தாய் தகப்பனுடன் இருக்க முடியாத காரணங்களினாலும், தாய் தகப்பன் இருந்தும் சில சமூகப்பழக்க வழக்க நடைமுறைகளை சரிவரச் செய்யத் தெரியாத ஒரு வகை உளவியல் வருத்தங்களைக் கொண்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற இடம் தான் நான் வேலை செய்யும் இடம். மெசின்களுடன் வேலை செய்வதை விட இந்த மனிதர்களுடன் வேலை செய்வதென்பது மிகவும் கஸ்ரமான ஒன்று. அதிலும் குழந்தைகளுடன் அதுவும் கொஞ்சம் மனம் சரியில்லா உளவியல் குறைபாடுள்ள பிள்ளைகள் என்றால். அதை அனுபவிச்சவர்களுக்குத் தான் தெரியும்.
ஒரு நாள் வேலையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது என்னுடைய பொறுப்பதிகாரி வந்து உடனே வா உன்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னை கூட்டிக் கொண்டு தனது அலுவலகத்துக்குள் போனாள். இப்ப உனக்காக புதிய வேலை ஒன்று காத்திருக்கு என்றும் எங்கள் மேலிடத்துக்கும் அதற்கு மேலான சமூக சென்ரருக்கும் தகவல் அனுப்பி விட்டேன். நீ தான் அதற்குச் சரியான ஆள் என்றும் நான் தான் சிபார்சு செய்தேன் என்றும் சொல்லிக் கொண்டு போனாரே தவிர என்ன விடையம் என்பது பற்றி ஒன்றும் விளக்கமாகச் சொல்லவில்லை.
இந்த மனுசியைக் கோவிக்கவும் முடியாது. செய்தா ஏதோ அது நல்லாத் தான் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு. கிட்டத்தட்ட இந்தத் தொழிலிலேயே பலவருடங்களுக்கு மேல் வேலை செய்த அனுபவமுள்ள மனுசி. என்ன விசயம் என்று சொல் நான் அதற்கு ஓமோ இல்லையோ என்று பதிலளிக்கிறேன் என்றேன்.
உனக்கு ஒரு நல்ல சந்தோசமான செய்தியாகத் தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் மிகுந்த சந்தேசத்துடன் சொன்னாள். அடுத்த கிழமை அகதி முகாமிலிருந்து அகதி அந்தஸ்த்துக் கிடைத்து இரண்டு தமிழ்க் சகோதரக் குழந்தைகள் எமது இடத்துக்கு வருகின்றார்கள். அவர்கள் ஏன் அனுப்பப்படுகின்றார்கள் என்ற சட்டரீதியான காரணங்களையும் இங்கே இருக்க வேண்டிய தேவைகள் பற்றியும் எனக்கு தெளிவாக விளங்கப்படுத்தினார்.
நான் கண்ணை வெட்டி முழிக்க, என்ன யோசிக்கிறாய். அவர்கள் இருவரும் போரிலே தாய் தந்தையைப் பறிகொடுத்த அனாதைக் குழந்தைகள், யாரோ உறவினர்களின் உதவியினால் இங்கு வந்தவர்கள் என்ற போது என் மனம் ஒரு கணம் பாஸ்போட் விஸா இல்லாமல் என் நாடு போய் திரும்பி வந்தது.
அனாதைக் குழந்தைகள் என்ற அந்தந் சொல்லை மறந்து அதற்கு இன்னொரு சொல் வைக்க வெண்டும் என்று என்மனம் அங்கலாய்த்துக் கொண்டது. போர் பற்றியும் அதன் கொடுமைகள் பற்றியும் இவர்களுக்கு நன்கு தெரிவது போல் இப்ப எங்களுக்கும் எல்லாத் தமிழ் மக்களுக்கும் இந்தக் கொடுமைகள் பற்றி நன்கு தெரியும்.
