மார்க்சிய லெனினியவாதிகள் ஐக்கியப்படாமல், மக்களின் ஐக்கியத்தைப் பற்றி பேசுவது என்பது நடைமுறையற்ற கோட்பாடாகும். இந்த வகையில் இன்று இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்காத எவரும், மார்க்சிய லெனினியவாதிகள் அல்ல. இதற்கு நிபந்தனை விதிக்க முடியாது. கோட்பாட்டு வேறுபாட்டைக் கொண்டு இதில் இருந்து விலகி நிற்க முடியாது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சக்திகளை, போராட்ட நடைமுறையில் வைத்துத்தான் பரிசோதிக்க முடியும். இதுவின்றி யாரும் ஆரூடம் கூற முடியாது. இந்த போராட்டத்தை எவரும் தட்டிக் கழிக்கவும் முடியாது. அனைவரும் இனவாதத்துக்கு எதிரான களத்தில் இறங்கியாக வேண்டும். இதற்குத் தடையாக மார்க்சிய லெனினியவாதிகள் எவரும் செயற்பட முடியாது. உண்மையில் இனரீதியான பிளவு பாட்டாளி வர்க்க சக்திகளையும் கூட பிளந்து இருக்கின்றது. மார்க்சிய லெனினியவாதிகளைக் கூட இது விட்டுவைக்கவில்லை. குறுகிய இன உணர்வுகளுக்;குள்ளும், சந்தேகங்களுக்குள்ளும், தயக்கங்களுக்குள்ளும், தடுமாற்றங்களுக்குள்ளும் நின்றபடி அணுகுகின்ற பொதுப் போக்கு, இன ஐக்கியத்தை நோக்கி பயணிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது.
இன்று இன ஐக்கியத்தை நோக்கி இனவாதத்துக்கு எதிரான அனைத்துவிதமான அரசியல் முன்னோக்குகளையும், எந்த அரசியல் நிபந்தனையுமின்றி முன்னிறுத்துவதும் முன்னெடுப்பதும் தான் மார்க்சிய லெனினிய அரசியல் நடைமுறையாக இருக்கமுடியும். இதை மையப்படுத்தி செயல்படுவதும், கூட்டாக வேலை செய்வதும் உடனடியான செயல்தந்திரமாக இருக்கமுடியும். இன்றைய பிரதான அரசியல் செயல் தந்திரம் இதற்கு வெளியில் காணமுற்படுவது, எதார்த்தத்தில் இருந்து விலகி நிற்பதாகும்.
கடந்தகாலங்களில் எதார்த்தமான சூழலில் இருந்து விலகி நின்ற, நிற்கின்ற அதே பாணியில் வர்க்க அரசியலை கட்ட முடியாது. இனவாதத்துக்கு எதிரான போராட்டமும், தமிழ்-சிங்கள வர்க்க சக்திகளின் ஓன்றுபட்ட செயற்பாடும் தான், இன்றைய சூழலில் வர்க்கச் செயற்பாட்டின் முதல் காலடியாக இருக்கமுடியும். இவை தவிர்ந்த எந்தப் பாதையும் வர்க்க நடைமுறை அரசியலை மறுதளித்தல் ஆகும். இதைத் தாண்டிய கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகள் அனைத்தும், இனவாதத்துக்கு எதிரான பொதுவான நடைமுறைப் போராட்டத்தில் தீர்க்கப்படக் கூடியவைதான். ஏன் சில முரண்பாடுகள், ஒரு கட்சிக்குள் இருக்கக் கூடியவைதான்.
இலங்கையில் பாட்டாளி வர்க்கக் கட்சியைக் கட்டுதல் என்ற பாதையில், குறுகிய எம் கூறுகளை முன்னிறுத்தி பயணிக்க முடியாது. வெளிப்படையான திறந்த மனத்துடன், நடைமுறையில் போராடுவதன் மூலம் அனைத்தையும் பரிசோதிக்க முடியும். அனைத்தையும் பரிசோதித்தல் என்பது, மக்களுடன் இணைந்த நடைமுறை உறவுடன் தான் என்பதை மார்க்சிய லெனினியவாதிகள் நன்கு அறிவார்கள்.
கோட்பாட்டு வாதங்கள் மூலம், எம்மை தூய்மையாகக் காட்டி முன்னிறுத்துவதன் மூலமல்ல. அனைத்தும் சொந்த நடைமுறை மூலம் நிறுவப்பட வேண்டும். இன்று இனவாதத்துக்கு எதிரான அரசியல் முன்முயற்சியை, எந்த நிபந்தனையுமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கவேணடும்.
பேரினவாதமும், அதற்கு எதிரான குறுந்தேசியவாதமும் தமக்குள் எதிர் எதிராக சுறுசுறுப்பான அரசியல் செயற்பாட்டில் உள்ள அதே நேரம், மார்க்சிய லெனினியவாதிகள் இதை முறியடிக்கும் அரசியல் செயற்பாட்டை நடைமுறையில் முன்னெடுக்கவேண்டும். இதை முன்னெடுக்கத் தவறுகின்ற எவரும், இந்தச் சந்தர்ப்பத்தை கையில் எடுக்கத் தவறுகின்ற எவரும், தம்மை மார்க்சிய லெனினியவாதிகளாக சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர்கள்.
