06222021செ
Last updateதி, 21 ஜூன் 2021 11pm

முன்னிலை சோசலிசக்கட்சியும் புதிய திசைகளும்

புதிய திசைகள் அமைப்பு, இன்று இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைக்களுக்கான போராட்டத்தில் இணைந்தும், அமைப்பாகியும், ஆதரவளித்தும்  இயங்கும். குறிப்பாக வடகிழக்கு தமிழ் மக்களின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் நேரடிப்பங்காளியாக செயற்படும், போராடும். இலங்கை சமூகத்தின் முன்னோக்கிய நகர்வில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான சம உரிமை அல்லது விடுதலை என்பது முன்னிபந்தனை என்ற அடிப்படையில்  இலங்கை சமூக மாற்றத்திற்காக போராடும் சக்திகளுடனும், ஜனநாயகத்திற்காக போராடும் சக்திகளுடனும் ஒரு பொது தளத்தில் இணைந்து இயங்கும். எமது அரசியல் நிலைப்பாட்டின் விரிவாக்கத்தை ஓர் அரசியல் வேலைத்திட்ட வடிவில் வெகு விரைவில் உங்கள் பார்வைக்கு கொண்டுவர இருக்கிறோம்.

முன்னிலை சோசலிசக்கட்சி மற்றும் அதன் முன்னணியாகிய சமவுரிமை இயக்கம் தொடர்பாக எங்களது ஆரம்ப நிலை புரிதலையும், அதிலிருந்து எமது கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் என்பவற்றையும் அவர்கள் பற்றிய எமது கடந்த அறிக்கையில் கூறியிருந்தோம். அதன் பின்பு நிகழ்ந்த முன்னிலை சோசலிச கட்சியினருடனான சந்திப்புகள், உரையாடல்களிலிருந்து அவர்கள் பற்றிய இன்னுமோர் நிலை புரிதல் எட்டப்பட்டிருக்கிறது. கடந்த அறிக்கையில் அறிவித்தபடி இது தொடர்பான எமது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்தபொழுதிலும், தமிழ் தேசியப் போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழ் பேசும் சிறுபான்மையினர் ஒரு முட்டுச் சந்தியில் நிறுத்தப் பட்டுள்ளனர். சிறுபான்மையினர் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இலங்கைத் தீவின் மக்களுமே இன்று அடிப்படை ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டிய நெருக்கடி நிலையில் உள்ளமை இன ஐக்கியத்திற்கான சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.

முன்னிலை சோசலிசக்கட்சியினரின் அரசியல் பிரவேசம் என்பது இன்று இலங்கை இனவெறி அரசிற்கெதிராக போராடும் அனைத்து தரப்பினரையும் அவர்கள் அளவிலாவது ஒரு அரசியல் நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய அழுத்தத்தை கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. முன்னிலை சோசலிசக்கட்சியின் நோக்கங்கள் மற்றும் எல்லைகளுக்கப்பால், சமூகமாற்றத்தை நோக்கமாக கொண்டவர்கள், தேசிய உரிமைக்காக போராடுபவர்கள், சாதி, பிரதேச உரிமை என்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்ட தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது ஆரம்பமாகியிருக்கிறது. அமைப்பாக அரசியல் செய்பவர்கள் தமக்குள் இருக்கும் உடன்பாடுகள் முரண்பாடுகளை கண்டறிவதும் இதனடிப்படையிலான கூட்டு நடவடிக்கைகளுக்கான பொதுத் தளத்தை அமைத்துக் கொள்வதும், ஒருபுறம் தனிநபர்களின் இருத்தலையொட்டிய சேறுபூசல்கள், அரசியலின் சரிபிழைகளுக்கு அப்பால் திட்டமிட்ட அரசியல் புறக்கணிப்புகளும் மறுபுறம் கண்மூடித்தனமான ஆதரவு மற்றும் நியாயப் படுத்தல்களையும் பதிவு செய்தபடியே தான் நடந்தேறுகிறது.

