Language Selection

புதிய ஜனநாயகம் 2012

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது உடன்பிறவா சகோதரியும் அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் அதிகாரிகளைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

சசிகலா கும்பல் போயசு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என்று சித்தரிக்கும் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இதற்கு ஜெயலலிதா மக்களிடம் விளக்கம் தர வேண்டும் என்று கோருகிறார். திருவாளர் ராமகிருஷ்ணன் சித்தரிப்பது போல, இது அ.தி.மு.க.வின் அற்பமான உட்கட்சி விவகாரமல்ல. இது ஆட்சியதிகாரம் சம்பந்தப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பாகத் தனது பினாமி கும்பலைக் கொண்டு அரசு எந்திரத்தை ஜெயலலிதா ஆட்டிப்படைத்த விவகாரம்.

கட்சியில் யாரை அமைச்சராக்குவது, யாரை நீக்குவது என்பது மட்டுமின்றி, எந்தெந்த போலீசு மற்றும் அரசு அதிகாரிகளை எங்கே, எந்தத் துறையில் நியமனம் செய்வது, இடமாற்றம்  செய்வது  என அனைத்தையும் செயல்படுத்துவது வரை, ஜெயலலிதாவின் கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாக அவரது பினாமியாக சசிகலா கும்பல் இயங்கி வந்தது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமாக, யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத அதிகாரமாக இருந்த ஜெயாவின் பினாமியான இந்த கும்பலே ஆட்சியை நடந்தி வந்தது.

ஆடம்பர உல்லாச சொகுசு வாழ்க்கையில் ஊறித்திளைக்கும் ஜெயலலிதாவின் பினாமி சசிகலாவும் பினாமியின் எஜமானி ஜெயலலிதாவும்

ஜெயாவுக்காக இக்கும்பலிடம் கப்பம் கட்டி கடாட்சம் பெற்றதால்தான் அமைச்சர்களாகவும் அரசின் முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளாகவும் நியமனம் பெற முடியும். அதிகார போதையிலும், ஆடம்பர உல்லாச சொகுசு வாழ்க்கையிலும், இலஞ்ச  ஊழல், சொத்து சுகத்திலும் மூழ்கிக்கிடந்த ஜெயா, தன்சார்பாக இக்கும்பல் மூலம் நிர்வாகத்தை நடத்தி வந்தார். அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், பெருமுதலாளிகளிடம் பேரம் நடத்துவதும், கோடிகோடியாகக் கொள்ளையடிப்பதும், கொள்ளையடித்த சொத்துக்களை தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஜெயாவின் பினாமி சொத்தாகப் பதுக்கிவைப்பதுமாக அனைத்தையும் சசிகலா கும்பல்தான் கவனித்துக் கொண்டது. இத்திருப்பணியின் மூலம் இக்கும்பல் தனது பங்குக்கும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டது.

இவையெல்லாம் ஜெயாவுக்குத் தெரியாமல் நடக்கவில்லை. அனைத்தும் தெரிந்தேதான், அவரது ஒப்புதலுடன்  உத்தரவுப்படிதான் நடந்துள்ளது. “உடன்பிறவா சகோதரி’’, “தியாகி” என்றெல்லாம் புகழ்ந்து சசிகலா கும்பலை வளர்த்துவிட்டதே ஜெயலலிதாதான். பதவியேற்பின்போது சட்டவிரோதமாக சட்டமன்றத்திலேயே துணை அவைத்தலைவர் இருக்கையில் சசிகலாவை அவர் அமர்த்திக் கொண்டார். சசிகலாவை அ.தி.மு.க.வினர்  “சின்னம்மா” என்று அழைக்குமளவுக்கு போயசு தோட்ட மாளிகையில் மட்டுமின்றி, கட்சிக் கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரத்திலும், மகாமகத்தில் குளிக்கும்போதும் அவர் சசிகலாவை அருகிலேயே வைத்துக் கொண்டு அவருக்கு உயர் அதிகார முக்கியத்துவம் அளித்தார். சின்னம்மா சொன்னால் காரியம் நடக்கும், ஜெயலலிதாவின் மறுஅவதாரம்தான் சசிகலா என்பதாகியது. தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளை சசிகலா கும்பலைச் சேர்ந்த ராவணன், ராமச்சந்திரன் முதலானோர்தான் நடத்தினர். இறுதியில், உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தமாகும்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குப் பூங்கொத்து கொடுப்பதுபோல ஜெயா போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்தார்.

