ஜனநாயகத்தை மறுத்தவர்கள், "ஜனநாயக மறுப்பு" என்ற பெயரில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்.

ஜனநாயகம் மறுக்கப்பட்டவருக்கு எதிராக, மீண்டும் தேடகம் ஜனநாயக மறுப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

நேசனுக்கு கருத்து சொல்லும் உரிமையை மறுத்தவர்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. மாறாக தங்கள் ஆட்கள் "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்ட ஒழுங்கை மீறியிருந்ததாக" கூறி, அதைத்தான் தவறு என விளக்கம் கொடுத்துள்ளனர். இப்படி தம் ஜனநாயக மீறலை நியாயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

அதை மூடிமறைக்க "உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டிருந்தாலும் ஜனநாயக பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் கடைப்பிடித்தே வந்தனர்." என்று, தங்கள் கடந்தகாலத்தை பற்றிக் கூறுகின்றனர்.

இங்கு "தலைவரின் கோரிக்கைகளை" என்ற விடையம் இல்லாது இருந்தால், கடந்தகால "ஜனநாயக பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் கடைப்பிடித்"து இருப்பார்களா!? கருத்துச் சுதந்திரத்தை நேசனுக்கு வழங்கி இருப்பீர்களா? இங்கு தலைவர் "கோரிக்கை" என்பதில் இருந்தே, இந்த விடையத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நேசனுக்கும் உங்களுக்கும் இடையில் நடந்தது என்ன? அது பற்றி அறிக்கை பேச மறுக்கின்றது. ஏன்?

சரி அவர் எதை கூட்டத்தாரிடம் கோரி, எந்த ஜனநாயகத்தை உங்களுக்கு மறுத்தார் ? அல்லது நீங்கள் எதை அவரிடம் கோர அவர் எதை உங்களுக்கு மறுத்தார் ? இதையெல்லாம் ஏன் அறிக்கையில் தெளிவுபடுத்தவில்லை.

தேடகக் கூட்டத்துக்கு வெளியில், அதுவும் தனிப்பட்ட இருவருக்கு இடையில் நடந்த விடையத்தைக் கொண்டு குற்றஞ்சாட்டும் தேடகம், முழுமையாக நடந்ததைப் பற்றி கள்ள மௌனம் தான் எதற்கு?

நேசன் மீது மூன்று குற்றச்சாட்டை தேடகம் முன்வைக்கின்றது. இதில் தேடகத்தின் கூட்டத்திற்கு வெளியில், தனிப்பட்ட இருவருக்கு இடையில் நடந்த இரு விடையங்கள் பற்றி குற்றஞ்சாட்டுகின்றது. நடந்தது என்ன?

தம்புள்ள முஸ்லீம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பான கூட்டத்தில் நேசன் பேசமுற்பட்ட போது, கருத்துச்சுதந்திரம் நேசனுக்கு மறுக்கப்படுகின்றது. இதுவே பிரச்சனையின் ஆரம்பம்.

தேடகம் பழைய மரபான "ஜனநாயகப் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் கடைப்பிடித்து" இருந்தால் இப்படி நடந்திருக்காது. அன்றைய நடத்தையை இந்த அறிக்கை கூட சரியென்று மீண்டும் நியாயப்படுத்துகின்றது. தேடக அறிக்கை "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்டம் ஒழுங்கை மீறியிருந்தது" என்று மட்டும் கூறி, அதைத்தான் தவறென்று கூறுகின்றது.

இங்கு தேடகம் தனக்கானது எனக் கூறிக் கொள்ளும் பழைய மரபான "ஜனநாயக பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் கடைப்பிடி"ப்பதை இப்படி இந்த அறிக்கை ஊடாக மறுக்கின்றது.

மேலும் அவ்வறிக்கையில் "கருத்து கூற சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோதும்" என்று பொய்யான விளக்கம் வேறு கொடுக்கின்றது. அறிக்கையில் "அதில் கலந்துகொண்ட நேசன் அவர்களுக்கு கருத்து கூற சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோதும் 'தான் இப்போது கருத்துக்கூற விரும்பவில்லை' எனக் கூறி விலகிக்கொண்டார். ஆயினும் தமிழரங்கம் இணையத்தில் அவர் எழுதிய பத்தியில் தனக்கு கருத்துரிமை மறுக்கப்பட்டதாக எழுதியிருந்தார்." என்பதில், கருத்து சுதந்திரம் வழங்கியதாக கூறுவது தவறு.

இங்கு "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்டம் ஒழுங்கை மீறியிருந்தது" என்று கூறுகின்ற எல்லைக்குள் தான், அது அனுமதிக்கப்பட்டது. இங்கு நேர்மையற்ற போலித்தனம். "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்ட" என்ற எல்லைக்குள் கருத்து கூற வேண்டும் என்றால் அங்கு கருத்து சுதந்திரம், ஜனநாயகம் வழங்கப்பட்டதாக கூறவே முடியாது. இவ்வாறு தான் தேடகம் தன்னை வரையறுத்துள்ளது. இங்கு எங்கு ஜனநாயகம் உண்டு?

இங்கிருந்து மற்றைய மூன்று சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்கின்றது.

1. "ஐயரின் புத்தக வெளியீட்டின் பின்னராகவும் சுசிஸ் முரளியுடனும் இவ்விதமாகவே நேசன் நடந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது." என்று தேடகம் குற்றஞ்சாட்டுகின்றது. "இவ்விதமாகவே" என்றால் எவ்விதமாக?