கடந்த சில வருடங்களாக தமிழ் மக்கள் பலவிதமான ஏமாற்றங்களுக்குள்ளாகி எல்லா புதிய சக்திகளையும் சந்தேகக் கண்ணுடனேயே நோக்கத் தலைப்பட்டுள்ளனர். முன்னிலை சோசலிசக்கட்சியினரின் அதிகார பரவலாக்கம், சுயநிர்ணய உரிமை சம்பந்தமான நிலைப்பாடுகள் நிச்சயமாக விமர்சனத்திற்கும் விவாதத்திற்கும் உரியவையே. ஆனாலும் இவற்றைமட்டும் வைத்துக் கொண்டு அவர்களை இனவாதிகள் என்று முத்திரை குத்தி விடமுடியாது. அவர்களது நடைமுறைத் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஒடுக்கப் பட்ட இனங்கள் மத்தியில் அறவே கருகிப் போயிருக்கும் ஜனநாயக சூழ்நிலையை ஓரளவு துளிர்க்க விடும் வகையில் அமைந்துள்ளன.

முன்னிலை சோசலிசக்கட்சியினர் தங்களை மார்சிய-லெனினிய வழிமுறையினர், சோசலிஸ்டுகள் என்று அடையாளப்படுத்திக்கொள்கின்ற போதிலும், ஒடுக்கும் தேசிய இனத்தின் முன்னேறிய பிரிவாக காட்டிக்கொள்ளும் இவர்கள், ஒடுக்கப்படும் தேசியங்களின் இருப்பை மறுப்பதும், இலங்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட தேசங்கள் இருப்பதை எற்க மறுப்பதும், தேசிய சுயநிர்ணய உரிமையை அரசியல் நீக்கம் செய்வதென்பதும் அரசியல் அறியாமையின் வெளிப்பாடாக அல்லாமல் சிங்கள மக்கள் சார்ந்த ஒரு சந்தர்ப்பவாத அரசியலாகவே பார்க்கப் படவேண்டும். இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைக்களுக்கான புரட்சிகரமான கொள்கைகளோ கோட்பாடுகளோ அற்ற "முற்போக்கு" தன்மை கொண்ட வேலைத்திட்டங்களையும், நடைமுறைகளையும் கொண்டிருப்பது மட்டும் ஒரு புரட்சிகரமான கட்சிக்குரிய பண்பாக இருக்க முடியாது. மாறாக வெறுமனே மக்களை ஈர்ப்பதற்கான கவர்சிகரமான திட்டங்களாகக் கூட இருக்க முடியும் என்று கருதுகிறோம்.

ஆயுதப்போராட்ட வழிமுறையை நிராகரிப்பதுடன் பாராளுமன்றத்தை பயன்படுத்துவது என்னும் பாராளுமன்ற பாதைக்கான கதவுகளை திறந்து வைத்து அரசியலை தொடங்கியுள்ளனர். இவர்களது இவ்வகை அரசியலில் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியினரை ஒரு சமூக மாற்றத்திற்காக போராடும் அமைப்பாக அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல்களும், தடைகளும் எமக்கு இருக்கிறது. இலங்கை அரசை எதிர்த்து போராடும் ஒர் அரசியல் அமைப்பு என்ற வகையில், சர்வாதிகார அரசிற்கெதிராக போராடும் ஓர் ஜனநாயக அமைப்பாக இவர்களை அடையாளம் காண்கிறோம். முன்னிலை சோசலிசக்கட்சியின் உறுப்பினர்களில் சிறுபான்மையினர் தேசிய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதுடன், சரியான ஒரு பொதுவுடமை அமைப்பை கட்டுவதை நோக்கி நகர்வார்களாயின் அது வரவேற்கத் தக்கது, ஆனால்  இன்று எம்மில் சிலர் கூறுவது போன்று சிறுபான்மையினரின் கருத்து முழு அமைப்பின் பண்பாக அர்த்தப் படுத்திக் கொள்ளப் பட முடியாதது என்பதை இங்கே சொல்லிச் செல்வோம்.

அதிகாரப் பரவலாக்கம் இந்த முதலாளித்துவ சமூகத்தில் அமுல் படுத்தப் படுமாயின் அது இன்னொரு ஆளுங்குழுமத்திற்கு அதிகாரத்தை வழங்கும் செயல் என்பதே முன்னிலை சோஷலிசக் கட்சியின் தற்போதைய நிலைப் பாடாக உள்ளது. இனவாதம் என்பது அடிப்படையில் பேரினவாத சக்திகளினாலேயே கையாளப் பட அதன் எதிர்வினையாகவே சிறுபான்மையினரும் குறுந்தேசிய வாதத்தைக் கையிலெடுக்கின்றனர். இந்த ஜதார்த்தத்தைக் காணத் தவறி, வெறுமனே இரண்டு பக்கமும் இனவாதம் உள்ளது என்ற முன்னிலை சோசலிசக்கட்சியின் சமன்பாடு இலங்கையின் இனமுரண்பாட்டைமுழுமையாகக் காணத் தவறியதன் வெளிப்பாடே. அது மட்டுமல்லாது தமிழ் மக்களினை, பலவித குறைபாடுகளுடனும், பிரதிநிதித்துவம் செய்யும் சக்திகளைக் கூட வெறும் இனவாதக் கட்சிகளாக அடையாளப் படுத்தி விடும் ஆபத்தும் இங்கே பொதிந்திருக்கிறது.

