06272022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

புளொட்டிலிருந்து தீப்பொறி நேசனின் அனுபவத்தொடர் பற்றிய சில கேள்விகளும் விமர்சனங்களும்

"புளொட்டிலிருந்து தீப்பொறி வரையிலான எனது அனுபவப் பகிர்வுகள்" எனும் நேசனால் எழுதி முடிக்கப்பட்ட தொடரை முழுமையாக வாசித்திருந்தேன். நேசன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் குறிப்பாக புளொட் மற்றும் தீப்பொறியில் பணியாற்றியபோது இழைத்த தவறுகளை வெளிக்கொண்டுவரும் இத்தகைய முயற்சி இக்காலச் சூழலில் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். எனது பதிவின் நோக்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களான "புளொட்", "தீப்பொறி" உட்பட அனைத்து இயக்கங்களையும் அவற்றின் தவறான போக்குகளையும் விமர்சிப்பதே தவிர எந்தத் தனி நபரையும் தாக்குவதோ அல்லது புண்படுத்துவதோ அல்ல. எமது போராட்ட வரலாற்றில் மாபெரும் தவறுகளைச் செய்தவர்களையும் சம்பவ ரீதியான விடயங்களையும் சுட்டிக்காட்டுகின்ற போது தீப்பொறியிலும் எமது பாத்திரங்கள் விமர்சிக்கப்படுவது தவிர்க்க முடியாதவை என்பதை நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கின்றேன்.

"புளொட்" என்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கும் நிலையில் நின்ற போது நாம் செய்வதறியாது நின்றோம். இந்நிலையில் "தீப்பொறி"க் குழுவினரும், "ராஜன் குழு"வினரும்தான் எம்முன்னே தென்பட்டனர். இந்தியாவிலிருந்து மத்திய குழு உறுப்பினரான பெரியமுரளியின் வருகையின் பின் நாம் இனிமேலும் புளொட் அமைப்புக்கு எந்த பணிகளும் செய்வதில்லை என முடிவெடுத்து புளொட்டில் இருந்து வெளியேறி வண்ணனும் நானும் பண்ணை வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.

அக்காலப் பகுதி எம்மைப் பொறுத்தவரை பாதுகாப்பற்றதொன்றாகவே இருந்தது. அனைத்துத் தரப்பினராலும் எமக்கு உயிராபத்து ஏற்படக் கூடிய நிலையே அன்று காணப்பட்டது. எம்மைப் பொறுத்தவரை மக்கள் ஆதரவும் அவர்கள் மீது எமக்கிருந்த நம்பிக்கையும்தான் நாம் இன்னமும் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்க முடியும்.

இலங்கை, இந்திய இராணுவத்திடமிருந்தும், தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்களிடமிருந்தும் எம்மைப் பாதுகாத்தது எமது மக்களே என்பது மிகவும் கவனிக்கத்தக்க முக்கியமான விடயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் நண்பர் பெரியமுரளியுடன் பேசும் போது "தீப்பொறி"க் குழுவினர் பற்றியும் ராஜன் குழுவினர் பற்றியும் தனக்கு இருக்கும் அபிப்பிராயம் என்னவென்பதை வண்ணனுக்கும் எனக்கும் தெரியப்படுத்தினார்.

ராஜன் குழுவினர் ஓர் இராணுவ அமைப்பாக செயட்படுகின்றனர் என்றும் இவர்களிடம் அரசியல் கொள்கைத்திட்டமோ அல்லது வேலைத்திட்டமோ கிடையாது என்றும் தீப்பொறிக் குழுவில் உள்ளவர்களிடம் அரசியல் இருந்தாலும் அதன் தலைமையில் இருப்பவர்கள் சிலர் தன்னைப் பொறுத்தவரையில் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்றும் தனது கருத்தை எம்மிடம் தெரிவித்தார்.

பெரியமுரளி எப்படிப்பட்டவர் என்பது இங்கு முக்கியமானதொன்றல்ல. ஆனால் அன்று அவர் கூறிய கருத்து பின்னாட்களில் உண்மையாகிவிட்டது. பெரியமுரளியுடனான இச்சந்திப்பின் பின் அவரது தொடர்பு இல்லாமலே போய்விட்டது.

