போராளி அந்தஸ்து சுமத்தப்பட்டது
எனது விசாரணையின் பின் நான் எனது கிராமத்திற்கு வந்தபோது என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னைப்பற்றி பலவாறு பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் என்னுடன் தொடர்புகளைக் குறைத்துக் கொண்டனர். மேலும் சிலர் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனது கல்லூரியிலும் பலர் தாங்களாகவே பல கதைகளை உருவாக்கி என்னைப் பற்றி ஒரு மாயையை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் பின் எவரும் என்னுடன் பிரச்சினைப்படுவதில்லை. என்னைவிட வயதில் மூத்தவர்களும் என்னை மரியாதையாக நடத்தினார்கள்.
என்னைப் பற்றி வெளியான கதைகளில் ஒன்று எனக்கு வெடிகுண்டுகள் தயாரிக்கத் தெரியும் என்பது. அதனால் தான் என்னைப் பொலிஸார் பிடித்தார்கள் என்பது. அதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் எனக்கு விஞ்ஞானம் ஓடாத பாடம். அதிலும் இரசாயனவியல் பாடம் விருப்பமேயில்லாத ஒன்று. வெடிகுண்டுகள் எப்படித் தயாரிப்பது என்பதைப் பற்றிய அடிப்படை அறிவே எனக்கு இருக்கவில்லை.
1978 ஆம் ஆண்டு காலகட்டத்தில் எனது கல்லூரியில் எமது வகுப்பில் சேர்ந்த ஒரு மாணவனைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். அவர் அற்புதன் என்னும் அற்புதராஜா நடராஜா ஆவார். அற்புதன் வகுப்பில் சேரும் போது எமது வகுப்பிலுள்ள ஆண் மாணவர்கள் வடக்கு பகுதி தெற்கு பகுதி என இரு பகுதியினராகப் பிரிந்து இருந்தனர். அதற்கு சாதி அமைப்பே காரணமாக இருந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை ஒன்றின் பின் அவர்கள் பிரிந்து ஒருவருடன் ஒருவர் கதைக்காத நிலையில் இருந்தனர். எனது நிலை பிறப்பினால் நான் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவன். வகுப்பில் தெற்குப்பகுதி மாணவர்களுடன் கூட்டாக இருந்தேன்.
வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்களில் பலர் என் உறவினராகவும் என்னைப் பற்றிய செய்திகளையும் அறிந்தவர்கள். அதனால் அவர்கள் என்னுடன் பிரச்சினைப்படுவதில்லை.
அற்புதராஜா எமது வகுப்பில் சேரும் போது அவரது நண்பர் வடக்கு பகுதி பிரிவில் இருந்தார் எனவே என்னைப்பற்றி அவர் தெரிந்துகொண்ட பின் நாம் கதைக்க தொடங்கியவுடன் மீண்டும் வடக்கு தெற்கு பிரிவுகள் பேதம் மறந்து சுமுக நிலை ஏற்பட்டது. அதனால் எமது கவனம் படிப்பிலும் அன்றாட அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றி உரையாடுவதிலும் சென்றது. முன்பு எங்கள் கவனம் அடிபடுவதில் தான் இருந்தது. அக்காலத்தில் வடக்குப் பகுதியினர் தெற்குப் பகுதிக்கு சென்றபோதும் தெற்குப் பகுதியினர் வடக்குப் பகுதிக்குச் சென்ற போதும் சண்டை மூளும். எனக்கு அப்படியான பிரச்சினைகள் இருக்கவில்லை. இதுவெல்லாம் எனது பால்யபருவத்தில் நிகழ்ந்தவையே.
நான் அற்புதராஜாவையும் பரமேஸ்வரனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நாம் பயிற்சி பெறும் நோக்கத்தோடு பரமேஸ்வரனை அணுகிய போது அவர் அதற்கு மறுத்து விட்டார். கல்வியின் முக்கியத்துவத்தைக் கூறி, குறைந்தளவு பாடசாலைப் படிப்பை முடித்தவுடன் அதைப் பற்றிப் பேசலாம் என்றார். ஆனால் பொது வேலைகளில் எம்மை ஈடுபடுத்தினார். கூட்டணியினரின் மகாநாடு ஆவரங்காலில் நடைபெற்ற போது நாங்கள் பல நாட்களாக பரமேஸ்வரனுடன் சேர்ந்து அந்த வேலைகளில் பங்குபற்றினோம்.
