ரிசானாவை ஷரியா சட்டம் மூலம் கொன்றதால் அதைப் போற்றும் மதக் காட்டுமிராண்டிகள். சட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று கூறி, கொன்றதை நியாயப்படுத்தும் அரச பயங்கரவாத பாசிட்டுகள். ரிசானா கொல்லப்பட மத அடிப்படை வாதமும், அரச பாசிசமும் ஒன்றுக்கு ஒன்று துணையாக தூணாக இருந்தது. ஒரு ஏழை, ஒரு தொழிலாளி, ஒரு அபலைப் பெண், ஒரு குழந்தை, அன்னிய நாட்டு கூலி உழைப்பாளி … என்று சமூகத்தில் அடிநிலையில் எந்த சமூக ஆதாரமுமற்றவர்களைக் குற்றவாளியாக்கி கொன்றிருக்கின்றது ஷரியா சட்டமும், அரச பாசிசமும்

ரிசானாவை கொன்ற கொலைக் குற்றத்தின் பின் இருப்பது என்ன? மூலதனத்தின் நலனும், அதை பாதுகாக்கும் ஷரியா சட்டமும் தான். ஏழைகளின் உழைப்பை வருத்தும், பிழிந்தெடுக்கும் சுரண்டல் (ஷரியா) சட்டங்களும், அதன் தண்டனைகளும், பணக்காரருக்கும் சுரண்டுவோருக்கும் சார்பானது.

இந்த வகையில் ரிசானா செய்யாத குற்றத்துக்காக, ஷரியா சட்டம் மூலம் தண்டனை வழங்கியிருக்கின்றனர். குற்றம் என்னவென்றே தெரிந்து கொள்ள முடியாத நிலையில் ஷரியா சட்டம் மூலம் மரண தண்டனை வழங்கி இருக்கின்றனர். நீதி விசாரணை என்ற பெயரில், நீதி மறுக்கப்பட்ட நிலையில் ஷரியா சட்டம் மூலம் தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இப்படிப்பட்ட ஷரியா சட்டம் புனிதமானது என்று கூறி, இந்த ஷரியா சட்டவிரோத தண்டனையை கூட மத அங்கி அணிந்து ஆதரிக்கும் மதக் காட்டுமிராண்டிகள் ஒருபுறம்.

மறுபுறம் நாட்டில் ஒரு வாய் கஞ்சிக்கு கூட வாழவழியற்ற ஏழைகளை உற்பத்தி செய்து, அவர்களை ஏற்றுமதி செய்கின்ற அரசு, இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகின்றது. அந்தக் குற்றத்தின் தன்மை, விசாரணை நடந்த முறை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், 18 வயதுக்குக் குறைந்த குற்றவாளி, முதல் பிணைப் பணம் செலுத்தி விடுவிக்கும் பல அடுக்கு நடைமுறைகள் இருந்தும், அதை நடைமுறையில் முன்னெடுக்காத குற்றவாளியாக அரசு இருக்கின்றது. இந்த ரிசானா விவகாரத்தை கொண்டு சவூதியை சுற்றிப் பார்க்க, தங்கள் உல்லாசப் பயணமாக்கிய அரச எடுபிடிகள், இன்று இதை சவூதி உள்நாட்டு விவகாரமாக, சட்ட விவகாரமாகக் காட்டி தங்கள் குற்றத்தை ஷரியா சட்டம் மூலம் போர்த்திக் கொள்ள முனைகின்றனர்.

சவூதி உள்நாட்டு விவகாரம் மற்றும் சட்ட விவகாரத்துக்கு அப்பால், ரிசானா தம் சொந்த நாட்டுப் பிரஜை என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாத, மனிதவிரோத கூட்டத்தைக் கொண்ட அரசாகவே அரசு இருக்கின்றது. இன்று 20 முதல் 30 இலட்சம் ஏழைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துள்ள இந்த அரசு, அவர்களைப் பாதுகாப்பதற்கான எந்த சட்டத்தையும் நடைமுறையையும் கொண்டிராத மக்கள் விரோத அரசாக தொடர்ந்து இருக்கின்றது. வெளிநாட்டுக் கூலிகளை தொடர்ந்து ஏற்றுமதி செய்ய, ஏழைகளை நாட்டில் தொடர்ந்து உற்பத்தி செய்யும் அரசு தான் இந்த அரசு. இது தான் அதன் கொள்கையும் கூட. ஷரியா சட்டம் போல், பௌத்த அடிப்படை வாதத்தை இன அடிப்படைவாதத்தை சொந்த நாட்டில் கொண்டு ஆளும் அரசு, சவூதி ஷரியா சட்டத்தை உள்நாட்டு சட்ட விவகாரமாக காட்டுவதில் ஆச்சரியத்துக்கு இடமில்லை.

