Language Selection

புதிய ஜனநாயகம் 2012

வேரோடு சரிந்து கிடக்கும் மரங்கள், கற்குவியலாகச் சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள், நொறுங்கிக் கிடக்கும் படகுகள், பெயர்ந்து கிடக்கும் சாலைகள், உப்புநீரில் பாழ்பட்டுக் கிடக்கும் விளைநிலங்கள், விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் எனப் போர் நடந்த பூமியைப் போல் காட்சியளிக்கின்றன தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள். கடந்த டிசம்பர் இறுதியில் 136 கி.மீ. வேகத்தில் தாக்கிய “தானே” புயலால் உணவு, உடை, குடிநீர், சாலை வசதி, மின்சாரம், படகுகள், மரங்கள்,  விளைநிலங்கள் என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, எதற்கும் வழியின்றி ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பரிதவிக்கின்றனர். உயிருக்கு மோசமான பாதிப்பை சுனாமி ஏற்படுத்தியது என்றால், வாழ்வைப் பல தலைமுறைகளுக்குப் பின்னுக்குத் தள்ளி, அதைவிட மோசமான பேரழிவை தானே புயல் ஏற்படுத்தியுள்ளது.

“தானே” புயல் மழையினால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4 இலட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 2.24 ஹெக்டேர் நிலங்கள் பாழாகியுள்ளன. 45,000 மின்கம்பங்களும் 4,500 மின்மாற்றிகளும் சாய்ந்துவிட்டன. செல்போன் கோபுரங்கள் விழுந்து கிடக்கின்றன. 30,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த முந்திரித் தோப்புகளில் 95 சதவீத மரங்கள் புயலில் சாய்ந்துவிட்டன. 811 ஹெக்டேர்  பரப்பளவில் இருந்த பலா விவசாயத்தில் ஏறத்தாழ் 505 ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் முற்றிலும் விழுந்துவிட்டன. 3 இலட்சம் ஏக்கர் நெல், மணிலா, கரும்பு, பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர் வகைகள் நாசமாகியுள்ளன. ஏறத்தாழ 43,000 விவசாயிகள் பல தலைமுறைகளுக்குத் தங்களது வாழ்வாதாரங்களை இழந்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் தாண்டவராயன் சோழகன் பேட்டை முதல் நல்லவாடு வரை 48 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் உள்ளனர். “தானே” புயலால் மீனவர்களின் 82 விசைப்படகுகள், 270 கண்ணாடி இழைப் படகுகள், 729 கட்டுமரங்கள் சேதமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், சேதத்தின் அளவு  இதை விட அதிகமானது. மொத்தத்தில் இக்கடும் புயலால் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் ரூ.10,000 கோடிக்கும் மேலாக சேதமாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. கடலூர் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டைப் பகுதிகளில் பல்வேறு சிறுதொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். குழந்தைகளுக்குப் பள்ளி இல்லை, நோயாளிகளுக்கு மருத்துவமனை இல்லை, விவசாயிகளுக்கு விளைநிலமில்லை, மீனவர்களுக்குப் படகில்லை. யாருக்கும் எதுவுமில்லை என்பதே கடலூரின் இன்றைய நிலை.

சுனாமி ஏற்படுத்திய பேரழிவைவிடக் கோரமான பாதிப்பு

இப்பேரழிவு ஏற்பட்டு ஒருவார காலத்துக்குப் பின்னர்தான் அந்தப் பகுதிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பார்வையிடச் சென்றார். மக்கள் மீது தனக்குக் கரிசனம் உள்ளதாகக் கணக்குக் காட்ட, கடலூரில் ஒரேயொரு இடத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்த இடத்தில் அற்பமான நிவாரண உதவிகளைக் கொடுத்துவிட்டு, உடனே ஹெலிகாப்டரில் பறந்துவிட்டார்.

அரசு ஒதுக்கியுள்ள புயல் நிவாரணத் தொகை ரூ.700 கோடிதான். இதை வைத்துக் கொண்டு ஒரு வட்டத்திலுள்ள கிராமங்களுக்குக்கூட நிவாரண உதவியையோ, மறு சீரமைப்பையோ செய்யவே முடியாது. முந்திரி போன்றவற்றை பணப்பயிர் என அரசாங்கம் வகைப்படுத்தியிருப்பதால், வசதியாக தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. ஒரு ஹெக்டேர் வாழைக்கு ரூ.7500/ ம், முந்திரிக்கு ரூ.9000/ மும் நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு சாய்ந்து கிடக்கும் மரங்களைக்கூட அகற்ற முடியாது. புயலால் வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றினால்தான் புதிய கன்றுகளை நட முடியும் என்றுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல்,  இலவச மரக்கன்றுகள், பயிர்களுக்கான ஓராண்டு இலவசப் பராமரிப்பு முதலானவற்றைக் கோமாளித்தனமாக அறிவித்துள்ளது, ஜெயலலிதா அரசு.

வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றுவது ஏழை விவசாயிகளுக்குப் பெரும் சுமை. 5,6 பேரை வேலைக்கு அமர்த்தினால்தான் ஒரு மரத்தை வெட்டி அப்புறப்படுத்த முடியும். ஒரு நபருக்குத் தினக்கூலியாக ரூ. 300/ தர வேண்டியுள்ளது. ஆனால், மரத்துக்கான விலையோ ஒரு டன்னுக்கு  ரூ.500 கூட கிடைப்பதில்லை. பலா, முந்திரி மரக்கன்றுகளை நட்டு, அது வளர்ந்து மகசூலைத் தர ஏறத்தாழ 10,15 ஆண்டுகளாகும். வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கே விவசாயிகள் தங்கள் சொத்தை விற்றால்தான் சாத்தியம் என்ற நிலைமைதான் உள்ளது. இதைச் சாதகமாக்கிக் கொண்டு அழிந்துவிட்ட முந்திரிக் காடுகளை ரியல் எஸ்டேடுகளாக மாற்றி, அவற்றைக் கைப்பற்ற நிலமுதலைகள் அலைகிறார்கள். இதனால் முந்திரித் தோப்பைச் சார்ந்துள்ள உழைக்கும் மக்கள் தங்கள் ஒட்டுமொத்த நிலத்தையும் பறிகொடுத்துவிட்டு ஊரைவிட்டு பிழைப்புக்காக அலைய வேண்டிய அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். முந்திரி விவசாயத்தைச் சார்ந்துள்ள விவசாயிகள் மட்டுமின்றி, அதன் பழங்கள், கொட்டைகளைக் களைதல், பருப்பு உடைத்தல், முந்திரி எண்ணெய் எடுத்தல் முதலான பல தொழில்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது.

சேதமடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அரசின் அறிவிப்பு, பின்னர் பச்சை வண்ண குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. “கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் 48,240 என்றும், ஆனால், 50 ஆயிரம் பேருக்கு மேல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசுத் துறைகளிடேயே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளதாகவும், இடைத்தரகர்கள் மக்களை மோசடி செய்வதாகவும், இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி இலஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால்தான் அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்” என்றும் ஜெயலலிதா ஆதரவு நாளேடான தினமணியே (25.12.2012) எழுதுகிறது.  உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளிப்பதுதான் புயல் நிவாரணப் பட்டியலாகி விட்டது என்றும் அரசு வழங்கிய அற்ப நிவாரணம் அ.தி.மு.க.  நிவாரணமாக மாறிவிட்டது என்றும் ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அரசின் அலட்சியத்தை எதிர்த்தும் மறுவாழ்வுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும் வாழ்விழந்த விவசாயிகள் விருத்தாசலத்தில் நடத்திய பேரணி

அரசு அறிவித்த நிவாரணம் கூட முறையாகக் கிடைக்காத நிலையில் கடலூர், பண்ருட்டி வட்டார  கிராமங்களில் பொங்கல் விழாவைப் புறக்கணித்துக் கருப்புக் கொடியேற்றி, மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சேதமடைந்த அனைத்துப் படகுகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ளதைப் போல உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரும் கடலூர் வட்டார மீனவர்கள், அதுவரை கடலுக்குச் செல்ல மாட்டோம் என்று போராடினர். புதுச்சேரி மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லாமல், கடலூர் மீனவர்களுக்கு ஆதரவாகப் போராடினர்.  மீனவர்கள் கோருவது போல நிவாரணம் வழங்க அரசாணையில் இடமில்லை என்றும், கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிப்பதாகவும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய துணை ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், அரசை நம்பிப் பலனில்லை என்று வேறுவழியின்றி இப்போது வேதனையுடன் மீனவர்கள் தமது பிழைப்பைத் தொடர்கின்றனர்.

