Language Selection

புதிய ஜனநாயகம் 2012

முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

மிகவும் கறாரான தீர்ப்பாக ஊடகங்கள் இதனைச் சித்தரித்த போதிலும், இத்தீர்ப்பு நடந்துள்ள ஊழலைப் பற்றியதல்ல. உரிமங்கள் வழங்கும் முறையில் சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மட்டுமே இத்தீர்ப்பு குறிப்பிடுகிறது. மற்றபடி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா முதல் அதிகாரிகள் வரையிலான பலரின் குற்றத்தையும், குற்றவாளியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டுமா என்பதையும் முடிவு செய்யவேண்டியது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்தான் என்று கூறியிருக்கும் இத்தீர்ப்பு, நடந்துள்ள முறைகேட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்திருக்கிறது.

சிறப்பு நீதிமன்றமும், “ப.சிதம்பரத்துக்கு இக்குற்றத்தில் தொடர்பில்லை” என்று கூறியிருப்பதுடன், “2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-இலும் அலைக்கற்றைகளை விற்பனை செய்தது, 2008-இல் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்க அனுமதித்தது ஆகிய இரண்டு முடிவுகளில் மட்டுமே சிதம்பரத்துக்குத் தொடர்பிருக்கிறது என்றும், இவ்விரு செயல்களும் தம்மளவிலேயே குற்றங்கள் ஆகாது” என்றும் கூறியிருக்கிறது.

தன்னுடைய அரசு வழங்கிய 122 உரிமங்களை முறைகேடானவை என்று கூறி ரத்து செய்திருக்கும் நிலையிலும், தன்னை விடுவித்துவிட்ட ஒரே காரணத்தினால் சிறிதும் வெட்கமில்லாமல் இத்தீர்ப்பை வரவேற்றிருக்கிறது பிரதமர் அலுவலகம். “அலைக்கற்றை விற்பனையால் ஒரு பைசாகூட நட்டம் ஏற்படவில்லை” என்று நேற்று வரை கூறிவந்த அமைச்சர் கபில்சிபல், அரசின் முடிவுக்குக் கட்டுப்படாமல் ஆ.ராசா ஊழல் செய்துவிட்டதைப் போல, தீர்ப்புக்குப் பின்னர் இன்று திரித்துப் பேசுகிறார்.

பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ இந்த ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போலவும், ஆ.ராசா போன்ற நாலாந்தர ஊழல் அரசியல்வாதிகளால் இந்த மேன்மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதைப் போலவும் ஒரு சித்திரத்தை காங்கிரசு மட்டுமின்றி, எதிர்க்கட்சிகள், ஊடகங்களுடன், வழக்கு தொடுத்திருக்கும் சுப்பிரமணிய சாமியும் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களும் சேர்ந்து உருவாக்கி வருகின்றனர். இது இமாலயப் பொய்.

பிரதமர், நிதியமைச்சர், தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் ஜூலை 6, 2008-இல் முடிவு எடுக்கப்பட்டதாக நிதித்துறை செயலரின் குறிப்பு கூறுகிறது. 2008-லேயே ஊழல் புகார் எழுந்த பின்னரும் 2009-இல் ஆ.ராசா அமைச்சராக்கப்படுகிறார். அவர் அமைச்சராக்கப்பட்டதில் டாடாவின் பாத்திரம் பற்றி ராடியா டேப் கூறுகிறது.  2008-இல் புகார் எழுப்பியவர்கள் போட்டி நிறுவனங்களே என்றும் 2009 மே மாதத்தில் ராசாவை அமைச்சராக்க வேண்டாம் என்று தான் கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் பிப். 2010 தொலைக்காட்சிப் பேட்டியில் மன்மோகன் சிங் கூறுகிறார். கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரும் ராசாவின் முடிவில் தவறில்லை என்றே கபில்சிபல் பேசி வந்திருக்கிறார்.

டாடா டோகோமோ, எடிலசாட் டிபி போன்ற நிறுவனங்கள் தமது பங்குகளை விற்றுக் கொள்ளை இலாபம் பார்ப்பதற்கு மைய அரசின் அந்நிய முதலீட்டு கமிசன் அன்று அனுமதி தந்துள்ளது. இன்று உச்ச நீதிமன்றம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள அந்த பங்கு விற்பனை நடவடிக்கையை  நியாயமானது என்று சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பேசியிருக்கின்றனர். பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட அரசு வங்கிகள், இன்று உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு 26,000 கோடி ரூபாய் கடனாகக் கொடுத்துவிட்டு விழிபிதுங்கி நிற்கின்றன. இவ்வளவு உண்மைகளையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு ராசாவும், தி.மு.க.வும், சில அதிகாரிகளும், சில முதலாளிகளும் மட்டும்  இந்த ஊழலில் ஈடுபட்டதைப் போலக் காட்டிப் பலிகடா ஆக்குவதில் காங்கிரசு, பாரதிய ஜனதா, சு.சாமி, ஊடகங்கள், நீதிமன்றம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

