முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா, உங்கள் தீர்வுத் திட்டம் என்ன என்ற கேள்வியைத்தான் மாற்றி மாற்றி பலரும் எழுப்பினர். வர்க்கப்போராட்டம் மூலமான அவர்களின் தீர்வை மறுக்கின்றவர்கள், அதை சாத்தியமில்லை என்று கருதுகின்றவர்களின், தர்க்கங்களும் வாதங்களும் தான் இவை. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக இந்த வர்க்க அமைப்பில் தீர்வுகளைக் காணமுடியும் என்று கருதுகின்றவர்களின் கேள்விகள் தான் இவை. சுயநிர்ணயம் பற்றிய இவர்களின் அரசியல் வரையறை கூட, பிரிவினையாக அல்லது தமிழனின் அதிகாரத்தைக் கோருவதாகத்தான் இருந்தது. இந்த வகையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும் நாமும் சரி, சுயநிர்ணயத்தை முன்மொழியாத அவர்களும் சரி, மேற்சொன்னவர்களின் அடிப்படையிலான இவர்களின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
இங்கு எமக்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் இடையின் சுயநிர்ணயம் தொடர்பான வேறுபாட்டையும், இணக்கப்பாட்டையும் விளங்கிக் கொள்வதன் மூலம் இதை ஆழமாகப் புரிந்து கொண்டு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு வழிகாட்டும்.
சுயநிர்ணயத்தை நாம் முன்வைப்பதன் நோக்கம், பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதன் மூலம்தான் இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று கருதுவதால் தான். இந்த வகையில் தான் லெனினின் சுயநிர்ணயம் எமக்கு வழிகாட்டுகின்றது. இதனால் இங்கு பாட்டாளி வர்க்க ஆட்சி அமைப்பை நிறுவிய பின்பே தீர்க்கப்படுகின்றது என்று இதற்கு அர்த்தமல்ல. இந்த வர்க்கப் போராட்டத்தினாலான இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மட்டுமின்றி, இனவாதத்துக்கு எதிரான, இனத் தேசியவாதத்துக்கு எதிரான போராட்டமும் கூட நடக்கின்றது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியத்தை, எதிரிக்கு எதிராக நிறுவப் போராடுகின்றது. இந்த அடிப்படையில் தான் முன்னிலை சோசலிசக் கட்சி, போராட்டத்தைக் கருதும் அதே நேரம், சுயநிர்ணயத்தை இதற்குப் பொருத்தமற்றதாக கருதுகின்றது. அதற்கான முக்கிய காரணமாக அவர்கள் கருதுவது லெனின் வைத்த சுயநிர்ணத்தை அடிப்படையாக கொண்ட சுயநிர்ணய வரையறைக்கு பதில், அது பிரிவினையாக திரிவு பெற்று வெளிப்படுகின்றது என்பதால் தான். ஆனாலும் அதைக் கூட அவர்கள் காலவோட்டத்தில் அணுக முற்படுகின்றனர்.
ஆனால் லெனினின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும் நாமும் சரி, அதை முன்வைக்காத அவர்களும் சரி, ஒரே நடைமுறை சார்ந்து நிற்கின்றோம். ஒரே விடையத்தை கீழ் இருந்து முன்னெடுப்பதில், ஒரே விதமாகவே அணுகுகின்றோம். இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும், இனத் தேசியவாதத்தையும் எதிர்த்து, கீழிருந்து தகர்க்கும் போராட்டத்தை முன்னெடுப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றோம். நாம் சுயநிர்ணயம் மூலம் எதை செய்ய விரும்பினோமோ, அதைத்தான் அவர்களும் தங்கள் கொள்கையாக நடைமுறையாக கொண்டுள்ளனர். இதை அவர்கள் முன்னின்று நடைமுறைப்படுத்தும் சக்தியாக, தம்மைத்தாம் இன்று பிரகடனப்படுத்தி இருக்கின்றனர்.
நாங்கள் கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொண்ட விடையத்தை, அவர்கள் நடைமுறை ரீதியாக கீழ் இருந்து அமுல்படுத்த விரும்புகின்றனர். ரி.பி.சி. வானொலியில் சுயநிர்ணயத்தை உச்சரித்த அனைவரும், எமக்கு வெளியில் சுயநிர்ணயத்தை முன்வைக்கும் அனைவரும் (பு.ஜ.மா.லெ.க. விதிவிலக்காக, எமது நிலையில் இருந்தும் வேறுபாடானது கூட), பாட்டாளி வர்க்கமல்லாத அமைப்புக்குள்ளான தீர்வை நோக்கித்தான், சுயநிர்ணயத்தை கூட விளக்கி அதை முன்வைக்கின்றனர். சிங்கள மக்கள் மத்தியில் கூட இதே அடிப்படையில் தான், அது பிரிவினையாகவே கருதப்படுகின்றது. இந்த அடிப்படையில் தான், முன்னிலை சோசலிசக்கட்சி இதை ஏற்கத் தயங்குகின்றது. நாங்களும் இந்த அடிப்படையில் அதை நிராகரிப்பதுடன், சரியான சுயநிர்ணய அடிப்படையை இதன் மேல் மீள நிறுவ முனைகின்றோம்.
