இந்த அரசியல் தமிழ் தேசியமே ஒழிய சர்வதேசியம் அல்ல. வர்க்க அரசியலை முன்னிறுத்துகின்றபோது, அது கோட்பாடு மற்றும் செயல்தந்திரம் மீதான அரசியல் விமர்சனமாக வெளிப்படும். தேசியத்தை உயர்த்தும் போது அது தமிழினம் சார்ந்த சந்தேகமாக அவநம்பிக்கையாக வெளிப்படும்.

மார்க்சிய சொற்தொடர்கள் மூலம் தம்மை மூடிமறைத்த தமிழ்தேசியவாதிகளை இனம் காட்டுவது, பாட்டாளி வர்க்கக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சியுடனான அதன் பொது அணுகுமுறை தான். முன்னிலை சோசலிச கட்சி வர்க்கக் கட்சியாக இருப்பதால், அதன் பொது வேலைத்திட்டத்தின் ஊடாகவே இனப்பிரச்சனை பற்றிய அதன் அணுகுமுறையை பாட்டாளி வர்க்க சக்திகள் இனம்காண முற்படும்போது, தேசியவாதிகள் இனப்பிரச்சனை ஊடாகவே அக் கட்சியை அணுக முற்படுகின்றனர். இந்த வகையில் சர்வதேசியம், தேசியம் இரு வேறு அணுகுமுறைகளை கொண்டு தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

இன்று தமிழ்தேசியம் ஊடாக மார்க்சியத்தை பார்க்க விரும்புகின்றவர்களின் சந்தேகங்கள் அவநம்பிக்கைகள், தமிழ்தேசியம் மீது இருப்பதில்லை. இந்த வகையில் முன்னிலை சோசலிச கட்சி மறுக்கும் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்கள், சுயநிர்ணயத்தை தவறாக முன்னிறுத்தி அரசியல் செய்யும் தமிழ்தேசியவாதிகளை எதிர்த்து அதை சரியாக முன்னிறுத்துவதில்லை. இந்த வகையில் சுயநிர்ணயத்தை கோரும் தமிழ் தேசியவாதிகளின் அரசியல் என்பது மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதமாக இருக்கும் அதேநேரம், தாம் அல்லாதவர்கள் மீதான சந்தேகமாக அவநம்பிக்கையாக மாற்றுகின்றனர்.

சுயநிர்ணயத்தை மறுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி, சுயநிர்ணயத்தின் சரியான கூறுகளை முன்வைத்து, சுயநிர்ணயத்தின் தவறான போக்குக் எதிராகப் போராட வேண்டியது அவசியமானதாக உள்ளது. இதைச் செய்யாத போது, தவறான அரசியல் கோட்பாடாக தமிழ் தேசியத்தின் பின் சுயநிர்ணயம் இயங்க அனுமதிக்கின்றனர்.

முன்னிலை சோசலிச கட்சி சுயநிர்ணயத்தை செயல்தந்திரம் சார்ந்த ஒன்றாக குறுக்கிப் பார்ப்பதும், அதை பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கோட்பாடாக பார்க்க மறுப்பதன் மூலமும், தமிழ் தேசியத்தின் கையில் சுயநிர்ணயத்துக்கு விளக்கம் கொடுக்க விட்டுவிடுகின்றனர். சுயநிர்ணயம் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான் பிரிந்து போவதை ஆதரிக்கும். அதாவது பாட்டாளி வர்க்க நலனுக்கு உகந்ததாக இருந்தால் மட்டும் தான் ஆதரிக்கும், மற்றும்படி அது பிரிவினையை எதிர்க்கும். இங்கு பிரிந்து செல்லும் உரிமையை மட்டும் தான் ஆதரிக்குமே தவிர, பிரிவினையை எதிர்க்கும். முன்னிலை சோசலிச கட்சி சுயநிர்ணயத்தை மறுக்கும் போது, இந்த அரசியல் அடிப்படையை மறுத்துவிடுகின்றனர்.

