நீ இனவாதியாக இருக்கும் வரை, இன ஐக்கியத்தை தடுக்கின்றாய். நீ இனவாதியாக இருக்கும் வரை, நீ மக்களை நேசிப்பவனாக, மக்கள் முன் உண்மையானவனாக நேர்மையானவனாக இருக்க முடியாது. உனது வஞ்சகமற்ற அர்ப்பணிப்புகளும் தியாகங்களும், உன்னை இனவாதியாக்கியவனின் குறுகிய நலனுக்குதான் பயன்படுகின்றது.

இனவொடுக்குமுறையும் அதன் எதிர்வினையும் தான் பரஸ்பரம் இன ஐக்கியத்துக்குத் தடை என்ற பொதுப் புரிதலும், அது சார்ந்த அரசியலும் கூட இன ஐக்கியத்துக்கு எதிராகவே இயங்குகின்றது. இப்படி உருவாகும் இனம் சார்ந்த அணுகுமுறை மூலம், இனவாதம் தான் விதைக்கப்படுகின்றது.

பொதுவாக உங்களை இனவாதியாக்கிய இனவாதிகள், தத்தம் இனங்களின் ஐக்கியம் மூலம் இனப்பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று கூறி இனப்பிளவைத்தான் தொடர்ந்து வளர்த்தெடுத்தனர், வளர்த்தெடுக்கின்றனர். ஆனால் இனப்பிரச்சனைக்கான தீர்வை, இதன் மூலம் அவர்கள் காணமுடியவில்லை. இது தான் எம் கடந்தகால வரலாறு.

ஆக இனவாதிகள் எவரும் இனப் பிளவை முன்வைத்து, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அதுபோல் இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காணவும் முனையவில்லை. உண்மையில் இன ஐக்கியம் என்ற அடிப்படை அரசியலை முன்வைத்து, மக்களை எவரும் அணுகவில்லை. ஆக இது சாத்தியமற்றது என்று கூறுகின்ற இனவாதமும், இனவாத சிந்தனையும் தான் இன்று சமூகத்தில் புரையோடி நிற்கின்றது. இனவாதிக்கு எதிராக மக்களை ஐக்கியப்படுத்தும், பரீட்சிக்கப்படாத நடைமுறை இன்னமும் எம்முன் இருக்கின்றது.

யுத்தத்தின் பின் இனவொடுக்குமுறைக்கான தீர்வு என்பது, இன ஐக்கியத்தால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்ற எதார்த்தத்தை தாண்டி, மற்ற அனைத்தும் கற்பனையானதாகியுள்ளது. இனவாதிகள் தமக்குள் பேசித் தீர்க்கின்ற அல்லது ஏகாதிபத்திய நலன் சார்ந்த அழுத்தத்துக்குள் தீர்வு காண்கின்ற வழிகள் அனைத்தும், நாக்கை தொங்கிவிட்டுக்கொண்டு அலைகின்ற இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட கானல் நீர் தான்.

இன ஐக்கியம் என்பது தான், நடைமுறைச் சாத்தியமான ஒரேயொரு அரசியல் தீர்வுக்கான வழிமுறையாகும். ஆனால் இதைச் செய்ய நாம் தான் தடையாக இருக்கின்றோம். இந்த உண்மையை நாம் எம்மில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். நாம் முதலில் இனவாதியாக இருப்பதில் இருந்து விடுபடுவதன் மூலம் தான், இன ஐக்கியத்தை உருவாக்க முடியும்.

தமிழரும் சரி, சிங்களவரும் சரி, முஸ்லீம்களும் சரி, தத்தம் சொந்த இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கோரியவர்கள் சாதித்தது என்ன? சொல்லுங்கள். இனப் பிளவு மூலம் பெற்றது தான் என்ன? சரி இதன் மூலம் எதைத் தான் அடைவீர்கள்? சாதாரண மக்களாகிய நீங்கள் எதைத்தான் இதன் மூலம் பெற முடியும்.

இன அடையாளத்தைக் காட்டி நாம் ஒருவரை ஒருவர் எதிரியாக அணுகியதன் மூலம், நாம் எமது சொந்த மனிதத் தன்மையை இழந்தவர்களாக மாறினோம். எம்மை ஒடுக்குபவனை எதிர்ப்பதற்குப் பதில் எம்மைப் போன்ற மக்கள் கூட்டத்தையே எதிரியாகப் பார்த்தோமே அது சரியா? எங்களையே கேட்டுப்பாருங்கள்.

இங்கு தமிழ் - சிங்கள - முஸ்லீம் என்ற எந்த வேறுபாடுமின்றி, இதைத்தான் நாம் அனைவரும் எங்கள் அரசியல் வழியாகக் கொண்டு இருந்தோமே இது சரியா? எம்மைப் போன்று மற்றவனையும் எதிரியாகப் பார்த்தோமே! இது எப்படி உன்னில் சாத்தியமானது? இது தான், உன் மனித குணமா? இல்லை அப்படி நாம் மாற்றப்பட்டோமா? சொல்லுங்கள். எல்லாவற்றையும் சுயவிசாரணை செய்யுங்கள்.

ஏன் நாம் எம்மை ஒத்த மக்களுடன் இனம் கடந்து ஒன்றுபட்டு, ஒடுக்குபவனை எதிர்க்கின்ற வழியைப் பற்றி சிந்திக்கவில்லை. இது சாத்தியமில்லை என்று இன்றும் கூறுபவன் இருக்கட்டும், நீ இதற்கு எதிராக இருக்கின்றாயா என்பதை முதலில் உறுதி செய். அதை நடைமுறையில் நிறுவு. எந்த இனவாதத்துக்கும் எதிராக இருப்பதில் இருந்து தான், இனவாதத்துக்கு எதிரான மனிதத்தன்மையை நீ பெறமுடியும்.

எம்மை ஒடுக்குகின்றவனுக்கு எதிராக ஒருக்கிணைவது என்பது, ஒடுக்குகின்றவனின் இனத்துக்கு எதிராக அல்ல. மாறாக எம் மீதான, எம்மைச் சுற்றிய அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஐக்கியத்தை ஒற்றுமையையே நாம் கோரவேண்டும்.

இது சாத்தியமற்ற ஒன்றா? இப்படி நாம் சிந்திக்க செயல்பட தடையேதும் உனக்குள் உண்டா? அது எது? ஏன்? மனம்விட்டு உன்னிடமே நீ பேசிப் பார். எம்மைச் சுற்றிய அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்க்கின்றவர்களாக நாம் இல்லாத வரை, நாம் எப்படி நேர்மையானவர்களாக உண்மையானவர்களாக இருக்கமுடியும். சொல்லுங்கள்.

ஒடுக்குகின்றவனுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம் உண்மையாக இருக்க வேண்டும் என்றால், அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தையும் முன்வைக்கவேண்டும். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியமும், ஒற்றுமையும் சாத்தியமானதே.

என்னில் இருந்து எம்மில் இருந்து, என சுய விசாரணையைத் தொடங்குங்கள். உங்களை, உண்மையானவனாக நேர்மையானவனாக மற்றவன் முன் முன்னிறுத்துங்கள். இதன் மூலம் சமூகத்துக்கு முன்னோடியாக நில்லுங்கள். இதைக் கொண்டு சமூகத்துக்கு வழிகாட்டுங்கள்.

 

பி.இரயாகரன்

26.09.2009