ஏதோ கனவிலே கேட்பது போலே கிடக்கிறது. ஆனால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கு. கொஞ்சம் கண்ணை விழித்து காதைக் கூர்மையாக்கி கேட்கிறேன். உண்மையிலே அது ரெலிபோன் அடிக்கிற சத்தம் தான். வெள்ளிக்கிழமையெண்டபடியாலே லேற்றாக வந்து தான் படுத்தனான் கண் திறக்க எரிந்து வலித்தது. முழிக்க முயன்றேன் முடியவில்லை. ரெலிபோன் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.
ஒரு மாதிரி முழிச்சு பக்கத்திலிருந்த மணிக்கூட்டைப் பார்க்கிறேன், அதிகாலை நாலு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நேரம் ஒரு நாளும் எடுக்கக் கூடாது எண்டு அம்மாவுக் பல முறை சொல்லியிருந்தால் அவ ஒரு நாளும் இப்ப எடுக்க மாட்டா…
அப்ப இப்ப இந்த நேரம் ஆர் எடுப்பினம்..
ரெலிபோன் தொடர்ந்து அடிச்சுக் கொண்டே இருந்தது. எடுப்பமோ விடுவோமோ… என்று யோசிக்க முன்னர் ஆருக்கு என்னவோ என நினைத்து திடீரென பாய்ந்து போய் ரெலிபோனைத் தூக்கினேன்.
கலோ.. நீங்க தானே தினேஸ்… இந்த நேரத்திலே உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும். நான் சுசேனா ஆஸ்ப்பத்திரியிலிந்து கதைக்கின்றேன் என்றாள் ஒரு பெண். எனக்கு அரைகுறை தூக்கமானதால் என்ன… என்ன என்று மீண்டும் கேட்டேன். நாங்கள் ஆஸ்ப்பத்திரியிலிருந்து கதைக்கிறோம் என்ற போது என் உடம்பெல்லாம் படபடத்து துடித்தது. என் இதயமும் வேகமாய் அடிக்கத் தொடங்கியது. ஆர் ஆர்க்கு என்ன நடந்ததோ…?
உங்களுடைய நண்பர் ரமேஸ் தொழிற்சாலையில் நடந்த விபத்து ஒன்றின் காரணமாக இங்கே அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது தான் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம். உங்களுடைய ரெலிபோன் நம்பர் தான் எமக்கு கிடைத்துள்ளது என்றும், உடனே வந்தால் மற்ற விசையங்களைக் கதைக்கலாம் எனச் சொல்லி விட்டு என் பதிலுக்காய் காத்திருந்தாள் அந்தத் தாதி.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கால்கள் இரண்டும் நிலத்தில் ஊன்ற முடியாமல் உதறிக் கொண்டது. உடனே வருகிறேன் எனப் பதிலளித்து விட்டு போனை வைக்கவும் எழுந்து வந்த என்ரை மனுசி என்னப்பா என்னப்பா யாருக்கு என்னவாம் என்ற படி பக்கத்தில் நின்றாள்.
அவசரப்பட்டபடியே நடந்ததைச் சொல்லிவிட்டு வெளிக்கிட்டு வந்து காரில் ஏறினேன்.
ரமேஸ் ரமேஸ் என்று மனம் அங்கலாயத்துக் கொண்டது. கடவுளே அவனுக்கு ஒண்டும் நடக்கக் கூடாது… பாவம் அவன் நல்லவன் மனம் நல்லதை நினைத்தாலும் வேறு தேவையில்லா எண்ணங்களையும் நினைத்து நினைத்து குழம்பிக் கவலைப்பட்டுக் கொண்டது.
ஆஸ்ப்பத்திரி வளாகம் மிக அமைதியாக இருந்தது. மங்கலாய் எரிந்து கொண்டிருக்கும் மின்விளக்குகளைச் சுற்றி சின்னச் சின்னப் பூச்சிகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. இந்த அமைதியும் இந்தச்சூழ்நிலையும் என்னை மேலும் பயமாக்கியுது.
