வந்தே மாதரம். ஆனந்தமடம் நாவல் வாயிலாக பங்கிம் சந்திரரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடல். தற்போதுள்ள ”ஜன கண மன” வுக்குப் பதிலாக இதையே தேசிய கீதமாக அறிவிக்க வேண்டுமென்பது பாரதீய ஜனதாவின் கோரிக்கை. பார்ப்பன இந்து தேசியத்தை உத்திரவாதம் செய்யும் பாடல் இது என்பதை நிரூபிக்க இதைவிட வேறு சான்று தேவையில்லை.
கசையடியையும், தடியடியையும், சிறைவாசத்தையும் சகித்துக் கொள்வதற்கு காந்தியவாதிகளுக்கு அருமருந்தாகப் பயன்பட்ட ‘வந்தேமாதரம்’ சுதந்திரத்தின் பொன்விழாவையொட்டி மலிவு விலையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
சோனி நிறுவனம் வழங்கும் ஏ.ஆர்.ரகுமானின் ஒரிஜினல் வந்தேமாதரம் விலை அறுபதே ரூபாய். டூப்ளிகேட் வந்தேமாதரம் இன்னும் மலிவு விலையில் கிடைக்கலாம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிறக்கும் பாக்கியம் பெறாதவர்களும், பிறந்தும் டெல்லி சென்று சுதந்திரம் ‘கை மாறுவதை’க் காணக் கொடுத்து வைக்காதவர்களும், 1997 ஆகஸ்டு-14 நள்ளிரவில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் கண் விழித்து அமர்ந்திருந்தோம். தூர்தர்ஷன் மட்டுமின்றி, பி.பி.சி., சி.என்.என், ஸ்டார் போன்ற அந்நியத் தொலைக்காட்சிகளும் பொன்விழாக் கொண்டாட்டத்தை நேரடியாக ஒளிபரப்பின; எம்.டி.வி., வி.சானல் போன்ற சர்வதேசத் தொலைக்காட்சிகள் திரையில் தோன்றும் தங்கள் நிறுவனத்தின் பெயருக்கே மூவண்ணம் தீட்டிவிட்டன. கத்தியின்றி ரத்தமின்றி உலத்தையே இந்தியா வென்றடக்கிவிட்டதோ என்ற ஐயம் ஒரு கணம் எழத்தான் செய்தது.
”1947 ஆகஸ்டில் பெற்றது போலி சுதந்திரம்; இப்போது உலக வர்த்தகக் கழகத்தின் கீழ் இன்னொரு சமஸ்தானமாக இணைந்திருக்கும் இந்தியா, பெயரளவிலான இறையாண்மையையும் இழந்து மீண்டும் காலனியாகி வருகிறது” என்ற உண்மையை ஏகப்பட்ட ஆதாரங்களுடன் சிரமப்பட்டு நிறுவ வேண்டிய அவசியமின்றி மிக எளிதாகப் புரிய வேத்தது இந்தப் பொன்விழாவின் நேரடி ஒளிபரப்பு.
டெல்லி விஜய் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேடையின் பின்புறம் லேசர் வாண வேடிக்கை. முன்புறம் அதை வாய் பிளந்து பார்க்க வந்த இந்தியர்கள். பல்வேறு ‘பிராந்தியங்களின்’ கலைக்குழுக்கள் ஆடிக் களைத்து இறங்கியபின் ரகுமானின் வருகையை அறிவித்தார் அறிவிப்பாளர்.
”சுதந்திரத்தின் பொன்விழாவையொட்டி தான் இசையமைத்திருக்கும் ‘வந்தே மாதரம்’ என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்களைப் பாடவிருக்கிறார் ரகுமான். அவரை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ரகுமானைத் தெரியாதவர்கள் இசையைத் தெரியாதவர்கள்” என்றார்.
ஜீன்ஸ் பாண்ட், தொள தொளப்பான வெள்ளை சட்டை, பிய்ந்துவிடப்பட்ட தலைமுடியுடன் மேடையேறினார் ரகுமான். லேசான ஹம்மிங்கில் தொடங்கியது பாடல். சாமியாடியைப் போல சற்று நேரம் கண்களை இறுக மூடிக் கொண்டு ‘தேசபக்தி’யை வரவழைத்துக் கொண்ட பின்னால் லேசாக வலிப்பு வந்தவரின் தோரணையில் வந்தே மாதரத்தைத் தொடங்கினார் ரகுமான்.
வந்தே மாதரம் ஒளிப்பேழையாகவும் (வீடியோ காசெட்) விரைவில் வெளிவருமாம். தற்போது ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் மட்டும் காட்சியமைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அது மீண்டும் மீண்டும் ஒளிப்பப்படுகிறது. (இந்த தேசபக்திப் பிரச்சாரத்தில் தூர்தர்ஷனை விஞ்சுகிறது சன் டி.வி.)
