வர்க்கப்புரட்சி மூலம் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிலை. இது எங்கள் சொந்த அரசியல் வழிமுறை. இப்படி இருக்க இதை வர்க்கப்புரட்சிக்குப் பிந்தைய தீர்வாகக் காட்டி திரிப்பதன் மூலம், மற்றைய வர்க்கங்கள் தங்கள் பின் அணிதிரட்ட முனைகின்றனர். சமுதாய முரண்பாடுகளை முரணற்ற வகையில் விளக்கும் மார்க்சியம், முரணற்ற தீர்வுகளைக் கொண்டிருக்கின்றது. இதை எதிர்கொண்டு அரசியல் நடத்த முடியாதவர்கள், இதை வர்க்கப் புரட்சிக்குப் பிந்தைய தீர்வாக காட்டிவிடுவதன் மூலம் தான் தங்கள் அரசியலை நடத்த முனைகின்றனர். இதற்கு அமைவாகவே வர்க்கப் போராட்டத்தை கைவிட்டவர்கள், இதற்கு செங்கம்பளம் விரித்து தங்கள் வர்க்கப் போராட்டமற்ற அரசியலை முன்னிறுத்தி இதை விரிவாக்கினர்.
பாட்டாளி வர்க்கம் சமுதாய முரண்பாடுகள் மீது, வர்க்கப் புரட்சிக்கு பின்னல்ல, முன்கூட்டியே அதற்காக போராடுகின்றது, இதுதான் உண்மை. தீர்வுகளை முன்வைத்து, தீர்வுகளைக் கூட காண்கின்றது. இந்த வகையில் முதலாளித்துவ வர்க்கத் தீர்வுகளை கொண்டு அது இயங்குவதில்லை. மாறாக முரணற்ற ஜனநாயகக் கூறுகளை தன் தீர்வாகக் கொண்டு, அவற்றை முன்வைத்து தன் வர்க்கத் தீர்வுக்காக தொடர்ந்து போராடுகின்றது.
ஒலி வடிவில் கேட்பதற்கு
{play}http://www.tamilcircle.net/audio/FSLP/tbc3.mp3{/play}
பாட்டாளி வர்க்க அமைப்பில்தான் தீர்க்கப்படும் என்பது, அதன் போராட்டத்தின் ஊடாகவே தீர்வுகள் அணிதிரட்டல்கள் காணப்படுகின்றது. அதை முழுமையாக பாட்டாளி வர்க்க அமைப்பு மூலம் பாதுகாக்க முடியும்.
இந்த நிலையில் பாட்டாளி வர்க்கமல்லாத நடைமுறைகளையும், தீர்வுகளையும் நாம் எப்படி அணுகுகின்றோம் என்பதை புரிந்து கொள்ள, இனமுரண்பாட்டை அணுகுவதில் பாட்டாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கமல்லாத அவர்களுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்வதன் மூலம், எமது அணுகுமுறையை மேலும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
நாங்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், இனவாதத்துக்கு எதிராகவும், இனத் தேசியவாதத்துக்கு எதிராகவும் போராடுகின்றோம். இந்தவகையில் குறுந்தேசியத்தை பெரும்தேசியத்தையும் எதிர்க்கின்றோம். சர்வதேசியத்தையும், அதை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசியத்தையும் முன்னிறுத்துகின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களை இனம் கடந்து ஐக்கியப்படுத்தி அணிதிரட்டுகின்றோம். சமூகத்தில் நிலவும் அனைத்து சமூக முரண்பாடுகளையும் இந்த அடிப்படையில் இனம் கண்டு ஒருங்கிணைத்து அணிதிரட்டுகின்றோம். நாங்கள் இனம் கடந்த, சமூக முரண்பாடு கடந்த வர்க்க ஆட்சியைக் கோருகிறோம்.
