05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

யாழ் - ஆணாதிக்கத்தின், ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் மீதான வன்முறையும், உளவியல் காரணிகளும்

புலம்பெயர் ஊடகங்களின் ஆணாதிக்க வக்கிரம்

புலம்பெயர் ஊடக வட்டாரத்தில், BBC தமிழ்சேவை தொடக்கம், தமிழினவாத புலிகளின் ஊடகங்கள் ஈறாக, அதிதீவிர மாவோயிசம் கதைக்கும் "இடதுசாரி" இணயங்கள் வரை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண் பிள்ளைகள், இலங்கை ராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகப்பட்டதாக செய்திகள் வெளியிட்டன. அச் செய்தியை தமக்கு நம்பிக்கையான தகவலாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதாக மேற்படி ஊடகங்கள் கூறின. எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல், மற்ற ஊடகங்களுக்கு ஒருபடி மேலே போய், ஐரோப்பாவில் அதிதீவிர மாவோயிசம் கதைக்கும் "இடதுசாரி" தமிழ் இணயமொன்று, "16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?" எனச் செய்தி வெளியிட்டது. அத்துடன் "மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?" என்ற தகவல், இலங்கையிலிருந்து சிங்களம் பேசும் தகவலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல் எனக் கூறியது.

இந்த வக்கிரமான, ஆதாரமற்ற செய்தியைக் கண்டித்து (ndpfront.com) இந்த இணையத்தளம் "ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களும், தமிழ்தேசியமும், பெண்கள் மீதான வன்முறையும்" என்ற குறிப்பு ஒன்றைச் சில நாட்களுக்கு முன் பிரசுரித்தது.

சமூக மற்றும் தனிமனித உரிமைகளை கவனத்திற் கொள்ளாமல், தமது அரசியல் நலனை முன்னிறுத்தி, ஆதாரமற்ற வகையில் செய்தி வெளியிடுவது தொடர்பாக "இலங்கை அரசு செய்யும் கொடுமைக்கு ஈடானதாகவே, புலம்பெயர் ஊடகங்களின் நடைமுறையும், தமிழ் பெண்கள் மீதான வன்முறையாகப் பார்க்கப்பட வேண்டும்!" என மேற்படி குறிப்பில் கூறப்பட்டது.

இந்தக் கருத்திற்கு பதிலளித்த அந்த இடதுசாரி இணையம், "இலங்கை அரசுக்கு எதிரன ஒவ்வொரு எதிர்ப்புக் குரல்களையும் வெளியாவதற்கு முன்னமே அழிக்க எண்ணும் இந்தக் கூட்டங்கள் குறித்து எச்சரிக்கை தேவை. மறைமுகமாக இனப்படுகொலை இராணுவத்திற்கு புனிதச் சான்றிதழ் வழங்கும் முகமிலிகளான இந்தக் கும்பல்கள் இலங்கை அரசின் புலம்பெயர் நீட்சிகளே." எனத் திட்டித் தீர்த்தது. இலங்கை அரசின் ஊது குழல்கள் எனவும் முத்திரை குத்தியது.

பெண் பிள்ளைகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அடுத்த நாளே, அப்பிள்ளைகள் என்ன காரணத்தால் அங்கு அனுமதிக்கப்பட்னர் என்ற விடயம் எமக்கு தெரிந்திருந்தது. அதேபோல யாழ்ப்பாணத்தில் இயங்கும் அனைத்து ஊடகங்களுக்கும், குறிப்பாக "தமிழ் தேசிய ஊடகங்கள்" அனைத்தும் தெரிந்திருந்தன. ஆனால் அவை எதுவும் அத்தகவலை வெளியிடவில்லை. அதேபோல பெண் பிள்ளைகள் பாலியல் வதைக்கு ஆளானார்கள் என்று பொய் கூறவும் முயலவுமில்லை.

