Language Selection

புதிய ஜனநாயகம் 2012

2007ஆம் ஆண்டில் சப்பிரைம் அடமானக் கடன் நெருக்கடியாக முதலில் அமெரிக்காவில் தொடங்கிய நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத் தாக்கிய பெரும் பின்னடைவாக வளர்ந்தது. பின்னர் இதுவே உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்து, முதலாளித்துவ கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாகத் தீவிரமடைந்துள்ளது.

2011, ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட “கார்டியன்” இதழில், அவ்விதழின் பொருளாதார ஆசிரியரான லேரி எலியட் எழுதிய கட்டுரை, கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி வந்துள்ளதைப் பற்றிய சித்திரத்தைத் தொகுப்பாக வழங்குகிறது. இக்கட்டுரையின் மொழியாக்கம், நெருக்கடியின் பரிமாணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்.

2007ஆம் ஆண்டின் சப் பிரைம் அடமானக் கடன் குமிழி (திருப்பிக் கட்ட உத்தரவாதமில்லாத கடன்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான ஊகபேர சூதாட்டம்) வெடித்ததிலிருந்து இப்போது அமெரிக்காவின் கடன் அந்தஸ்தை கீழிறக்கியுள்ளது வரையிலான நெருக்கடிகள் இத்துடன் முடியப் போவதில்லை.

2007, ஆகஸ்டு 9;  2008, செப்டம்பர் 15;  2009, ஏப்ரல் 2;  2010, மே 9;  2011, ஆகஸ்ட் 5  அமெரிக்காவின் சப் பிரைம் அடமானக் கடன் குமிழி வெடித்ததிலிருந்து தற்போதைய வீழ்ச்சி வரை, மிகவும் கடுமையான நெருக்கடிகளாக ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத்  தாக்கியுள்ளது. முதலாளித்துவத்தின் பெருமந்தக் காலத்திற்குப் பிறகு, உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிய  நிலைமையை மேற்கூறிய நாட்களில் நாம் பார்க்க முடியும்.

2007, ஆகஸ்டு 9-இல் தொடங்கிய முதற்கட்டம், வங்கித்துறை நெருக்கடியில் தொடங்கியது. பிஎன்பி பரிபாஸ் என்ற பிரான்சு நாட்டு வங்கி, தன்னுடைய  இருப்பில் பணம் இல்லாததால், அமெரிக்காவின் அடகுக் கடன் துறையில் செயல்படும் 3 பிரபல வேலியிடப்பட்ட நிதியங்களில் தனது செயல்பாடுகளை முடக்கி வைப்பதாக  அறிவித்தது. பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ளவை என்று கருதப்பட்ட ஏராளமான பந்தய ஒப்பந்தங்களின் மதிப்பு, தாங்கள் எண்ணிக் கொண்டிருந்ததைக் காட்டிலும் மிகவும் குறைவானதே என்ற உண்மை பல வங்கித்துறையினருக்கு இந்தத் தருணத்தில்தான்  தெரிய வந்தது.

எனினும், இதனால் ஏற்பட்ட பேரிழப்பு எவ்வளவு என்றோ, எந்தெந்த வங்கிகளுடைய பணம் இத்தகைய குப்பைப் பத்திரங்களில் சிக்கியிருக்கிறது என்றோ யாராலும் கணிக்க இயலவில்லை. இதன் காரணமாக, வங்கிகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை ஒரே நாளில் தகர்ந்தது. வங்கிகள் தமக்கிடையிலான வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன.