முன்னிலை சோசலிசக் கட்சியுடன் விமர்சனமற்ற அரசியல் உறவையோ, இணைவு நடவடிக்கைகளையோ மேற்கொள்ளும் அமைப்புகள், அவர்களை தாங்கிப்பிடிக்கும் முன்னோடிகள், தங்கள் அமைப்பு நலன் சார்ந்து இயங்க விழைகின்றனர். முன்னிலை சோசலிசக் கட்சியினரின் தவறான பக்கங்களில் ஊன்றி நின்று, சமவுரிமை இயக்கத்தின் சரியான மற்றும் சமூகத்திற்கு தேவையான பக்கங்களை நிராகரிப்போர் தம்மை மீளாய்வு செய்தல் வேண்டும். அல்லது இன்றைய ஜதார்த்த நிலையில் எவ்வகையான முற்போக்கு சக்திகள்  பெருந்தேசிய இனத்தின் தளத்தில் இருந்து வரக்கூடிய சாத்தியப்பாடுகள் உண்டு? இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமையை எவ்வாறு யாருடன் சேர்ந்து போராடி வெல்வது? என்பது பற்றி தெளிவு படுத்த வேண்டும். மாற்று வழி இன்றி நிராகரிக்கும் தனிநபர் சார், குழு நலன் சார் அரசியலை அரங்கேற்றுபவர்கள் சமூகப் பொறுப்பற்றவர்களாகவே கருதப்படவேண்டும்.

சமவுரிமை இயக்கத்தை நோக்குவோமயின், இனவொடுக்குமுறை, இனவாதம் என்பவற்றிற்கெதிரான குறைந்த பட்ச அம்சங்களைக் கொண்ட முன்னணியாகவே  தன்னை தனது செயற் திட்டத்திலும் நடைமுறையிலும் இனங்காட்டியுள்ளது. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்த அமைப்பின் வரவும் நடவடிக்கைகளும் பெரும் எதிர்பார்ப்புடன் சிறுபான்மை தேசிய இனங்களால் உன்னிப்பாக அவதானிக்கப் பட்டு வருகிறது. சமவுரிமை இயக்கம் இனவொடுக்குமுறையின் பல்வேறு பரிமாணங்களையும்  மதிப்பிட்டிருப்பதுடன் அதற்கெதிரான நடைமுறைத் திட்டங்களையும் வகுத்திருக்கிறது. ஆனாலும் பல்வேறு சிறுபான்மையினரது தேசிய அடையாளங்களையும் 'இலங்கையர்' என்ற அடையாளத்திற்குள் திணிக்க முயல்வது இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொது எதிரிக்கெதிராக அணிதிரளத் தடையாகவே அமையப் போகிறது.

"இனவாத்தை ஒழிப்போம், ஐக்கியமாக வாழ்வோம்" என்னும் கோசம் இலங்கையின் ஆளுங்குழுமத்தால் முன்வைக்கப்படும் இன்றைய சூழலில், இதே கோசத்துடனும் அதற்கான நடைமுறைத் திட்டத்துடனும் குறிப்பாக இதை தமிழ் பிரதேசங்களில் முக்கிய வேலைத்திட்டமாகவும் எடுத்துச் செல்லும் அமைப்பாக மு.சோ கட்சியின் முன்னணியாகிய சமவுரிமை இயக்கம் இருக்கிறது. தமிழ் பேசும் மக்களிடையே இருந்து வரும் நியாயமான இது தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டியதும், பொறுப்பேற்க வேண்டியதும் முன்னிலை சோசலிசக் கட்சியினதும், முன்னிலை சோசலிசக் கட்சியியுடன் விமர்சனமற்ற அரசியல் உறவையும், இணைவு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அமைப்பினரதும் தார்மீகக் கடமையாகும். தமிழ் பேசும் மக்களில் எந்த தனிமனிதனிற்கும், அமைப்பிற்கும் இவற்றை கேள்விக்குள்ளாக்கும் உரிமையிருக்கிறது. கேள்விகளுக்குப் பதிலாக கேள்வி கேட்பவர்களின், தகுதி, அடையாளம், செயற்பாடு என்பவற்றை முன்னிறுத்துவதென்பது வெறும் பொறுப்பற்ற தட்டிகழிக்கும் செயலாகவே எம்மால் காணமுடிகிறது.

