05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

குறுக்கு வெட்டு – 2012/1

ரண்வீர் சேனா குண்டர்கள் விடுதலை!

1996-ஆம் ஆண்டு ராஜ்புத் மற்றும் பூமிகார் ஆதிக்க சாதிகளது குண்டர் படையான ரண்வீர் சேனா, மத்திய பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதானி டோலா ஊருக்குள் நுழைந்து 21 தலித் மக்களைக் கொடூரமாகக் கொன்றது. கொல்லப்பட்டவர்களில் பெண்கள், சிறுமிகள் ஏன் பத்து மாதக் குழந்தையும் கூட உண்டு. குற்றவாளிகளை ஆரா மாவட்டத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம் பதினைந்து ஆண்டுகளாக விசாரித்து, கடந்த 2010 மே மாதம்  மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், இருபது பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

இந்தக் கொலைபாதகத்தை விசாரித்து, தண்டனை கொடுப்பதற்கு இத்தனை ஆண்டுகளா, தொலையட்டும். தற்போது ஏப்ரல் 16, 2012 அன்று பாட்னா உயர்நீதி மன்றம் போதிய சாட்சிகளில்லை என்று அந்த 23 பேரையும் விடுதலை செய்திருக்கின்றது. நேரடியாகப் பார்த்த சாட்சியங்கள் இருந்தும், அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பினை ரத்து செய்து, குற்றவாளிகளை உயர்நீதி மன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக வழக்கறிஞர்கள் கூறியிருக்கின்றனர். சென்ற ஆண்டுதான் ரண்வீர் சேனாவின் தலைவன் பிரம்மேஸ்வர் சிங் சிறையிலிருந்து வெளியேறியிருக்கிறான். தற்போது குண்டர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

நீதிமன்றங்களும், போலிசும் ஆதிக்கசாதி வெறியர்களது பிடியில் இருக்கும் வரையிலும் நீதி எப்படிக் கிடைக்கும்?

தற்கொலைகளின் சரணாலயம் – அரசு மருத்துவமனை!

சுமை தூக்கும் தொழிலாளியான பாஸ்கரன் ரயில் பாதையை கடக்கும் போது ஒரு ரயிலில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த 16.4.2012 அன்று சேர்க்கப்படுகிறார். நெஞ்சிலும், தொடையிலும் கடும் எலும்பு முறிவு கொண்ட அவரது நிலைமையை அறிந்து மனைவியும், மகனும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். அடுத்த நாள் காலையில் அவர்களோடு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த பாஸ்கரன் பின்னர் கழிப்பறையில் போர்வையைக் கயிறாக்கித் தூக்குப் போட்டு இறந்து போனார். முறிந்த உடலை வைத்துக் கொண்டு இந்த சமூகத்தில் வாழ முடியாது என்று அவருக்குத் தோன்றிருக்கலாம்.

கடந்த ஆண்டு இதே மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து ஒரு பெரியவர் கீழே குதித்துத் தற்கொலை செய்திருக்கிறார். தன்னைக் கவனித்துக் கொள்ள யாருமில்லை என்று ஒரு இலங்கைத் தமிழரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரமொன்றில் தூக்குப் போட்டு இறந்திருக்கிறார். அரசியல் தலைவர்களும், முதலாளிகளும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் அமெரிக்கா சென்று தங்களது உடல் நலனைப் பராமரித்துக் கொள்கிறார்கள். மக்களோ உடல் நலனைக் கவனித்துக் கொள்ள முடியாத நிலையை உயிர் துறந்து தீர்க்கிறார்கள். இந்த தற்கொலைகள் சமூகத்தின் மீது காறி உமிழப்பட்ட செங்குருதி.

ரிகார்டு டான்ஸ் மனிதாபிமானம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ பழம் என்ன தெரியுமா? வாஷிங்டன் ஆப்பிளாம். இதற்கென இந்த அமெரிக்க ஆப்பிள் கம்பெனி ஐந்து நட்சத்திர விடுதியில் விருந்து கொடுத்து இதனை அறிவித்தது. ஐ.பி.எல் அணிகளில் ஆடும் வீரர்களின் ஆடை முழுக்க இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களின் இலட்சிணைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் வந்தே மாதரத்திற்கு அதில் இடமில்லை.