நிதி நெருக்கடி மேலும் முற்றி வெடிப்பதற்கு ஓராண்டு காலம் பிடித்தது. 2008, செப்டம்பர்  15 அன்று முதலீட்டு வங்கியான லேமேன் பிரதர்ஸைத் திவாலாகிப் போவதற்கு அமெரிக்க அரசு அனுமதித்த அன்று அது வெடித்தது. எந்தவொரு வங்கியும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டால், உடனே அரசாங்கங்கள் அவற்றின் இழப்புகளை ஈடுசெய்து கைதூக்கி விடும் (பெயில் அவுட்) என்று ஒரு நம்பிக்கை பொதுவில் நிலவி வந்தது. திவாலாகும் நிலையில் இருந்த அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான பியர் ஸ்டீர்ன்ஸ்ஐ  இன்னொரு தனியார் வங்கி வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாட்டை, அமெரிக்காவின் மத்திய அரசு வங்கியான பெடரல் ரிசர்வ் செய்தது. இதேபோல, சப்பிரைம் கடன் அடமான நெருக்கடியில் சிக்கிய நார்த்தன் ராக் வங்கியை பிரிட்டிஷ் அரசு நாட்டுடமையாக்கியது.

வங்கிகள் எனப்படுபவை “மூழ்கவே முடியாத அளவுக்கு மிகப் பெரியவை” என்ற நம்பிக்கையும் லேமன் பிரதர்ஸ் திவாலானவுடனேயே பொய்யாகி விட்டது. சீட்டுக்கட்டுச் சரிவது போல உலக நிதி அமைப்பே தடதடவெனச் சரிந்து விடக்கூடிய அபாயத்தின் காரணமாக, மேற்கத்திய அரசாங்கங்கள் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி, தங்களது நாட்டின் வங்கிகள் நொறுங்கி விழுவதைத் தடுத்தன. உயிர் போகும் தருணத்தில் வங்கிகள் கைதூக்கி விடப்பட்டு விட்டன. என்றபோதிலும், அதற்குள்ளாகவே உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிவிட்டது.

நுகர்வோரின் நம்பிக்கையும் வர்த்தக உலகின் நம்பிக்கையும் சரிந்து கொண்டிருந்த அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வங்கிக் கடன்கள் நின்று போயின. பரவ இருக்கும் நிதி நெருக்கடியைக் கணக்கில் கொண்டு மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க முடியவில்லை; ஏனென்றால், இந்த நெருக்கடிகள் வருவதற்கு முன்னர்தான், எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பணவீக்கம் பரவாமல் தடுக்கும் பொருட்டு, மத்திய வங்கிகள் அனைத்தும் வட்டி விகிதங்களை உயர்த்தியிருந்தன.

வளர்ச்சியடைந்த நாடுகளும் வளரும் நாடுகளும் கூட்டுச் சேர்ந்து புதிதாக உருவாக்கியுள்ள ஜி20 என்ற அமைப்பு, இந்தப் பொருளாதாரப் பின்னடைவு பெருவீழ்ச்சியாக மாறுவதைத் தடுக்கும் பொருட்டு, 2008 – 09 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. வட்டி விகிதங்கள் தரைமட்டத்துக்குக் குறைக்கப்பட்டன. அரசின் செலவுகள் அதிகரிக்கப்பட்டு, சிறிதும் பெரிதுமான ஊக்கப் பொதிகள் அறிவிக்கப்பட்டன. நோட்டு அடித்துப் புழக்கத்தில்விடாமல், இணையத்தின் மூலம் மின்னணுப் பணத்தின் புழக்கம் கூட்டப்பட்டது.

2009  ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாளன்று  இலண்டனில் நடந்த ஜி20 அமைப்பின் மாநாட்டில், 5 இலட்சம் கோடி டாலர் அளவுக்கு அரசுச் செலவின அதிகரிப்பு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும், அனைத்துலக நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) மற்றும் பிற அனைத்துலக நிதி அமைப்புகளுக்கும் 110 ஆயிரம் கோடி டாலர் கொடுத்து, வேலைவாய்ப்பையும் வளர்ச்சியையும் பெருக்குவதென்றும், வங்கிகளைச் சீர்திருத்துவதென்றும்  இந்த நாடுகளின் தலைவர்கள் உறுதியேற்றனர். இந்தத் திசையில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே, சர்வதேச ஒத்துழைப்பு சீர்குலையத் தொடங்கியது. நாடுகள் தத்தம் சொந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கி விட்டன.

