ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, ‘இயற்கைத் தேர்வின் மூலம் உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் ஒரு சூறாவளியைக் கிளப்பியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத் தத்துவத்தை 230 பக்கங்களில் விவரிக்கும் இச்சிறுநூல் ஏற்படுத்திய புயலில் விவிலியமும் பறந்து சென்றது.
இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.
மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு (!) அமர்ந்திருந்தனர்.
விவாதம் தொடங்கிற்று. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா” என்று கேலி செய்த திருப்தியுடன் இறுதியில் ‘டார்வினின் ஆராய்ச்சி சத்தியமறையின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி இருக்கையில் அமர்ந்தார்.
‘புனித’க் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி.
வெறியுட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு எத்தனை தைரியம் வேண்டும். மதமெனும் குகையிலிருந்த மக்களை விஞ்ஞான உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்கு அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியை விரிவாக பேசினார். ஒரு பாதி மக்களையாவது உண்மையினை ஏற்கவைத்தார். பொது விவாதம் முடிந்தது.
ஆனால் டார்வின் எழுப்பிய புயல் ஓயவில்லை. குரங்குகளை கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள்.
இங்கிலாந்தின் தேவாலயங்களில்,கருப்பு உடை தரித்த பக்த கோடிகள், கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள்.
கி. பி. 1950 – ‘பொதுவுடைமைப் பூதம்’ ஐரோப்பிய நாடுகளைப் பற்றிப் பரவும் காலம், கம்யூனிஸ்ட் சாத்தான்களிடமிருந்து புனிதக் கொள்கையை காப்பதற்க்கு போப்பாயஸ் XII எச்சரிக்கிறார், ”பரிணம வாதத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இதைக்கொண்டு பொருள் முதல்வாதிகளும், நாத்திகர்களும் உலகை உருவாக்கிய தேவனின் பங்கை மறைக்கிறார்கள். எந்த உயிரின மூலப்பொருளில் இருந்து மனிதன் தோன்றினானோ, அதைப் படைத்தவன் தேவனே” என்று அருள்மொழிந்து பரலோகம் சென்றார்.
கி.பி. 1996 – வாடிகன் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு போப் ஜான் பால் II சொல்வதாவது. ‘மனிதன் ஒற்றை அடியில் உருவாக்கப்பட்டவன் என்பதில்லை. தேவனால் படிப்படியாக பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் என்பதை ஏற்கலாம்’ சென்ற நூற்றாண்டில் (டார்வினால்) வெளியிடப்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவம், ஆய்வுசெய்யும் அறிஞர்களுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறிப்பிடதக்க பங்காற்றியிருக்கிறது. ஆனால் அனைத்திற்க்கும் மூலகர்த்தா தேவன்தான் என்று ஏற்கனவே போப் பயஸ் XII அருளியிருப்பது முக்கியமான ஒன்றாகும்”.
போப் அவர்களே! காலில் போட்டு மிதித்த சாத்தானின் கருத்தை 137 ஆண்டுகள் கழித்து சிறிது ஏற்கிறோம் என்று ஏன் நடிக்க வேண்டும்? உலகத் தோற்றம் குறித்து பைபிள் கூறுவது நீங்கள் அறியாததல்ல.’
கலீலியோ
‘ஐந்து நாட்களில் அண்ட _ பிண்ட சராசரங்களைப் படைத்த பரமபிதா, ஆறாவது நாள் களிமண்ணை உருட்டி ஆதாமையும், அவன் விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்து விட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்றார்.”
ஆறு நாட்கள் வேலை, ஏழாவது நாள் விடுமுறை என்பது தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமையை உங்கள் பரமபிதாவுக்கு வழங்குவதில் எமக்கு ஆட்சேபணையில்லை.
ஆனால் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை சிறிது ஏற்றுக் கொண்டாலும் பைபிளின் முதல் அத்தியாயம் தவறாகுமே! மாற்ற வேண்டுமே!
இல்லை. எதுவும் மாற்ற வேண்டியதில்லை. போப்பின் அறிக்கைகளுக்கு பொழிப்புரை தருகிறார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல் தொடர்பாளர் பிரான்சிஸ் மானிஸ்கால்கோ. அதாவது போப்பின் பரிணாமத் தத்துவம் பற்றிய கருத்தை, அவர் மதத் தலைவர் என்ற முறையில் கூறியதாகவோ, கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டும் கோட்பாடு என்ற முறையில் சொல்வதாகவோ தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதாம்.