அதே நேரத்தில் சமவுரிமைஇயக்கம் புலிகளின் பினாமி அமைப்பு என்ற பிரச்சாரம் சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப் படுகிறது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் முன்னிலை சோசலிசக்கட்சி தொடர்பாக பேரினவாத அரசு பல்வேறு விதமான பிரச்சார மற்றும் நேரடித் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. அதிலே முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய விடயம் புலிகளுடன் அவர்களைத் தொடர்பு படுத்தி அவர்கள் நாட்டை தமிழர்களுக்குத் தாரை வார்க்கப் போகிறார்கள் என்ற விஷமத் தனமான பிரச்சாரம். இதனை விட முன்னைய ஜேவிபி பாணியில் மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு இவர்கள் தயாராகிறார்கள் என்று சிங்கள மக்கள் பீதியூட்டப் படுகிறார்கள். ஆளும் குழுமத்தின் இவ்வகை பிரச்சாரங்கள், இவர்கள் ஆளும் குழுமத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதையே எமக்கு காட்டுகிறது.

முன்னிலை சோசலிசக்கட்சியை அவர்களது இன்றைய அரசியல் நடைமுறைகளை வைத்து ஒரு ஜனநாயக சக்தியாக கருதும் நாம், அவர்களால் உருவாக்கப்பட்டு அவர்களது முன்னணியாக இயங்கும் சமவுரிமை இயக்கத்தை, இலங்கை பவுத்த சிங்கள பேரினவாத அரசின் இனவொடுக்குமுறைக்கெதிரான, இன ஐக்கியத்தை உருவாக்குவதற்கான குறைந்த பட்ச திட்டங்களைக்கொண்ட ஒரு நடைமுறை தளமாகப் பார்க்கிறோம். இனவாதத்திற்கெதிராகப் போராடுவது என்னும் அவர்களது வேலைத்திட்டம், பேரினவாதிகளினால் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கும் இனவாத்திற்கெதிராக போராடுவதில் இருந்தே தொடங்கப்படவேண்டும்.

முன்னிலை சோசலிசக்கட்சியின் முன்னணியாகிய சமவுரிமை இயக்கத்தில் ஒரு அங்கமாக புதிய திசைகளாகிய நாங்கள் இணைந்து வேலைசெய்ய அவர்களுடன் எமக்குள்ள கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்ட முரண்பாடுகள் இடந்தரவில்லை. ஆனாலும் வெளியில் இருந்து அவர்களுடன் உடன்படக்கூடிய வேலைத்திட்டங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதுடன் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் எமது முடிவுகளை மறுபரிசீலனைக்குட்படுத்தவும் தயாராக இருக்கிறோம்.

புரட்சிகர,ஜனநாயக சக்திகள் பலவீனப்பட்டும், பவுத்த சிங்கள பாசிச அரசு அதீத பலத்துடன் இருக்கும் இக்கால கட்டத்தில், இவ் அரசிற்கெதிராக போராடும் சக்திகளுக்கிடையில் ஐக்கியத்திற்கான பொதுதளத்தை கண்டறிவது சமூகப்பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். ஐக்கியம் என்பது அது எந்த மட்டத்தில் எற்பட்டாலும்  கொள்கை உடன்பாட்டடிப்படையிலேயே ஏற்படவேண்டும்; விருப்பு, புரிந்துணர்வடிப்படையிலல்ல. கொள்கையை முன்னிறுத்தாத உறவுகள் தற்காலிகமானவை என்பதுடன் பல சமயங்களில் சந்தர்ப்பவாதமானவையாகவே அமைந்து விடுகின்றன.

முன்னிலை சோசலிசக்கட்சி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பதும், அவர்களுடன் ஐக்கியம் காண விரும்பும் சக்திகள் இதை முன்னிபந்தனையாகக் கொள்வதும் இங்கு அவசியமாகிறது.  ஒரு இனத்தின் உரிமையை மற்றைய இனம் எற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே, இன ஐக்கியம் உருவாவதும், இனவாதம் ஒழிந்து போவதும் சாத்தியம் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

புதிய திசைகள்


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்