09282021செ
Last updateவெ, 24 செப் 2021 3pm

அடக்குமுறையை எதிர்க்காமல், அடக்கு முறையை உடைத்தெறிய முடியாது!

சம உரிமை இயக்கத்தினால்15-01-2012 அன்று யாழ் நகரில் இராணுவ ஆட்சியை நிறுத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியும் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து போராட்டம் இராணுவ போலிஸ் மற்றும் ஒட்டு குழுக்களின் அராஜகத்துக்கும் மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்றது. சிவில் உடைகளில் நின்ற அரச படைகளை சேர்ந்த கட்டாகாலிகளின் கழிவு எண்ணை வீச்சு மற்றும் அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கையெழுத்திட்டமை இராணுவ ஆட்சியின் மீதான மக்கள் எதிர்ப்பை தெளிவாக வெளிக்காட்டியது.

சமவுரிமை குழுவினர் சென்ற வாகனம் ஒமந்தையிலே மறிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. பின் யாழ் நகரில் பண்ணை பிரதேசத்தில் வைத்து சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்களால் எம் வாகனத்தின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டது. சுமார் 2 கிலோ எடையுடைய இரண்டு கற்களை கொண்டு எம் வாகன கண்ணாடி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் யாழ் பேருந்து நிலையத்தில் நாம் போராட்டத்தை ஆரம்பித்த உடன் கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அந்த பிரதேசத்தில் குவிக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் 5-7 பேரை கொண்ட சிவில் உடையில் நின்ற இராணுவத்தினர் பொலுத்தீன் பைகளில் கழிவு எண்ணையை நிரப்பி மறைந்திருந்து தாக்குதல் நடத்தினார்கள். பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சம உரிமை இயக்க உறுப்பினர்கள் கழிவு என்னை தாக்குதலிற்கு உள்ளானார்கள். அந்த பிரதேசத்தில் 100க்கும் மேற்ப்பட்ட பாதுகாப்பு படையினர் நிற்க இந்த கழிவு என்னை தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் திட்டமிட்டப்படி போரட்டத்தி நடத்தி முடித்து விட்டு யாழ் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பொது எம் மீதான கழிவு எண்ணை தாக்குதலை வழி நடத்தியவர் போலிஸ் நிலையத்திற்குள் இருந்து எம்மிடம் சிக்கி கொண்டார். கழிவு எண்ணை வாளியுடன் எம்மை பின் தொடர்ந்த இராணுவத்தினர் போலிஸ் நிலையம் வரை வந்து சென்றனர். எல்லாவற்றையும் பொலிசார் வேடிக்கை பார்த்த வண்ணம் நின்றார்கள்.

இதை தொடர்ந்து சம உரிமை இயக்கம் சார்பில் நாம் செய்த முறைப்பாடை பொலிசார் ஏற்க மறுத்து, எம்மை கைது செய்ய போவதாகவும் அச்சுறுத்தினர். வாக்கு மூலம் அளித்த ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே சிங்கள பௌத்தர் என்று பதிவு செய்யப்பட்டமைக்கு நாம் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, இலங்கையர் என்று பதிவு செய்யுமாறு வலியுறுத்தினோம். எம் கழுத்துகளை பிடித்து அச்சுறுத்திய பொலிசார் எம் தொடர் எதிர்ப்பின் காரணமாக பௌத்தர் என்பதை நீக்கியதோடு நாம் இராணுவ ஆட்சியை நீக்க கோரி கையெழுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் எம் மீது இராணுவ தரப்பினர் தாக்குதல் நடத்தியதையும் பதிவு செய்தனர்.

மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்ட பொலிசாரை நாம் வன்மையாக கண்டிப்பதோடு கட்டாகாலிலாக திரிய விடப்பட்டிருக்கும் இராணுவத்தினருக்கு உடனடியாக புனர்வாழ்வு வழங்கப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம். போலிஸ் முறைப்பாடுகளில் இனம், மதம் குறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தி நிற்கின்றோம். அடக்குமுறையை நேரே நின்று எதிர்க்காமல் அடக்குமுறையை உடைத்தெறிய முடியாது. எனவே இராணுவ அடக்குமுறைக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை அணித்திரட்டி எம் எதிர்ப்பு போராட்டங்களை சம உரிமை இயக்கம் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. மகிந்த பாசிசத்திற்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு நாம் இந்த சந்தர்ப்பத்திலே அறைக்கூவல் விடுக்கின்றோம்.

-சம உரிமை இயக்கம்.