பாலைவனத்தில் மூவண்ணக்கொடி பறக்கிறது. பாலைவன மணலின் மஞ்சள் நிறத்துக்குத் தோதான எதிர் நிறத்தில் உடையணிந்த இந்தியர்கள் திட்டுத் திட்டாகக் கீழே நிற்கிறார்கள். கொடியின் மறைவிலிருந்து ஹெலிகாப்டர்கள் வெளியே வருகின்றன. கீழே அண்ணாந்து பார்த்து நிற்கும் இந்தியர்களுக்கு சோத்துப் பொட்டலம் போடவா, குண்டு போடவா என்று தெரியவில்லை.
அப்புறம், மணிரத்தினம் – சுகாசினியின் ‘இந்திரா’ படத்தில் தாழ்த்ப்பட்ட சிறுமிகள் பட்டுப் பாவாடை சட்டையுடன் சந்தோஷமாகத் துள்ளிக் குதிப்பதைப் போல, கையில் தேசியக் கொடியுடன் சிறுவர்களும், சிறுமிகளும் குறுக்கு நெடுக்காக ஸ்லோமோஷனில ஓடுகிறார்கள். எல்லோரும் மகிழ்ச்சியையும், வெகுளித்தனத்தையும், வெட்கத்தையும் மட்டுமே வெளிப்படுத்தும் ஆபத்தில்லாத, தொல்லையில்லாத இந்நியச் சிறுவர்கள், சிறுமிகள்.
தனக்கு மெட்டுக்களை வாரி வழங்கும் ராஜஸ்தான் விசயத்தில் ரகுமான் நன்றி மறக்கவில்லை. பள்ளிகள் நடத்தும் சுதந்திரதின அணிவகுப்பு போல இரண்டிரண்டு பேராக பாலைவனத்தில் ஒரு நீண்ட வரிசையை ஊர்வலம் விட்டுவிட்டார். என்ன, சுதந்திரத்தின் சூடு பொறுக்காமல் அவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டிருப்பார்கள்- அவ்வளவுதான்.
பிறகு யானை மீது தேசியக்கொடி; கதகளி நடனம்…. அவ்வளவுதான்.
இந்தக் காட்சிகளின் பின்னணியில், தொலை தூரத்தில், கால்களைக் கொஞ்சம் முன்னால் மடக்கி, கைகளை உயர்த்தி, இதயத்திலிருந்தோ – வயிற்றிலிருந்தோ அல்லாமல் தொண்டையிலிருந்து ”வந்தே…. மாதரம்” என்று ரகுமான் பாடுகிறார். பம்பாய் படத்தில் பாறை மீது நின்று கொண்டி விரக வேதனையுடன் ”உயிரே…. உயிரே” என அரவிந்தசாமி அரற்றும் காட்சி நினைவுக்கு வந்தது.
கதர்க் குல்லாய்க்காரர்கள் போராடியதையும், தடியடிபட்டதையும், சூடு பட்டுச் செத்ததையும் காட்சிகளாக வடிவமைத்து ‘வந்தே மாதரம் ‘ பாடுவதை விட்டு பாலைவனத்தில் ஏன் கொடியேற்றவேண்டும் என்று கலாரசனையற்ற பாமரர்கள் சிந்திக்கலாம்.
சோனி எனும் ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனத்தால் உலகெங்கிலுமுள்ள 27 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் தேசங்கடந்த தேசபக்திப் பாடல் ஒலிப்பேழை – வந்தே மாதரம். அவ்வாறிருக்க அதில் குறுகிய தேசிய உணர்வைத் தூண்டும் விவகாரங்களும், எதிர்கால சந்தையைப் பாதிக்கக் கூடிய கடந்த கால வரலாறும் கிளறப்படாமல் இருப்பது நல்லது என் அவர்கள் கருதியிருக்கக் கூடும்.
விஜய் சதுக்கத்தின் மேடையில் ரகுமான் இரண்டு பாடல்களைப் பாடியபின் கிடைத்த இடைவேளையில் இந்தியாவின் இந்நாள் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் மேடையேற்றப்பட்டார்கள். மைனாரிட்டி அதிசயமான சந்திரசேகர் முதல் 13 நாள் அற்புதமான வாஜ்பாயி வரை அனைவரும் பிடிபட்ட குற்றவாளிகள் போல சிறிது நேரம் மேடையில் வரிசையாக நிறுத்தப்பட்ட பின், தொலைக்காட்சிக் காமெரா ரகுமானிடம் பிரியாவிடை பெற்று பாராளுமன்றம் சென்றது.
மின்னணு இசைக்கருவிகளுடன் மக்கள் மன்றத்தில் ரகுமானின் ‘வந்தே மாதரம்’ தொடர, மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில், பழைய ஆர்மோனியப் பெட்டியின் துணையுடன் பீம்சேன் ஜோஷி நடுங்கும் குரலில் தனது வந்தே மாதரத்தைத் துவங்கினார்.