பிற்பாடு வண்ணனும் நானும் ராஜன் குழுவினரைச் சந்திப்போம் என முடிவெடுத்தோம். அதன்படி கொக்குவிலில் தங்கியிருந்த ராஜனைச் சந்திக்கச் சென்றோம். நாம் ராஜனிடம் எம்மை அறிமுகப்படுத்திவிட்டு பேசியபோது ராஜனின் சகோதரனும் உடனிருந்தார். பரந்தன் ராஜனுடன் தொடர்ந்து வண்ணன்தான் பேசிய வண்ணமிருந்தார். அன்றுதான் ராஜனை நாம் முதன்முதலாக நேரில் சந்தித்திருந்தோம். ராஜன் குழுவினர் புளொட்டில் இருந்து வெளியேறியிருந்த போதும் அவர்களிடம் புளொட்டில் இருந்து வெளியேறியதன் பின் எந்தவிதமான மாற்றங்களையும் காண முடியவில்லை. சரியான அரசியல் கொள்கைத்திட்டமோ அல்லது வேலைத்திட்டமோ இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்த வித பயனுள்ள செயற்பாடுகளையும் செய்ய இவர்களால் முடியாது எனக் கருதினோம். ராஜன் குழுவினர் மூன்று விடயங்களைத்தான் உடனடியாகச் செய்யவேண்டும் என கூறினர். எந்த வழியிலாவது பணம் சேகரிக்க வேண்டும், ஆயுதம் சேகரிக்க வேண்டும், தாக்குதல் நடத்த வேண்டும் - இவைதான் தற்போது முக்கியமானவை எனக்கூறினர். நாம் சில கேள்விகளைக் கேட்ட போது அதற்கு சரியாகப் பதிலளிக்கத் தவறியிருந்தனர். ஒரு மணித்தியாலமாக நடந்த இச்சந்திப்பில் எமக்கு திருப்தி ஏற்படவில்லை. ராஜன் குழுவினரிடமிருந்து விடை பெற்றுத் திரும்பிவிட்டோம்.

அதன்பின் வவுனியாத் தம்பி இந்தியாவிலிருந்து பயிற்ச்சி முடித்து வந்திருந்த போது அவருடன் புளொட்டின் நிலைமை குறித்து பேசினோம். சில நண்பர்கள் இருக்கிறார்கள், பேசுவோம் எனக்கூறி "தீப்பொறிக் குழு " நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்புதான் நேசன், வரதன் (சண்முகவடிவேல்), செந்தில் (காசி), சுரேன், தர்மலிங்கம் போன்றோரின் தொடர்புகள் ஏற்பட்டன. அக்காலப்பகுதியில் மிக மோசமான, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து மிகத் துணிவுடன் செயற்படத் தொடங்கினோம். தீப்பொறிக் குழுவிலிருந்த ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரையும் நன்றாக அறிந்திருந்தேன். அரசியல் நூல்களைக் கற்கவேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்துபவர்களாக இருந்ததுடன் அவர்களும் கூட தொடர்ச்சியான வாசிப்பு பழக்கத்துக்கு உள்ளாகி இருந்தனர்.

இக்காலப்பகுதியில் தென்னிலங்கை நண்பர் சுனிமெல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைத்தது. அவருடன் நாம் பேசிய போது அவர் தனக்கு நல்ல அரசியல் தலைமைகளை அறிமுகம் செய்து வைக்கும்படியும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். சுனிமெல்லின் வேண்டுதலின்படி தீப்பொறிக் குழுவினரைச் சந்தித்து பேசினோம். தீப்பொறிக் குழுவினர் சுனிமெல்லை சந்தித்து பேசுவதற்கு சம்மதித்து நேசனை சுனிமெல்லுடன் பேசும்படி வவுனியாவுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இன்று எனது கேள்வி என்னவென்றால் ஏன் நேசனை மட்டும் சுனிமெல்லைச் சந்தித்துப் பேச அனுப்பியிருந்தனர் என்பதுதான். சுனிமெல்லுடன் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து டொமினிக்கையும் நேசனுடன் வவுனியாவுக்கு அனுப்பியிருந்தால் சுனிமெல்லுடனான பேச்சுவார்த்தை வேறு முடிவுகளை நோக்கி நகர்ந்திருக்கலாம். மூன்று நாட்களாக சுனிமெல்லும், நேசனும் பேசினர். இடையிடையே வண்ணனும் நானும் கலந்து கொண்டிருந்தோம். நேசனுக்கு சிங்களம் சரளமாகத் தெரியாததால், சுனிமெல் ஆங்கிலத்திலும் சில சமயங்களில் கொச்சைத் தமிழிலும் நேசனுடன் பேசினார். சுனிமெல்லைப் பொறுத்தவரையில் அவர் இடதுசாரி அரசியலில் ஓரளவு தெளிவுடன் பேசக்கூடியவர்.

இலங்கையின் இனப்பிரச்சனைக்குக் கொள்கைரீதியான முடிவுகளுடன் தனது கருத்துக்களை சுனிமெல் முன்வைத்திருந்தார். இலங்கையில் முழு இலங்கைக்குமான ஒரு வர்க்கப் புரட்சியே சாத்தியமெனவும் தேவை ஏற்படின் பிரிந்து செல்வது கூட சாத்தியமாகலாம் எனவும் சுனிமெல் வாதிட்டார்.