தற்போது இதையும் மிஞ்சிய ஒரு செய்தி. இந்த ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் வி.ஜி.என் டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆறாயிரம் ரூபாய் கொடுக்குமாம். இந்தத் தொகை கமலாலயம் எனும் அநாதை இல்லங்களை நடத்தும் டிரஸ்டுக்கு செல்லுமாம். இதற்கு ஹிந்து பத்திரிகை ஏற்பாடு செய்திருக்கிறது. மைதானத்தில் சிக்சர் அடித்தால் வெளிநாட்டு நடன மங்கைகள் அதாவது சியர் லீடர்ஸ் ஆடிப் பரவசப்படுத்துகிறார்கள். போனசாக இந்த மனிதாபிமானமாம். அனாதைகளுக்கு நன்கொடை அளிப்பதில் கூட இத்தகைய விளம்பர வெறியிருந்தால் இதில் மனிதாபிமானம் மயிறளவுக்குக் கூட இருக்குமா? சமூகம் அநாதைகளை உருவாக்குகின்றது; ஐபில் அதை வைத்துக் கல்லா கட்டியவாறு அவர்களை இழிவுபடுத்துகிறது.

இதுதாண்டா போலிசு!

சென்னையைச் சேர்ந்த விஜயபானு எனும் பெண் ஒரு திருட்டு வழக்கில் புழல் சிறைக்குச் செல்கிறார். அங்கு வார்டனாக இருந்த விதேச்சனாவுடன் நெருங்கிப் பழகுகிறார். மேலும் அவரது உண்மையான பெயர் ஷீபா மேத்யூ என்றும், அவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக மத்திய பாதுகாப்புப் படையில் பணிபுரிவதாகவும், புழல் சிறையில் பெண் கைதிகள் பாலியல் தொல்லையில் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கவே கைதி போல வந்திருப்பதாகவும் கதை விட்டு நம்ப வைத்திருக்கிறார்.

பிணையில் வெளிவந்த பிறகு விதேச்சனாவிற்கு பதவி உயர்வு பெற்றுத் தருவதாக மூன்று இலட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி ஏமாற்றியிருக்கிறார். இப்படிப் பலரையும் நாமம் போட்டதோடு, காமடியாக ஒரு தனியார் பள்ளி விழாவிற்கு விருந்தினராகச் சென்று மாணவர்களுக்கு பரிசெல்லாம் அளித்திருக்கிறார். தற்போது மோசடி அம்பலமாகி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதிகாரத்திமிர், மோசடி, அடக்குமுறை, ஊழல் என அனைத்திலும் கொடிகட்டிப் பறக்கும் காவல்துறையை பத்தாம் வகுப்புக் கூட முடித்திராத ஒரு விஜயபானு இப்படி மலிவாக ஏன் ஏமாற்ற முடியாது?

ஐ.பி.எல் ஆபாசம்!

இந்த ஆண்டு ஐ.பி.எல் ஆட்டங்களின் துவக்க விழா சென்னையில் நடந்தது. பாடல், நடன பல்சுவை நிகழ்ச்சிகளில் அமிதாப்பச்சன், சல்மான் கான், கரினா கபூர், பிரியங்க சோப்ரா முதல் வெளிநாட்டுப் பாடகிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் டிக்கெட்டு விலை குறைந்த பட்சம் ரூ.700 முதல் பல ஆயிரங்கள் வரை விற்கப்பட்டன. பல நடன நிகழ்ச்சிகளில் மிகவும் மலிவாக ஆபாச நடனம் போட்டனர். நடனமாடும் பெண்கள் கிட்டத்தட்ட உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு ஆபாச அசைவுகளுடன் ஆடித் தள்ளினர்.