யாழ் நூலகம், ஈழநாடு காரியாலயம் போன்றவை எரிக்கப்பட்டன
1980 ஆம் ஆண்டு சாதாரணதர பத்திரப் பரீட்சை முடிவுகளின் பின் எமது கிராமத்துப் பாடசாலையில் நாம் விரும்பிய மேற்படிப்பு இல்லாததால் யாழ்ப்பாண நகரப் பாடசாலை ஒன்றில் அனுமதி பெற்று அங்கு சென்றோம். நான் மத்திய கல்லூரிக்கும் அற்புதன் வைத்தீஸ்வரா கல்லூரிக்கும் சென்றோம். 1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம், நகரத்திலிருந்த கடைகள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் போன்றவை எரிக்கப்பட்டன. யாழில் தங்கியிருந்த சிங்கள அரசியல்வாதிகளினால் தூண்டப்பெற்று பொலிஸ்காரர்களால் எரிக்கப்பட்டன.
அன்று காலை பரமேஸ்வரனும் மற்றும் இரு நண்பர்களும் நானும் மிகவும் பதட்டமான சூழ்நிலையில் சைக்கிளில் யாழ்ப்பாணம் சென்றோம். மாவட்ட சபைத் தேர்தல் அடுத்த நாட்களில் நடைபெற இருந்ததால் எமது கிராமத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் மேலதிக பொலிசாரும் இராணுவமும் இருந்தன. யாழ் நூல் நிலையத்தைப் பார்த்துவிட்டு ஈழநாடு பத்திரிகை நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது இராணுவம் ஒரு ஜீப்பில் வந்து கொண்டிருந்தது. பலரும் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தார்கள்.
ஆனால் பரமேஸ்வரன், ‘இவங்களை விடக் கூடாது. இங்கிருந்து இவங்களை ஓடப் பண்ண வேணும். எனக்கு உதவி தேவை’ என்று சொன்னார். எங்களைப் பயப்படாமல் தன்னுடன் நிற்கச் சொன்னார். வீதி திருத்துவதற்காகவோ திருத்திய பின்போ அங்கே எஞ்சியிருந்த கற்களைப் பொறுக்கி சாறத்துக்குள் போட்டுக் கொண்டார். என்னைச் சைக்கிளுடன் நிற்குமாறும் தான் சொல்வதைச் செய்யுமாறும் கூறினார். இராணுவ ஜீப் எம்மைத் தாண்டியவுடன் கற்களை வீசத் தொடங்கினார். ஜீப் உடனே நின்றது. இராணுவத்தினர் தட தட என்று இறங்கினார்கள். எறியுங்கடா கல்லை என்று பரமேஸ்வரன் சொன்னார். உடனே நாம் கற்களை இராணுவத்தினரை நோக்கி வீசினோம். இராணுவத்தினரைக் கண்டு மெல்லமாக நகரத் தொடங்கிய பலரில் சிலரும் திரும்பி வந்து கல்லெறியத் தொடங்கினார்கள். கற்களை எறிவார்கள் என எதிர்பார்க்காத இராணுவத்தினர் உடனடியாக ஜீப்பில் ஏறிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். ஜீப்பைக் கலைத்துக்கொண்டுபோய் கற்களை எறிந்தோம்.
அங்கிருந்தவர்கள் கல் எறிந்து பெரிய வெற்றியைக் கண்டவர் போன்ற மனநிலையில் இருந்தோம். அது ஒரு சில நிமிடங்கள் தான் நடந்த போதிலும் அன்று எனக்கேற்பட்ட உணர்வு பின்பு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு எனக்கு உதவியது.
பரமேஸ்வரன் கொலை
அந்தச் சம்பவங்களின் பின்பும், மிகவும் பதட்டமான சூழ்நிலைகளிலும் முதலில் சொன்னவாறு நான் வீட்டில் படுப்பதைத் தவிர்த்தேன். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற இரண்டாவது இரவு, அதாவது 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடந்த காலை பரமேஸ்வரனும் இன்னும் சில இளைஞர்களும் கொல்லப்பட்டதாகவும் அதுவரை நான்கு இடங்களில் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. பரமேஸ்வரனுடன் கடைசி நாள் வரையும் தொடர்புடைய எனக்கு அந்தத் தகவல் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.
