பருவ வயதை அடைந்தவர்கள், தங்கள் சுய முடிவுகளை எடுக்கின்ற பருவம். இதை அனுமதிப்பதா இல்லையா என்பதுதான், பெற்றோரின் சங்கடங்களும், முரண்பாடுகளும். குழந்தை முடிவை எடுப்பதை மறுப்பதும், நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் தான் குழந்தைகள் செயல்படவேண்டும் என்பது, பெற்றொரின் அதிகாரம் சார்ந்த குரலாக இருக்கின்றது. இப்படி பெற்றோர் முடிவு எடுத்து வந்த போக்கும், குழந்தையானது தான் முடிவு எடுப்பதற்குமான அடிப்படை முரண்பாடு தான் இது. பெற்றோர் தாம் கண்ட அனுபவத்தை, தங்கள் அச்சங்களை, தங்கள் விருப்பங்களை, தங்கள் தெரிவுகளை, தங்கள் அதிகாரம் சார்ந்து இதில் ஒன்றோ அல்லது பலதோ சார்ந்து திணிக்க முனைகின்றனர். குழந்தைகள் தங்கள் அனுபவமின்மை சார்ந்து, அச்சமின்மை சார்ந்து, தங்கள் விருப்பங்கள் சார்ந்து, தங்கள் தெரிவுகள் சார்ந்து, தங்கள் சுதந்திர உணர்வு சார்ந்து, இதில் ஒன்று அல்லது பல சார்ந்து போராட முனைகின்றனர். இதில் உள்ள இணக்கமின்மைதான், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கும், விலகிப் பிரிதல் வரை விரிந்து செல்லுகின்றது. இந்தப் போக்கு சமூகத்தில் எங்கும் புரையோடிக் காணப்படுகின்றது.
பெற்றோரின் அதிகாரம் சார்ந்த நடத்தையும், அதையொத்த சமூகத்தின் பொது நடத்தையும் சார்ந்து, குழந்தைகள் மேல் இந்த முரண்பாடு பெற்றோரால் திணிக்கப்படுகின்றது. அறிவுபூர்வமான விளக்கத்துக்கும் நடத்தைக்கும் அடிப்படையாக உள்ள ஜனநாயகம் மறுக்கப்படும் போது, பெற்றோர் குழந்தை முரண்பாடுகள் கூர்மையாகின்றது.
இதற்குள் அடங்கிப்போவதா அல்லது அத்துமீறுவதா என்ற எல்லைக்குள் இது கூர்மையடைந்து பரிணாமம் பெறுகின்றது. இது குடும்பத்தின் உள்ளான அதே நேரத்தில், சமூகத்தின் முரண்பாடாகவும் மாறுகின்றது. சமூகப் பொருளாதார கூறுகளுடன் தொடர்புடையதாக, அதன் எல்லைக்குள் இந்த முரண்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் ஏன் குடும்பங்களுக்குள் கூட வேறுபடுகின்றது. எந்தளவில் ஜனநாயகம் சமூகத்தில் நிலவுகின்றதோ, அது எந்தளவுக்கு குடும்பத்தில் நிலவுகின்றதோ, அதை ஒட்டி முரண்பாடுகளும், முரண்பாட்டுக்கான காரணங்களும் கூட வேறுபடுகின்றது. ஒரு சமூகத்தில் அல்லது குடும்பத்தில் தோற்றுவிக்கும் முரண்பாடு, மற்றொரு சமூகத்தில் அல்லது குடும்பத்தில் முரண்பாடாக இருப்பதில்லை.
இப்படி இந்த முரண்பாட்டுக்கு இவைதான் காரணம் என்ற பொது வரையறை கிடையாது. அதனால் பொதுத்தீர்வு கிடையாது. ஆனால் இதை தீர்க்கும் சமூக மற்றும் குடும்ப வழிமுறை இருக்கின்றது. சமூகத்தில், குடும்பத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு ஜனநாயகம் இருக்கின்றதோ, அதை முரணற்ற வகையில் எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றோமோ, அந்தளவுக்கும் இந்த முரண்பாடு மறைகின்றது. ஒரு விடையத்தை வெளிப்படையாகவும் அறிவுபூர்வமாகவும் எந்தளவுக்கு உயர்ந்த மட்டத்தில் விவாதிக்கின்றோமோ, அதில் சரியானதை முரணற்ற வகையில் நாம் ஏற்றுக்கொள்ள முனையும் போதுதான் இந்த முரண்பாடுகள் மறைகின்றது.
