03302023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

சிங்கள தமிழ் மொழி பேசும் தரப்புகள் கலந்து கொண்ட சமவுரிமைக்கான சுவிஸ் கூட்டம் பற்றி

40 க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட இக் கூட்டம், இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வண்ணம் உணர்வூட்டக் கூடியதாக அமைந்து இருந்தது. பெரும்பான்மையானவர்கள் இதன் அவசியத்தை உணர்ந்ததுடன், தங்களாலான பங்களிப்பை வழங்கவும் உறுதியேற்றனர். கேள்வி பதில்களும், கூட்டத்தை அடுத்து தனிப்பட்ட உரையாடல்கள் இதை வளர்த்தெடுக்கும் வண்ணம் ஆரோக்கியமானதாக இருந்தது. யாராலும் மறுக்க முடியாத, யாராலும் நிராகரிக்க முடியாத, சமவுரிமைக்கான அவசியத்தை முன்னோக்காகக் கொண்டு நடக்க கூட்டம் வழிகாட்டியது.

இந்த வகையில் சமவுரிமை இயக்கம் பற்றி முன்வைக்கப்பட்டவற்றில் முக்கியமானது

 

1.இந்த அமைப்பு முன்னிலை சோசலிச கட்சியின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்ட போதும், சமவுரிமை அமைப்பு இந்தக் கட்சியின் கீழ் இயங்காது. அந்த வகையில் இந்த அமைப்பு, அந்த முன்னிலை சோசலிச கட்சியின் வெகுஜன அமைப்புமல்ல. மாறாக சுயாதீனமான அமைப்பு. இதில் யாரும் இணைந்து வேலை செய்ய முடியும். இதன் கொள்கை, கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட எவரும், இதில் இணைந்து கொள்ள முடியும். இந்த வகையில் இது உடன்படக் கூடிய குறைந்தபட்சத் திட்டமாகும். இது முன்முயற்சி கொண்ட சுதந்திரமான ஒரு மக்கள் அமைப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

2.இந்த அமைப்பின் வெற்றி என்பது சிங்கள மக்கள் மத்தியில் இனவொடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் தீவிரமான மையமான அரசியல் போராட்டததின் மூலமே சாதிக்க முடியும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. இந்த வகையில் சமவுரிமை அமைப்பில் இணைந்து கொண்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த தோழர் குமார், அதற்கான பணியில் தம் அமைப்பு தீவிரமாக உழைக்கவும் இயங்கவும் உள்ளதாக பிரகடனம் செய்தார்.

3.இந்தப் போராட்டம் இலங்கையில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

 

1.சிந்தனைக்கான கருத்துக்களை உற்பத்தி செய்யும் கருத்தியல் மேலாதிக்கத்தை அறிவுஜீவிகள் மத்தியில் நிறுவுதல்

2.பாடசாலைக்குள் இனவாதத்துக்கு எதிரான கருத்தைக் கொண்டு செல்லுதல்

3.ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் நலனை உயர்த்திப்பிடித்தல் 4.கீழ் இருந்து இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதல் …. இன்னும் பல.

4.இனப்பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகளைக் கொண்டவர்கள், இனவொடுக்குமுறைக்கும் இனவாதத்துக்கும் எதிராக இணைந்து நின்று போராடக் கூடிய ஒரு இடமாக சமவுரிமைக்கான இந்த அமைப்பு இருக்க முடியும் என்று தன்னைப் பிரகடனம் செய்து கொண்டது.

இந்தக் கூட்டம் பரஸ்பரம் உரையாடக் கூடிய மொழியியல் பற்றாக்குறையும், மொழிபெயர்ப்புக் குறைபாடுகளும் பொதுவாகக் காணப்பட்டது. எதிர்காலத்தில் இதை நிவர்த்திக்கும் வண்ணம் அதற்கான தீர்வை இந்தப் போராட்டத்தின் ஊடாக வந்தடைய முடியும் என்ற நம்பிக்கை கூட்டத்தினர் இடையில் பொதுவாக காணப்பட்டது.

மக்கள் தாமே தமக்காகப் போராட வேண்டும் என்ற விடையத்தையும், மக்கள் இனவொடுக்குமுறையையும் இனவாதத்தையும் எதிர்த்து தமக்குள் ஒற்றுமையாக வாழ்வதை மறுதளிக்கும் வண்ணமாக, இந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாத தளத்தில் நின்று கேள்விகள் தர்க்கங்கள் முன்வைப்பட்டது.

1.புலிகளை இது சேர்க்குமா இல்லைiயா என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு ஒருவர் கோரினார். இந்த மாதிரியான கேள்வி புலியெதிர்ப்பு அடிப்படையில், அனைத்தையும் புலியாக முத்திரை குத்தும் அரசின் பொது அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து அங்கு முன்வைக்கப்பட்டது. இறுதியில் அப்படியே அவர்கள் தங்கள் இணையத் தளத்தில் சமவுரிமை அமைப்புக்கு புலி முத்திரை குத்தி எழுதினர்.