ஐயர் புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் புலிப் பாசிசத்தைப் பற்றி நேசன் பேசுவதை மறுதளிக்க, மண்டபத்திற்கு வெளியில் புலி சுவிஸ் முரளி சோவியத் - ஸ்ராலின் பற்றி (இது தான் அவரின் கூட்டங்களில் கையாளும் வழமையான பாணி. இதுதான் புலிப்பாணியும் கூட) தன்னுடன் விவாதிக்குமாறு புலி பாணியில் அணுகி கட்டாயப்படுத்திய போது ஏற்பட்ட முரண்பாடு இது. தன்னுடன் பேச மறுத்ததை "ஜனநாயக" மறுப்பாக புலி சுவிஸ் முரளி சொல்ல, அதை தேடகம் மீள இன்று வழி மொழிகின்றது.

2 நேசனுக்கு கருத்துச்சுதந்திர மறுப்பு நடந்த அன்றைய நிகழ்வு பற்றி தேடகம், "அக் கூட்டத்தின் முடிவில் மண்டபத்திற்கு வெளியில் திரு.யானுடன் நேசன் விவாதத்தில் மேற்கொண்டிருந்த சற்று நேரத்தில் யான் அவர்களை அடிக்கும் தோரணையில் அவரை அண்மித்த நிகழ்வு" என்கின்றனர்.

என்ன நடந்தது ?

நேசன் ஜானை "அரசு கைக்கூலி" என்று எந்த ஆதாரத்தில் எழுதினீர் என்று, தன்னுடன் ஒன்றாக இருந்த முன்னாள் தீப்பொறி மத்தியகுழு உறுப்பினரிடம் கேட்டபோதான முரண்பாடும் தர்க்கமாக நடந்தது. இதைத்தான் ஜனநாயக மறுப்பு என்று தேடகம் கண்டுபிடித்துக் கூறுகின்றது.

3. மேலும் தேடகம் "கடைசியாக நடைபெற்ற கூட்டத்திலிருந்து மண்டப காவலர்களினால் நேசன் வெளியேற்றப்பட்டார். கூட்டத்திற்கு தனது வேலைக்கு தேவையான ஆயுதங்கள் அடங்கிய இடுப்பு பட்டியுடன் வந்து அங்கு நடந்துகொண்ட முறையானது. முற்றுமுழுதான வெருட்டல் பாணியினதாகும். அரசியல் நாகரீகத்திற்கும் அரசியல் அறத்திற்கும் புறம்பானதாகும்." என்ற தேடகத்தின் "ஜனநாயக மறுப்பு" வாதம் பற்றி பார்ப்போம்.

என்ன நடந்ததெனில் இந்த கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்ட இனியொரு, அதில் "அரச சார்புக் குழு" முந்தைய கூட்டத்தை குழப்பியதாக எழுதி அறிவிப்பை வெளியிட்டது. இப்படி எழுதியதை அடுத்து, அதன் பிரதியை குறித்த தேடகக் கூட்டத்தில் விநியோகித்து அவர் நியாயம் கேட்டார். இதற்கு தேடகம் பதிலளிக்காது, அவரை வெளியேற்றியது. இதைத் தான் தேடகம் நேசனின் "ஜனநாயக மறுப்பு" என்கின்றது.

அத்துடன் அடுத்த நாள் கூட்டம் பற்றிய துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்வது கூட தடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வேறு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இது நேசனுக்கு மட்டும் மறுக்கப்பட்டதுடன், வழமையான தேடக மரபு கூட இங்கு மறுக்கப்பட்டது. இனியொரு இந்த நிகழ்வை "தேடகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கை அரச சார்புக் குழு வன்முறை" என்று திரித்து புரட்டி எல்லாம் எழுதியது.

தேடகம் கூட்டம் பற்றி இனியொருவின் முந்தைய பிந்தைய கருத்தை கண்டிக்கத் தவறிய தேடகம், "பல்வேறு அரசியல் பின்னணிகளை கொண்டிருந்தாலும் ஜனநாயக பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் கடைப்பிடித்தே" என்று கூறும் தேடகம் பழைய மரபை மறுதளித்து இருக்கின்றது. இதுதான் புதிய தேடகத்தின் அரசியல் மற்றும் நடைமுறையாகும்.

இங்கு தேடகத்தின் அடுத்த குற்றச்சாட்டு "கூட்டத்திற்கு தனது வேலைக்குத் தேவையான ஆயுதங்கள் அடங்கிய இடுப்பு பட்டியுடன் வந்து அங்கு நடந்துகொண்ட முறையானது. முற்றுமுழுதான வெருட்டல் பாணியினதாகும். அரசியல் நாகரீகத்திற்கும் அரசியல் அறத்திற்கும் புறம்பானதாகும்." என்ற வாதம் கூட அபத்தமானவை.

நேசனை அறிந்த அனைவருக்கும் தெரியும், அவர் வேலையால் ஒரு இடத்துக்கு வரும் போது அவரின் வேலை உடையுடன் வேலைக்குத் தேவையான ஆயுதங்கள் அடங்கிய இடுப்புப் பட்டியுடன் தான் வருவதை காணமுடியும். அண்மையில் எமது தோழர் ஒருவரை கனடா விமான நிலையத்தில் அவர் வரவேற்ற போது, இதே மாதிரியான நிலையில் தான் அவரை சந்தித்தார். அதற்காக விமான நிலையத்தை தாக்க வந்ததாக கூறமுடியுமா?

தேடகம் இப்படித்தான் இன்று அனைத்தையும் இட்டுக்கட்டுகின்றது என்பதை இது மிக அழகாக எடுத்துக்காட்டுகின்றது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
13.09.2012