இன்று புரட்சிகர சக்திகள் யார்? இன்று புரட்சிகர சக்திகளை வேறுபடுத்துவது எது? இதற்கு அனைவரும் இன்று விடை காணவேண்டும். இதில் நான் யார் என்பதற்கு நடைமுறையில் பதிலளிக்கவேண்டும். இந்த வகையில் எம்மை மட்டுமல்ல, எம்மைச் சுற்றிய அனைத்தையும் மீள் பரிசோதனைக்கு உள்ளாக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தவேண்டும்.

இன்று யார் சுரண்டப்படும் மக்களைச் (வர்க்கத்தை) சார்ந்து நிற்கவில்லையோ, யார் மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைப் போராட்டத்துடன் இணைந்து போராடவில்லையோ, அவர்கள் அனைவரும் மக்களின் எதிரிகள்!

யார் இன்று வர்க்க அரசியலை ஏற்கவில்லையோ, யார் வர்க்க நடைமுறையை சார்ந்த செயற்பாட்டை மறுக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களை ஏமாற்றுகின்ற முதல்தரமான எதிரிகள். அரசு போன்று, மக்களை தம் அறிவு மேலாண்மை மூலம் ஏமாற்றி வாழ்கின்ற பொறுக்கிகள். ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தப்பபட வேண்டியவர்கள்.

தம்மை மக்களின் வாழ்வியல் நடைமுறையுடன் இணைத்துக்கொண்ட அரசியல் - இலக்கியம் தான், உண்மையானதும் நேர்மையானதுமாகும். இதை அனைத்துப புரட்சிகர சக்திகளும் தங்கள் வாழ்வியல் நடைமுறையாக கொள்வதும், இதை முன்னெடுக்காதவர்களை அம்பலப்படுத்தி போராடுவதுமே புரட்சிகர அரசியல் நடைமுறையாகும்.

இந்த அரசியல் நடைமுறைக்கு வெளியில் தமக்குள் தாம் விவாதிப்பதற்காக, கலந்துரையாடுவதற்காக … தண்ணி அடித்து கும்மி அடிப்பதற்காக, வலது இடதற்ற, நண்பன் எதிரியற்ற பொதுத்தளத்தில் எதற்காகத்தான் இவர்கள் கூடுகின்றனர்? அங்கு இலக்கியம் அரசியல் என்று எதைத்தான் இவர்கள் வம்பளக்கின்றனர்? இப்படி கூடுகின்றவர்கள் மக்கள் போராடுகின்ற இடங்களில் ஏன் ஒன்று கூடுவதுமில்லை? ஏன் அதில் இவர்கள் கலந்து கொள்வதில்லை?

இப்படி நாம் கேட்பதன் மூலம், இவர்களின் இந்த மோசடியை புரிந்துகொள்ள முடியும். இதை புரிந்து கொள்வது மட்டுமல்ல, இதை அம்பலப்படுத்திப் போராடவும் வேண்டும்.

புலிகள் இருந்த வரை புலியைக் கூறியே நடைமுறையில் இருந்து விலகியவர்கள், இன்று அரசைக் கூறிக்கொண்டு நடைமுறையில் இருந்து விலகி வாழ்கின்றனர். இப்படி நடைமுறையில் விலகி இருப்பதற்காக விவாதங்கள், கோட்பாடுகள், தத்துவங்களை முன்வைக்கின்றனர். ஏதோ இவை எல்லாம் மக்களுக்காக என்ற பாவனையில், காலகாலமாக குத்தி முனகுபவர்கள்.

இந்த வேசத்துக்கு அப்பாலான எதார்த்தத்தில், மக்கள் தன்னியல்பாகவும் திட்டமிட்டும் போராடுகின்றனர். இது இன்று இலங்கையில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. ஆனால் இவர்கள் அங்கு பங்குபற்றுவது கிடையாது. ஏன் அதைக் கண்டு கொள்வதே கிடையாது. ஏதோ கொம்பு முளைத்த பன்றிகள் போல் உறுமிக்கொண்டு, குத்திகிழிக்க போவதாக பாவனை செய்தபடி அறைக்குள்ளும், மொழிக்குள்ளும் சரணடைகின்றனர்.

அப்படியாயின் இவர்கள் யார்? மக்களை ஏமாற்றுகின்ற மாபெரும் அறிவு சர்ர்ந்த மோசடிக்காரர்கள். மக்களின் நண்பனாக காட்டி நடிக்கின்ற மக்களின் முதல்தரமான மூடிமறைத்த எதிரிகள்.