இப்படி இது இருக்க, மூடிமறைத்த தமிழ்தேசியவாதிகள் முன்னிலை சோசலிச கட்சி மீது விதைக்கும் சந்தேகங்கள் அவநம்பிக்கைகள் சரியானவையா என்பதைப் பார்ப்போம்.

இவர்கள் இலங்கைக்கான வர்க்க அரசியலை முன்வைத்து இதை செய்யவில்லை. மாறாக தமிழ் தேசியம் சார்ந்த ஊடக வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டும், சர்வதேச நலன்களுக்கு ஏற்ற ஊடக அடிப்படைகளைக் கொண்டும் இயங்குபவர்கள், "புதியமொந்தையில் பழைய கள்?" என்று நிறுவ முனைகின்றனர். முன்னிலை சோசலிசக் கட்சி சுயவிமர்சனம் செய்ததை மூடிமறைத்தும், அவர்களின் நடைமுறையை சுயவிமர்சனத்துக்கு வெளியிலானதாக இட்டுக் காட்டியும், சேறடித்துவிட முனைகின்றனர்.

இலங்கையில் ஒரு புரட்சிகரச் சூழல் ஒன்று உருவாகி வரும் இன்றைய நிலையில், அது பலருக்கும் அச்சமூட்டுவதாக உள்ளது. இதில் தமிழ் சிங்கள தரப்புகள் இணைந்து நிற்பது, அவர்களுக்கு வெறுப்பூட்டுவதாக உள்ளது. ஒன்றில் முன்னிலை சோசலிசக் கட்சியை அல்லது புதிய ஜனநாயக மக்கள் முன்னணியை எதிர்ப்பதன் மூலம், அங்குமிங்குமாக அரசியல் வித்தை காட்ட முனைகின்றனர். இதைக் குழிபறிக்க முனையும் இரகசிய நடவடிக்கைகளோ பற்பல.

முன்னிலை சோசலிசக் கட்சியை ஜே.வி.பியின் தொடர்ச்சியாக, "குட்டி ஜே.வி.பியாக", "புதியமொந்தையில் பழைய கள்?" என, இடையில் தமிழரை கவிழ்த்து விடுவார்கள் … என்று பலவாக காட்டவும், கட்டமைக்கவும் முனைகின்றனர். இந்த அடிப்படையில் இதை தங்கள் அரசியலாகவும், அவதூறுகளைக் கொண்டு எதிர்ப்பிரச்சாரத்தை பல முனையில் தொடங்கி இருக்கின்றனர். இப்படி செய்பவர்கள் மாற்று வேலைத்திட்டத்தையோ, தமக்கான சொந்த அரசியலையோ கொண்டு இயங்குவதிலலை. சிலர் அன்னிய நாடுகளின் அரசியல் மற்றும் ஊடக ஏஜண்டுகள். இன்னுமொரு பகுதியினர் இலங்கை அரசின் அரசியல் மற்றும் ஊடக ஏஜண்டுகள். இப்படி பற்பல மூடிமறைத்த முகங்கள்.

பாட்டாளி வர்க்க நடைமுறையையும், இந்த நடைமுறையின் மூலம் உருவாக்கும் கட்சியையும் தவறாகவே இருக்கும் என்று கற்பிப்பது அபத்தமானது. வெறும் வாக்குறுதிகள் மூலம், வெறும் சுயவிமர்சனங்கள் மூலம் உறுதி செய்வதை முன்னிறுத்தி நிற்பது நம்பகத்தன்மையற்றது. நடைமுறை மூலமான ஒரு கட்சிதான் இன்று தேவையானது. நடைமுறையை செய்யாமல் கோட்பாட்டுத் தூய்மை பேசி என்னதான் பயன்?