எனக்கு ஏற்கனவே பரீட்சயமான ஆஸ்ப்பத்திரியாததால், அந்த லிவிற் படிகள் மூலம் அந்தத் தாதி குறிப்பிட்ட அந்தக் காரியாலயத்தை வந்தடைந்தேன் எனக்காகக் காத்திருந்தவள் போல் நான் தான் உன்னுடன் கதைத்த சுசேனா என்று கைகுலுக்கிய படியயே தன்னை அறிமுகம் செய்த படி மற்றவர்களையும் அறிமுகம் செய்தாள்.
கடவுளே இவர்கள் என்ன சொல்வப் போகின்றார்களோ… என் நண்பனுக்கு என்ன ஆனதோ.. கடவுளே எனக்கு எதையும் தாங்கும் சக்தியைத் தா… கடவுளே என் நண்பனுக்கு ஒன்றும் செய்யாதே…என்னையறியாமல் என் மனதுக்குள்ளேயே வேண்டாத கடவுள்களையெல்லாம் வேண்டிக் கொண்டேன்.
நான் தான் இந்த இடத்துப் பெரிய டொக்டர் நில்ஸ். எனக்கு இதைச் உனக்குச் சொல்வதற்கு மிகவும் கஸ்ரமாய் இருக்கின்றது. உன்னுடைய நண்பனுக்கு கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலத்துக்கு மேலான ஒரு பாரிய சத்திர சிகிச்சையைச் செய்து விட்டு வந்திருக்கிறேன். அவர் இன்னும் கண் விழிக்க எப்படியும் மூன்றோ நாலோ மணித்தியாலங்கள் எடுக்கலாம். ஆனால் அவர் முழிச்சாலும் ….
முழிச்சாலும்..என வியப்போடு கேட்டேன். நீ உன்னை நன்றாகத் திடப்படுத்திக் கொள்…. அவர் முழித்தாலும் இனிமேல் சாதாரண மனிதர்கள் போல் எழுந்து நடமாடக்கூடியவரல்ல. ஓன்றுமே செய்ய முடியாத ஒரு வலது குறைந்தவராகத் தான் அவரால் வாழ முடியும். இனிமேல் சுயாதீனமாக அவரால் இயங்க முடியாது என்ற போதே என்னையறியாமல் ஓவென்றெ கத்திக் குளற வேண்டும் போல் இருந்தது. ஆனால் என்னால் முடியாமல் எல்லாம் அடைத்தப் போய் சடமாய் நின்றேன்.
பாறாங்கல்லொன்றை விழுங்கியது போல் என் தொண்டையெல்லாம் அடைத்து முச்சே வராதது போல் அடைத்து இறுக்கி நின்றது.
டேய் ரமேஸ் இதுக்குப்பதிலாய் நீ செத்தெயிருக்கலாம் என்று மனம் எண்ணிக் கொண்டது.
அப்படி என்னதான் நடந்தது…
அவர் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் பாரங்களை ஏற்றி இறக்கும் சின்ன ரக்ரர் மாதிரியான வாகனத்தை ஓடிக்கொண்டிருந்த போது ஏதோ நிலை தடுமாறிப் போய் அங்கே சாமான்கள் வைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டிகளில் மோதி அதுகள் எல்லாம் பாரங்களோடும் இவர் மேல் விழுந்திருக்காம். தலையிலும் பலத்த அடியோடு அவரது முள்ளந்தண்டும் முற்றாகச் சேதமாகி விட்டது. இவர் உயிர் பிழைத்ததே பெரிய அதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
யாரும் ஓருவரோடு ஒருவர் கதைக்கவேயில்லை. இனிமேல் என்னத்தைக் கதைப்பது. அந்த அறையிலிருந்த குளிர்சாதனப்பெட்டியின் இரைச்சல் சத்தமும் மேசையிலிருந்த கொம்பியுட்டரின் மெல்லிய இரைச்சல் ஒலியும் பெரிதாய் சத்தம் போடுவது போல் என்னை மேலும் பயமுறுத்தியது.
எங்குமே நிசப்பம்.
நீ தானே தினேஸ்… நான் தான் ரமேசின் வேலைப் பொறுப்பதிகாரி ரொமஸ் எனக்கூறியபடியே என்னை வந்து கைகுலுக்கினான். அவனது வேலைப் பொறுப்பதிகாரி. அவரது உடுப்பிலும் நிறைய இரத்தக் கறைகள் அவனது முகத்திலும் சோகத்தின் கோடுகள்..
