தொழிலாளி என்றால்

வேறு யாரோ போல் நினைக்கிறாய்!

நடை, உடை, பாவனை

நவீன முகப்பூச்சு,

பன்னாட்டு குளிர்பானம் உதட்டில்

பாதிகிழிந்து தொங்கும் ஆங்கிலம் நாக்கில்.

ஒப்பனைகள் எதுவாயினும்

உன் வர்க்கம் பார்த்து

தொழிலாளர் விடுதலை பற்றி

ஒரு துண்டறிக்கை தரவந்தால்,

வெட்டிப்பேசி, விலகி நடந்து

ஏதோ  ஒரு முதலாளி போல்

நீ என்னமாய் நடிக்கிறாய்?

கையில் கணிணி

கனமான சம்பளம்

வார இறுதியில் கும்மாளம்

வசதியான சொகுசு கார்…

அதனால், அதனால் நீ என்ன

அம்பானி வகையறாவா?

அடுத்த வேலை என்னாகுமோ?

கிடைத்த வேலை நிரந்தரமோ?

என எப்போதும் பயத்தில்

ஏ.சி. அறையில் கூலியுழைப்பால்

ஜில்லிட்டுக்  கிடக்கும் உன் இதயத்தைக் கேள்!

சொல்லும்… நீயும் ஒரு தொழிலாளிதான்!

காதலுணர்வை

வெளிப்படுத்துவதை விட மேலானது

வர்க்க உணர்வை வெளிப்படுத்துவது!

அதை வெளிப்படுத்தி

வீதியில் போராடும் தொழிலாளரை

வேறு யாரோ போலவும்,

நீ வேறு வர்க்கம் போலவும்

செங்கொடி பார்த்து முகம் சுழிக்கும்

உன் செய்கையில் ஏதும் பொருளுள்ளதா?

எந்த விலையுயர்ந்த சென்ட் அடித்தாலும்…

எத்தனை உடைகள் மாற்றினாலும்…

எவ்வளவு கசந்தாலும்… இதுதான் உண்மை.

கூலிக்கு  உழைப்பை விற்று

காலத்தை நகர்த்தும் கண்மணியே…

நிச்சயம் நீயும் ஒரு தொழிலாளிதான்!

உணர்ச்சியற்ற தோல்

தொழுநோயின் அறிகுறி..

உணர்ச்சியுடன் போராடுதலே

தொழிலாளி வர்க்கத்தின் அறிகுறி.

இதில் எது நீ அறிவாயா?

உனக்கொன்று தெரியுமா!

உலகியலின் உயர்ந்த அறிவு

பாட்டாளி வர்க்க அறிவு,

மனித குலத்தின் உயரிய உணர்ச்சி

பாட்டாளி வர்க்க உணர்ச்சி.

இளைஞனே.. உணர்ந்திடு!

தருணத்தை இப்போது தவறவிடில்

வேறெப்போது பெறுவாய் வர்க்க உணர்வு.

• துரை. சண்முகம்

______________________________________________

- புதிய கலாச்சாரம், மே – 2012