சமவுரிமை அமைப்புக் கொள்கையையும் கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளும் எவரும் இந்த அமைப்பில் இருக்க முடியும். இது தான் ஜனநாயகம். இதற்கு அப்பால் புலி இருக்க முடியுமா இல்லையா என்று கேட்பதும், அதற்குள் இதை வரையறுத்து பார்ப்பதும், ஜனநாயகத்தின் அடிப்படையை மறுக்கும் தங்கள் கொள்கை கோட்பாடற்ற செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. புலி எதிர்ப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இதில் இருந்து தான் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. இனவொடுக்குமுறை, இனவாதத்தைக் கொண்ட எவரும் இந்த அமைப்பில் இருக்க முடியாது. இது தான் திட்டம். திட்டம் எந்த இனவாதியையும் தனக்குள் அனுமதிக்காது. இப்படி இருக்க அரசு அனைத்தையும் புலி முத்திரை குத்துவது போல், சமவுரிமை அமைப்பை புலி முத்திரை குத்தி காட்ட முனைந்தனர், முனைகின்றனர். இதற்கு அப்பால் இதற்கு விளக்கம் கிடையது. தோழர் குமார் சுட்டிக் காட்டியது போல், சபை இவரின் கேள்வியின் நோக்கத்தை நன்கு புரிந்து கொண்டு இருக்கின்றது என்ற இதன் பின்னுள்ள எதார்த்தத்தை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டினார்.

2.சமவுரிமை அமைப்புக்கு புலி முத்திரையை குத்தும் கேள்வியை எழுப்பியவர், மற்றொரு கேள்வியை முன்வைத்தார். கடந்தகாலத்தில் ஜே.வி.பியில் இருந்தபோதான சுயவிமர்சனத்தைக் கோரினார். குமார் இதற்கான தனது பதிலின் போது, மக்கள் மத்தியில் செய்யப்பட்டதாக கூறினார். நாம் அறிந்தவரையில் சிங்களத்தில் இது பல நூறு பக்கம் கொண்ட நூலாக வந்திருப்பதும், இதன் ஆங்கில தமிழ் வடிவங்களுக்கான முயற்சிகள் நடப்பதாகவும் அறிகின்றோம். நிற்க, அனைத்தையும் புலி முத்திரை குத்துபவர்கள் முதல் கொண்டு புலி வரை சுயவிமர்சனம் கோருகின்றவர்கள் முதல், அதை "புதிய மொந்தையில் பழைய கள்ளா?" என்று கூறுகின்றவர்களின் அரசியலையும் அதன் நோக்கத்தையும் தனியாக ஆராய்வோம்.

3.வடகிழக்கில் நிறுவப்படும் புத்தர் சிலைகளுக்கு எதிராக தோழர் குமார் கருத்து தெரிவித்த போது, அப்படியல்ல என்ற ஆட்சேபனை முன்வைப்பட்டது. ஆதாரத்தை வைக்குமாறு கோரப்பட்டது. அவர் தாம் பௌத்தத்தை தமிழ் மக்கள் மத்தியில் பரப்புவதாகவும், அதை இது கொச்சைப்படுத்துவதாகவும் கூறினார். எந்த மனிதனும் எந்த மதத்தையும், எந்த மொழியையும் தேர்வு செய்வதற்கும், பின்பற்றுவதுக்கும் உரித்துடையவர்கள். இது தான் எங்கள் நிலை. ஆனால் அதை பலாத்காரமாக செய்வதற்கும், அரசு இதை முன்னெடுப்பதற்கும் எதிராக போராட வேண்டியது அனைவரதும் கடமை. அதுவும் இன்று வடகிழக்கில் சிவில் சட்ட அமைப்பே இல்லாத சூழலில், இராணுவ ஆட்சியில் தனிமனித தெரிவுகள் என்பது கூட நிர்ப்பந்தங்கள் மற்றும் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்க முடியும்;. உண்மையான சுயாதீனமான தெரிவுக்குரிய ஜனநாயகச் சூழலுக்கு, தடையே அங்கு காணப்படுகின்றது.

இன்று இனவாதத்துக்கும், இனவொடுக்குமுறைக்கும் எதிரான மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கான சமவுரிமை அமைப்பை எதிர்த்து, பேரினவாத அரசும், குறுந்தேசியவாதமும் ஒரு புள்ளியில் ஒரே கேள்விகளுடன் சந்திக்கின்றனர். சமவுரிமை அமைப்புக்கான பொது எதிர்வினையில், இதை நாம் தெளிவாக காணமுடிகின்றது. நாம் சரியான திசையில் பயணிப்பதற்கான அரசியல் எடுத்துக்காட்டாக இது இருக்கின்றது.

 

பி.இரயாகரன்

28.01.2013


பி.இரயாகரன் - சமர்