நாட்டு முன்னேற்றம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வாரியிறைக்கும் அரசு, கோடிக்கணக்கான மக்கள் வாழ்விழந்து நிற்கும் போது அற்ப நிவாரணத்துடன் தனது கடமை முடிந்ததாகக் கருதுகிறது. சாமானிய மக்களின் அடிப்படை வசதிகளை அறவே புறக்கணித்துவரும் அரசு, மறுபுறம் உள்நாட்டு  வெளிநாட்டு பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் சலுகைகளையும் மானியங்களையும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2008-09 ஆம் ஆண்டில் இந்தத் தொகை ரூ.4.2 இலட்சம் கோடியாகவும், 2009-10ஆம் ஆண்டில் 4.37 இலட்சம் கோடியாகவும் இருந்தது. கடந்த 2011, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் இது 4.6 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் அளிக்கப்படும் மானியங்கள் அடுத்தடுத்து குறைந்து கொண்டே வருகின்றன. கடந்த நிதியாண்டில் ரூ. 1.54 இலட்சம் கோடியாக இருந்த மானியங்கள் 2011-12ஆம் ஆண்டில் 1.44 இலட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளைச் சீரமைக்க இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடியைக் கொடுத்துவிட்டு, மத்தியக் குழுவை ஆய்வுக்கு அனுப்பியது மைய அரசு. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை மதிப்பீடு செய்யச் சென்ற அதிகாரிகள் குழுவிலிருந்த வடநாட்டு அதிகாரி ஒருவர், “முந்திரின்னா கிழங்கா?” என்று அறிவுபூர்வமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். புயலால் சுமார் ரூ.5800 கோடி அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதியை மைய அரசு அளிக்க வேண்டும் என்றும் மத்தியக் குழுவிடம் தலைமைச் செயலர் அறிக்கை கொடுத்துள்ளார்.  ஆனாலும் இன்றுவரை கூடுதல் நிதி ஒதுக்க மைய அரசு முன்வரவில்லை.

சுனாமி தாக்கிய மறு ஆண்டில் பேரிடர் மேலாண்மை ஆணையம்  மைய அரசால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டங்கள் தோறும் இந்த ஆணையம் செயல்பட வேண்டும். ஆனால் தமிழக அரசு, இதுவரை தனியாக ஒரு ஆணையத்தைக் கூட உருவாக்கவில்லை. மாறாக, பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் துடைப்புத் துறை என்ற பெயரில் வருவாய்த்துறையின் கீழ் இயக்கி வருகிறது. சுனாமி தாக்கி ஏழாண்டுகளுக்குப் பின்னர், தானே புயல் தாக்கியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் பேரிடரை எதிர்கொள்ள எந்தத் தயாரிப்பும் இல்லை. பேரிடர் தடுப்பு ஒருபுறமிருக்கட்டும், மிக அவசியமான அடிப்படைப் பணியான குப்பைகளை அகற்றுவது முதலான துப்புரவுப் பணிகள்கூட ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரிலேயே மாதக்கணக்கில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோலக் குவிந்து கிடக்கின்றன. சாதாரண மழைக்கே சாலைகள் சிதைந்து கிடப்பதோடு, மழைநீர் பல பகுதிகளில் கழிவு நீருடன் கலந்து நோயைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. தலைநகரிலேயே இந்த நிலைமை என்றால், கிராமப்புறப் பகுதிகளை அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கும்  என்பதைச் சொல்லத் தேவையில்லை.

புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குக் கருணை அடிப்படையில் அற்ப நிவாரணம் அளிப்பது என்கிற கோணத்தில்தான் ஓட்டுக் கட்சிகளும் ஆட்சியாளர்களும் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள். அதனால்தான், ஒரே மாதத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளைச் செய்து உலகச் சாதனை படைத்துள்ளதாகச் சட்டமன்றத்திலேயே பெருமைப்பட்டுக் கொள்கிறார், ஜெயலலிதா. பாதிக்கப்பட்டுள்ள மக்களும் பேச்சுரிமை, எழுத்துரிமை போல மறுவாழ்வுரிமை என்பது தமது அடிப்படை உரிமை என்ற கோணத்தில் பார்க்காமல், கூடுதல் நிவாரணம் என்கிற கோணத்தில்தான் அணுகுகின்றனர். ஆனால், நடந்திருப்பது பேரழிவு. புயலால் வாழ்விழந்து நிற்கும் மக்களின் தேவை அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு. கருணையினாலோ, அற்ப நிவாரணங்களாலோ அதை ஒருக்காலும் மீட்டெடுக்க முடியாது. வாழ்விழந்து நிற்கும் மக்களின் குமுறலை எதிரொலிக்கும் வண்ணம் புரட்சிகர  ஜனநாயக இயக்கங்கள்  மறுவாழ்வுக்கான போராட்டங்களைக் கட்டியமைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் உண்மையான நிவாரணப்பணியாக, அரசியல் பணியாக இருக்க முடியும்.

_______________________________________________

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012