இதற்கு மாறாக பெற்றோர்கள் கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் ஊடாக குழந்தைகளை அணுக, குழந்தைகள் அதை மீறி செயல்படுவதுமான எல்லைக்குள் குடும்ப உறவுகள் முரண்பட்டு கட்டப்படுகின்றது. இது கூட உழைப்புரீதியான வர்க்கக் கண்ணோட்டத்துக்கு ஏற்ப, இந்த முரண்பாட்டின் அளவு பண்பும் அதன் குணாம்சமும் கூட வேறுபடுகின்றது.
சமுதாயத்தின் பொதுக் கண்காணிப்பும், சமுதாயத்தையே கண்காணிக்கும் அமைப்பு முறையும் எந்தவகையில் தன்னைத்தான் கண்காணிக்கின்றதோ, அந்த வகையில் குடும்பத்தில் நடக்கின்றது. இதுதான் முரண்பாட்டின் அடிப்படையான சாரம்.
இந்த வகையில் சமூகத்தில் நல்லது கெட்டது எது என்ற வரையறை கூட, சமூகத்தின் அனைத்து சமூகக் குறைபாடுகளுடனானது கூட. நல்லது கெட்டது எது என்ற தங்கள் சொந்த வரையறை மூலம் குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் பெற்றோரின் உளப்பாங்கு, தவறானவையாக பொதுவில் இருக்கின்றது. உதாரணமாக புகைத்தல், கறுப்பினத்தவனுடன் பழகல், தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனுடன் பழகல், பொது வேலையில் ஈடுபடுதல், காதலித்தல், போதைக்கு அடிமையாதல், பெண்ணுக்குரிய ஆணாதிக்க வரம்புக்குள் வாழ மறுத்தல் … போன்ற அனைத்து விடையங்களும், வெவ்வேறு அளவில் இதில் ஒன்று அல்லது எல்லாம் பெற்றொரின் சொந்தப் புரிதலுக்கு ஏற்ப, இவை எல்லாம் ஓரே மட்டத்தில் தவறானவையாக இருக்கின்றது. இதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் கூட, ஒரே மாதிரி இருக்கின்றது. அறிவுபூர்வமாக விளங்கவைத்து ஏற்க வைக்கவேண்டிய விடையத்தையும், முற்றாக தடுக்கவேண்டிய விடையத்தையும் ஒரேமாதிரியாக, தங்கள் அதிகாரம் கொண்டு அணுகும் வகையில் பெற்றோரின் பொது உளவியல் காணப்படுகின்றது. இதற்கு குழந்தைகளின் எதிர்வினை, இதன் எதிர்மறையில் வெளிப்படுகின்றது.
இங்கு எது தவறு எது சரி என்ற புரிதல் கூட, இங்கு தவறாகவே இருக்கின்றது. குடும்ப உறவுகள், இந்தப் பிழையான புரிதலுக்குள் அடக்குமுறையாக வெளிப்படுகின்றது. இது எதிர்நிலையான முரண்பாடுகளுடன் பயணிக்கின்றது. குழந்தைகள் மந்தைகளாக, பெற்றோர் மேய்ப்பராக இருக்கின்ற பொதுப்புத்தி, எதிர் முரண்பாடுகளுடன் பயணிக்கின்றது.
இந்த இடைவெளி அதிகரிக்கும் போது, குழந்தைகள் பெற்றோரில் இருந்து பிரிந்து விடுகின்றனர். இது கூட சரியாக பிழையாக என இரு கூறுகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
இங்கு பெற்றோர் தாம் சரியாக இருப்பதாக கருதிக்கொள்ளும் போக்கும், குடும்ப அதிகாரம் சார்ந்த கண்ணோட்டமும், பொதுப்படையாகவே தவறானதாக இருக்கின்றது. இதற்கு மாறாக குடும்பத்தில் நிலவும் ஜனநாயகமும், அதை முரணற்ற வகையில் கையாளும் திறனையும் குடும்ப உறவாக மாற்றவேண்டும். மாறாக அதிகாரம் சார்ந்து, தங்கள் பொருளாதார துணைகொண்டு குழந்தைகளை அணுகுவது, குழந்தைகளின் சுதந்திரத்தை மறுத்து முரண்பாடுகளை தோற்றுவிக்க காரணமாக இருக்கின்றது.