சுனிமெல்லுடன் பேசுவதற்கென இறுதியில் டொமினிக் தீப்பொறிக் குழுவினரால் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீப்பொறிக் குழுவின் முடிவு டொமினிக்கால் சுனிமெல்லுக்கு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதுதான் எமது நிலைப்பாடு; நீங்கள் எமது நிலைப்பாட்டை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இனவாதத்துக்கு எதிராக தென்னிலங்கையில் செயற்படுமாறும் கூறினார். இதற்கு சுனிமெல் நீங்கள் மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு குறும் தேசியவாதம் பேசுகிறீர்கள் என வாதம் செய்தார். நண்பர் சுனிமெல் உணர்ச்சிவசப் படத் தொடங்கினார். நீங்கள் மார்க்சியவாதிகளே இல்லை எனவும் இது குறும் தேசிய வாதம் மட்டுமல்ல பச்சைத் தமிழ் இனவாத போக்குமாகும் எனக் கூறினார். தீப்பொறிக் குழுவினரின் கருத்துக்களை ஏற்க முடியாது எனக் கூறிய சுனிமெல் வவுனியாவிலிருந்து தென்னிலங்கைக்கு சென்றுவிட்டார்.

இதன்பிற்பாடு "தீப்பொறி" மத்திய குழு இலங்கைத் தேசிய இனப்பிரச்சனையில் கொள்கை முடிவுகள் எடுத்துச் கொண்டிருந்ததா? தீப்பொறி மத்திய குழுவின் முடிவு அரசியல் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

அக புறச் சூழலை புரிந்து கொள்ளத் தவறியதால் தான் கைதடி நண்பர்களான வரதன், தர்மலிங்கம் ஆகியோரின் உயிரிழப்பு நேர்ந்தது என்பது எனது கருத்து. இக்காலப் பகுதியில் இவர்களின் பல்கலைக் கழகம் சம்பந்தமான செயற்பாடுகளை அறிந்த நான் டொமினிக்குடன் பேசும்போது தற்போதிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற வேலைகளை தவிர்க்கலாம்தானே எனக் கூறிய போது இச்சூழலில்தான் நாம் தீவிரமாகச் செயற்படவேண்டும் என டொமினிக் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த நான் தற்போது எம்மில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான் இருக்கின்றோம். உயிரிழப்பு என்பது தற்போதுள்ள நிலையில் ஈடு கொடுக்க முடியாதது. எனவே நாம் பின்வாங்குவதும் எம்மைத் தயார் செய்வதும் விவேகமானதாக இருக்குமா? எனக் கேட்டபோது பதிலேதுமளிக்காமல் டொமினிக் மௌனமாகக் காணப்பட்டார். இது போன்ற சில அரசியல் விடயங்களையும் கேள்விகளாக முன்வைத்த போது டொமினிக் பதிலளிக்கத் தவறியிருந்தார்.

அது மட்டுமல்ல யாழ்ப்பாணப் பகுதியில் நாம் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் தென்னிலங்கைக்குச் செல்ல வேண்டிய நிலை பெரும்பாலானவர்கட்கு ஏற்பட்டது. நானும் வண்ணனும் என்ன செய்வது? எங்கள் சம்பந்தமாக என்ன முடிவெடுத்தீர்கள் என டொமினிக்கிடம் கேட்ட போது நீங்கள் இருவரும் தென்பகுதிக்கு செல்ல முடியாததானால் இந்தியா செல்வதுதான் நல்லது எனக் கூறினார். இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியுமா என நான் கேட்ட போது அவற்றை நீங்கள் தான் செய்ய வேண்டும் பிற்பாடு நாம் உங்களுடன் தொடர்பு கொள்வோம் எனவும் கூறினார்.

இத் தருணத்தில் வேறு நண்பர்கள் எவரையும் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. கேள்வி என்னவென்றால் ஒரு அமைப்பில் அனுபவமிக்க ஒருவர், பொறுப்பிலுள்ள ஒருவர், இததகையதொரு நிலையில் எப்படிச் செயற்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். டொமினிக்கின் முடிவு அவரது தனி முடிவா? அல்லது அமைப்பின் முடிவா?