இவர்கள் பேசுவது, சொல்வது என்ன? மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டத்தை சிதைத்தல்தான். இதற்காக விவாதங்கள், கோட்பாடுகள், தத்துவங்களை உற்பத்தி செய்யும் மறைமுகமான எதிரிகள். எதிரியின் ஆயுதத்துக்குப பதில், கோட்பாட்டு ஆயுதத்தைக் கொண்டு மக்களை ஒடுக்குகின்றவர்கள்;

இவர்களை ஒன்றிணைப்பது எது? தங்களுக்கு தாங்கள் முதுகு சொறிந்து, தம்மைத்தாம் முன்னிறுத்தும் பிரமுகத்தனமும், பிழைப்புவாதமும் தான். மக்களின் நடைமுறையில் இருந்து விலகிய லும்பன்கள்.

மக்களோ தாம் வாழ்வதற்காக போராடுகின்றனர். இன்று இலங்கையில் பலமுனையில், பல தரப்புகள் அன்றாடம் போராடுகின்றனர். ஆனால் அங்கு இவர்களைக் காணமுடியாது. ஆனால் கூட்ட அறைகளுக்குள்ளும், மொழிக்குள்ளும் தான் காணமுடியும். மக்கள் போராடும் இடங்களில் புதிதாக பல முன்னணியாளர்கள் தலைமை தாங்குகின்ற, போராட்டத்தை முன்னெடுத்து செல்லுகின்ற உண்மை இன்று பளிச்சென்று எங்கும் வெளிப்படத்தொடங்கி இருக்கின்றது. இதற்கு எதிராக அறைக்குள்ளும், மொழிக்குள்ளும் இயங்குவதன் மூலம் தான், தங்களை பிரமுகர் கூட்டமாக தக்கவைக்கும் எதிர்ப ;போராட்டத்தை நடத்துகின்றனர்.

இன்று அங்குமிங்குமாக நடக்கும் போராட்டத்தை தவறானது என்று கூறுகின்றவர்கள், அதை சரியாக வழி நடத்த சொந்த நடைமுறை அவசியம். இதற்கு அப்பால் குறைந்தபட்சம் இந்த போராட்டங்களில் பங்குபற்றுவது அவசியம். முதுகுசொறிவதற்காக எந்த அரசியல் வேறுபாடுமின்றி கூடுபவர்கள், நடக்கும் போராட்டங்களில் கூடுவதில்லை பங்கு பெறுவதுமில்லை. நடக்கும் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விடுபவர்கள், குறித்த சூழலைக் குற்றஞ்சாட்டி அதைப்பற்றி வம்பளப்பதன் மூலம் அறிவு சார்ந்த பிழைப்புவாதிகளாக தம்மை தக்கவைக்க முனைகின்றனர்.

இப்படி இலங்கையில் எத்தனை விதமான பிரமுகர்கள். புலத்திலும் தான். இதில் எத்தனை பேர், இன்று நடக்கும் போராட்டங்களில் பங்கு கொள்கின்றனர். இங்கு போராட்டத்தில் ஈடுபடுவதில் உள்ள புறநிலை தடைகளை விட, அகநிலைத் தடைகள் தான் இவர்களின் கோட்பாடாக நடைமுறையாக இயங்குகின்றது.

மக்களை தம் அறிவு மூலம் ஏமாற்றுகின்ற, திசை திருப்புகின்ற வக்கிரம் தான், இலங்கையில் அரசியல் - இலக்கிய விவாதமாக இன்று தொடர்ந்து நடக்கின்றது.

மக்களை பற்றிய உண்மையான அக்கறை உள்ள ஒவ்வொருவரும், அந்த உண்மைக்காக தங்களை அர்ப்பணிக்கவேண்டும். மக்களைச் சொல்லி பிழைத்துக் கொள்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களை மௌனமாக அங்கீகரிக்கவும் பார்த்துக்கொண்டும் இருக்கவும் முடியாது.

இன்று யார் எல்லாம் சுரண்டப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லையோ, யார் மக்களின் நடைமுறையுடன், நடைமுறை போராட்டங்களுடன் தம்மை இணைக்கவில்லையோ, அவர்களை நாம் எதிர்நிலையில் பிரகடனப்படுத்தி போராட வேண்டும். அவர்கள் பேசும் இலக்கியமும் அரசியலும் மோசடியானது, மக்களுக்கானதல்ல. இந்த வகையில் இன்று இதை இனம் காட்டி அம்பலப்படுத்திப் போராட வேண்டும். இந்த வகையில் புரட்சிகர சக்திகள் தம்மை, இந்த அரசியல்-இலக்கிய பிரமுகர்களில் இருந்து வேறுபடுத்தி விலகவேண்டும். தங்கள் புரட்சிகர தன்மையை, சொந்த நடைமுறை மூலம் வேறுபடுத்தி நிற்கவேண்டும். இதைத்தான் இன்றைய சமூக எதார்த்தம் கோருகின்றது.

பி.இரயாகரன்

19.08.2012