தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் மேலான அதிருப்தியுணர்வை வளர்ப்பதற்கு பதில், இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டு அணுகவேண்டும். இது முஸ்லீம் மக்களின் சொந்த தெரிவல்ல. முஸ்லீம் மக்களைப் புரிந்து கொள்வதும், எப்படி இதற்கு எதிராக ஐக்கியப்பட்டு போராடுவது என்பதில் இருந்து நாம் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டும். இனம், மதம், பிரதேசவாதம் மூலம் பார்க்கின்ற எம் பார்வையைக் கடந்து, அப்படி சிந்திக்கின்ற எம் குறுகிய உணர்வைக் கடந்து, மனிதனாக ஒன்றிணைவதன் மூலம் மக்களுக்கு எதிரான இந்தச் சொத்து அரசியலை முறியடிக்க முடியும். இனம் மதம் கடந்து நாம் மக்களைச் சார்ந்து எம்மை அரசியல்படுத்துவதன் மூலம்தான், அந்த மக்களுடன் நாமும் அணிதிரள முடியும்.

எம்மைச் சுற்றி இருப்பதும் இன - மத - பிரதேசவாதம் தான். இதைக் கொண்டு அரசியல் நடத்துபவர்களின், மக்கள்விரோத செயற்பாட்டைக்கொண்டு மக்களாகிய நாம் எம்மை எதிரியாக முன்னிறுத்தக் கூடாது. இதை புரிந்து கொள்ளும் அறிவும், செயற்பாடும் இன்று அவசியம்.

அண்மையில் கிழக்குத் தேர்தலுக்குப் பின், முஸ்லீம் கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை அரசுடன் சேர்ந்து சொத்துச் சேர்க்க நடத்திய பேர அரசியல், இரண்டு பிரதான அரசியல் விளைவுகளைக் கொடுக்கின்றது.

1.இது தமிழ் - முஸ்லீம் இன ஐக்கியத்தை மேலும் சிதைக்கின்றது. முஸ்லீம் மக்கள் மேலான தமிழ் மக்களின் சந்தேகங்களை, அவநம்பிக்கைகளை மேலும் இது வளர்த்திருக்கின்றது.

2.முஸ்லீம் மக்கள் மத்தியில் அரசியல் மீதான அன்னியப்படுத்தலையும், அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் உருவாக்கி இருக்கின்றது.

மக்கள் தமக்காக போராடாத அரசியல் வெற்றிடத்தில், அரசியல் விழிப்புணர்வற்ற இன்றைய சூழலில், அரங்கேறுகின்ற மக்கள்விரோத அரசியல், மக்கள் மத்தியில் குறுகிய எதிர்வினையாக மாறுகின்றது. இதற்கு பதில் மக்களை விழிப்பூட்ட வேண்டிய அரசியல் பணி, செய்யப்படாதவையாகவே இன்னும் நீடிக்கின்றது.

இந்த நிலையில் இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான அரசியல் மூலம் மக்களைப் பிளந்;து அறுவடை செய்யும் அரசியல் மூலம், தனிப்பட்ட சொத்தைச் சேர்க்கின்ற அரசியல் பேரங்களாகவே இது இருக்கின்றது. அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்யப் போவதாக கூறுகின்ற பின்புலத்தில் தான், இவை அனைத்தும் அரங்கேறுகின்றது.

அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய உறுப்பு என்பதால், மக்களுடன் நின்று அதற்காக போராட வேண்டிய பொறுப்புக்குப் பதில், அரசுடன் சேர்ந்து ஒடுக்குவதே அரங்கேறுகின்றது. மக்களை ஒடுக்கும் அரசுக்கு எதிராக மக்கள் விழிப்படைவதைத் தடுக்கவே, இன – மத – பிரதேசவாதங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த உண்மையைப் புரிந்துகொள்வதும், இன - மத - பிரதேசவாதம் கடந்து, மக்கள் தம் உரிமைக்காகவும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் அரசுக்கு எதிராக ஒன்றிணைவதையே இந்த மக்கள் விரோதத் துரோகங்கள் எமக்கு மீண்டும் வழிகாட்டுகின்றது.

பி.இரயாகரன்

27.09.2012