இதே போன்றுதான் வவுனியாவிலிருந்து எமது நண்பர் அந்துவும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து நாம் எல்லோரையும் நம்பி ஓடி ஒளிந்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது சுரேன் மட்டும்தான் யாழ்ப்பாணத்தில் இருந்தார். நாம் சுரேனிடம் சென்று நேரடியாகக் கதைக்க முடியாத நிலையில் இருந்ததால், வண்ணனும், அந்துவும், நானும் என்ன முடிவு எடுப்பது என்று கேட்டு வரும்படி எமக்கு நம்பிக்கையான ஒருவரை சுரேனிடம் அனுப்பி வைத்தோம். ஆனால் பொறுப்பற்ற விதத்தில் சுரேன் பதிலளித்து எமது நண்பரைத் திருப்பி அனுப்பி விட்டார். கேள்வி என்னவென்றால் ஒரு பண்பட்டவராக நம்பத்தகுந்த சுரேன் பிரச்சனைகள் வரும்போது ஒரு சாதாரண பொதுமகன் அளவில் கூட ஏன் நடந்து கொண்டிருக்கவில்லை? என்பதுதான். யாழ்ப்பாணத்தில் இருந்த தீப்பொறி உறுப்பினர்கள் அனைவரையும் கொழும்புக்கு அனுப்பிவிட்டு நாமும் கடைசி நேரத்தில்தான் இந்தியாவுக்குச் சென்றோம். இத்தருணத்தில் நாம் மட்டும் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்காவிடால் எங்கள் மூவரின் இழப்பு தவிர்க்க முடியாமல் போயிருக்கும்.

கைதடி நண்பர்களான சண்முகவடிவேல், தர்மலிங்கம் மற்றும் டொமினிக் ஆகியோருடைய இழப்புக்கள் அமைப்பின் உடைவுகளுக்கு முதல் காரணமென நினைக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அமைப்புக்குள் முன்னணியில் பணியாற்றிய பல நண்பர்கள் மிகவும் அர்ப்பணிப்போடும், பொறுப்போடும் ஆரம்ப காலத்தில் செயற்பட்டனர். அவர்களுடைய நடைமுறையை வைத்துத்தான் இந்த அமைப்பு மக்களை செவ்வனே வழிநடத்தக்கூடிய, போராட்டத்தை சரிவர முன்னெடுக்கக் கூடிய அமைப்பாக வளருமென முழுமையாக நம்பினோம். அமைப்பின் ஆரம்ப காலச் செயற்பாடுகள் எமது நம்பிக்கைக்கு உரமூட்டின. பிற்பாடு நெருக்கடியான நிலை வரும்போது இவர்களில் சிலருடைய கருத்துக்களுக்கும் அவர்களது நடைமுறைக்குமிடையில் எதுவித தொடர்பும் இருப்பதைக் காண முடியவில்லை.

இப்படியிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற டொமினிக் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றது ஏன்? இது செயற்குழு முடிவின்படிவா நடைபெற்றது? அப்படியானால் டொமினிக்கை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்த முடிவு சரியானதா?

1991 மார்ச் மாதத்திற்குப் பின்பு "தீப்பொறி" குழு குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விடுதலை, கொள்கை என்று ஒன்று சேர்ந்த நாம் இதற்காக குரல் கொடுத்து விட்டு கைதுகள், உயிரிழப்புகள் நெருக்கடிகள் வந்த போது உயர்மட்ட உறுப்பினர்கள் மிகவும் சாதாரண மனிதர்களை விட மோசமாக நடந்து கொண்டனர். சக நண்பர்களைப் பற்றி எதுவுமே சிந்திக்காமல் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முடிவின்படி பிரிந்து சென்றுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு தலைமையா நாம் வளர்க்க இருந்தோம்? "தீப்பொறி" தலைமை பற்றி எவ்வளவு பெரிய மாயத் தோற்றம் வெளியே இருந்தது.

இப்போது வெளிநாடுகளில் சிற்றிசன் எடுத்துக் கொண்டு பாதுகாப்பான நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களுடைய அரசியல் பற்றி வாய்ச்சவடால் எப்படிப் பேசுகின்றனர். இவர்கள் போன்றோர் தங்களுடைய பொழுது போக்கிற்காக மக்கள் படும் துன்பத்தை அசைபோடுவதே வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். எனது இந்த விமர்சனத்தின் நோக்கம் யாரையும் இழிவு படுத்தவேண்டும் என்பதல்ல. எமது மக்களைப் பற்றி சிந்திக்கும் அடுத்த சந்ததிக்காகவும் இனிமேல் எமது போராட்டத்தை முன்னெடுக்கும் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக எமது அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மக்கள் நலனை கருத்திற்கொண்டு செயற்படுதல் அதுவும் ஒற்றுமையுடன் செயற்படுதல் மிகவும் அவசியம் என்பதனையும் கூறி தீப்பொறியில் எனது கடைசிகாலப் பகுதி அனுபவங்களில் சிலவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆறுதல் அடைகின்றேன்.

கபிலன் - வவுனியா


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்