2010, மே 9 ஆம் நாள் அன்று உலகத்தின் கவனமும் கவலையும் தனியார் துறையிலிருந்து அரசுத் துறையை நோக்கித் திரும்பின. சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் கிரீஸ் நாட்டுக்கு நிதியுதவி செய்யப் போவதாக அறிவித்தன. வங்கிகள் திவாலாகாமல் தடுப்பது என்பதிலிருந்து, அரசாங்கங்கள் திவாலாகாமல் தடுப்பது என்பதாகப் பிரச்சினை மாறியது. வரி வருவாய் குறைவு மற்றும் மக்கள் நலத் திட்டச் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மட்டுமின்றி, 2008-09 குளிர்காலத்தில் அறிவிக்கப்பட்ட நிதித்துறை சலுகைகள் காரணமாகவும் பொருளாதாரப் பின்னடைவுக் காலத்திலான கிரீஸ் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை ஊதிப் பெருத்தது.

தனது நிதி நெருக்கடியை மூடி மறைத்ததன் காரணமாகவும், வரி வசூல் செய்ய முடியாத சிக்கல்களாலும் கிரீஸ் நாட்டு அரசு விசேடமான பிரச்சினைகளை எதிர்கொண்டது. மற்ற நாடுகளோ தங்கள் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்டு பீதியடைந்தன. சிக்கன சீரமைப்பு என்பது புதிய முழக்கமாகியது. இது பிரிட்டன், ஐரோப்பிய வட்டார நாடுகளை மட்டுமின்றி, வெகு நீண்டகாலமாக பட்ஜெட் பற்றாக்குறை என்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் கொள்கை முடிவுகள் மீதும் இந்தச் சிக்கன சீரமைப்புக் கொள்கை தாக்கம் செலுத்தத் தொடங்கியது.

தனியார் (முதலாளித்துவத்தின்) கடன் நெருக்கடி ஒரு நாட்டின் கடன் நெருக்கடியாக உருமாறும் நிகழ்ச்சிப் போக்கு கடந்த 2011, ஆகஸ்ட் 5  வெள்ளிக்கிழமையன்று முழுமையடைந்தது. வார இறுதி நாளன்று, வால் ஸ்டிரீட்டின் வர்த்தக நிறுவனங்கள் கடையை மூடும் வரைக் காத்திருந்த ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனம், அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றலை, “ஏஏஏ” என்ற மிக உயர் தரத்தில் இனிமேலும் வைக்க இயலாது என்று அறிவித்தது.

இந்த அறிவப்பு வெளிவந்த தருணம் மிக மோசமானது. 2008இன் இறுதிக் காலத்துக்குப் பின், கடந்த வாரம்தான் பங்குச் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. மென்மேலும் மந்தத்தில் வீழ்ந்து வரும் உலகப் பொருளாதாரத்தையும், அதன் ஓர் அங்கமான ஐரோப்பாவில் கட்டமைப்பு நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கிறார்கள் கொள்கை வகுப்பாளர்கள். முட்டாள்தனத்தில் அவர்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமைதான், அவர்களுக்கிடையில் காணப்படும் கருத்தொற்றுமை. சிக்கன சீரமைப்பு என்ற அவர்களது கொள்கை,  நிலைமையை மேம்படுத்தப் போவதில்லை, மோசமாக்கப் போகிறது. 2007ஆம் ஆண்டு வெடித்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான பிரச்சினையையே அவர்கள் இன்னும் தீர்த்தபாடில்லை. சீனா, ஜெர்மனி போன்ற கடன் அளிக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா போன்ற மிகப் பெரிய கடனாளி நாடுகளுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வு என்ற அந்தப் பிரச்சினைக்கு இதுவரை அவர்களால் எந்தத் தீர்வும் காண முடியவில்லை.