நீங்கள் இருவரும் கதையுங்கள்… பிறகு வந்து உனது நண்பனிடம் அழைத்துச் செல்லுகிறோம் எனக் கூறிவிட்டு அவர்கள் வெளியே போனார்கள்.
உன்னுடைய நண்பன் எனக்கும் நல்ல நண்பன். நான் பொறுப்பாளனாய் இருந்தாலும் அவனுடன் நண்பனாய்த் தான் பழகியதுண்டு. நல்லவன் கெட்டிக்காரன். நல்ல வேலைகாரன். சீ சீ… இப்படி அவனுக்கு நடந்து போச்சே…. என்னால் தாங்கமுடியாமலும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் இருக்கின்றது. நான் மிகவும் நொந்து போனேன் எனக் கண்கலங்கினான் அவனது பொறுப்பதிகாரி.
இப்ப கொஞ்சக் காலமாய் அவனில் சந்தோசத்தைக் கண்டது மிகக் குறைவு. எந்த நேரமும் ஓய்வில்லாமலும் வேலை வேலையெண்டு திரிந்தான். சனி ஞாயிறு என்ன லீவு நாட்கள் எண்டு….
உன்னைப்பற்றியும் அடிக்கடி சொல்லியிருக்கிறான். தனக்கு ஏதாவது நடந்தால் முதலில் உனக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் என்றும் என்னிடம் சொல்லி உங்களது நட்பின் மகிமையை எனக்குத் தெரியப்படுத்தியிருந்தான்.
ஒரு நல்லவனின் வாழ்வு….. இப்படியா என்றபடி நானும் மீண்டும் வேலைக்கப் போக வேண்டும் பின்னர் சந்திப்போம் எனக்கூறிவிட்டு விலகிப் போக அந்தத்தாதியும் வந்து என்னை அழைத்துச் சென்றாள்.
அவனுக்காக ஒரு தனியறை. அவனைச்சுற்றி எண்ணிக்கையற்ற வயர்களும் இயந்திரங்களும். அவன் மூச்சுவிடும்போது மட்டும் அந்த ரப்பர் பலூன் மட்டும் அசைந்து கொண்டிருந்தது.
அவனைச் சுற்றி நின்ற தாதிகள் கண்வெட்டாமல் அவனை மட்டும் பாத்துக் கொண்டிருந்தார்கள். என்னையறியாமலே அவனது கையைப்பிடித்து வருடினேன். செத்த பிரேதம் கிடப்பது போல் ஆடாமல் அசையாமல் விறைத்துப் போய்க் கிடந்தான்
என்ன மனிச வாழ்கை. எத்தனையோ ஆட்டம் பாட்டம் என்று ஆடி ஓடித் திரிந்து விட்டு இப்போது ஒன்றுமே தெரியாதவன் போல் படுத்தக்கிடக்கிறான் பாவி. நேரம் எட்டு மணியைத் தாண்டி விட்டது.
இவனது மனைவி ஜெயாவையும் இவனது பிள்ளைகளையும் எப்படி ஆறுதல்படுத்துவது என யோசித்தபடி மனதைக்கல்லாகி அவர்களது வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.
என்னண்ணை இந்த நேரம். அவர் இன்னும் வரேல்லை.. என்ற படியே உள்ளே வாங்கோ என அழைக்க இல்லை ஜெயா எங்கடை ரமேஸ் வேலை செய்யிற இடத்திலே விபத்தாகி விட்டான் என்று சொல்லி முடிப்பதற்குள் எனது சோகமும் கவலையும் ஓவென்று வெடித்தச்சிதறி ஓவென்று அழத்தொடங்கி விட்டேன். ஜெயாவும் என்னைக்கட்டிப்பிடித்துக் குளற படுத்திருந்த பிள்ளையளும் எழுந்து வந்து என்னம்மா… என்னமாமா என்ற படி அழத் தொடங்கிவிட்டார்கள்.
அவனுக்கொன்றும் இல்லை. அது ஒரு சின்ன விபத்துத்தான் நீங்கள் ஒருத்தரும் பயப்படத் தேவையில்லை. ஒருவரும் அழ வேண்டாம் என உரத்துச் சத்தம் போட எல்லோரும் அமைதியானார்கள்.