ஏற்கனவே இங்கே மூன்று தமிழ் குழந்தைகள் இருப்பதால் உனக்குப் பொறுப்புக்கள் கூட வரும் என எதிர்பார்க்கிறேன். உனக்கு என்ன தேவையோ அதைப் பெற்றுக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் உனக்குண்டு என்றபடியே மிச்சக் கோப்பியை எடுத்து ஊத்தினாள். குடித்து விட்டு வேறு கதைகளும் கதைத்து விட்டு வெளியே வந்து விட்டேன்.
அன்று வேலையில் பொறுப்புக்கள் நிறைய இருந்தாலும் எதையுமே மனம் நிறைவாக ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் குழந்தைகள் எப்படியிருப்பார்கள் என்பது பற்றியும் தாய் தந்தையை எப்படி பறிகொடுத்தார்கள் என்பது பற்றியும் அல்லது அசேலம் கேட்பதற்காக சும்மா தான் சொல்லியிருப்பார்களா? என்றும் அல்லது தனது கண்ணுக்கு முன்னே பறிகொடுத்திருப்பார்களா என்றும் அந்தக் கடும் போரை எப்படி எதிர்கொண்டார்கள் என்றும் எனது மனம் அங்கலாய்த்து அங்கலாய்த்து தவித்துக் கொண்டது. அவர்கள் வந்தால் எந்த அறையில் அண்ணன் தங்க வேண்டும் எந்த அறையில் தங்கை தங்க வேண்டும் என்ற ஒழுங்குகளோடு மற்றும் அவர்களுக்குத் தேவையான மற்றைய விடையங்களும் விரைவாக நடைபெற்றுக் கொண்டன.
அந்த நாளும் வந்தது. அவர்களும் வந்தார்கள். பார்ப்பதற்கு அழகாய் முழிப்பாய் இருந்தார்கள். பொடியன் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன் போலவும் கொஞ்சம் கூனிக்குறுகி பயந்து பயந்து முழித்துக்கொண்டான். ஆனால் பெட்டையோ மிகவும் துடிப்பானவளாகவும் மிகுந்த சுட்டித்தனமாகவும் காணப்பட்டாள். ஏற்கனவே எனக்குக் கிடைத்த தகவல்களுக்குரிய கற்பனைத் தோற்றத்தில் அவர்கள் இருவரும் இருக்கவில்லை. ஏற்கனவே அவர்கள் இருந்த இடத்தில் இந்த இடம் பற்றியும் என்னைப் பற்றியும் நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம் என்றும் நான் தானாம் தங்களுக்கு சகல பொறுப்புக்கள் என்றும் சிரித்துக்கொண்டே தங்கை சொன்னாள்.
இப்படியே எனது வேலையும் எங்களது உறவும் வளர்ந்து கொண்டு போனது. நாட்கள் கிழமைகளாகி, கிழமைகள் மாதங்களாகி காலம் தன்னையறியாமல் கரைந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகவிடாமல் தங்களுடன் இருக்கும் படி அவள் பல முறை வேண்டிக் கொண்டாள். அல்லது எங்களையும் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போங்கள் என்றும் வேண்டினாள்.
என்னுடைய மனதிலும் பல மயக்கங்களும் குழப்பங்களும் வந்து போயின ஆனாலும் தவிர்த்துக் கொண்டேன். வேலையின் சட்டதிட்டங்களுக்கமைய என்னைக் கட்டுப்படுத்தியும் என்னை நானே வருத்தியும் சிலவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஒரு நாள் இரவு ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஏதோ நினைத்தவளாய் நான் இப்பொழுது உங்களுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். இங்கே ஒருத்தருக்கும் தெரியாத பெரிய உண்மையென்றும் இதுபற்றி ஒருத்தருக்கும் சொல்லக் கூடாது என்று என் கைகளைப்பற்றிக் கொண்டாள். நானும் வியப்போடும் ஆவலோடும் பார்த்துக் கொண்டு நிண்டேன். உண்மையிலே எனக்கு அம்மா இருக்கிறா, அப்பா தான் இல்லையென்றும் நான் மூன்று மாதக்குழந்தையாய் இருக்கும் போதே இயக்கக்காரர் அப்பாவைச் சுட்டுப் போட்டினமாம். அப்பா வேறொரு இயக்கமாயிருந்த காரணத்தால் அவரை மற்ற இயக்கக்காரர் சுட்டுப்போட்டினமாம் என்றும் எனக்கு அப்போது தெரியாது, நான் இங்கே வரும் வேளையில் தான் அம்மா எல்லாம் விபரமாகச் சொன்னவ, என்றும் இது பற்றி யாரிடமும் கதைக்கக் கூடாது என்றும் சொன்னவ. ஆனா, உங்களுக்கு இதை மறைக்க விரும்பவில்லை தெரியப்படுத்த வேண்டும் போலிருந்தது என அந்தப் பெரிய உண்மையையும் அந்த இருண்ட சோகத்தையும் என்மேல் இறக்கிவிட்டு அந்தக்குழந்தை மீண்டும் படத்தைப் பார்க்கத் தொடங்கியது.