எங்களுக்குப் புரிகிறது. ஏன் இந்த இரட்டை வேடம்?
விஞ்ஞானிகள் தாங்கள் கண்ட உண்மைகளுக்கு உங்களின் அங்கீகாரத்தை வேண்டி நின்ற காலத்தில் அதை மறுத்தீர்கள். இன்று சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது முதல், கணிப்பொறியின் இண்டர்நெட் வரை எந்த விஞ்ஞானியும் உங்களது அக்மார்க் முத்திரைக்கு ஏங்கவில்லை.
ஆனால் மதம் உயிர் வாழ்வதற்கும், காலத்திற்கேற்றவாறு புனரமைப்பதற்கும் அறிவியல் தேவைப்படுகிறது உங்களுக்கு. அதிலும் கடுகளவாவது நேர்மை இருக்கிறதா? இவ்வளவு காலம் திருச்சபை அறிவியல் அறிஞர்களைத் தவறாக நடத்தியது _ இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று குற்றம் புரிந்த உணர்வுடன் பாவமன்னிப்பு பெறுவதுதானே நியாயம்!
அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.
மனிதனின் இன்பம் ததும்பும் வாழ்க்கை பரலோகத்தில் மட்டும்தான் என்று மாயை காட்டிய மதவெறியர்களின் கூற்றை பொய்யாக்கி பூமியில் அந்தகைய அற்புதங்களைச் சாதித்திருக்கிறது அறிவியல். நேற்றைய வானொலி முதல் இன்றைய கணிப்பொறி வரை அதன் சாதனைகள் தொடருகிறது. மனித குலத்தின் இத்தகைய பிரம்மாண்டமான அறிவியல் – தொழில் நுட்ப புரட்சிக்கு அடிப்படையான விஞ்ஞான உண்மைகளைக் கண்டவர்கள் மத்திய கால விஞ்ஞானிகள்.
இயற்கையின் புதிரை விடுவிக்க காட்டிலும், களத்திலும், கடலிலும் திரிந்தார்கள். ஊனையும் – உயிரையும் வருத்தி தான் கண்ட உண்மையை நிருபிக்க தளராமல் போராடினார்கள். மதத்தின் பிடியிலிருந்து மனித சிந்தனையை விடுவிக்க திருச்சபையின் கழுவாய்களுக்கு தங்களது உயிரைக் கொடுத்தார்கள்.
பேராற்றல் மிக்க சிந்தனையும், போராட்டமும் கொண்ட இவர்களைத்தான் மாபெரும் மனிதர்கள் என்று குறிப்பிடுகிறார் ஏங்கெல்ஸ். இவர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும் அறிவியல் உலகம் அசுர வேகத்துடன் வளரக் காரணமாயிருந்தது. இவர்களது இழந்து போன வாழ்க்கையில்தான் இருபதாம் நூற்றாண்டின் மனித குல வாழ்க்கை உயிர் வாழுகிறது.
இத்தகைய ‘மாபெரும் மனிதர்களுக்கு’ எதிராக போப்பும், திருச்சபையும், ஏனைய பாதிரிகளும் நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகளை அறியும் நாகரீக உலகின் மனிதர்கள் எவரும் வெட்கப்படவேண்டும்; கோபம்கொள்ள வேண்டும்.
கோபர்நிகஸ்
அறுவை சிகிச்சையின் போதும், பிரசவத்தின் போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக பயன்படும் குளோராஃபார்ம் எனும் மயக்க மருந்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்ஸன் சென்ற நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இதற்கு திருமறையில் ஆதாரமிலையே என்று கடுமையாக எதிர்த்தார்கள் பாதிரிமார்கள். ‘கஷ்டத்தில் நீ குழந்தை பெறுவாய்’ எனும் பைபிளின் வாக்கியத்தைக் கொண்டு தாய்மார்கள் பிரசவத்தின் போது மயக்க மருந்து பயன்படுத்தக் கூடாது அப்போதுதான் தாய்ப்பாசம் இருக்க முடியும் என் வற்புறுத்தினார்கள்.