லெனின் பாட்டாளி வர்ககப் புரட்சியம் ஒடுகாலி காவுத்ஸ்கியும் என்ற நூலில் "… அவர்களுடைய சொற்களை அவர்களுடைய செயல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அவர்களுடைய இலட்சியபூர்வமான அல்லது பகட்டான சொற்றொடர்களைக் கண்டு மனநிறைவடையாமல், அவர்களுடைய வர்க்க எதார்த்தத்தை துருவித் துருவிப் பார்க்கவேண்டும்." என்றார். இது தான் எம்முன்னுள்ள அரசியல் வழிமுறை. அவர்களின் சொந்த விமர்சனம் எம் மொழியில் இல்லை, ஆனால் நடைமுறை அதை முந்திக் கொண்டு எம் முன்னால் இருக்கின்றது. இதை மறுப்பது, அபத்தமானது

லெனின் "இடதுசாரி" கம்யூனிசம் - ஒரு இளம் பருவக் கோளாறு" என்ற நூலில் கூறுகின்றார் "ஒரு அரசியல் கட்சி தனது தவறுகளின்பால் என்ன நடைமுறையைக் கடைப்பிடிக்கிறது என்பதுதான், அந்தக் கட்சி தனது வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் தனது கடைப்பாடுகளை நிறைவேற்றுவதில், நடைமுறையில் எவ்வாறு அக்கறையாக இருக்கிறது என்பதைச் சீர்தூக்கி மதிப்பிடுவதற்கான ஆக மிக முக்கியமானது ஆகமிக நிச்சயமானதுமான வழிமுறையாகும். ஒரு தவறை மனந்திறந்து பகிரங்கமாக ஒப்புக்கொள்வது, அதற்கான காரணங்களை உறுதிசெய்வது, அந்த தவறு தோன்றியதுக்கான சூழ்நிலைகளை அலசி ஆராய்வது, அதைத் திருத்துவதற்கான வழிகளை முற்றாக விவாதிப்பது - இதுதான் பாரதூரமான அக்கறையுள்ள ஒரு கட்சியின் அடையாளம். இந்த வழியில் தான் அது தனது கடமைகளை ஆற்ற முடியும். இந்த வழியில்தான் முதலில் தனது வர்க்கத்திற்கும், அதன் பின்னர் பரந்துபட்ட மக்களுக்கும் அது கற்பிக்கமுடியும்" என்றார். இப்படி நடைமுறை மூலம் காண முடியாதவர்கள், அரசியல் உள் நோக்கம் கொண்டவர்கள். முன்னிலை சோசலிசச் கட்சியை நடைமுறை ஊடாக பார்க்க மறுப்பது, அதன் நடைமுறை செயற்பாட்டை, நடைமுறையற்ற கோட்பாடு கொண்டு மறுப்பதாகும்.

"இடதுசாரி" கம்யூனிசம் - ஒரு இளம் பருவக் கோளாறு" என்ற நூலில் லெனின் "நடைமுறை எழுப்பும் பிரச்சனைகளுக்கு கோட்பாடு பதில் சொல்லியாக வேண்டும்" என்றார் லெனின். இது தான் இன்றைய தேவையே ஒழிய கற்பனையான சந்தேகங்களை விதைப்பதல்ல.

இன்று இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் ஒழித்துக்கட்ட சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கும் போராட்டத்ததை, பல முகம் கொண்டு எதிர்க்கவும் சேறடிக்கவும் முனைகின்ற பின்புலம் இது தான். இந்த நிலையில் புலிகள் விட்டுச் சென்ற தமிழ் தேசியத்தில் தொங்கிக் கொண்டு சுயபுராணம் பாடுகின்றவர்கள் "புதியமொந்தையில் பழைய கள்ளா?" என்று வினாவுகின்றனர்.