என்னை அறியாமல் என் கைகள் அவளை அணைத்துப் பற்றிக் கொண்டது. ஏதோ நினைத்தவளாய் நான் அப்பாவின் போட்டோவைக் கூட பார்க்கவில்லை என்றும் ஒண்டோ இரண்டோ படம் இருந்ததாம் அதுவும் சண்டை நேரங்களில் துலைந்து விட்டதாம் அவர் எப்படியிருப்பார் என்று கூடத் தெரியாது என்றாள்.
நான் ஓன்றுமே பேசாது மௌனமாய் இருந்தேன். ரீவியில் ஓடிக்கொண்டிருந்த படம் பலத்த சத்தமாய் கேட்டது. என்னுடைய இந்தப்பாத்திரமானது மிகவும் கஸ்ரமாயே இருந்தது. நண்பனாய் தோழனாய் தாயாய் தந்தையாய்.. பல வேடங்களிலேற்று நடிக்கவேண்டியதாயிற்று. உலகம் தெரியாத அந்தக் குழந்தைகள் இரண்டும் என் அன்பை மட்டுமே வேண்டி நின்றார்கள்.
இப்படியே எங்கள் மூவரது நெருக்கமும் அன்பும் வளர்ந்து கொண்டு போக காலங்களும் நகர்ந்து கொண்டு போனது. இப்படியே ஒரு நாள் வேலைக்கு வந்த போது திடீரென ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்துக்காக உடனே அழைக்கப்பட்டேன். எமது இல்லப்பொறுப்பாளர், உளவியலாளர், சமூகசேவையாளர், பாடசாலைப் பொறுப்பாளர்கள் என பலபேர் கூடியிருந்தார்கள். எனக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. என்ன அப்படி என்ன அவசரக்கூட்டம் என நான் விழித்த போது எல்லாம் தாரணி பற்றிய விடையங்கள் தான் என்றும் பொறுப்பாளர் கதைக்கத் தொடங்கினார்.
இண்டைக்கு தாரணி எல்லாரையும் பயப்படுத்திப் போட்டாள். ஒருமாதிரி பிடித்து சமாளிச்சு வைச்சிக்கிறோம். இண்டைக்கு இரண்டு முறை தற்கொலை முயற்சியில் இறங்கிவிட்டாள். என்ற போது என்னையறியாமல் உடம்பெல்லாம் படபடத்து வியர்த்தது.
தற்கொலையா..? வியப்போடு கேட்டேன். இவளின் பள்ளிக்கூடத்திலே ஏதோ விண்ணப்படிவம் நிரப்பும் படி கொடுத்த போது அப்பாவின் பெயர் வரவேண்டிய இடத்தில் உன்ரை பெயரைப் பதிந்திருக்கின்றாளாம். அதுமட்டுமல்ல பள்ளிக்கூடத்திலே பாவிக்கும் கொம்பியூட்டரின் இரகசிய பெயர்களுக்கும் உன்னுடைய பெயர் தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதாம். இது சம்பந்தமாக அவளுடன் கதைத்த போது, உன்னைத் தான் தனக்குத் தெரியும் என்றும் இவர் தான் எனக்கு அப்பா என்றும் அடம்பிடிக்கின்றாள். நான் இப்போது நல்ல சந்தோசமாய் இருக்கிறேன் என்றும் தயவுசெய்து என்னுடைய சந்தோசத்தைப் பறித்து என்னை அனாதையாக்கி விட வேண்டாம் என்றும் மேல் மாடியில் ஏறி நின்று கீழே குதித்து சாவேன் என்று அந்தக் குழந்தை அழுததை என்னால் தாங்க முடியவில்லை ஒரு பெண்ணாய் இருந்து ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது என்ற போதே அவளது வார்த்தைகள் வெளிவரத் குரல் தளதளத்தது.
