Language Selection

நூல்கள் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெடுக்க அப்படியே அதிலிருந்து தோன்றியவை அல்ல இந்த அமைப்புகள். மாறாக உலக அளவில், மையப்படுத்தப்பட்ட முறையில் ஏகாதிபத்திய சிந்தனையாளர்களாலும், வல்லுநர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு, பல ஆயிரம் கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்படும் வலைப்பின்னலின் சிறு சிறு அங்கங்கள் தாம் இந்த ”தன்னார்வக் குழுக்கள்”

எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவலவாழ்வும் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அவற்றுக்கு எதிராக மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர் எழுச்சிகளும் தோன்றும். அவை பாட்டாளிகளின் புரட்சி, தேசிய விடுதலை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுவதும் இயல்பே. ஆனால் அவற்றை இடைமறித்து தம் பக்கம் ஈர்த்து, நிறுவனமயமாக்கிக் கொள்ளும் மாற்று மையங்களாகவே இந்த அரசு சாரா – தன்னார்வக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளிலும் அதிருப்தி, ஆத்திரமடைந்துள்ள மக்களின் உணர்வுகளை நெறிப்படுத்தி, பதப்படுத்தி, அதிகாரபூர்வ, சட்டவரம்புக்குள் அவர்கள் செயல்பாடுகளை முடக்கி வைப்பதற்கு மாற்று அமைப்புக்களும், வழிமுறைகளும், சித்தாந்த விளக்கங்களும் ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய சுரண்டல் – ஒடுக்குமுறை ஏகாதிபத்தியமாக முன்னுக்கு வந்த அமெரிக்காவை ”உலகின் மிகப்பெரிய கொடை வள்ளல் நாடு” என்று பீற்றிக் கொண்டு, அதன் புதிய காலனிய ஆதிக்கத்தை மூடிமறைக்க இந்தத் தன்னார்வக் குழுக்கள் பெரிதும் பயன்பட்டன.

அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமன், ”உலகை சிவப்பு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு” முன்வைத்த ”அமெரிக்க அமைதிப் பேரரசு” திட்டத்தில் மனித நேய நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் முக்கிய இடம் பெற்றன. ஃபோர்டு அறக்கட்டளையோடு, கேர், வோர்ல்டு விஷன் போன்றவையும் சேர்ந்து ஆண்டுக்குப் பலநூறு கோடிடாலர்கள் இந்த ”சமூக சேவைக்காக” செலவிட்டன.

இவை நேரடியாகவும், பின்தங்கிய ஏழை நாடுகளின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக நல அமைச்சகங்களின் மூலமும் பல ஆயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி செய்து, கண்காணித்து இயக்கின. 1960களில் உலகம் முழுவதும் உள்ள அரசுசாரா நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் நிறுவப்பட்டது. இதனுடன் ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்களும், சிந்தனையாளர் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின.

இப்போது அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இரண்டு மட்டங்களில் பணிபுரிகின்றன. ஒன்று நகர்ப்புறங்களிலும் கிராமப்  புறங்களிலும் நேரடியாக மக்களிடம் சென்று ”சமூக சேவைகள்” புரிவது; இன்னொன்று பிரதானமாக நகர்ப்புறங்களில் தமது தலைமையகங்களை நிறுவி, படித்த அறிவுஜீவிப் பிரிவினரிடையே சமூக பொருளாதார அரசியல், பண்பாட்டு ஆய்வுகளை – பயிற்சி, கருத்தரங்குகளை நடத்துவது.

காலனிய காலத்திலும் அதற்குப் பிறகு சிலகாலமும் மதப் பிரச்சாரத்துடன் இணைத்து கல்வி – வேலைவாய்ப்பு, சுகாதாரம் – சத்துணவு, கைத்தொழில்கள் என்று பல்வேறு இலவசத் திட்டங்களை நடத்துவதே தன்னார்வக் குழுக்களின் பிரதானப் பணிகளாக இருந்தன.

ஆனால் 1960களின் பிற்பகுதியில் இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுளுக்கு ”முற்றிலும் புதிய கோட்பாட்டு அடிப்படைகள்” வகுத்துத் தரப்பட்டன. இனி மேலும் தன்னார்வக் குழுக்கள் மக்களுக்கான ”இலவசத்திட்டங்கள்” மேற்கொள்ள வேண்டியதில்லை, அதற்கான அளவு வசதியும் கிடையாது. மக்கள் தமது கோரிக்கைகளுக்காகவும் உரிமைக்காகவும்” போராடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்வதும் அவர்களுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைப்பதும் தான் இனித் தன்னார்வக் குழுக்களின் பணியாக இருக்க வேண்டும் என்று உலக அளவில் முடிவு செய்யப்பட்டது.

பிரேசிலைச் சேர்ந்த பவுலோ பீரியனின் ”சுரண்டப்படுவோருக்கான கல்வியியல்”, பிலிப்பைன்சினுடைய பவுல் அபின்ஸ்கியின் ”அதிகாரத்தின் தத்துவம்” ”சிறியதே அழகு”, கிட் டியர்சின் ”விடுதலை இறையியல்” (சூமேக்கரின்) ஆப்பிரிக்காவில் ”கறுப்பின விழிப்புணர்வு இயக்கம்”, ஆசியாவில் புதிய காந்திய, புதிய புத்த மதக் கோட்பாடுகள் ஐரோப்பா, அமெரிக்காவில் ”புதிய இடதுகள்” ”இளைஞர் அரசியல் மற்றும் பசுமை இயக்கங்கள்” ஆகியன தன்னார்வக் குழுக்களின் வழிகாட்டும் கோட்பாடுகளாகின.