இந்த சுயபுராணத்துக்குள் சில கேள்விகள் அவசியமாகின்றது. 1980 களில் நீங்கள் புளட்டில் இருந்ததற்காக நாங்கள் அன்று உங்களிடம் சுயவிமர்சனத்தை கோரியதில்லை. நாங்கள் பலரும் அன்று உங்களுடன் இணைந்து வேலை செய்த போது, உங்கள் நடைமுறை ஊடான நடத்தையைக் கொண்டு தான் உங்கள் சுயவிமர்சனத்தை அணுகினோம். நீங்களும் கூட இப்படித் தான் பலரை அணுகி தோழமையை வளர்த்தோம். இதை நீங்களோ நாங்களோ மறுக்க முடியாது. இந்த அணுகுமுறைதான் முன்னிலை சோசலிச கட்சிக்கும் கூட பொருந்தும். சிங்களவன் தமிழன் என்ற வேறுபாடு, இதற்கு பொருந்தாது என்ற பாணியில் இன்று நீங்கள் அணுகுகின்றதை நாம் காண்கின்றோம். ஜே.வி.பியில் இருந்து வந்த முன்னிலை சோசலிச கட்சியாக காட்டி சேறு அடிப்பதை பார்க்கின்றோம். இரண்டு வேறு வர்க்கக் கட்சியாகிவிட்டதை பார்க்க மறுப்பது எப்படி நியாயம்!?

அன்று நீங்கள் உட்பட நாம் பலரும் வர்க்க அரசியலை கொண்டு இருந்தோம். இதன் நடைமுறைகளைப் பின்பற்றியதால், நாம் தோழமையை உருவாக்கினோம். இதன் பின் அந்த வர்க்க அரசியலை நீங்கள் உட்பட பலரும் கைவிட்டுச் சென்ற நிலையில் தான், இன்று இதற்கு எதிராக "புதியமொந்தையில் பழைய கள்ளா?" என்று கேட்கும் அளவுக்கு உங்கள் வர்க்க விரோத அரசியல் உள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சி நீங்கள் அன்று முன்னெடுத்த அதே வர்க்க அரசியலை அடிப்படையாகக் கொண்டு தன்னை நடைமுறைரீதியாக போராடும் கட்சியாக முன்னிறுத்தி இருக்க, நீங்கள் வர்க்க அரசியலுக்கு எதிராக வெகு தூரம் பயணித்து விட்டீர்கள். இதில் இருந்து தான் உங்கள் அரசியல் "புதியமொந்தையில் பழைய கள்ளா?" என்று கேட்க வைக்கின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் அண்மைய போராட்டங்களை மறுக்க முடியாதவர்கள், அதை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டுதான் இதைச் செய்ய முனைகின்றனர். இதேபோல் தான் சமவுரிமைக்கான குறைந்தபட்ச செயற்பாட்டை அங்கீகரிப்பதாக கூறிக்கொண்டு, அதை பலரும் மறுத்தும் நிற்கின்றனர்.

இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால் கடந்தகால ஜே.வி.பியின் நடைமுறையைக் கொண்டு இதை தொடர்ந்தும் விமர்சிக்கின்றவர்கள், அதற்கு நேர்மாறான அதன் நடைமுறையை கொண்டு இதை அணுகத் தவறுகின்றனர். அதை இதற்குப் பொருத்திக்காட்ட முனைகின்றனர். அனைத்தும் நடைமுறை சார்ந்தது. "நடைமுறை எழுப்பும் பிரச்சனைகளுக்கு கோட்பாடு பதில் சொல்லியாக வேண்டும்"

விமர்சனம் சுயவிமர்சனம் என்பது ஓப்புவிப்பதல்ல, நடைமுறையில் அதை நிறுவுவது தான். நடைமுறையிலான விமர்சனத்தையும், சுயவிமர்சனத்தையும் காண மறுப்பவர்கள், அதை சமூக வாழ்வியல் கூறாக கொள்ளாதவர்கள் தான் இதை முதலில் நிராகரிக்கின்றனர். வெறும் கூற்றாக, எழுத்து மூலமான ஒன்றைப் பற்றி தொடர்ந்து பேசுகின்றனர். 500 பக்கத்துக்கு மேற்பட்ட விமர்சனம், சுயவிமர்சனம் ஒன்றை, அக் கட்சியை உலகறியப் பிரகடனம் செய்த தங்கள் கூட்டத்தில் நூலாக முன்வைத்தார்கள். இதன் தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவராத நிலையில் "ஊடகவியலாளராக" இருக்கும் இவருக்கு மட்டும் அது தெரியாமல் இருக்கின்றது.