எல்லோரும் மிகுந்த அமைதியாக இருந்தோம்.
பின்னர் அந்தக்குழந்தையுடன் கதைத்தவைகளும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகவைகளும் எனக்கு நடந்த உளவியல் செயற்பாடுகளும் இதிலே எழுதமுடியாதவை. தாரணியைப் போல் இன்று எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகளா. ஆதரவற்றவர்களாக....
பின்னர் அந்தக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் சட்டரீதியாக செய்யப்பட்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கப்பட்டது என்பது என் வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள்.
பிறகு கொஞ்சக்காலத்தின் பின்னர் அந்த வேலையை விட்டிட்டு வேறு வேலை செய்யத்தொடங்கி அந்த வேலை இந்த வேலை என்று பலது மாறி இப்ப கொஞ்சக்காலம் புதிய ஒரு வேலையில் இணைந்து கொண்டேன். முன்பு போல் பெரிய பிள்ளைகள் அல்ல. மிகவும் சின்னக்குழந்தைகளை பராமரிக்கும் இடம் அழகான குழந்தைகள் போல் அழகான வேலையும். மனதுக்குப்பிடித்தமான சந்தோசமான தொழில்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் அந்த இடத்திலே நான் ஒருவன் தான் கறுப்பு நிறமுடையவன். எல்லாக்குழந்தைகளும் வந்து என் கையைத் தொட்டுப் பார்ப்பதும் தடவிப்பார்ப்பதிலும் மிகுந்த சந்தோசம் அடைவார்கள். இந்தப் பழக்கம் கூடக்கூட பல பேர் மிகுந்த நெருக்கமானார்கள். அமேல்லியா என்ற மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்று என்னுடன் மிகவும் நெருக்கமாய் பழகினாள்.
பராமரிப்பு நிலையத்தில் காலையில் தாய் வந்து அவளை விடும் போது ஓடி வந்து என்னையே முதலில் கட்டிக் கொள்வாள். பின்னர் தாய்வந்து கூட்டவரும் போது நான் போகமாட்டேன் என்றும் அடம்பிடித்து என்னிடம் ஒட்டிக்கொள்வாள். தன்னைத் தோளில் தூக்கி வை என்பதும் இருக்கும் போது காலில் வைத்து ஆட்டு என்பதும் அவள் விரும்பும் விளையாட்டுக்களில் முக்கியமானவை.
இந்த உறவு பற்றி அங்கு எல்லோரும் பேசிக்கொண்டார்கள். இவள் இப்படியாக இருப்பதும் நடந்த கொள்வதிலும் உனக்கேதும் பிரச்சினையில்லையோ என்று எனது இல்லப் பொறுப்பாளர் ஒரு நாள் கேட்டார். குழந்தைகள் என்றால் இப்படித்தானே.... எனக்கு இது விருப்பம் அதுவும் அமேலியாவைப் போல் துடிப்பான குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம் என்றேன் சிரித்தபடி. உனக்குத் தெரியுமா வழமையை விட அமேல்லியா மிகுந்த சந்தோசமாய் இருக்கிறாள் என்று அவளின் தாய் இப்போது சொல்லுகிறாள்.
எங்களாலும் அதைக் கண்டுகொள்ளக் கூடியதாயுள்ளது என்றும்.. உன்னுடைய இந்த அன்பும் அரவணைப்பும் கட்டாயமாக அவளுக்குத் தேவையென்றும் ஏன் தெரியுமோ என்றும் கேட்டாள். நான் மௌனமாக தலையை ஆட்டியபடி அவளது விடைக்காக காத்துக் கொண்டிருந்தேன்.