நேற்றுவரை கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடி பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பன ஊடகங்கள் இப்போது சசிகலா கும்பலை ஜெயா வெளியேற்றியதும், இதுநாள்வரை ஜெயா ஆட்சியில் மன்னார்குடி மாஃபியா எனப்படும் சசி குடும்பத்தின் நிர்வாகத் தலையீடு இருந்ததாக எழுதுகின்றன. அவ்வாறு தலையீடு செய்ய அதிகாரமளித்தது யார்? யார் அந்தக் கும்பலை ஊட்டி வளர்த்தார்கள்? எப்படி இந்தக் கும்பலால் ஆட்டம் போட முடிந்தது? என்ற விவகாரத்திற்குள் இவை நுழைவதில்லை. இந்த பினாமி கும்பலின் எஜமானிதான் ஜெயா. இப்படி, தானே சட்டத்துக்குப் புறம்பாகத் தனது பினாமியாக சசிகலா கும்பலை வளர்த்துவிட்டு, இப்போது எதுவும் தெரியாதது போல ஜெயலலிதா நாடகமாடுகிறார். இத்தனை காலமும் தனது பினாமி கும்பலைக் கொண்டு ஆட்சியை நடத்திவந்துள்ள ஜெயா, முதல்வர் பதவியில் நீடிக்க அருகதையில்லை என்று இந்த ஊடகங்கள் சாடுவதில்லை. சசிகலா கும்பலை உருவாக்கி வளர்த்துவிட்ட குற்றவாளியான ஜெயாவை எதிர்த்து வாய்திறப்பதுமில்லை.

அதற்கு மாறாக, 25 ஆண்டு காலம் தன்னுடன் இருந்த தோழியைப் பிரிவதால், உணர்வு ரீதியான கொந்தளிப்புகள் இருந்தாலும், அதனைச் சகித்துக் கொண்டு தமிழக மக்களின் நலனையே அவர் முன்னிறுத்திப் பாடுபடுகிறார் என்று ஜெயலலிதாவை மாபெரும் தியாகியைப் போலச் சித்தரிக்கின்றன.  சசிகலா கும்பலின் ஊழலும் கொள்ளையும் பற்றி ஜெயலிலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்றும்,  நம்பிக்கைத் துரோகத்துக்காக சசிகலா கும்பல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும், கோடிகோடியாகக் கொள்ளையடித்து அதை சசிகலா கும்பல் மட்டுமே தூக்கிக் கொண்டு ஓடியது போலவும் கதையளக்கின்றன.  இக்கும்பலை வளர்த்து ஆதாயமடைந்துள்ள முதன்மைக் குற்றவாளியான ஜெயாவை இக்குற்றங்களிலிருந்து விடுவித்து, அவரைப் புனிதமானவராகக் காட்டி ஒளிவட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. பார்ப்பன ஊடகங்கள் சித்தரிப்பது போல, ஜெயாவுடனிருந்து கொண்டு நைச்சியமாக அவருக்குத் தெரியாமல், அவரை ஏமாற்றிவிட்டு இந்தக் கும்பல் ஊழல் கொள்ளையில் ஈடுபடவில்லை. பினாமி என்ற முறையில் ஜெயாவால் நியமிக்கப்பட்டு, அவரது ஆசியுடன் ஒப்பதலுடன்தான் அது ஊழல்  ‘கொள்ளை’   அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது.