இப்படிப் பச்சையாக எந்தத் தணிக்கையுமின்றி ஆபாசத்தை அரங்கேற்றியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் காவல்துறை டி.ஐ.ஜி.க்கு பதில் தருமாறு நோட்டீசு அனுப்பியிருக்கின்றனர். கிராமங்களில் நடக்கும் ரிக்கார்டு டான்சை விட பல மடங்கு ஆபாசம் கொண்ட இந்நிகழ்ச்சியைக் காவல்துறையினர் மட்டுமல்ல, முதலாளிகள், பத்திரிகையாளர்கள், நடுத்தர வர்க்கம் அனைவருமே உருகி ரசித்திருக்கின்றனர். கோவில் விழாக்களில் ரிக்கார்டு டான்ஸ் நிகழ்ச்சிகள் கூடாது என்று சமீபத்தில் உயர்நீதி மன்றம் தடை விதித்திருக்கின்றது. ஆனால் முதலாளிகளின் இந்தக் குத்தாட்டத்தை போலீசு மட்டுமல்ல, நீதிமன்றமும் தடுத்து நிறுத்த முடியாது. பார்க்கலாம், அந்த வழக்கு என்னாகிறதென்று!

முட்டாள்களின் தேசம்தான் இந்தியா!

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தும் விதமாக பாசிசக் கோமாளி சுப்ரமணிய சுவாமி உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன்படி அங்கே ராமர் பாலம் இருப்பதாகப் புராணப் புளுகை வைத்து இந்த முட்டாள் கூறியதை ஒரு விசயமாக எடுத்துக் கொண்டு உச்சநீதி மன்றம் விசாரித்து வருகின்றது. இது புராணப் புரட்டு என்ற உண்மையைக் கூறினால் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ’இந்துக்களின்’ வாக்குகளை இழந்து விடுவோம் என்று அஞ்சும் காங்கிரசு அரசு இந்த வழக்கை நேரடியாக மறுத்து வாதாடவில்லை. இது குறித்து உச்சநீதி மன்றம் கருத்துக் கேட்ட போது, ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்று மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது‘ என்று விளக்கமளித்த காங்கிரசு அரசு தற்போது இது குறித்து உச்சநீதி மன்றமே முடிவெடுத்துக் கொள்ளும்படியும் சொல்லி விட்டது.

இனி குடுமி மாமா சு.சாமி சொன்னதைத்தான் மக்கள் கருத்தென உச்சிக்குடுமி மன்றம் ஏற்றுக்கொள்ளப் போகிறது. மேலும் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று பாசிச ஜெயாவும் கோரியிருக்கிறார். வானரங்கள் கையால் மண்ணை அள்ளிப் பாலம் போட்டார்கள் என்ற பொய்யெல்லாம் ஒரு நாட்டின் தேசிய சின்னமென்றால் இந்தியாவை இனி முட்டாள்களின் தேசமென்றும் அழைக்கலாம்.

கல்லா கட்டாத இந்தியா டுடேயின் மனிதாபிமானம்!

2011 டிசம்பர் 30-ஆம் தேதியில் வீசிய தானே புயலின் கோரத் தாண்டவத்தினை அறிந்திருப்போம். 48 பேர் பலியானதோடு, பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வே கேள்விக்குறியாகும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. விவசாயிகளுக்கும், வீடிழந்தவர்களுக்கும் அரசே போதிய முறையில் நிவாரணம் அளிக்காத நிலையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், முதலாளிகளும் நிவாரணம் அளிக்கப் போவதாக வழக்கம் போல வசூலிக்கத் துவங்கினார்கள். பல மொழிகளில் பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடத்தும் இந்தியா டுடே எனும் தரகு முதலாளிகளின் மனங்கவர்ந்த பத்திரிகை தனது கேர் டுடே ட்ரஸ்ட் மூலம் வாசகர்களுக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது.

தற்போது ‘தானே மறுவாழ்வு நிதி‘யை முடித்துக்கொள்வதாக அறிவித்திருக்கும் இந்தியா டுடே, இதுவரை ரூ. 2,21,801 ரூபாய் மட்டுமே வந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.பெரிய அளவில் மறுவாழ்வுப் பணிகளை நடத்த பங்களிப்புகள் போதவில்லை என்பது வருத்தமளிக்கும் விசயமாக இந்தியா டுடே புலம்பியிருக்கிறது. முதலாளிகளின் விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் இந்தியா டுடே முதலாளிகள் இந்தத் தொகையை வைத்து என்ன செய்வார்கள்? அவர்களது காருண்யத்தை உலகறியச் செய்யும் விளம்பரங்களுக்கு கூட இந்த தொகை பத்தாது, பாவம்.

