தமிழ்தேசியம் எப்படி இனவாதமோ, அப்படித்தான் சிங்களத் தேசியமும் இனவாதமாகும். இதில் ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில், அதனுள்ளான இனவாதம் இல்லாமல் போய்விடாது. இனத்தை முன்னிறுத்திய தேசியம் எங்கும் எப்போதும் இனவாதம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்துடன் போட்டுக் குழப்பக் கூடாது. இதனடிப்டையில் இனவாதம் சார்ந்த தேசியத்திற்கு எதிராக, இன வரையறை கடந்த தேசியத்தை முன்னிறுத்தவேண்டும். ஏனென்றால் முதலாளித்துவ தேசியத்தின் முரணற்ற கூறுகள், ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கின்றது. இனம் சார்ந்த தேசியவாதம், ஜனநாயகக் கோரிக்கைகளை மறுத்து தன்னை அணிதிரட்டுகிறது. அதனால் பாட்டாளி வர்க்கம் இனவாதத்தை மறுக்கும் போது, ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்த்தவேண்டும்.

முதலாளித்துவ தேசியத்தை மறுத்தே, இனவாதம் சார்ந்த தேசியங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த வேறுபாட்டை அரசியல்ரீதியாக நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது முதலாளித்துவ தேசியம் என்பது, இனவடையாளத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த வேறுபாட்டை தமிழ் - சிங்கள இனத் தேசியத்தின் பின், நாம் வேறுபடுத்தி காணவேண்டும்.

இலங்கையின் அரசியல்-சமூக தளத்தில் சிங்கள இனத் தேசியத்தை தேசியமாக கருதும், தமிழ் இனவாத தேசிய வரையறைதான் உள்ளது. அது போல் தமிழ் தேசியத்தை தேசியமாக கருதும் சிங்கள இனத் தேசிய வரையறைதான் உள்ளது. இதை நாம் அரசியல்ரீதியாக வேறுபடுத்திக் காணாத வரை, எமது தேசியம் பற்றிய அரசியல் கண்ணோட்டம் கூட இனவரையறைக்கு உட்பட்டது தான்.

சிங்கள இனத்தேசியத்துக்கு எதிராக முதலாளித்துவ, இன வரையறை கடந்த தேசியத்தின் சரியான கூறை தமிழ் மக்கள் முன்னிறுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில் மேற்கூறியபடி சிங்கள இன தேசியத்தை எதிர்த்து, தமிழ் தேசியத்தை உயர்த்திப்பிடிப்போர் அரசியல் எதிர்வினையாற்றுவது கிடையாது. இதற்கு மாறாக தமிழர், தமிழ் இனவாதத்தையே, தங்கள் தேசியமாக கொள்கின்றனர். இதைத்தான் சிங்கள தரப்பிலும் செய்கின்றனர்.

சரியான முதலாளித்துவ தேசியத்தை இனவாதத்துக்கு எதிராக முன்னிறுத்துவதன் ஊடாக, இனவாதத்தை எதிர்த்து செயலாற்ற வேண்டும்.

இந்தவகையில் சிங்களப் புரட்சிகர சக்திகள், சிங்கள இனவாத தேசியத்தை எதிர்த்து, முதலாளித்துவ ஜனநாயக அடிப்படையைக் கொண்ட தேசியத்தை முன்னிறுத்திப் போராட வேண்டும். சிங்கள இன தேசியம் என்பது :

 

1.இலங்கையில் தமிழ் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இயங்குகின்றது.

2.இலங்கை தேசியத்துக்கு எதிராக இயங்குகின்றது. இலங்கை தேசியம் என்பது, ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது.

3.சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிராக இயங்குகின்றது.

 

இந்த அடிப்படையில் மூன்று வெவ்வேறு தளத்தில், சிங்கள புரட்சிகர சக்திகள் போராடவேண்டும். தேசியம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட, தேசிய முதலாளித்துவதை அடிப்படையாக கொண்டது. இதை வலியுறுத்தியும், அதைக் கோரியும், சிங்கள இனத்தேசியவாதத்தை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்திப் போராட வேண்டும்.

சிங்கள இனவாத தேசியம் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு எதிராக இயங்குகின்றது என்பதை மட்டும் முன்னிறுத்தி போராடுவதல்ல, மாறாக முதலாளித்துவ தேசியத்தின் முரணற்ற ஜனநாயக கூறுகளை முன்னிறுத்தியும், முரணான இனவாத தேசியத்தை எதிர்த்தும் போராடவேண்டும். தேசியம் என்ற வரையறைக்குள் முரணானது இனவாதமாகவும், முரணற்றது முதலாளித்துவ தேசியமாகவும் இருக்கின்றது.

இனவாதத்துக்கு எதிரான அரசியலை, வெறும் இனம் சார்ந்த ஒடுக்குமுறையாக மட்டும் குறுக்கிப் பார்க்கக் கூடாது. மாறாக அது இலங்கைத் தேசியத்தை மறுப்பதுடன், சுரண்டப்படும் மக்களை பிளவுபடுத்தி இயங்குவதைக் காணவேண்டும்.

இனவாதத்தை எதிர்த்த போராட்டத்தை முன்னெடுக்கும் புரட்சிகர சக்திகள், பொதுவாக இலங்கைத் தேசியத்துக்கு எதிராக அது செயற்படுவதை காண்பதில்லை. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் தேசியத்தை மறுக்க, இனத் தேசியத்தை ஆளும்வர்க்கங்கள் பயன்படுத்துவதை கவனத்தில் கொள்வதன் மூலம் இனத் தேசியத்துக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவ ஜனநாயக தேசியத்தின் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இனவாதத்துக்கு எதிராக ஒரு முனையில் அல்ல, மூன்று முனையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதிரியை தனிமைப்படுத்தும் வண்ணம், இதை ஒருங்கிணைக்க வேண்டும்.

 

பி.இரயாகரன்

23.11.2012

1. இனவொடுக்குமுறையையும் பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -01

2. தமிழ் சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -02

3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-03

4. புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் 04

5. இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் 05

6. புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -06

7. "கோத்தாவின் யுத்தம்- ஒரு நல்வரவு சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -07

8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -08

9. இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -09

10. இனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-10

11. தமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா ? இல்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -11

12. எம்மினத்தை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாது புரட்சியை நடத்தமுடியுமா - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் -12

13. சிங்கள தேசியத்தை எதிர்க்காத சிங்கள சர்வதேசியம் மார்க்சியமல்ல - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-13

14. இன ஜக்கியம் என்பது இன நல்லுறவா! அல்லது வர்க்கப் போராட்டமா!! - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 14

15.எந்த இடைக்கட்டமுமின்றி கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்பது தவறானது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 15