சுயநிர்ணயம் பற்றி இனவாதிகளின் கண்ணோட்டம், சுயநிர்ணயம் மூலமான இன ஜக்கியத்துக்கு தடையாக இருக்கின்றது. சுயநிர்ணயம் என்பது "பிரிவினை" தான் என்று இனவாதிகளின் பிரச்சாரம், பிரிந்து செல்லும் உரிமை தான் சுயநிர்ணயம் என்பதை மறுக்கின்றது. கடந்த 30 வருடமாக சுயநிர்ணயத்தை திரித்து புரட்டிய குறுந்தேசியவாதிகளும் பெரும்தேசியவாதிகளும், சுயநிர்ணயம் சமன் "பிரிவினை" என்ற இனவாத கண்ணோட்டத்தைப் புகுத்தியுள்ளனர். சுயநிர்ணயத்தை முன்வைத்து பிரிவினைக்கு எதிராகவும், பலாத்காரமான ஐக்கியத்துக்கும் எதிராகவும், பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் பாட்டாளிவர்க்கம் முன்னனெடுக்கத் தவறிய நிலையில் தான் இனவாதிகள் அதை "பிரிவினை"யாகக் காட்டி பாட்டாளி வர்க்க யுத்ததந்திரத்தை செயலற்றதாக்கியுள்ளனர். இந்த வகையில் சுயநிர்ணயத்தை முன்வைத்து இன ஐக்கியத்தை உருவாக்குதல் என்பது, குறிப்பாக பெரும்பான்மை இனம் மத்தியில் சவால் மிக்க அரசியலாக மாறியுள்ளது.
சுயநிர்ணயத்தை முன்வைத்து சிங்கள மக்களை அணிதிரட்டல் என்பது பாரிய சவாலாகும். மிக இலகுவாக அதை "பிரிவினைவாதமாக" முத்திரை குத்தி, தனிமைப்படுத்தும் போக்கு காணப்படுகின்றது. இந்த நிலையில் சுயநிர்ணயத்தை முன்வைக்காமல் சிறுபான்மை மக்களை அணுகுவது, பேரினவாதமாக முத்திரை குத்தப்படுகின்றது. இரண்டு பக்க இனவாதிகளும், பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் யுத்ததந்திரம் இதுவாகவே இருக்கின்றது. தமிழ் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் சுயநிர்ணயத்தை முன்வைக்காது அணிதிரட்டல் என்பது "துரோகமாகவும்", பெரும்பான்மை மக்களை சுயநிர்ணயத்தை முன்வைத்து அணிதிரட்டல் என்பது "பிரிவினைவாதமாகவும்" காட்டி தனிமைப்படுத்துகின்ற அரசியல் போக்கு காணப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை மக்களை அணிதிரட்டல் என்பது, சவால்மிக்க ஒன்றாக எதார்த்தத்தில் காணப்படுகின்றது.
பேரினவாத அரசு சுயநிர்ணயம் என்பது "பிரிவினை" தான் என்றும், புலியும் தமிழ்தேசியவாதிகளும் கூட இதை "பிரிவினை" தான் என்றும் சொல்லுகின்ற இன்றைய நிலையில், இதை பிரிந்து செல்லும் உரிமை என்ற நேரெதிரான இந்த வேறுபாட்டை விளங்க வைத்து அணிதிரட்டுவது என்பது நடைமுறையில் சவால் மிக்க நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவும் உள்ளது.
கோட்பாட்டளவில் இன ஐக்கியத்தை வழிகாட்டும் சுயநிர்ணயம், நடைமுறையில் இனப் பிளவைக் வழிகாட்டும் ஒன்றாக இன்று திரிக்கப்பட்டு இயங்குகின்றது. சவால்மிக்க இதை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி?
சுயநிர்ணயத்தின் முரணற்ற உட்கூறுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இன ஐக்கியத்தை கீழ் இருந்து உருவாக்கும் வண்ணம் நடைமுறையை உருவாக்க வேண்டும். கோட்பாட்டளவில் சுயநிர்ணயத்தை சொல்லளவில் ஏற்றுக் கொள்வது அல்ல. பிரிவினைக்கு பதில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம் வரையறுப்பது, முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கையை முரணற்ற வகையில் நடைமுறைப்படுத்துவதுதான்.
ஆக இதை கீழ் இருந்து நடைமுறைப்படுத்துவதுதான், பிரிவினைக்கும் பலாத்காரமான ஐக்கியத்துக்கும் எதிரான யுத்ததந்திரமாகும். சுயநிர்ணயத்தின் முரணற்ற ஜனநாயக கூறுகளை கீழ் இருந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம், இன ஐக்கியத்தை உருவாக்குவது தான் உடனடியான நடைமுறைச் சாத்தியமான வழியாக நடைமுறைத் தந்திரமாக உள்ளது.
வெறும் கோட்பாட்டை அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது. அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வடிவம் என்பது, எப்போதும் ஒரே மாதிரியானதல்ல. இந்த வகையில் இனவாதத்தை முறியடித்து இன ஐக்கியத்தை உருவாக்க, சுயநிர்ணயத்தை கீழ் இருந்து ஏற்க வைக்கும் நடைமுறை மூலம்தான் சாத்தியம். இன்றைய இலங்கை நிலைமையில், இதுதான் எதார்த்தமானதாக உள்ளது.
அனைத்துவிதமான இனவாதத்தையும் முறியடிக்கும் வண்ணம் மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டுவதும், முரணற்ற ஜனநாயகத்தை முன்னிறுத்திப் போராடுவதன் மூலம் இன ஐக்கியத்தை உருவாக்க முடியும்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களாக மக்களை பிளவுபடுத்தும் வண்ணம் பரஸ்பரமான இனவாத செயற்பாடுகள், மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் அச்சங்களையும் நம்பிக்கையீனங்களையும் விதைத்து இருக்கின்றது. பரஸ்பரம் அநீதிகளுக்கும் அவலங்களுக்கும் எதிராக குரல்கொடுக்கவும், போராடவும் தவறிய நிலையில், இனவாதம் சார்ந்த எதிர் மனப்பாங்கு காணப்படுகின்றது. இதை நேரெதிராக மாற்றி அமைப்பதன் மூலம், அதாவது எமக்காக மட்டுமல்ல மற்றவர்களுக்காக பரஸ்பரம் போராடுவதன் மூலம் தான் இன ஐக்கியத்தை உருவாக்கமுடியும். அதாவது சொந்த இனத்தைச் சேர்ந்த இனவாதிகளுக்கு எதிராக போராடுதல். இதுதான் இன்று இலங்கை மக்களின் முன்னுள்ள அரசியல் தெரிவாக சவால்மிக்க ஒன்றாகவும் இருக்கின்றது. இதைவிட வேறு மாற்று வழியோ குறுக்கு வழியோ எம்முன் கிடையாது.
பி.இரயாகரன்
29.09.2012
1. நீ ஒரு இனவாதியா! சொல்லு? - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 01