இலங்கையில் உழைத்து வாழும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துவரும் இந்த அரசு, இருக்கும் உரிமைகளை பறித்து வரும் இந்த அரசு, வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக எதையும் குரல் கொடுக்காது. இதுதான் இதில் உள்ள உண்மை. அமெரிக்காவின் அனுசரணையில் இயங்கும் சவூதி ஷரியா காட்டுமிராண்டி சட்டம் போல், இலங்கையில் மக்களை அடக்கியாளும் சர்வாதிகார பாசிசத்தை திணித்திருக்;கின்றது.

இன்று இலங்கையில் இருந்து ஏற்றுமதியான 20 முதல் 30 இலட்சம் ஏழைகள், அதுவும் பெண்கள் தான் அதிகம். இன்று நாள் தோறும் பாலியல் வல்லுறவுக்கும், கொத்தடிமையாகவும், செய்த வேலைக்கு கூலியின்றியும், அடிமைகளாகவும், வன்முறைக்குள்ளும், கொலை செய்யப்பட்டு வரும் நிலையில், அரசு அவர்களை பாதுகாக்க என்ன தான் செய்கின்றது? சொந்த நாட்டு பிரஜைகளுக்காக இந்த அரசு போராடுகின்றதா? இல்லை. மறுபக்கத்தில் இந்த முஸ்லீம் நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், இந்த குற்றங்களுக்காக தண்டிக்கின்றதா? அதுவுமில்லை.

ஷரியா சட்ட அடிப்படைவாதிகளும், இந்த பௌத்த பேரினவாத பாசிச அரசும் மக்களுக்கு எதிராக ஒன்றைத்தான் செய்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிச் சுரண்டவே உதவி செய்கின்றது. இதற்கு புனித சட்டங்கள் முதல் அதை அந்த நாட்டின் உள்நாட்டு சட்ட விவகாரரமாக காட்டி ஒடுக்க உதவுவதைத் தாண்டி, எந்த மனித அறத்தையும் இங்கு காணமுடியாது.

கடவுளின் பெயரில் மன்னர்கள் மக்களை அடக்கி ஒடுக்க உருவாக்கியது தான் ஷரியா சட்டம். இது மக்களை சுரண்டுவதை பாதுகாக்கும், மூலதனச் சட்டம். மதத்தின் பெயரில் உருவானது. இன்று அமெரிக்கா என்ற கடவுளின் துணையுடன் தான், இந்த பழைய காட்டுமிராண்டிச் சட்டம் மக்கள் மேல் தொடர்ந்து திணிக்கப்படுகின்றது. மூலதனத்தின் உலக ஒழுங்கைப் பேணுகின்ற, அதை பாதுகாக்கின்ற வண்ணம் ஷரியா சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.

இந்த ஷரியா சட்டம் அன்று முதல் இன்று வரை மூலதனத்தையும் சுரண்டலையும் தொடர்ந்து பாதுகாக்கின்றது. இந்த அடிப்படையில் தான் இலங்கை அரசு, தன் நாட்டு பிரஜைக்கு எதிராக அதை ஏவுவதை அங்கீகரித்து, அதை அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரமாக சித்தரிக்கின்றது.

இந்த ஷரியா மூலதன சட்டத்தை மதச்சட்டமாக மட்டும் திரித்துக் காட்டி, அனைத்து இஸ்லாமியரும் கடைப்பிடிக்க கோரும் எவனும், அந்த சட்டத்தை பின்பற்றுவது கிடையாது. 1500 வருடங்களுக்கு முன்னான மன்னர்களின் சுரண்டல் சட்டத்தையும், அன்றைய வாழ்க்கை நெறிகளையும், இன்று எவரும் நடைமுறையில் தங்கள் வாழ்வாக கடைப்பிடிப்பதே கிடையாது.

மத அடிப்படைவாதிகள் அதை தங்கள் சுயநலனுக்கும், தங்கள் சொத்தை பெருக்கிக் கொள்ளவும், வயிற்றுப் பிழைப்புக்கும் தான் ஷரியா சட்டம் பற்றிய பித்தலாட்டங்களை மக்கள் விரோத நோக்கில் திணிக்கின்றனர். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மற்றவன் உழைப்பை பொறுக்கித் தின்பதைத் தாண்டி, மத நிறுவனங்களும், மதவாதிகளும் உருவாகுவதில்லை. உன் உழைப்பை கடவுளின் பெயரில், மதத்தின் பெயரில் கொடுப்பதை நிறுத்தினால் போதும், மதநிறுவனங்களும் இருக்கப் போவதில்லை, மதவாதிகளும் இருக்கப் போவதில்லை, ஷரியா சட்டமும் இருக்கப் போவதில்லை. இது தான் உண்மை. இந்த கொலையை காட்டுமிராண்டியாக மதத்தைச் சொல்லி ஆதரிக்கும் மனித விரோத கூட்டமும் இருக்கப் போவதில்லை.

 

பி.இரயாகரன்

11.01.2012