அண்ணை உள்ளே வந்திருங்கோ…என்ன நடந்ததாம். என்றாள் விம்மியபடியே இப்படித்தானாம் நடந்தது என்று மேலோட்டமாகச் சொல்லி பல உண்மைகளை மறைத்துக் கொண்டேன்.
ஜயோ ஜயோ…. எனக்கெல்லாம் இப்படி நடக்குமெண்டு எப்போவோ தெரியும். அவர் ஊரிலே சகோதரிமாரின்றை யோசனையிலே எங்கேயாவது யோசிச்சுக் கொண்டு போய் இடிச்சிருப்பார். அண்னை எத்தனை நாள் சொல்லியிருப்பேன் கொஞ்ச நாளுக்கெண்டாலும் வீட்டிலே ஓய்வாயிரு எண்டு.
விடிய நாலு மணிக்கு வெளியாலே இறங்கினார் எண்டால் இரவு பத்தோ பன்னிரண்டோ மணிக்குத் தான் வருவார். சனி ஞாயிறெண்டா அதுவும் இல்லை. ஒரு நல்ல கெட்ட காரியங்களுக்காவது எம்மோடு நின்றிருக்கிறாரா. எந்த நேரமும் ஒரே வேலை வேலை. கண்டறியாத வேலை.
முன்பு கொஞ்சக்காலம் தமக்கை தங்கையின்றை சீதணத்துக்கெண்டும் அதுகளுக்கு காணி பூமிக்கெண்டும் ஓடி ஓடி உழைச்சார். பிறகு அதுகளின்றை பிள்கைளுக்கெண்டு உழைச்சார். ஏன்னண்ணை நீங்களே சொல்லுங்கோ அதுகளின்றை சாமத்திய வீட்டுச்செலவு, பிறந்த நாட்செலவு….. பிறகு அத்தான்மாற்றை மருமக்களின்ரை ஆசைக்கு ஏற்ற மாதிரி மோட்டச்சயிக்கிளுக்கெண்டு எத்தனை தரம் அனுப்பியாச்சு. போனகிழமையும் தமக்கை வந்து ஏதோ லச்சக்கணக்கிலே கேட்டவ…. இந்தாளும் ஏன் எதற்கு எண்டு கேட்கிறதில்லை… இஞ்சை கடன்பட்டோ வட்டிக்கெடுத்தோ அனுப்பிப் போடுவார். அதுகளும் இஞ்சை ஏதோ வெளிநாட்டிலேயிருக்கிற நாங்கள் காசு மரம் வைச்சிருக்கிறம் எண்டும் கேட்டவுடனே புடுங்கி அனுப்புவினம் தானே எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம்.
இப்படி அயலட்டை எண்டும் சொந்தக்காரர் எண்டும் மாதத்திலே ஒருநாளாவது வந்து காசு வேணுமெண்டு ரெலிபோன் அடிப்பினம்.
ஏதோ நாட்டிலே போர் முடிஞ்சுது போர் முடிஞ்சுது எண்டு சொல்லினம் ஆனால் எங்கடை இந்தப் போர் ஒரு நாளும் முடியவும் மாட்டுது இதுக்கு ஒரு தீர்வும் கிடைக்கவும் மாட்டுது.
இந்த ரமேஸைப் போல் எத்தனையோ இளைஞர்கள் இந்தப் புலம்பெயர் தேசங்களில்…
கடுங்குளிரிலும் பனியிலும் நித்திரையின்றி….. நிம்மதியின்றி…. உழைத்து உழைத்து ஓடாய்…..
வெறும் பகட்டு வாழ்க்கைக்காகவும் போலிக் கௌரவங்களுக்காகவும் தங்களுக்குத் தெரியாமலே தங்களை அழித்துச் சிதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்….
ஜயோ…. என்ரை வாழ்க்கை போச்சே…..ஜெயா தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறாள்.
இவளது இந்தக் கண்ணீரும் கதறலும் இவளது இந்த ஓலமும் அவலமும் எனக்கு மட்டும் கேட்டு என்ன பிரியோசனம் எங்கள் யாழ்ப்பாணத்துக்குமல்லவா கேட்க வேண்டும்.
முற்றும்.