யுத்தமும் உளவியற் சிக்கல்களும்

யுத்தத்தில் பின்னான காலத்தில், வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்துச் சமூக மட்டங்களிலும் உளவியல் ரீதியான பிரச்சனைகள் பரவலாகக்

காணப்படுகிறது. இதன் வெளிப்பாடுகள் தான் பெரும்பாலும் தற்கொலைகள், கொலைகள், சிறு குற்றச்செயல்கள், சிறுவர்கள், பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல், உள வன்முறைகள், அதீத மது நுகர்வு, குடும்ப-உறவுகள் சார் முரண்பாடுகள் போன்ற சமூக, தனிமனிதம் சார்ந்த பிரச்சனைகள்.

இன்று தமிழ் சமூகத்தில் பரவலாக்கக் காணப்படும் உளவியற் சிக்கல் (Post Traumartic Stress Disorder (PTSD )ஆகும். இதை, ”உளப்பேரதிர்வின் (Trauma ) அல்லது மனக்காயங்களின் பின்னாக ஏற்படும் மனவடுவானது, நெருக்கீடுகளுக்கு (Stress ) உள்ளாகும் போது ஏற்படும் உளவியல் சிக்கல்கள்” எனக் கூறலாம். அல்லது ”நெருக்கீட்டுக்கு பின்னான மனவடு சார்ந்த உளவியல் சிக்கல்கள்” எனச் சுருக்கமாக கூறலாம்.

இதன் அடிப்படையில், கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி ராணுவத்தில் இணைக்கப்பட்ட அனைத்துப் பெண்களும், இறுதி யுத்தத்துக்குள் அகப்பட்டவர்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்று, பின்னாளில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பிரதேசங்களில் மறுகுடியேற்றப்பட்டவர்கள். மேலும், அவர்கள் அனைவரும் பிறப்பிலிருந்து இன்றுவரையான வாழ்கையை யுத்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே இவர்களிற் பலர், மேற்கூறியஉளநெருக்கீட்டுக்கு பின்னான மனவடு சார்ந்த உளவியல் சிக்கலுள்ளவர்களே (PTSD). இவ்வாறான மனச்சிக்கலை உடைய இந்த யுவதிகளை, அம் மனச்சிக்கலை உருவாக்கியதில் மிக முக்கியமான பாத்திரத்தை வகுக்கும், இலங்கை இராணுவத்தில் (பொய் தகவல்கள், மற்றும் மறைமுக அழுத்தங்கள் மூலம்) இணைக்கப்பட்டதென்பது, அப்பெண் பிள்ளைகள் மறுபடியும் மிகக்கடுமையான மன உளைச்சலுக்கும், மனப்பதகளிபிற்கும் (Anxiety), மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கும் செயலாகும்.

இதன் பின்னணியில் தான், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளின் முன்னிரவில், ராணுவப்பயிற்சி சார்ந்த

செயற்பாடு ஒன்றுக்குள், (அச்ச மூட்டும் ஒலிகள், உருவங்கள், வெடிசத்தங்கள் அல்லது மனக்க்கிலேசத்தை ஏற்படுத்தும் பயிற்சிகள்) தமிழ் யுவதிகள் உள்ளாக்கப்படும் போது, அவர்களில் 15 பேர் (Acute Stress Reaction ) ”தீவிர உளநெருக்கீட்டால் ஏற்படும் எதிர்த்தாக்கத்துக்கு”ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, மனவடு சார்ந்த உளவியற் சிக்கலுள்ளவர்கள் (PTSD), தீவிர உள நெருக்கீட்டால் ஏற்படும் எதிர்த்தாக்கத்துக்கு (Acute Stress Reaction ) ஆளாக்கப்படும் போது, இலகுவாக உளவியல்-உடலியற் பதகளிப்பும், அதிர்சியும் அவர்களை ஆட்கொள்கிறது. மேலும், கதைக்க முடியாநிலை, பேதலித்த நிலை, உடற்கட்டுப்பாட்டை இழந்த நிலை, பிதற்றல், அச்சம் போன்ற வெளிப்படையான குணங்குறிகளை தீவிர உள நெருக்கீட்டுக்கு உள்ளாகப்பட்டோரிடம் அவதானிக்க முடியும்.