பரமேஸ்வரன் மட்டும்தான் கொலை செய்த பொலிஸ்-இராணுவத்தின் குறியா அல்லது அவர்களுடன் சேர்ந்தவர்களுமா என்றால் நாம் எப்படித் தப்புவது? கொலை செய்தவர்கள் யார்? பொலிஸா அல்லது இராணுவமா? யார் காட்டிக் கொடுத்தார்கள்? இனி என்ன செய்வது? மரணச் சடங்கை எவ்வாறு நடத்துவது? விசேஷமாக அன்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது இரவிலிருந்து காலை வரை. யாருடன் எவ்வாறு தொடர்பு கொண்டு எந்த முடிவை எடுப்பது? அவற்றை உடனடியான எடுக்க வேண்டிய தேவை இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் சென்ற மற்ற இருவரும் தலைமறைவாகி விட்டனர். எனக்கு என் வீட்டிலிருந்தும் பரமேஸ்வரன் வீட்டிலிருந்தும் வந்த தகவல்கள் என்னை வெளியால் வரவேண்டாம் என்பதாகவே இருந்தது. செத்த வீட்டிற்கோ சுடலைக்கோ வரவேண்டாம் என்றார்கள். பரமேஸ்வரன் மீது எனது கிராமத்தவர்கள் பெரிய மரியாதை வைத்திருந்தார்கள். எனது கிராமத்தின் பயிர்ச்செய்கை உத்தியோகத்தராகப் (சிஓ) பரமேஸ்வரன் இருந்தவர். இருந்தும், அவரின் இறப்பிற்கு ஒழுங்கான மரியாதை செலுத்தக்கூட முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம், பொலிஸ், இராணுவக் கெடுபிடி போன்றவை அதிகம் இருந்தன.
அதுவரை காலமும் மாவட்டச் சபைத் தேர்தலை முழுதாக ஏற்றுக் கொள்ளாத மக்களும் அந்த நிலைமைகளினால் மாறி முழு உற்சாகத்தோடு 3 மணிக்குப் பின் திறக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் கூட்டணிக்கு வாக்களித்து விட்டு வந்தனர்.
வேலுப்பிள்ளை என்ற விமானப் படை அதிகாரி போராளிகளுக்கு பயிற்சி
பரமேஸ்வரனுக்கும் மற்றும் சில இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்த வேலுப்பிள்ளையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இவர் சிறிலங்கா விமானப்படையில் அதிகாரியாக இருக்கும் போது விடுமுறைக்காக வீட்டிற்கு வரும்போது அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். இவரின் பங்களிப்பு அந்தக் காலகட்டத்தில் பெரிய பங்களிப்பாகும். அவர் பின்னர் வெளிநாடு சென்று விட்டார்.
ஈழ மாணவர் பொது மன்றம்
1981 காலக் கடைசிப்பகுதியில் அற்புதராஜா ஈழ மாணவர் பொது மன்றம் (GUES) அமைப்பைப் பற்றியும் தனது பங்களிப்பைப் பற்றியும் என்னையும் அதில் சேர்ந்து பங்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஒரு சில சந்திப்புக்களின் பின் அவர்களின் வகுப்புக்களுக்குச் சென்றேன். அவர்களின் வகுப்புக்களில் தான் பல்வேறு நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் மக்கள் போராட்டங்களைப் பற்றியும் அடிப்படை அறிவுகளைப் பெற்றேன். அவர்களின் பிரச்சார வேலைகளிலும் போஸ்ரர், பத்திரிகை விற்பனை போன்றவற்றிலும் கடைசியாக பாதயாத்திரையிலும் பங்குபற்றி வேலை செய்தேன்.
அந்த வேலைமுறைகளில் முழுமனதோடு ஈடுபட்டேன். ஆனால் இராணுவ நடவடிக்கைகள், இராணுவப் பயிற்சி என்று வரும்போது அவர்களிடமிருந்து ஒழுங்கான பதில் கிடைக்கவில்லை. அப்போது இருந்த என் மனநிலை என்னவென்றால் போஸ்ரர்கள் ஒட்டிக்கொண்டும் பத்திரிகை விற்றுக்கொண்டும் இருப்பதால் போராட்டம் நடத்த முடியாது என்பதாகும். எப்போது இவர்கள் துவக்கைக் காட்டுவார்கள்? அதில் எப்போது எங்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள் என்பதேயாகும். அதனால் பாதயாத்திரையின் பின் எனது பங்களிப்பைக் குறைத்துக் கொண்டேன். அதற்கு என் ஏ.எல் பரீட்சைகள் நெருங்கி வந்தமையும், என்னுடன் வேலை செய்த GUES தோழர்களான சுகு, டேவிற்சன் போன்றவர்களின் கைதும் அற்புதன் போன்றவர்களின் தலைமறைவும் காரணங்களாகும்.
தொடரும்
1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1