இந்த இடத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் சுயநிர்ணயம் தொடர்பான வேறுபாட்டை புரிந்து கொள்வதன் மூலம், எமது ஒருமைப்பாட்டையும் இணக்கப்பாட்டையும் துல்லியமாக விளங்கிக் கொள்ள முடியும்.
நாங்கள் சுயநிர்ணயத்தை லெனினின் அதே வடிவில் ஏற்றுக்கொள்கின்றோம். இன்றைய காலத்துக்கும் பொருத்தமானதாகவே கருதுகின்றோம். குறிப்பாக முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து முன்வைக்கும் காரணங்களை, லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு மூலம் எதிர்கொள்ள முடியும் என்பதே எமது நிலை. அந்தளவுக்கு அது தெளிவானது. இதுதான் எங்கள் நிலை.
இங்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்கள்
1.பிரிவினையாகவே சுயநிர்ணயம் இலங்கையில் விளங்கப்பட்டு இருக்கின்றது.
2.நவ காலனிய காலகட்டத்தில் இது ஏகாதிபத்திய நலனுக்கு உதவும். இது போன்ற காரணங்கள். இங்கு பிரிந்து செல்லும் உரிமை, பிரிவினையை மறுப்பதற்காக நேர் எதிராக லெனினால் முரணின்றி முன்வைக்கப்பட்டது.
புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி சுயநிர்ணயத்தை எப்படி எம்மில் இருந்து வேறுபட்டு அணுகுகின்றனர் என்பதைப் பார்ப்போம். முன்னிலை சோசலிசக் கட்சியின் அதே காரணங்களை பொதுவாகக் கொண்டு, பிரிந்து செல்லும் உரிமை உள்ளடங்காத அடிப்படையில் சுயநிர்ணயக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். இதனால் இதுவல்லாத வேறு தீர்வுகளை முன்வைக்க முனைகின்றனர். நாங்களோ, முன்னிலை சோசலிசக் கட்சியோ இதை முன்வைக்கவில்லை.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் தான் முன்னிலை சோசலிசக் கட்சி கூட, சுயநிர்ணய கோட்பாட்டை முன்வைப்பதில் இருந்து விலகி நிற்கின்றனர்.
இதுதான் சுயநிர்ணயம் தொடர்பாக எமக்கு இடையிலான அடிப்படை வேறுபாடு. இங்கு இவை தந்திரோபாயம் சார்ந்த வேறுபாடே ஒழிய, இனப்பிரச்சனை தொடர்பான பார்வையில், தீர்வில் அல்ல.
இந்த தந்திரோபாய வேறுபாட்டைக் கடந்து இனவொடுக்குமுறையை எதிர்ப்பதில், இனவாதத்தை எதிர்ப்பதில், இனத்தேசியவாதத்தை எதிர்ப்பதிலான நடைமுறைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் எமக்கு இடையில் முரண்பாடு கிடையாது. நாங்கள் மூவரும் ஒரே விடையத்தை நடைமுறைப்படுத்துவதில், ஒரே அரசியல் முன்னெடுப்பையே நடைமுறையாகக் கொண்டுள்ளோம். இந்த வகையில் ஒரே அரசியல் இலக்குடன், தந்திரோபாயம் சார்ந்த வேறுபாடுகளுடன் இதை அணுகுகின்றோம். நடைமுறைப் போராட்டத்தில் ஒருங்கிணையும் போது, எமது இலக்கை அடைவதில் உள்ள தடைகளைக் கடக்கும் போது இந்த தந்திரோபாயம் சார்ந்த வேறுபாடுகள், பரிசோதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுவிடும்.
இந்தப் புரிதலுக்கு அப்பால் பாட்டாளி வர்க்கமல்லாத நடைமுறைளை, தீர்வுகளை நாம் எப்படி அணுகுகின்றோம். குமார் குணரத்தினம் சொன்னது தான் எமது நிலையும் கூட. இதுதான் அனைத்து மார்க்சிய லெனினியவாதிகளின் நிலையும் கூட. இதை அடுத்துப் பார்ப்போம்.
தொடரும்
பி.இரயாகரன்
07.10.2012