பாட்டாளி வர்க்கமல்லாத அவர்கள் இனவொடுக்குமுறைக்கு எதிராகவும், தான் அல்லாத இனவாதத்தையும், தான் அல்லாத இனத் தேசியவாதத்தையும் மட்டும் எதிர்க்கின்றனர். பெரும்தேசியவாதத்தை எதிர்க்கும் குறுந்தேசியவாதிகளாக இருக்கின்றனர். இப்படி தங்கள் இனவாதம் மூலம், தங்கள் இனத்தேசியவாதம் மூலம், இனவொடுக்குமுறையை எதிர்க்க முனைகின்றனர். இப்படி இனவாதிகளாக, இனத்தேசியவாதிகளாக இருந்தபடி, தங்கள் இனத்தைச் சேர்ந்த, பாட்டாளி வர்க்கமல்லாத ஆட்சி அதிகாரத்தைக் கோருகின்றனர். தமக்குள்ளான சமூக முரண்பாடுகளை அப்படியே பேண முனைகின்றனர். இந்த அரசியல் அடிப்படையைக் கொண்ட மூடிமறைத்த சந்தர்ப்பவாதிகள், தங்கள் இனத் தலைமையில் பாட்டாளி வர்க்க ஆட்சி பற்றி பீற்றிக் கொண்டு இதை முன்னிறுத்திப் பேசுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியத்தையும், அந்த வர்க்கத்தின் ஒன்றிணைந்த வர்க்கப் போராட்டத்தையும் முன்னிறுத்திச் செயற்படாத அனைவரும் குறுந்தேசியவாதிகள்தான்.
இப்படி எமக்கும் அவர்களுக்கும் இடையில் இணைக்க முடியாத நேர் எதிரான பாதைகளும் தெரிவுகளும் உள்ளது.
இவை இணக்கம் காணமுடியாத முரணான வர்க்க அரசியலை அடிப்படையாகக் கொண்ட இரு வேறு அரசியல் பாதையாகும். இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், இரு வேறு நடைமுறை சார்ந்தது. இலக்கையைப் பொறுத்தவரையில் இன ஆட்சியை கோருவதாக இருக்கும் போது, இதற்கு நேர்மாறாக பாட்டாளி வர்க்க ஆட்சியை முன்வைக்கின்றது. இங்கு வர்க்க ஆட்சி என்பது இனம் சார்ந்த ஒன்றாக, அதை குறுக்கி விளக்க முடியாது.
இப்படி இருவேறுபட்ட வழிமுறையில், இனவொடுக்குமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கமல்லாத வர்க்கத்தின் எந்த நடைமுறையையும், எந்தத் தீர்வையும் தன் சொந்த வர்க்க நிலையில் நின்று தான் அணுகுகின்றது. இதன் போது முரணற்ற ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் தான் ஆதரிக்கின்றது. முரணான எந்தக் கோரிக்கையையும் அது எதிர்த்து நிற்கின்றது.
பாட்டாளி வர்க்க நலன் சார்ந்துதான், ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற முடிவை எடுக்கின்றது. குறித்த சூழலில் வர்க்கங்களின் நிலை, அதைச் சுற்றி இயங்கும் சர்வதேசபோக்கு வரை கவனத்தில் கொண்டு தான் அதை அணுகுகின்றது. முன்கூட்டிய தீர்மானங்களைக் கொண்டு, முடிந்த முடிவுகளுடன் இதை பார்ப்பதுமில்லை, அணுகுவதுமில்லை.
இதற்கு மாறாக பாட்டாளி வர்க்கம் தனக்கான சொந்தப் போராட்ட வழிமுறைகளைக் கொண்டுதான் போராடுகின்றது. இப்படி இருக்கும் போது மற்றவர்களின் வழிமுறையை, ஏற்றுக்கொள்கின்றீர்களா எனக் கோருவது முரணல்லவா!? ஜனநாயக விரோதமல்லவா!? ஜனநாயகவிரோத இந்த போக்குதான், பாட்டாளி வர்க்கம் மீது தன் தீர்வை திணிக்க முனைகின்றது.
பி.இரயாகரன்
09.10.2012