பொதுச்சொத்துகளைத் தனியாருக்குத் தரும்போது, முதலில் வருவோர்க்கு முதலில் என்ற வழிமுறையைப் பின்பற்றக் கூடாது என்றும், அது சிலரது கொள்ளைக்குப் பயன்படுவது தவிர்க்கவியலாதது என்பதால், அது சமத்துவம் மற்றும் நீதியான நடைமுறைக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது என்றும் தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. ஆனால், முதலில் வருபவர்க்கு முதலில் என்ற பெயரில் 2001 இல் அருண் ஷோரி வகுத்த இந்த அடிமாட்டு விலைக் கோட்பாட்டின்படிதான் 95% அலைக்கற்றைகளை ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, வோடஃபோன் உள்ளிட்ட  நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றனர் என்றபோதிலும், இவர்களது உரிமங்களை ரத்து செய்ய மறுத்து, இவர்களுக்கு எதிராக யாரும் வழக்குப் போடவில்லை என்று சப்பை கட்டுகிறது.

2  ஜி அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து, ஆன்டிரிக்ஸ்தேவாஸ் அலைக்கற்றை ஊழல் அம்பலமானதும், உடனே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அரசு அறிவித்துவிட்டது. தற்போது  இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 4 விஞ்ஞானிகளைக் கருப்புப் பட்டியலில் வைப்பதாகக் கூறி, அவர்களைப் பலிகடா ஆக்க முயன்றது மத்திய அரசு. மத்திய அமைச்சரவைச் செயலர், பிரதமரின் தலைமைச் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், விண்வெளித்துறையின் கூடுதல் செயலர் உள்ளிட்டோர் அடங்கிய விண்வெளி கமிசனும், தற்போதைய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற ஆன்டிரிக்ஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவும்தான் தேவாஸ் உள்ளிட்ட பல நூறு ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளன என்றும், எதுவும் எப்போதும் ஏலம் விடப்பட்டதில்லை என்றும் மாதவன் நாயர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, டாடா ஸ்கை,சன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் டி.டி.எச். சேவைக்கு செயற்கைக் கோள் ஏவும் பணியை இஸ்ரோதான் செய்கிறது என்றும், அவை “தேவாஸைவிடப் பெரிய விவகாரங்கள்” என்ற செய்தியும் இப்போது கசியத் தொடங்கியிருக்கிறது. விண்வெளி அமைச்சகம் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விசயத்தை அமுக்குவதற்காக விஞ்ஞானிகளுடன் சமரசம் பேசத் தயார் என்று பல்டியடித்திருக்கிறது மையஅரசு.

பொதுச்சொத்துகளையும் இயற்கை வளங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும்போது, முதலில் வருபவருக்கு முதலில் என்ற முறையைக் கடைப்பிடிக்க கூடாது என்றும் ஏலமுறையில்தான் நியாயமான போட்டியையும் வெளிப்படைத் தன்மையையும் உத்திரவாதப்படுத்த முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தற்போதைய தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது. பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் மறுகாலனியாக்கக் கொள்கையை ஒப்புக் கொண்டு, அதை நியாயமாகவும் வெளிப்படையாகவும் அமல்படுத்த வழிதேடுவது கேலிக்கூத்து.

தனியார்மயம் என்பது நமது விருப்பத் தேர்வல்ல. அதுவே பன்னாட்டு முதலாளித்துவத்தின் நிர்ப்பந்தம்தான். அந்த நிர்ப்பந்தத்தின் இயல்பிலேயே உள்ள நியாயமற்ற ஆதிக்கத் தன்மையும் சுரண்டல் நோக்கமும்தான், புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் இரகசியமாக்கி, ஊழலை அவற்றின் உடன்பிறப்பாக்கியுள்ளது. மறைக்கமுடியாத அளவுக்கு ஊழல் அம்பலப்பட்டு நாறும்போது ஆ.ராசா, கல்மாடி போன்ற சிலரையும், சில அதிகாரிகளையும் பலிகடாவாக்குவதன் மூலம் இந்த அமைப்பு முறை தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. நீதிபதிகளின் சொல்லிக்கொள்ளப்படும் நேர்மையும்கூட இந்த நோக்கத்துக்குத்தான் பயன்படுகிறது.

_______________________________________________

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012