இது தெரியாது என்று எடுத்துக்கொண்டால், நடைமுறை ஒரு சுயவிமர்சனமில்லையா? நடைமுறை தான் உயர்ந்தபட்ச சுயவிமர்சனம்.

ஜே.வி.பி. ஒரு வர்க்கக் கட்சியாக இருக்காமையால் தான், அது ஒரு இனவாதக் கட்சியாக இருந்தது. இப்படித்தான் அதைப் பார்க்கவேண்டும். தன்னை ஒரு வர்க்கக் கட்சியாக மாற்றும் போராட்டத்தில் தான், இனவாதத்தையும் இன ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராடுகின்றது. இந்த வகையில் ஒரு புரட்சிகரக் கட்சியாக முன்னிலை சோசலிசக் கட்சி நடைமுறை மூலமும் முன்தள்ளுகின்றது. இந்த வகையில் சுயவிமர்சனம் என்பது

1.பரந்துபட்ட மக்களின் புரட்சிகரப் போராட்டங்கள் மூலம், உயிரோட்டமுள்ள தங்கள் நடைமுறைகள் மூலம் முன்தள்ள வேண்டும்;

2.கட்சியின் முழக்கங்கள் திட்டங்களை வைத்து இருப்பதற்கு பதில், செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் முலம் இதை உறுதி செய்யவேண்டும்;

3.புதிய புரட்சிகரமான நடைமுறையில், அனைத்தும் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்யப்பட்ட வேண்டும்;.

4.கட்சிக்குள்ளும் வெளியிலும் சுயவிமர்சனத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்;.

இந்த நான்கையும் நடைமுறையில் கையாள்வதன் மூலம், அனைத்தையும் சோதித்தறிய முடியும். இந்தப் பாதையில் முன்னிலை சோசலிசக் கட்சி பயணிப்பதை, அதன் நடைமுறை எடுத்துக் காட்டுகின்றது. ஒரு புரட்சிகரமான கட்சிக்குரிய பாதையில், அது தன்னை முன்னோக்கி நகர்த்துவதை, சமூகத்தில் அக்கறையுள்ள அனைவரும் அறிவார்கள். தமிழ்தேசியத்துக்குள் தலையைப் புதைத்துக் கொண்டு இருக்கும் வரை இதைக் காணமுடியாது. "சிங்களவன்" என்றால் தமிழனின் எதிரி என்றும் தமிழ்தேசியம் காட்டிய பாதையை விட்டு சிந்திக்கவும், செயலாற்றவும் மறுக்கின்ற வரை மாற்றங்களை மறுப்பது தொடரும்.

இப்படி இருக்க அவர்களின் திட்டம் மற்றும் செயல்தந்திரம் தொடர்பான முரண்பாடுகளை காட்டி எதிர்ப்பது நேர்மையற்ற அரசியல். ஒரு புரட்சியை எப்படி முன்னெடுப்பது தொடர்பானது இது. இது விமர்சனம், சுயவிமர்சனத்துக்குரியதல்ல. இது மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு பரிசோதித்து பார்ப்பதன் மூலம், அது சரி பார்க்க வேண்டியவை. இந்த வகையில் இதன் மீதான விவாதங்கள் அதே வர்க்க அரசியலில் நின்று நடத்த முடியும்;. இதைக் காட்டி எதிர்ப்பது வர்க்க அரசியலை எதிர்ப்பதாகும். இதை மூடிமறைக்க ஜேவிபியின் பழைய கதையை சொல்வது தொடங்கி புதிய ஜனநாயக மக்கள் முன்னணியுடனான உறவு வரை பேசி, புரட்சிகர நடைமுறையை மறுப்பது இதன் பின்னான பிற்போக்கு அரசியலாகும்.

 

பி.இரயாகரன்

31.01.2013