இந்துஸ்தானி வந்தேமாதரம், பாப் வந்தேமாதராக உருமாறியதெப்படி?
”புதிய ஒலிகளைப் பயன்படுத்தி வந்தே மாதரம் பாடலுக்குப் புத்துயிர் கொடுக்கலாம், எல்லோரும் பாடத்தக்க பாடலாக அதை மாற்றலாம் என்ற யோசனையுடன் என நண்பன் பாலா என்னை அணுகினான்… ஒரிஜினல் மெட்டு மிகவும் ஆன்மீகத் தன்மை கொண்டதாக இருந்தால் (அதைமாற்றி) புதிதாக இசையமைக்க எனக்கு 3 மாதங்கள் பிடித்தது” என்கிறார் ரகுமான்.
வந்தே மாதரம் என்பதைத் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று மொழியாக்கம் செய்து பாட்டெழுதிக் கொடுத்திருக்கிறார் கவியரசு வைரமுத்து. வால்மீகிக்குத் திருத்தம் செய்து ராமாயணத்தைத் தமிழாக்கிய கவிச் சக்கரவர்த்தி கம்பனை இனத்துரோகி என்றார் பெரியார். இந்தக் கவியரசரை என்னவென்று அழைப்பது?
இந்த ஒலி, ஒளிப் பேழைகளை நாம் இன்னும் முழுமையாக்க காண, கேட்கவில்லை. எனினும் பானைச் சோறு எப்படி இருக்கும் என்பதை ஒரு சோறே கட்டுகிறது. முற்றிலும் லண்டனில் பதிவு செய்யப்பட்ட இந்த வந்தேமாதரம் பாடல் ஒலி / ஒளிப் பேழையில் லெக் வாலேசா, அன்னை தெரசா, தலாய் லாமா, மாதுரி தீட்சித் போன்ற பலர் வந்தே மாதரத்திற்கு உதட்டசைத்திருக்கிறார்களாம். கிளிண்டனை அணுகினார்களா என்று தெரியவில்லை.
”ஒருமுற்றிலும் பதிய தலைமுறை என் இசையை ரசித்துக் கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் நான் திரும்பிப் பார்க்கும் போது அவர்கள் ‘முக்காபுலா’, ‘சிக்கு புக்கு ரயிலே’ என்று மட்டும் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. வந்தேமாதரம் போன்ற பாடல் ஒலிப் பேழைகளை நான் வெளியிடும் காரணம் இதுதான்” என்கிறார் ரகுமான்.
”இனி வரும் வருடங்களுக்கு இந்திய இளைஞர்களுக்கு ஒரு இசை உற்சாகத்தை அளிக்கத்தான் வந்தேமாதரம்” என்கிறார் சோனி நிறுவனத்தின் இயக்குநர்.
வந்தமாதரத்தின் இசையை மட்டுமல்ல, பாடகனையும் சர்வதேசத் ‘தரத்திற்கு’ மாற்றியமைத்து விட்டது சோனி. மைக்கேல் ஜாக்சன் போன்றோரைப் போல ரகுமானின் தலைமுடியையும் பிய்த்துத் தொங்கவிட்டு விட்டது. உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைக்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தையே திருத்தியமைக்கலாம் என்னும் போது முடியைத் திருத்துவதொன்றும் பெரிய விவகாரமில்லை.
பொன்விழாவையொட்டி இந்திய இளைஞர்களிடம் சுதந்திரம் பற்றி கருத்து கேட்டது ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி.
”முன்பு சன்னி மொபெட்டில் சென்று கொண்டிருந்தேன்; இப்போது சுசுகி வாங்கியிருக்கிறேன். வேகமாக சுதந்திரமாகச் செல்கிறேன்” என்றார் ஒரு இந்திய இளைஞர்.
ஆகஸ்டு -14 பாகிஸ்தான் சுதந்திரத்தைக் கொண்டாடும் முகமாக வி- சானல் தொலைக்காட்சியில் ஜீன்ஸ் பாண்ட் அணிந்த பாப் பாடகி மேடையில் வந்து குதித்து ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்றவுடன் அரங்கமே விசிலடித்து ஆர்ப்பரித்தது.
ஆகஸ்டு -15 இந்தியப் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டிய வி. சானலின் சிறப்பு நிகழ்ச்சியில் ஒரு பாப் பாடகி மேடையில் தோன்றினார். நாற்காலியில் அமர்ந்து குனிந்து நிமிர்ந்தார். அவரது மேற்சட்டையின் முன்புறம் டர்ர்ரென்று கிழிந்தது – வந்தேமாதரம்!
__________________________________________________________
- புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 1997