இவ்வாறான குணங்குறிகள், வழமையாக நம் சமூகங்களில் ஒருவரிடம் அவதானிக்கும் போது, அவருக்கு பேய் பிடித்துள்ளது அல்லது சூனியம் செய்யப்பட்டுள்ளது எனக்கூறுவது நன்கு அறியப்பட்டதொரு விடயம். இன்று யாழ்- குடாநாட்டில் பல கிறீஸ்தவ சபைகள் பேய் ஓட்டுகிறோம் என்ற பெயரில், மதப்பரப்பல் செய்வது கவனிக்கத்தக்கது. அதே போன்று வேறு மதம் சார்ந்த மாந்திரீர்களும் பேய்ஓட்டுதல், நூல்கட்டுதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வகையில் ராணுவத்தால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண்கள், Acute Stress Reaction (தீவிர உள நெருக்கீட்டுக்கு உள்ளாகப்பட்டனர் என்பதே உண்மையான விடயமாகும்.

இனியும் ஒரு ஊடகத் துகிலுரிதல், நடைபெறாதிருக்க...

ஆரம்பத்தில் கூறியது போல, இவ்விடயங்கள் தமிழ் ஊடகங்களுக்கு தெரிந்திருந்தது. அதேவேளை, உத்தியோகப்பற்றற்ற முறையில் தமிழ் உளவியல் நிபுணர்கள், சில முக்கிய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் ராணுவத்தால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண்களின் உண்மையான நிலைபற்றி விளக்கிக் கூறியிருந்தனர். ஆனால் அரசியர் சந்தற்பவாதமும், யாழ்-மேலாதிக்க-ஆணாதிக்க சிந்தனையும் உள்ள சமூகவிரோதிகள், அப்பெண் பிள்ளைகளை தமது கீழ்த்தரமான, அசிங்க உணர்வுகள் சார்ந்த மனவெளிர்ச்சியை தீர்துக்கொள்ள உபயோகித்தனர் .

இதன் தொடர்ச்சியாக உளவியல் வைத்தியர் சிவதாஸ், நேற்று (15.12.2012) BBCயில் தன்னை ஒரு தமிழ்தேசியவாதி என்று உறுதிப்படுத்திய பின், பாஞ்சாலியின் மானம் காத்த கிருஷ்ணன் போல, ராணுவத்தால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண்களின் ”மானத்தைக்” காத்துள்ளார். ஒருவையித்தியர் என்ற முறையிலும், மிக நன்கு தெரிந்த சமூகசேவகர் என்ற முறையிலும், திரு.சிவதாஸ் தனது கடைமையைச் செய்துள்ளார். அதேவேளை, இனியொரு ஊடகத் துகிலுரிதல், நடைபெறாதிருக்க இனவாத வெறிபிடித்த, ஆணாதிக்க "துச்சாதனர்களை" தமிழ் சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும்!!!

16.12.2012 ஜனாயகம் (இலங்கை )

இது குறித்து எமது இணையத்தளங்களின் வந்தவை

1.மருத்துவரான டாக்டர் . சிவசுப்ரமணியம் சிவதாஸ் எழுதிய "நலமுடன்" நூல்

2.ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களும், தமிழ்தேசியமும், பெண்கள் மீதான வன்முறையும்

3.இனவாத பாசிச இராணுவ ஆட்சியை அம்பலப்படுத்தி பிழைக்க, பலியிடப்பட்ட பெண்கள்

4.பெண்ணின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் யுத்தம் மட்டும் மறுக்கவில்லை, சமூகமும் மறுக்கின்றது.

5.இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை' -BBC செய்தி


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்