கருத்துகளை உற்பத்தி செய்வதன் மூலம், அதை மக்களிடம் கொண்டு செல்லும் சரியான உத்திகள் மூலம், புரட்சி செய்ய முடியும் என்று நம்புகின்ற அரசியல் போக்கு தவறானது. மக்களுக்கு புரியும் மொழியில் பிரச்சாரத்தை செய்யாமை தான், புரட்சி நடைபெறாமைக்கான காரணம் என்று அரசியலைப் புரிந்துகொள்வது தவறானது. இதற்கான மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் குறைபாடு என்று கருதும் அரசியல் போக்குத் தவறானது.
மார்க்ஸ் அறிவியல்பூர்வமான தத்துவஞானத்தையும், அமைப்பையும் மறுத்து வில்ஹெம் வியட்லிங் செயற்பட்ட போது கூறியது இங்கு பொருந்தும். "இந்த போதனை ஒரு கற்பனைத் தீர்க்கதரிசியையும் - வாய் பிளந்து நிற்கும் கழுதைகளையுமே உருவாக்குகிறது" என்றார். இது புரட்சியை உருவாக்காது.
எது முதன்மையானது? எது அடிப்படையானது? என்றால் கட்சியையும், தத்துவத்தையும் மக்களின் நடைமுறையுடன் வளர்த்தெடுப்பது தான். இதையே நாம் என்றும் செய்ய வேண்டும்.
எந்தக் கருத்தையும், எந்த உத்தியையும், முன்னெடுக்க தத்துவமும் கட்சியும் அவசியமானது. பிரச்சாரத்தை முன்னெடுக்க நடைமுறையுடன் கூடிய கட்சி அவசியமானது. கருத்தும், உத்தியும், பிரச்சாரமும் முதன்மையானது என்பது, நடைமுறையையும், கட்சியைக் கட்டுவதையும், தத்துவரீதியான வளர்ச்சியையும் மறுக்கின்ற கோட்பாடாகும்.
இது கருத்து மக்களை சென்று அடைந்துவிடுவதன் மூலம் புரட்சி தானாக மேல் வந்துவிடும் என்று கருதுகின்றது. இன்று பிரச்சாரம் சார்ந்த குறைபாடும், அதற்கான மொழி சார்ந்த குறைபாடும் தான், சமூக மாற்றம் நடக்காமல் இருப்பதற்கான காரணமா? இப்படிக் கருதுவது தவாறான அரசியல். இது மூன்று பிரதான அரசியல் விலகலைத் தருகின்றது.
1.சமூக மாற்றத்தை முன்னெடுக்க ஒரு கட்சி முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை மறுக்கின்றது. மாறாக கருத்து இருந்தால், அதைப் பிரசாரம் செய்தால் போதும் என்பதை முன்வைக்கின்றது. கட்சிக்குரிய முதன்மை பாத்திரத்தையும், அதைக் கட்டுவதையும் மறுதளிக்கின்றது.
2.மொழியும், அதற்கான உத்தியும் தான் பிரச்சனை, நாம் கொண்டுள்ள அரசியலும் கட்சியுமல்ல என்று கருத்தை முன்வைக்கின்றது.
3.பிரச்சாரம் செய்யும் முறைதான் பிரச்சனை, நடைமுறையல்ல என்ற கருத்தை உருவாக்குகின்றது.
இப்படி கருதுவது அரசியல்ரீதியான தவறாகும். இது வாழ்நிலை சார்ந்து, சூழல் சார்ந்து வெளிப்படும் கருத்துப் போக்காகும். புரட்சி நடைபெறுவதற்குரிய புறநிலையை மறுத்து, சொந்த அகநிலைக் கோட்பாடாக வெளிப்படுகின்றது. மார்க்ஸ் இது பற்றி "விருப்பங்களின் மீது புரட்சிகள் ஏற்படுவதில்லை@ மாறாக, புறநிலை வளர்ச்சியின் அவசியம் புரட்சியை ஆக்குகிறது" என்றார். ஆகவே மானசீகமான மனவிருப்பங்கள் கொண்டு புரட்சியை ஆக்க முடியாது. புறநிலையான வளர்ச்சியை கருத்துகள் உருவாக்குவதில்லை. தொடர்சியான வர்க்கப் போராட்டங்கள் புறநிலையான வளர்ச்சிக்கு அவசியமானது. கருத்துகள் வர்க்கப் போராட்டத்தை உருவாக்குவதில்லை. வர்க்கப் போராட்டங்கள் தான் கருத்துக்களை உருவாக்குகின்றது. இங்கு வர்க்கப் போராட்டம் உருவாக்கும் கருத்துகளை உள்வாங்கி வழிநடத்தும் கட்சியும், தத்துவமும், நடைமுறையும் அவசியமானது, அதுவே முதன்மையானதாகின்றது.
இதற்கு மாறாக விருப்பங்கள் புரட்சியாகிவிடாது. மார்க்ஸ் "கம்யூனிச விருப்பங்கள் மீதான கருத்தமைவுகளை செயல்படுத்துவதல்ல. அது வரலாற்றுப் பூர்வமான ஒரு நடைமுறை இயக்கம்" அவசியம் என்றார். இதற்கு மாறாக மக்களிடம் பிரச்சாரம் சென்றடையும் மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் காரணம் என்று கருதும் போது, இதை உற்பத்தி செய்யும் அதி மேதாவிகளை மக்களுக்கு மேலாக முன் நிறுத்தி விடுகின்றது.
கட்சியைக் கட்டுதல் என்பதே முதன்மையானது. இதன் சாரம் என்பது கட்சியின் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்துதல், கட்சிக்கான நபர்களை உருவாக்குதலாகும். வர்க்கப் போராட்டத்தை சமூக மாற்றமாக்க இது முன் நிபந்தனையாகும். இது மட்டும் போதாது, இந்தக் கட்சி தன்னை நடைமுறைப் போராட்டங்களில் இணைத்துகொள்வதுடன், மக்களுடன் தொடர்பில் இருப்பதும் அவசியமானது. இந்த வகையில்
1.கட்சியைக் கட்டுதல்
2.தத்துவார்த்த ரீதியாக தன்னை வளர்த்தெடுத்தல்
3.நடைமுறையைக் கட்சியாக மக்களுடன் தொடர்பில் இருத்தல்
இது முதன்iமானது. இது இருந்தால் மட்டும் தான், கருத்தையும், உத்தியையும், பிரச்சாரத்தையும் முன்கொண்டு செல்லமுடியும்;.
கருத்துகளுடன், மொழியுடனும் மக்களை தொடர்பு கொண்டு புரட்சியை நடத்திவிடலாம் என்ற சிந்தனையும், போக்கும் தவறானது. இது பிரமுகர்களினதும், தத்துவவாதிகளினதும் கற்பனைவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. கருத்துகள் இருந்தால் போதும், அது புரட்சி செய்யும் என்று நம்புகின்ற, நம்ப வைக்கின்ற தவறான அரசியல் கூறாகும். கட்சி கட்டுவது முதன்மையானது. கட்சி மக்களுடன் தொடர்பு கொண்டு இருக்கவேண்டும். கட்சி வர்க்கப் போராட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டும்.
வர்க்கப் போரட்டம் என்பது சமூகத்தில் எங்கும் இருக்கின்றது. அதை நெறிப்படுத்தி வழிநடத்தக் கூடிய வர்க்கக் கட்சி கட்டுவதும், அதற்கான செயற்பாடும் தான் எம்முன்னுள்ள முதன்மைப் பணியாகும்.
பி.இரயாகரன்
25.01.2013