இரத்தத்தை வகைபிரித்து, இரத்த வங்கியில் சேமிக்கப்படும் முறையினால் உலகமெங்கும் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்படுகின்றது. மனித ரத்தம் பற்றிய ஆய்வை நடத்திய ‘குற்றத்திற்காக’ செர்வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழுமரத்தில் ஏற்றி உயிருடன் கொளுத்தப்பட்டார். பரமபிதாவின் புனிதம் காக்க இந்த தண்டனை வழங்கியவர் கால்வின் என்ற புராட்டஸ்டன்ட் பாதிரியார்.
தேவனின் மகிமை கூறி ஆவியெழுப்ப, விமானமேறி உலகைச் சுற்றி சுற்றி வருகிறார்கள் சுவிசேசத்தின் ஊழியர்கள். தேவனின் செய்தியை திருச்சபையின் விண்கோள்கள் பூமி உருண்டையின் மீது பொழிந்த வண்ணம் உள்ளன. ஆனால் உலகம் உருண்டையானது, தட்டையானதல்ல, பூமி சூரியனைச் சுற்றிவருகிறது என்று சொன்ன கியார்டனே புருனோவை உயிரோடு கொளுத்தினார்கள் கத்தோலிக்க மத குருமார்கள்.
‘வானுலகக் கோள்களின் சுழற்சிபற்றிய’ தனது கண்டுபிடிப்பை 36 ஆண்டுகளுக்கு முன்பே நூலாக எழுதியும், திருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் இறுதியில் தனது மரணப்படுக்கையில் இருந்து வெளியிட்டார்.
பூமியின் இயக்கத்தையும், சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டு சொன்ன கலிலீயோ திருச்சபையினால் சித்ரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கலிலீயோ விவிலியத்தின் ‘உலகம் பற்றி உண்மைகளை’ ஏற்று தன் கண்டுபிடிப்புகளை மறுக்க வேண்டியிருந்தது. கலிலீயோவின் தொலைநோக்கியை சாத்தானின் கருவி என்றார்கள் கிறித்தவ பாதிரிகள்.
கி.பி. 370-இல் அலெக்சாண்டிரியாவில் (இன்றைய கெய்ரோ நகரம்) அரும்பாடுபட்டு சேர்த்துவைத்த நூலகத்தையும், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாதிரிப்படை சூறையாடிக் கொளுத்தியது. நூலகத் தலைவரும் பெண் விஞ்ஞானியுமான ஹைப்பேஷியாவை சித்திரவதை செய்து கொளுத்தினார்கள்.
விஞ்ஞானிகளை வேட்டையாடிய திருச்சபையின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் ஒரு சில துளிகள்தான் இவை. அனைத்துலக பாதிரிகளின் எண்ணிக்கையை விட அவர்கள் இழைத்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும்.
இன்று மதிப்பிட முடியாத அளவுக்கு சொத்துக்களைக் குவித்து வைத்துக்கொண்டு திருச்சபையின் பாதிரிகள் வாழும் உல்லாச வாழ்க்கைக்கு வசதிக்ள செய்தது அறிவியல்தான். விவிலியம் அல்ல.
கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.
எதிர்காலத்தில் திருச்சபை தமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலா இவர்கள் தங்களை வருத்திக்கொண்டார்கள்?
தேவனின் ஊழியர்களே சொல்லுங்கள். யார் பாவிகள், யார் சத்தான்கள்.
குளிரூட்டப்பட்ட அறையில் நித்திரை கொண்டு, காலை எழுந்து உயர்தர ஒயினைக் குடித்து, வறுத்த முழுக்கோழியை முழுங்கி, பளபளக்கும் வெண்பட்டு அங்கியை உடுத்தி, மாருதி காரில் பவனி வந்து, தேவாலயத்தில் கூடியிருக்கும் மந்தைகள் முன்னால், புளித்த ஏப்பத்துடன், பாதிரி திருவாய் மலர்வார், ”கஷ்டத்தில் ஜீவிக்கின்ற கர்த்தரின் குழந்தைகளே சாத்தான்களிடமிருந்து விலகியிருங்கள்.”
எங்கள் விஞ்ஞானிகளின் கால் தூசிகூடப் பெறாத பாதிரிகளே இரண்டாயிரம் ஆண்டுகளாக நீங்கள் செய்துவரும் தேவ ஊழியம் இதுதானே!