கீழ்நிலை ஊழியர்களைக் கொண்டு அரசு அதிகாரிகளும் போலீசு அதிகாரிகளும் இலஞ்ச ஊழலில் ஊறித் திளைப்பதைப் போலத்தான், ஜெயலலிதாவும் தனது பினாமியான சசிகலா கும்பல் மூலம் ஊழல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். பங்கு போடுவதில் பிரச்சினை வரும்போதும் அல்லது அம்பலப்படும்போதும் தான் குற்றவாளி அல்ல என்று கீழ்நிலை ஊழியரை உயரதிகாரிகள் பலிகிடாவாக்குவதைப் போலத்தான், பங்கு போடுவதில் பிரச்சினை வந்ததும், தன்னை அப்பாவியாகக் காட்டிக்கொண்டு, பினாமி பணத்தையும் சொத்தையும் மீட்பதற்காகவும், பழிவாங்கவும் போலீசையும் உளவுத்துறையையும் ஜெயலலிதா ஏவிவிடுகிறார்.

இதுநாள்வரை சசிகலா கும்பல் மூலம் பலன்களைப் பங்கு போட்டுக் கொண்ட ஜெயலலிதா,  சசிகலா கும்பலை வெளியேற்றியதும் இப்போது தன்னையே நீதிபதியாகவும் விசாரணை அதிகாரியாகவும் நியமித்துக் கொண்டு நில அபகரிப்பு, நிதிமோசடி முதலான குற்றங்களில் ஈடுபட்டதாக சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் மீது போலீசை ஏவி நடவடிக்கை எடுக்கக் கிளம்பியுள்ளார். ஆனால், கோடநாடு எஸ்டேட் போன்றவற்றில் ஜெயாவும் சசிலாவும் வெளிப்படையாகவே பங்குதாரர்களாக இருப்பதுபோல,   இத்தகைய எல்லா குற்றங்களிலும் ஜெயாவுக்கும் பங்கு உள்ளது. முன்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீது, ஜெயாவின் போயசுத் தோட்டப் புதையலைக் கைப்பற்றுவதற்காக போதை மருந்து வழக்கு போடப்பட்டதைப் போலவே,  இப்போது இம்மாதிரியான காரியங்களுக்குச்  சட்டவிரோதமாக போலீசும் உளவுத்துறையும் ஜெயாவினால் ஏவிவிடப்படுகிறது.

இப்படி போலீசை சட்டவிரோதமாக ஜெயா பயன்படுத்துவதைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள்  ஏன் கேள்வி எழுப்புவதில்லை? அண்ணா ஹசாரேவின் பின்னால் ஊழலை ஒழிக்க அணிதிரளச் சொல்லும் ‘அறிஞர்’களுக்கும் ஊடகங்களுக்கும், ஜெயாவின் பினாமி அதிகாரமாக இயங்கிய சசிகலா கும்பலும், அக்கும்பலை ஊட்டி வளர்த்து இலஞ்ச ஊழல்அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளி ஜெயாவும்  கண்ணில் படாமல் போனது ஏன்?  இது சட்டவிரோதமானது என்று ஏன் இந்த ‘அறிவாளி’களுக்குத் தெரிவதில்லை?

அதிகாரத் தரகரான நீரா ராடியாவும் தரகுப் பெருமுதலாளி டாடாவும் ஆ.ராசாவைத் தொலைத்தொடர்பு அமைச்சராக்க “லாபி” செய்ததையும், அமைச்சர்களின் நியமனம் மற்றும் அமைச்சரவையின் உருவாக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளும் அதிகாரத் தரகர்களும் நேரடியாகத் தலையிடுவதையும் ராடியா டேப்புகள் அம்பலப்படுத்திக் காட்டின. சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமாக இவர்கள் செயல்பட்டதைச் சாடியும், அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும் என்றும் அப்போது பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.வும் சோவும், அதேபோன்று சட்டத்துக்குப் புறம்பான தனது பினாமி கும்பலை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்திய ஜெயாவைப் பற்றி வாய்திறப்பதில்லை.

பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, ஒருவேளை பதவியிழக்க வேண்டியிருந்தாலோ, அல்லது சிறைக்கு அனுப்பப்பட்டாலோ, ஆட்சியில் நீடிப்பதற்காகத் தனது விசுவாசியும் ஏற்கெனவே வாஜ்பேயி அரசில் சட்ட அமைச்சராக இருந்தவருமான தம்பிதுரையைத் தற்காலிக முதல்வராக்குவது என்கிற திட்டம் ஜெயாவிடம் இருந்தது. மறுபுறம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டால், கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, தமது விசுவாசிகளில் ஒருவரை முதல்வராக்க  சசிகலாவும், அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சதியாலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.

ராஜகுரு ராமஸ்வாமி அய்யரிடம் ஆசி

சு.சாமி, துக்ளக் சோ, மறைந்த முன்னாள் அரசுத் தலைவர் வெங்கட்ராமன் முதலானோரைக் கொண்ட பார்ப்பன கும்பல், சசிகலா கும்பலிடமிருந்து ஜெயாவை மீட்க அக்கும்பலுடன் ஏற்கெனவே நீண்டகாலமாக அதிகாரச் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. சசிகலா கும்பலின் சதியாலோசனை பற்றி உளவுத்துறை மூலம் ஜெயாவின் கவனத்துக்கு வந்ததாலும், மகாமகப் படுகொலை காலத்திலிருந்தே பினாமி அதிகாரத்துக்காக சசிகலா கும்பலுடன் போட்டி போட்டு வந்த பார்ப்பன கும்பல் இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயாவை எச்சரித்ததாலும், சசிகலா கும்பலை ஜெயா வெளியேற்ற வேண்டியதாயிற்று. சசிகலா கும்பலுக்குப் பதிலாக, இப்போது அந்த இடத்துக்கு வந்துள்ள பார்ப்பன கும்பல் வேகமாகக் காய்களை நகர்த்தவும் தொடங்கி விட்டது. தன்னை வெளியிலிருந்து பார்த்து விமர்சிப்பவராகக் காட்டிக் கொள்ளும் சோ, கடந்த ஜனவரி 14 அன்று நடந்த துக்ளக் வார இதழின் 42வது ஆண்டுவிழாக் கூட்டத்துக்கு இந்துவெறி பயங்கரவாத மோடியையும் அத்வானியையும் அழைத்துவந்து ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார்.

சசிகலா நீக்கத்துக்குப் பிறகு, மயக்கத்திலிருந்து ஜெயா தெளிந்துவிட்டார் என்றும்,  கட்சியையும் ஆட்சியையும் புதிய பாதையில் செலுத்த நிர்வாகத்திறன்மிக்க ஜெயலலிதா புறப்பட்டுவிட்டார் என்றும் அதிகாரச் சூதாட்டத்தில் வெற்றி பெற்றுள்ள பார்ப்பன கும்பலின் ஊடகங்கள் ஜெயாவுக்குப் புகழாரம் சூட்டி வருகின்றன. ஆனால், போலீசை ஏவி அச்சுறுத்துவதைத் தவிர, நிர்வாகத் திறனற்ற ஜெயலலிதாவுக்கு இத்தகைய பினாமி கும்பல்களின் கொட்டத்தை கட்டுப்படுத்தவும் தெரியாது; ருசி கண்ட பூனையாக உள்ள இத்தகைய கும்பல்களைக் கட்டுப்படுத்திவிடவும் முடியாது. ஜெயலலிதாவின் பினாமியான சசிகலா கும்பல் மீதும், அப்பினாமி கும்பலைக் கொண்டு ஊழல்கொள்ளையில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் மீதும் பகிரங்கமாக முழுமையான விசாரணை நடத்தி, அக்கும்பல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, உழைக்கும் மக்கள் தமது போராட்டத்தின் மூலம் குற்றவாளியான ஜெயாவைத் தண்டிப்பதுதான், இத்தகைய பினாமி கும்பல்களையும் அதன் மூலம் ஊழல் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபடும் ஆட்சியாளர்களையும் முடமாக்கும்.

_______________________________________________

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012