இத்தகைய சூழலில், வரவிருக்கும் நிலைமைகள் குறித்துத் தடாலடியாக நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச முடியாது. சந்தைகள் பெரிதும் ஆட்டம் கண்டவாறுதான் இருக்கும். அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றல் குறைந்து விட்டதாக ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் மதிப்பிட்டிருப்பதால், அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அளிக்கும் வருவாய் உயராது. ஜப்பானும் “ஏஏஏ” தரத்தை நீண்ட காலத்துக்கு முன்பே இழந்து விட்டது. அதன் மொத்த தேசியக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 200 சதவீத அளவையும் தாண்டிவிட்டது. அதன் கடன் பத்திரங்களின் மதிப்பு இன்னமும் அதளபாதாள நிலையில்தான் உள்ளது. காரணம், ஜப்பானியப் பொருளாதாரம் வளர்வதற்கான சாத்தியங்கள் மங்கலாகவே உள்ளன.

அமெரிக்காவின் நிலைமையும் அதுதான்.  இப்போதைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் அதன் கடன் பத்திரங்கள் அளிக்கும் வருவாயும் குறைவாகத்தான் இருக்கும். ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடன், அமெரிக்காவுக்கு பெய்ஜிங் (சீனா) விட்ட டோஸ் சாதாரணமானதல்ல.

சீனாவின் 10 சதவீத ஆண்டு வளர்ச்சி என்பதன் பொருள், அமெரிக்காவை சீனா முந்தப் போகும் தருணம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது என்பதுதான். சீனா விஞ்சும் என்பதையும், இந்த நிலைமையானது இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான போட்டியாகத் தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் காட்டுகிறது. தங்களது பொருளாதாரத்தை எப்படி  நிர்வகிக்க வேண்டும் என்று  மேற்குலக முதலாளி வர்க்கத்துக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு கீழை உலகத்தின் கம்யூனிஸ்டுகளுக்கு தைரியம் வந்துவிட்டது.  நிதிச் சந்தைகள் இந்த வாரத்தை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடட்டும்.  2011, ஆகஸ்ட் 5  ஆம் தேதி என்பது,  அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை இழந்த நாள் என்றே இனி நினைவில் கொள்ளப்படும்.

அதிபர் ஒபாமாவுக்கு இவையனைத்தும் பயங்கரமான செய்திகள். பொருளாதார மீட்சியை அவரால் சாதிக்க முடியவில்லை. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளிலும், கடனுக்காக ஜப்தி செய்யப்பட்ட வீடுகளிலும் அமெரிக்கா மூழ்கிக் கொண்டிருக்கிறது. இன்றுள்ளதைப் போல வேலையின்மை மிக அதிகமாயிருக்கும் ஒரு சூழலில் ரூஸ்வெல்ட்டுக்குப் பிறகு வேறு எந்த அதிபரும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. வரிச் சலுகைகள் முடியப் போகின்றன. அடுத்துவரும் மாதங்களில் நிதிக் கொள்கை மேலும் கடுமையாகப் போகிறது. பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கு நோட்டு அடிப்பது என்ற மொண்ணையான ஆயுதம் ஒன்றுதான் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வசம் உள்ளது. அதற்கு முன் சந்தைகள் கொஞ்சம் இளகவேண்டும். அதற்குச் சில மாதங்கள் ஆகும். அதன் பின்னர்தான், இந்த மொண்ணையான ஆயுதத்தைக்கூடப் பயன்படுத்த முடியும்.

இதற்கும் மேல் வேறொன்று இருக்கிறது. கடனைத் திருப்பிக் கொடுக்கும் நம்பகத்தன்மை குறைந்து போன அமெரிக்கா என்கின்ற தேசிய அவமானத்துக்குத் தலைமை தாங்கிய அதிபராக ஒபாமா நினைவு கூரப்படுவார். அவர் ஜிம்மி கார்ட்டரைப் போலத் தோன்றுகிறார், ரூஸ்வெல்ட்டைப் போல அல்ல.