‘திருமறையில் ஆதாரமில்லையே’ என்ற எந்த அறிவியல் உண்மைகளை மறுத்து விஞ்ஞானிகளை அழித்தீர்களோ அதே அறிவியலை உங்களுடைய வாழ்க்கையில் வெட்கமில்லாமல் பயன்படுத்தி வருகிறீர்களே. சுவிசேசப் பிரசங்கிகளே பதில் சொல்லுங்கள்.
புருணோ
போயிங் 707 விமானத்தில் அனைத்துப் பாதிரிகளையும் அள்ளிப்போட்டு இமயமலையின் உச்சியில் கொண்டுபோய், பாராசூட் இல்லாமல் தள்ளிவிட்டால் நாங்கள் குற்றவாளிகளல்ல; ஏனென்றால் புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டன் பைத்தியம் என்று பட்டம் கட்டியது திருச்சபைதான்.
குடல்வால் அறுவை சிகிச்சைக்காக வாடிகனில் 3 ஆண்டுகள் தலைமறைவாயிருந்த போதுதான் போப் முன்னர் கண்ட அறிக்கையை வெளியிட்டார். சிம்ஸனின் ஆவியும், செர்வெட்டஸின் ஆவியும் போப்பிடம் வந்து நியாயம் கேட்டதோ! குளோரோஃபாமும், ரத்தமும் கிடையாது என மறுத்திருந்தால் போப்பின் கதி என்ன? அறிவியலின் ஒழுக்கம் அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. ஆனால் கருணையே உருவான கடவுளின் ஒழுக்கம்தான் அதை அனுமதிக்கிறது.
இப்படி கொலை பாதக வரலாற்றைத் தெரிந்து கொண்டும் கல்லுளி மங்கன் போல சாந்த சொருபீயாகக் காட்சியளிப்பதற்குத்தான் கிறித்தவப் பாதிரிகளுக்கு பத்தாணாடு கால பயிற்சி கொடுக்கிறார்கள் போலும்.
‘கிறித்தவத்தின் மாபெரும் ஞானி (ஏசு கிறிஸ்து) மக்களின் ஆத்மாக்களுக்கு விடுதலை கோரி, தமது உடம்பைத் தியாகம் செய்தார்; நவீனமான, கல்வியறிவு மிகுந்த ஞானியோ (பாதிரி) தனது சொந்த ஆத்மாவின் விடுதலைக்காக மக்களின் உடம்புகளைத் தியாகம் செய்கிறார்’ என்று காரல்மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கிறது 2000-ம் ஆண்டு கால திருச்சபையின் வரலாறு.
மனித குலத்தின் ஊழியர்களான விஞ்ஞானிகள் உயிர் காக்கும் முறைகளைக் கண்ட போது தேவனின் ஊழியர்களான பாதிரிகளோ கழுமரத்தைக் கண்டுபிடித்தார்கள்.
எனவேதான் தேவகுமாரனைச் சிலுவையில் ஏற்றியவன் பிலாத்தா, திருச்சபையின் முன்னோர்களா என்ற சந்தேகம் வருகிறது.
ஞாயிற்றுக் கிழமைதோறும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாவ மன்னிப்பு அள்ளி வீசும் பாதிரி வகையறாக்கள் 2000 ஆண்டுகளாகச் செய்து வரும் குற்றங்களுக்கு யாரிடம் மன்னிப்பு பெறுவார்கள்? ஒருவருக்கொருவர் பாவத்தையும் மன்னிப்பையும், பரிமாறிக்கொள்வார்களா? விவிலியம் இதற்கு என்ன தீர்ப்பு சொல்கிறது?
விஞ்ஞானம் வளர்ந்து விட்டதால் பூவுலகின் ஒழுக்கம் கெட்டுப்போய்விட்டது என்று இறுதி அஸ்திரம் ஒன்றை ஏவுகிறார்கள் பைபிளின் ஒழுக்கசீலர்கள். அதாவது களிமண்ணிலிருந்து ஆதாம் தோன்றினான் என்றால் ஒழுக்கம். பரிணாம வளர்ச்சி என்றால் ஒழுக்கக் கேடு. பூமி தட்டை என்றால் ஒழுக்கம். உருண்டை என்றால் ஒழுக்கக்கேடு. அதாவது பொய்யும், முட்டாள்தனமும் ஒழுக்கம். உண்மையும், பகுத்தறிவும் ஒழுக்கக் கேடு.