அமேலியாவின் தகப்பன் எங்கடை நாட்டின் சார்பாக ஆப்கானிஸ்த்தானுக்குப் போருக்கப் போன இராணுவ வீரன். தகப்பனின் அன்பும் அரவணைப்பும் தெரியாதவளாய் தான் இவள் வளர்ந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வாரு நாளும் இரவு அவனுடன் ரெலிபோனில் கதைப்பது மட்டும் தான். இம்முறை வரும் கிறிஸ்மஸ் காலத்துக்கு இங்கே வருவான் என்று அவளது தாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். எமது நாட்டு இராணுவ வீரர்களும் மிக விரை வில் நிரந்தரமாய் திரும்பிவர வேண்டும். ஏன் தான் அமெரிக்காவுக்கு எங்கடை நாடு வால் பிடிச்சுக்கொண்டு நிக்குதோ தெரியவில்லை என்றும் சொல்லிப் போட்டுச் சென்றுவிட்டாள்.
பிள்ளைகள் அங்கும் இங்குமாக ஒடிப்பிடிச்சு விளையாடிக் கொண்டிருந்தார்கள். காலம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டு போய் மாதங்கள் பல கடந்தன. வழமை போல் ஒரு நாள் வேலைக்குப் போய் இறங்கிய போது எமது நிலையப் பொறுப்பாளர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து ஓவென்று கத்தியழுதினாள். எனக்கு ஒன்றும் விளங்கவும் இல்லை. புரியவும் இல்லை. பக்கத்தில் நின்ற மற்ற வேலையாட்களும் என் தோழிலே தட்டியபடி என்னை நெருங்கிக் கொண்டார்கள். ஒன்றுமே புரியாமல் முழித்துக் கொண்டேன்.
தலையை நிமிர்த்தியவளாய் அமேலியாவின் தந்தையும் அவனுடனும் சென்ற இருவரும் அங்கே போரிலே இறந்து போனார்களாம் என்ற செய்தி இப்பொழுது காலையில் தான் எமக்குக் கிடைத்தது என்றும் சொல்லிச் சொல்லி விக்கி விக்கி அழுதாள்.
உண்மையிலே என் மூச்சு ஒரு கணம் நின்று போனது போல் உணர்ந்து கொண்டேன். என் தொண்டையினுள் பாறாங்கல் ஒன்று இறங்கியது போன்ற பிரமை. ஓவென்று கத்திக்குறளியள வேண்டும் போல் இருந்தது. என் கண்முன்னே அமேலியா ஒரு கணம் வந்து போனாள். அவளைத் தூக்கிவிளையாடும் போது அவளில் இருந்து வரும் அந்த நறுமணம் கமழ்ந்து வந்தது. அது உண்மையோ பிரமையோ தெரியவில்லை. என் கண்கள் அமேல்லியா எங்கேயாவது நிக்கிறாளா என்று தேடியது. எங்கும் வெறுமையாகவே தென்பட்டது. என்னால் நிதானமாய் நிக்கமுடியாமல் இருந்தது.
ஊரிலே என்ரை நண்பன் ஒருவன் ஆமியால் சுடப்பட்டபோதும், இன்னொரு நண்பன் தன்ரை இயக்கத்தாலேயே சுடப்பட்ட போதும், மற்ற இன்னுமொரு தோழன் மாற்று இயக்கத்தாலே சுடப்பட்ட போதும் ஒரு இயக்கமும் வேண்டாம் ஒரு சண்டையும் வேண்டாம். இந்தப் பொல்லாப் போன போரும் வேண்டாம் விடுதலையும் வேண்டாம் என்று தானே இங்கே வந்து என் வாழ்வைத் தொடங்கினேன். ஆனால் நான் எங்கு போனாலும் இந்தப் போரின் கொடுமைகளும் அனர்த்தங்களும் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.
தாரணியைப் போல் அமேலியாவைப் போல் இன்று உலகம் முழுதும் எத்தனையோ ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள் பச்சைப் பாலகர்கள். பெற்றோரை இழந்து பாழாப் போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள் மட்டுமல்ல நானும் தான்.
- நிலாதரன்.