சமூகம் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் மீதான நடைமுறையில் செயற்படாத போக்கே, இலங்கையில் மார்க்சிய அனுபவமாகவும், அதன் தோல்வியாகவும் இருக்கின்றது. சமூகம் எதிர் கொண்ட பிரச்சனைகள் மீது மார்க்சியத்தை பிரயோகிப்பதற்கு பதில், காரணங்களைக் கூறிக் கொண்டு வேறு விடையங்களை பேசி ஒடுக்குமுறையாளன் முன் நல்ல பிள்ளையாக இருத்தல் என்பது கடந்தகால வரலாறாக இருந்து இருக்கின்றது. மார்க்சிய லெனினியம் என்பது மக்களை வழிகாட்டுவதுதான். இன்று இலங்கையில் இனவாதத்தை முறியடித்தல் என்ற நிகழ்சிக்கு வெளியில், அரசியலை முன்வைத்தல் அபத்தமானவை.
இலங்கையில் வெவ்வேறு கால இடைவெளியில் இரண்டு பிரதான போக்கு சார்ந்து மூன்று ஆயுதப் போராட்டங்கள் நடந்திருக்கின்றது. இவை எப்படி பாட்டாளி வர்க்க நடைமுறையைக் கொண்டு இருக்கவில்லையோ, அதுபோல் மார்க்சிய லெனினிய கட்சிகளும் கூட இதற்கு மாற்றான ஒரு வர்க்க நடைமுறையைக் கொண்டு சமூகத்தில் தன்னை முன்னிறுத்தியிருக்கவில்லை.
குறிப்பாக 45 வருடங்களுக்கு மேலாக அரங்கேறிய ஆயுதப்போராட்டங்கள் சார்ந்த அரசியல் முரண்பாடுகள் மீது, தன்னை ஈடுபடுத்தாத மார்க்சிய லெனினிய கட்சிகள் தான் இருந்து இருக்கின்றது. தனிநபர்கள் முதல் சிறுகட்சிகள் வரை கோட்பாட்டுத் தர்க்கம் சார்ந்த தளத்தில் தான் தம்மை தக்கவைத்துக் கொண்டனர். நடைமுறையில் இருந்து விலகி இருக்க, இந்த கோட்பாட்டு முரண்பாடுகளை முன்னிறுத்தினர். இன்று இனவாதத்துக்கு எதிரான நடைமுறையில் இருந்து விலகி இருக்க, கோட்பாட்டு முரண்பாடு சார்ந்த தர்க்கம் முன்வைக்கப்படின் அவை மார்க்சிய லெனினிய நடைமுறையல்ல.
கடந்த மூன்று ஆயுதப் போராட்டமும் தோல்வி பெற்ற எம் வரலாற்றுப் போக்கில், போராடிய சக்திகள் சரியான நடைமுறையுடன் கூடிய வர்க்கக் கட்சியை தமக்கு வெளியில் தேடினார்கள். ஆனால் இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் மார்க்சிய லெனினிய கட்சிகள் வர்க்கக் கட்சியாக தம்மை நடைமுறையில் முன்னிறுத்தி செயற்பட்டு இருக்கவில்லை. இந்த அரசியல் வெற்றிடத்தில் தான் புதிய குழுக்கள், தனிநபர் கருத்துகளும் இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் பாதையில் தங்களுக்கே உரிய குறைபாடுகளுடன் தொடர்ச்சியாக வெளிப்பட்டன, வெளிப்படுகின்றன. இது எதார்த்தமான எதிர்மறையான விமர்சனமாகும்.
கடந்த 40 வருட காலத்தில் தொடர்ச்சியாக இதுதான் நடந்தேறியது. நடைமுறையற்ற கோட்பாடும், கோட்பாடற்ற நடைமுறையும் இலங்கையில் இடதுசாரியமாகியது. இன்னமும் இதில் இருந்து விடுபடாத போக்கு தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இங்கு தங்கள் உதிரி நடைமுறையை வர்க்க நடைமுறையாகக் காட்டுவதும், கோட்பாட்டை பாதுகாக்கும் போராட்டத்தை வர்க்க நடைமுறையாகக் காட்டுவதும், தொடர்ந்து நடந்தேறுகின்றது.
இதை மாற்றியாக வேண்டும். இலங்கையில் இனவாதத்துக்கு எதிரான நடைமுறையில் நிபந்தனையின்றி இணையவேண்டும். தத்தம் சொந்த நிலையில் நின்றபடி இதை கூட்டாக முன்னெடுக்கமுடியும். இந்தப் புரட்சிகரமான, துணிகரமிக்க நடைமுறை மூலம் தான் ஒரு வர்க்கத்தின் செயலூக்கமுள்ள கட்சியை உருவாக்க முடியும். ஏன் தம்மைத்தாம் நிறுவவும் முடியும். தனித்து நிற்பதாலல்ல. உதிரியான நடவடிக்கை மூலம், இதில் இருந்து விலகிச் செல்வதல்ல. விலகி இருப்பதன் மூலம் இனங்களுக்கு இடையிலான ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது. மார்க்சிய லெனினியவாதிகளின் ஐக்கியமான ஒருங்கிணைந்த போராட்டம் தான், இனம் கடந்த மக்களின் ஐக்கியத்துக்கான அடிப்படையும் கூட. மார்க்சிய லெனினியவாதிகள் இதைச் செய்யாமல், மக்களின் ஐக்கியத்தைப் பற்றிப் பேசுவது என்பது நடைமுறையற்ற வெற்று வரட்டுக் கோட்பாடாகும். இன ஐக்கியம் என்பது, மார்க்சிய லெனினியவாதிகளின் ஐக்கியத்தை முதன்மையாகக் கொண்டது. மார்க்சிய லெனினியவாதிகள் அனைவரும் இதைப் புரிந்து கொள்வதும் நடைமுறையில் ஒருங்கிணைவதும் அவசியமானது.
பி.இரயாகரன்
02.10.2012
1. நீ ஒரு இனவாதியா! சொல்லு? - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 01
2.சுயநிர்ணயம் பற்றி இனவாதிகளின் திரிபு - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 02