02022023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.

இந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர்  காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பணியாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.

அன்றைக்கு வெள்ளையனின் காலில் விழுந்து கிடந்த மைசூரின் உடையாரும், திருவிதாங்கூர் ராஜாவும், ஆற்காடு நவாப்பும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும், தொண்டைமானும், இன்னும் சிந்தியாக்களும், மராத்திய பேஷ்வாக்களும் இன்றும் சுகபோகிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மாளிகைகள், இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்யாத இந்திய அரசு இன்றும் அவற்றைப் போஷித்து வருகின்றது.

திப்பு சுல்தான் உள்ளிட்ட தியாகிகள் வெள்ளையனை எதிர்த்த போது, ஹைதராபாத் நிஜாம்கள் பச்சையான துரோகம் புரிந்து காலனிய அரசுக்கு வால் பிடித்தார்கள். இவர்களின் ஊதாரித்தனமும், உல்லாச வாழ்வும் உலகறிந்தது. ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், ஒரு வாத்து முட்டையின் அளவுள்ள வைரத்தையே செருப்பில் பதித்து வைத்திருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப் பின் அதைக் கண்டெடுக்கும் அவரது வாரிசு, அந்த வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இப்பேர்ப்பட்ட பெயருக்கும், புகழுக்கும் உரிய நிஜாம் குடும்பத்தார் இப்போது மாபெரும் அவமானத்தில் உழல்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன அவமானம்?

1995-ம் ஆண்டு நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய்களுக்கு வாங்குகிறது. இதற்கு வருமான வரித்துறை சுமார் 30 கோடி ரூபாய்களை வரியாக விதிக்கின்றது. தங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தை தாம் விற்பதற்கு அரசுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த நிஜாமின் வாரிசுகள், நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இடைக்கால ஏற்பாடாக சுமார் 15.45 கோடியை வருமானவரித் துறையிடம் வரியாகவும், 15.05 கோடியை வங்கியில் பிணைத் தொகையாகவும் வைக்கிறது அரச குடும்பம்.

இந்த 15.05 கோடியில் அரச குடும்பத்து வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஈவுத்தொகை போக தற்போது 8.66 கோடிதான் மீந்துள்ளது. மீதம் உள்ள தொகையோடு வட்டியையும் சேர்த்து 8.99 கோடியை நிஜாம் குடும்பம் வரிப் பாக்கியாக வைத்துள்ளது. சுமார் 120 வாரிசுகளைக் கொண்ட நிஜாம் குடும்பத்தினர் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று நோட்டீசு விடுத்துள்ளது வருமான வரித்துறை. அரச குடும்பத்துக்கே நோட்டீசா என்று கொதித்துப் போன நிஜாமின் வாரிசுகள், இதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை சென்று முறையிட்டுள்ளனர்.

இதைப் பற்றி மனம் வெதும்பிப் பேசிய நிஜாம் ஓஸ்மான் அலியின் கொள்ளுப் பேரன் நவாப் நஜஃப் அலிகான், “நாங்கள் தில்லி சென்று போராடுவோம். அப்போது தான் அரசகுடும்பத்துக்கு வருமான வரித்துறை இழைத்துள்ள அவமானத்தை இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று புலம்பியுள்ளார்.

வெள்ளையனை அண்டிப்பிழைத்த இந்தக் கைக்கூலிகள் தமது துரோகத்தனத்துக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகளை நட்ட ஈடின்றிக் கைப்பற்றுவோம் என்று அறிவிக்க துப்போ திராணியோ இல்லாத இந்த ‘சுதந்திர’ அரசின் நிதியமைச்சர் ’நிஜாமின் கவலையைப் போக்க அரசு நடவடிக்கையெடுக்கும்’ என்று உறுதியளிக்கிறார். திப்புவையும், மருதுவையும், கட்டபொம்மனையும் மறைத்து விட்ட முதலாளித்துவ ஊடகங்களோ நிஜாமின் ’துயரத்துக்கு’ மனமிரங்குகின்றன – மைசூர் உடையாரின் வருடாந்திர கேளிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.

கட்டபொம்மனைக் கைது செய்து கும்பினியின் காலை நக்கி அடிமைச் சேவகம் புரிந்த தொண்டைமானின் வாரிசு திருச்சியின் முன்னாள் மேயர் என்றால், வடக்கே சிந்தியாக்கள், காஷ்மீரின் கரண் சிங் என்று சுதந்திரத்துக்குப் பின் நேரடியாக ஓட்டுக் கட்சி அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைத் தொடர்ந்து ருசித்தவர்கள் ஏராளம்.  அப்படி நேரடியான வாய்ப்புக் கிடைக்காத வெள்ளைக்காரனின் சவுக்கு நுனிகளான ஜமீன்களும், இன்ன பிற சிற்றரசர்களும் வட்டார அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலச்சுவான்தார்களாகவே நீடித்து வருகிறார்கள்.

உண்மை என்னவெனில் இவர்களைப் பராமரிக்கும் இந்திய அரசு கூட கைக்கூலிகளின் அரசு என்ற முறையில் நடப்பது கும்பினியின் ஆட்சி தான் – என்ன, கவர்னரின் தலையில் தொப்பிக்குப் பதில் டர்பன் இருக்கின்றது.

______________________________________________________

- புதிய கலாச்சாரம், மே – 2012