இது சமூகத்துக்கு வெளியில் கட்டுப்பாடற்ற வாழும் முறையை அங்கீகரிப்பதல்ல. சமூகத்துக்கு வெளியில் தனிமனித சுதந்திரத்தை கொடுப்பதல்ல. இங்கு சமூகம் என்கின்ற போது, சமூகத்துக்குள் முரண்பாடுகள் இருக்கின்றது. ஆக முழு சமூகத்தை முரணற்ற கூறு சார்ந்து அணுக வேண்டும். அனைத்தையும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு, முரணற்ற வகையில் குடும்பம் மற்றும் சமூக உறவுகளில் விவாதித்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த முடிவு ஒருமித்த குடும்ப உறவாக, ஏன் இது சமூகத்தின் உறவாகவும் கூட மாறுகின்றது.
இதற்கு பதில் மனிதஉறவுகளை கட்டுப்படுத்தி வைக்க, அவர்களை அடிமைப்படுத்த, அவர்களின் அன்பைப் பெற, பொருளைக் கொடுக்கும் பொருள் சார்ந்த உறவுகள் மூலமான அணுகுமுறை தறானது. இது அனைத்தையும் விலைக்கு வாங்கும் உறவாக, நுகர்வு சார்ந்த உறவாக சீரழிகின்றது. இதுவே இன்றைய அமைப்பில் புரையோடி வெளிப்படுகின்றது. மனித உறவுகளை, உணர்ச்சிகளை வெறும் சடங்காக்கும், பொருள்சார்ந்த உணர்வுக்குள் அடிமைப் புத்தியையும், பொருள் சார்ந்த நுகர்வுச் சீரழிவு சார்ந்த உணர்வாக மாற்றுகின்றது. இது முடிவற்ற நுகர்வு சார்ந்த முரண்பாடான மனிதஉறவுகளையும், அடிமைப்புத்தி கொண்ட அடிமை மனப்பாங்கு கொண்ட முரண்பாடாக மாற்றுகின்றது.
இந்த வகையில் குழந்தைகள் வளர்க்கப்படும் போது, இதில் இருந்து பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் முரண்பாடுகள் கட்டுக்கடங்காத நுகர்வு சார்ந்த எல்லைக்குள் பரிணமிக்கின்றது. அனைத்தையும் நுகர்ந்துவிடும் அனைத்துவிதமான சமூக அறநெறிகளை மறுத்துவிடும் தவறான தனிமனித போக்காக, இந்த முரண்பாடுகள் தோன்றுவிக்கின்றது.
இப்படி பெற்றோர் எந்தவகையான உறவு மூலம் குழந்தைகளை அணுகுகின்றனர் என்பதைப் பொறுத்து, முரண்பாடுகள் தோன்றுவதும் அதன் தன்மைகளும், வேறுபாடுகளைக் கொண்டு வெளிப்படுகின்றது.
இதற்குப் பதில் அறிவுபூர்வமான முரணற்ற விவாதத்துக்கு அமைவாக குடும்பத்தில் ஜனநாயகத்தையும், ஜனநாயகபூர்வமான விவாத முடிவுகளையும் நடைமுறையில் கையாள்வது அவசியம். இது தனிமனிதன் சார்ந்ததாக இருக்கக் கூடாது. சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். சுயநலம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. முழுச் சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். இதன் மூலம் குடும்ப முரண்பாடுகளை மட்டுமல்ல, சமூக முரண்பாடுகளையும் கடந்து மனிதனாக முழு மக்கள் சார்ந்து தம்மை முன்னிறுத்தி வாழமுடியும்.
பி.இரயாகரன்
13.10.2012