இந்த நிலைமைகளைக் கண்டு ஐரோப்பியர்கள் முறுவலிக்க முடியாது. ஏனென்றால், நாம் பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்காவின் வீழ்ச்சியை மட்டுமல்ல; ஒட்டு மொத்த மேற்குலகின் வீழ்ச்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற வாரத்தின் பெரும் சரிவைத் தொடர்ந்து, ஜி7 நாடுகளுக்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி,  பிரான்சு, கனடா, ஜப்பான்  பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், இவர்களுக்கிடையிலான கூட்டத்தால் பயனிருந்திருக்கலாம். சந்தையின் மீது செல்வாக்கு செலுத்தி அமைதிப்படுத்தும் ஆற்றல் இன்று இவர்களுக்கு இல்லை. இன்று சீனாவைத் தவிர்த்து விட்டு, இந்த ஜி7 நாடுகள் மட்டும் கூடிப் பேசுவது என்பது, 1930களின் சர்வாதிகாரத்தை அமெரிக்காவைத் தவிர்த்த பிற “லீக் ஆஃப் நேஷன்ஸ்” நாடுகள் மட்டும் சேர்ந்து முறியடித்திருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது.

இந்தக் கதைக்கு சுபமான முடிவு ஏதுமில்லை. குமிழிப் பொருளாதார காலத்தில் மட்டுமீறி வாங்கிக் குவித்த கடனைத் தனிநபர்கள் முதல் வங்கிகள் வரை அனைவரும் திருப்பி அடைத்தல்,  அதிகபட்ச வேலையில்லாத் திண்டாட்டம், நீண்ட காலத்திற்கு மிகவும் பலவீனமான பொருளாதார வளர்ச்சி மிக அதிகபட்சமாக நேர்மறையில் நடக்கக் கூடியது இவ்வளவுதான். எதிர்மறையில் அதிகபட்சமாக நடக்கக் கூடியது என்ன? அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் பின்னோக்கிச் செல்ல, உலகப் பொருளாதாரமும் மீண்டும் தேக்கத்தில் விழும். ஐரோப்பிய ஒன்றியமே பிய்ந்து சிதைந்து போகும். இரண்டாவதாகக் கூறப்பட்ட இருண்ட சூழல் எற்படுவதற்கான சாத்தியமே அதிகம். சென்ற வாரத்தைக் காட்டிலும் இன்று அந்த சாத்தியம் அதிகரித்திருக்கிறது.

ஏன்? ஏனென்றால் தேசங்களுக்கிடையே ஒத்துழைப்பு இல்லை. சிக்கனத்துக்கான திட்டங்கள்தான் உள்ளன. வளர்ச்சிக்குத் திட்டமில்லை. கடன் வாங்கிப் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளைத் தூண்ட முடிந்த நாடுகள்கூட, கடன் வாங்கத் தயங்குகின்றன. யூரோ என்ற ஒற்றை நாணயம் குலைந்து விடாமல் தடுக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஐக்கியத்தை விரைவுபடுத்த வேண்டும். இதற்குத் தேவையான அரசியல் உறுதி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லை.

பண்டங்களின் விலைகள் குறைந்து வருகின்றன. ஆனால், அது ஒன்று மட்டும்தான் நல்ல செய்தி. மற்றபடி 9, ஆகஸ்டு, 2007 அன்று தொடங்கிய நெருக்கடி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் பாதி தூரத்தைக்கூட நாம் இன்னும் கடக்கவில்லை. அந்த நெருக்கடி அபாயகரமான புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.

_______________________________________________

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

ஆங்கில மூலம் – Global financial crisis: five key stages 2007-2011