இந்த ‘ஒழுக்கத்தை’ப் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காததால் முன்னாள் சோசலிச நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் கிறித்துவ மதத்தைக் ‘கொடூரமாக’ ஒடுக்கினார்கள் எனக் கூப்பாடு போடுகிறார்கள். ‘புதிய ஏற்பாட்டின்’ காவலர்கள். ரசியாவிலும், சீனாவிலும் இந்த ‘ஒழுக்கத்திற்கு’க் கிடைத்த வெற்றியைத் தான் திருச்சபையும், தேவனாகிய அமெரிக்காவும் கைகோர்த்துக் கொண்டாடுகிறார்கள்.
இரத்தக் கறை படிந்த வரலாறு திருச்சபைக்கு மட்டும் சொந்தமானதல்ல; பார்ப்பன இந்து மதமும், இசுலாமும் தனித்தனியே வேத புத்தகங்கள் வைத்திருந்தது போலவே, தங்கள் சொந்தக் கழுமரங்களையும் நிறுவியிருந்தார்கள்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹவின் திருநாமத்தால் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனுக்கு 35 சிறப்புப் பெயர்கள் உண்டு. அதில் ஒன்று அந்நதீர்-அச்சுறுத்தி எச்சரிப்பது. பைபிளில் பரம்பிதா உலகை ஆறுநாட்களில் படைத்தார். குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். பரமபிதா களிமண்ணில் இருந்து ஆதாமைப் படைத்தார். அல்லாஹ் சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமைப் படைத்தார். பைபிளுக்கம் குர்-ஆனுக்கும் இடைவெளி 557 ஆண்டுகள்.
சிம்சன்
ஆனால் கடவுள் தங்களை எப்படிப் படைத்தார் என்ற உண்மையைத் திருக்குர் ஆன் விளக்கத்திலிருந்து தெரிந்து கொள்வதற்கு முன்னரே 6 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த சிந்து சமவெளித் திராவிடர்கள் கடவுளைப் படைத்து விட்டார்கள் –சுட்ட களிமண்ணைக் கொண்டு.
தசாவதார தத்துவத்தை கைவசம் வைத்திருக்கின்ற பார்ப்பனர்களுக்கு படைப்புத் தத்துவம் பற்றி கவலை இல்லை. அப்படி என்றால் டார்வினின் பரிணாம தத்துவம்? தஞ்சை சரபோஜி நூலகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம்.
இந்தக் கூற்றை திட்டவட்டமாக சைவர்கள் மறுக்கிறார்கள். தசாவதார நாயகன் விஷ்ணுவைப் படைத்தவன் சிவன் தான் என்கிறார்கள்.
ஆனால் கோஷ்டிப் பூசலின்றி அவர்கள் ஏற்கும் படைப்புத் தத்துவம் ஒன்று வேதத்தின் புருஷ சூக்தத்தில் இருக்கிறது. விராட் புருஷனின் தலையிலிருந்து பிராமணர்களும், தோளிலிருந்து சத்திரியர்களும், தொடையிலிருந்து வைசியர்களும், பாதத்தில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள் என்ற ‘உயரிய’ படைப்புத் தத்துவம்தான் அது.
ஒரு வேளை டார்வின் தத்துவத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், தரத்தால் பிரிக்கப்பட்ட நான்கு வகைக் குரங்குகள் அவர்களுக்கு தேவை.
ஈரேழு பதினாலு உலகங்களிலிருந்தும் கடவுளைத் துரத்தும் பணியை விஞ்ஞானிகள் செய்து விடுவார்கள். அதில் ஐயமில்லை.
ஆனால் கடவுளைத் துரத்துவதைவிடக் கடினமான பணி கடவுளின் ஏஜெண்டுகளைத் துரத்துவதுதான். அதை விஞ்ஞானிகள் செய்ய முடியாது. அதற்குச் சமூக விஞ்ஞானிகள் வேண்டும். ஆம். கம்யூனிஸ்டுகள் வேண்டும்.
__________________________________________
புதிய கலாச்சாரம், ஜனவரி – 1997.