வீடியோ கேம்: தந்தையைக் கொன்ற சவுதி சிறுவன்!

கடந்த மார்ச் 2012 புதிய கலாச்சாரத்தில்தான் வீடியோ கேம் எப்படி சிறுவர்களின் ஆளுமையை வன்முறையாகச் சீரழித்து வருகிறது என்று ஒரு கட்டுரைவெளியிட்டிருந்தோம். அதற்கு அத்தாட்சியாக ஒரு துயரச் செய்தி சவுதியிலிருந்து வந்திருக்கின்றது. தெற்கத்திய ஜிசான் பகுதியைச் சேர்ந்த நான்கே முக்கால் வயது கொண்ட சிறுவன், தந்தையிடம் சோனியின் பிளே ஸ்டேசன் எனும் வீடியோ கேம் விளையாட்டுக் கருவியை வாங்கி வருமாறு அடம் பிடித்திருக்கிறான்.

வெளியே சென்று வீடு திரும்பிய தந்தை அதை வாங்கவில்லை என்பதை அறிந்து அவர் கழற்றி வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்று விட்டான். இசுலாமிய நாடுகளிலேயே மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டிருப்பதோடு, தூய வடிவில் இசுலாத்தை பின்பற்றிக் கொள்வதாக பீற்றிக் கொள்ளும் சவுதியிலேயே ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரம் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. சவுதி ஷேக்குகள் தமது பெட்ரோல் பணத்தை அமெரிக்காவில் முதலீடு செய்கிறார்கள். அமெரிக்காவோ தனது கேளிக்கைப் பண்பாட்டை சவுதியில் முதலீடு செய்கிறது. விளைவு இந்தக் கொலை!

வாசனைத் திரவியம் மட்டும்தானா, ஆணுறை கிடையாதா?

இத்தாலியைச் சேர்ந்த வாசனைத் திரவிய தயாரிப்பாளரான சில்வானா காசோலி எனும் சீமாட்டி ஒரு மகத்தான சாதனையைப் படைத்துள்ளார். அதாவது போப்பாண்டவர் பதினைந்தாவது பெனடிக்ட் மட்டும் பயன்படுத்துவதற்கென்றே ஒரு வாசனைத் திரவியத்தைத் தயாரித்திருக்கிறார். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபார்முலா வேறு எந்த வாடிக்கையாளருக்கும் கிடையாது என்றும் அவர் அடித்துக் கூறுகிறார்.

ஏற்கெனவே இந்த சீமாட்டி மடோனா, ஸ்டிங், ஸ்பெயின் அரசர் முதலான வி.ஐ.பி.களுக்கும் இத்தகைய தனிப்பட்ட வாசனைத் திரவியங்களைத் தயாரித்துள்ளார். சிலுவையை வைத்து சுய இன்பம் செய்வது போன்ற பாடல் வீடியோவை வெளியிட்ட மடோனாவுக்கும், சிலுவையைச் சுமந்தவாறு உலகிற்கு சமாதான செய்தி சொல்லும் கடவுளின் தூதரான போப்புக்கும் ஸ்பெசல் செண்ட் தயாரிக்கிறார் என்றால் இந்த ஆத்தா கில்லாடிதான்.

போப்புக்கு இது அவசியமா? நூற்றாண்டுகளாய் சேர்ந்து விட்ட அழுக்கைச் சுமக்கும் அவருக்கு அந்த நாற்றத்தை போக்க இந்த செண்ட் அவசியம்தான். ஆனால் தற்போது பாலியல் முறைகேடுகளில் திருச்சபையில் பாதிரிகள் உலகம் முழுவதும் அம்பலமாகும் வேகத்தைப் பார்க்கும் போது நமக்கு ஒன்று தோன்றுகிறது. முன்னெச்செரிக்கையாக போப்புக்கு மட்டும் ஒரு விசேசமான ஆணுறை தயாரித்து விட்டால் என்ன?

——————————–

– தொகுப்பு: வேல்ராசன்

________________________________________________________

- புதிய கலாச்சாரம், மே – 2012