் மறுக்கின்றார்களா?
2.1896 லண்டனில் கூடிய சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் நிறைவேற்றப்பட்ட, எல்லோருக்கும் நன்கு தெரிந்த தீர்மானத்தின் பொருளும் அதேதான் என்பதை அவர்கள் மறுக்கின்றார்களா?
3.1902ம் ஆண்டிலேயே பிளெனேவ் சுயநிர்ணயத்தைப் பற்றி எழுதியபொழுது அரசியல் சுயநிர்ணயத்தைப் பற்றி எழுதியபொழுது அரசியல் சுயநிர்ணயத்தைத் துல்லியமாக கறாராகக் குறிப்பிட்டார் என்பதை அவர்கள் மறுக்கின்றார்களா?"
என்று லெனின் சுயநிர்ணயத்தின் வரலாற்றையும், அதன் அரசியல் பொருளையும் எடுத்துக் காட்டுகின்றார்.
1866 மார்க்ஸ் எங்கெல்ஸ்சுக்கு புருத்தோன் வாதிகளைப் பற்றி எழுதிய குறிப்பையும் கூட லெனின் எடுத்துக் காட்டுகின்றார். "சிறு தேசீய இனங்கள் அபத்தமானவை என்று கூறுகின்ற போது ... அப்பெரிய மனிதர்கள் வறுமையையும் அறியாமையையும், அகற்றும் வரை ஐரோப்பா முழுவதும் வெறுமனே குந்தி உட்கார்ந்து கொண்டிருக்க முடியும், உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகிற பொழுது - இவர்கள் விசித்திரமானவர்கள் தான்" என்று, தேசீய இனங்கள் பற்றிய மார்க்சிய போராட்ட வரலாற்று பக்கத்தையும், மார்க்சியம் ஒரு தத்துவமாக வர்க்க போராட்டத்தை முன்னெடுத்தது தொடக்கம் சுயநிர்ணயத்தை பற்றி பேசிவருவது தெளிவாகின்றது.
சுயநிர்ணயத்தை ஓட்டி லெனின் - ஸ்ராலின் அரசியல் பாத்திரம் என்பது, சுயநிர்ணயத்தை ஒரு மார்க்சிய அடிப்படையில் விளக்கி முரணற்ற வகையில் அதை முழுமைப்படுத்தியது தான். இதனால் இவர்கள் பெயரால் இது ஆராயப்படுகின்றது. லெனினியம் எப்படி மார்க்சியத்தை வளர்த்ததோ அப்படித்தான், சுயநிர்ணயம் கூட. இது ருசியாவுக்காக உருவான ஒரு கோட்பாடு அல்ல.
தொகுப்பாக இன்று நாடுகளுக்கும், தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணயம் பொருந்தாது எனின்
1. நாடுகளும், எல்லைகளும் இல்லாமல் போயிருக்கவேண்டும்.
2. இனங்கள் இல்லாமல் போயிருக்க வேண்டும்
3. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை பூர்த்தி செய்து இருக்கவேண்டும்.
4. ஏகாதிபத்தியங்களுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளும் இல்லாமல் போயிருக்கவேண்டும். ஏகாதிபத்தியம் சார்ந்த பன்நாட்டு மூலதனத்துக்குப் பதில், ஏகாதிபத்தியம் சாராத மூலதனமாக மாறி இருக்கவேண்டும்.
5. உலகில் இன, நிற, மத, தேசிய.. முரண்பாடுகளற்று போயிருக்க வேண்டும்.
6. சிறு மூலதனங்கள் உருவாக முடியாத வண்ணம், பெரும் மூலதனம் மட்டுமே இருக்க வேண்டும்;.
7. உலகில் வர்க்கப் போராட்டங்கள் முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
இப்படி இதை அணுகிப் பார்க்க வேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது ஏகாதிபத்திய சகாப்தத்தில் காலாவதியாகிவிடுவதில்லை. தேசங்கள் சார்ந்து தேசியங்களும், இனங்கள் சார்ந்து தேசியங்களும் உள்ள வரை, சுயநிர்ணயக் கோட்பாடு பொருத்தமற்றதாகிவிடாது. முதலாளித்துவ (பூர்ஷ்சுவா) ஐனநாயகப் போராட்டம் இருக்கும் வரை, தேசிய இன முரண்பாடு இருக்கும். இது சுயநிர்ணயக் கோட்பாட்டை நிராகரிப்பதற்குரிய அரசியல் அடிப்படைகள் அனைத்தையும் நிராகரிக்கின்றது.
பாட்டாளி வர்க்கத்தின் ஒரேயொரு ஆயுதம் முரணற்ற சுயநிர்ணய அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தை நடத்துவது தான்;. ஸ்ராலின் கூறியது போல் "... சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, பரந்துபட்ட மக்களை ஏய்ப்பதற்கான சாதனமாக இருந்ததை போராட்டத்துக்கான சாதனமாக மாற்றி அமைத்தது. நாடு பிடிப்பதற்கான ஏகாதிபத்தியத்தின் விருப்பங்கள் அனைத்தையும் தோலுரிப்பதற்கான ஒரு சாதனமாக மாற்றி அமைத்தது. சர்வதேசிய உணர்வில் பரந்துபட்ட மக்களுக்கு அரசியல் கல்வி அளிப்பதற்கான சாதனமாக மாற்றியமைத்தது" இது தான் மார்க்சியம் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு. மக்களை பிளக்கும் இனவாதத்தை கடந்து, மக்களை சர்வதேசிய உணர்வில் வளர்த்தெடுக்க, சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் அடிப்படைதான் தான் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆதாரமாக இன்றும் இருக்கின்றது.
தொடரும்
பி.இரயாகரன்
14.03.2013
1.
1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)
2. இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும்? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 2)