இக்கோட்பாடுகளின்படி மதப்பிரச்சார, மதமாற்ற முயற்சிகள் கைவிடப்பட்டு ”மக்கள் பங்கேற்பு அல்லது அடிமட்ட மக்கள் அமைப்புகள்” மூலம் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தமது குறிக்கோள்கள் என்று அறிவித்துக் கொண்டன.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் – குறிப்பாக அமைப்பு ரீதியில் திரட்டப்படாத உழைப்பாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்களிடையே போய் அவர்களது வாழ்வியல் – சமூக உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் – பண்பாட்டுப் பதுகாப்பு இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளுக்காக போராடும் ”நடவடிக்கைக் குழுக்கள்” அமைக்கப்பட்டன.

”மக்களை அணிதிரட்டுவது”, ”அதிகாரம் பெறுதல்” ”ஒடுக்கப்படுவோரின் விடுதலை” என்று தீவிரச் சவடால்கள் அடித்த போதும் வர்க்கக அணுகுமுறை வர்க்கப் போராட்டம் வர்க்க சித்தாந்தத்தை (திட்டமிட்டு, உணர்வுபூர்வமாகவே) விலக்கி வைப்பதில் குறியாக உள்ளன, இத்தன்னார்வக் குழுக்கள். இத்தகைய நடவடிக்கைக் குழுக்களைத்தான் உண்மையான அடிமட்ட மக்கள் இயக்கங்கள் என்றும் ”புதிய சமூகப் புரட்சியின் முன்னோடிகள்” என்றும் ஆளும் வர்க்கப் பத்திரிக்கைகள் புகழ்கின்றன.

இவை ”வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் உணர்வு பூர்வமாகத் தலையிடும் செயற்போக்கு” என்று தன்னார்வக் குழுக்களின் சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர் (கோத்தாரி). இவை ”மாற்று வளர்ச்சிக்கான முழுமைபெற்ற இயக்கமாக மலரும் சாத்தியக் கூறு உடையவை” என்கின்றார் (டி.எல்.சேத்).

இவையெல்லாம் காட்டுவது என்ன? மக்கள் தமது விடுதலை, உரிமைக்கான கோரிக்கைகளுக்காகப் போராடும் மையங்களாக, கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையிலான வர்க்க அமைப்புகளை மட்டுமே இனிமேலும் நம்பியிருக்க தேவையில்லை.

அவற்றுக்கு மாற்று மையங்களாக இதோ அரசு சாரா, கட்சிசாரா, வர்க்கம் – அரசியல் சாரா நிறுவனங்கள் இருக்கின்றன என ”மாற்றுக்களை” வைப்பதுதான். இதன் மூலம் பாலோடீரியர், பவுன் அலின்ஸ்கி, கிட்டியர்சி, சூமேக்கர் போன்றவர்களின் கோட்பாடுகளை முன்வைத்து, மார்க்சிய சொற்களைப் பிரயோகிப்பது, பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுப்பதால் இந்த அமைப்புகள் இடதுசாரித் தோற்றம் தருகின்றன.

இந்த அமைப்புகள் தமது களப்பணியிலும் கூட ஒருவித இரகசிய – சதிகார அணுகுமுறையைக் கையாள்வதால் அந்நிய உளவாளிகளும் நாச வேலைக்காரர்களும் ஊடுருவுவதற்கும், அதற்காக ஆட்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும் இவை பயன்படுகின்றன.

1960-களில் இருந்தே ஏகாதிபத்திய வல்லரசுகளின் புதிய காலனிய தேவைகளுக்காக மேற்கத்திய சமூகவியல், அரசியல், பண்பாட்டு சிந்தனையாளர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வுக் கழகங்கள் கீழை நாடுகளின் தமது சகபாடி நிறுவனங்களுடன் இணைந்து கம்யூனிய சித்தாந்தத்துக்கு எதிராக ”புரட்சிகர மாற்றுகளை” உருவாக்கும் பணியில் இறங்கினர்.

”இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு என்கிற சித்தாந்த வேறுபாடுகள் அடிப்படையில் தீர்வுகள் முன் வைக்கப்படுவது இனிமேலும் அவசியமில்லை என்பதை முன் வைக்கும் ”சித்தாந்தத்தின் முடிவு” முதலிய கருத்தாக்கங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. பிரான்சிஸ் புக்குயோமாவின் ”வரலாற்றின் முடிவு” என்கிற கோட்பாடு பிறகு வந்தது.

வர்க்கம், வர்க்கப் போராட்டம் மற்றும் வர்க்க சித்தாந்தக் காலகட்டம் இனிமேலும் சாத்தியமில்லை, காலாவதியாகிவிட்டது என்று ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் பிரச்சாரம் செய்தனர். இவர்கள் ”ஸ்டாலினிசம்”, ”மரபுவழி மார்க்சிசம்” என்பதாகக் கற்பனை செய்து கொண்ட தத்துவத்தையும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சமரச செயல்பாடுகளையும் முன்னிறுத்தி  மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தின் மீதே அவதூறு பரப்பினர்.

புறநிலை யதார்த்தத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிறுத்தி மார்க்சிய லெனினியத்தைச் செழுமைப்படுத்துவதாகப் புளுகினர்; மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகள் ஐரோப்பிய முதலாளத்துவத்தை மட்டுமே ஆய்வுக்கெடுத்துக் கொண்டது என்றும் தாம் மண்ணுக்கேற்ற மார்க்சியம் படைப்பதாகவும் சொல்லி அதைப் பகுதியாகவோ, முழுமையாகவோ நிராகரிக்கும்படி தூண்டினர்.

தாமும் மார்க்சியப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கீழை மார்க்சியம் – மேலை மார்க்சியம், இளைய மார்க்ஸ் – முதிய மார்க்ஸ், ஐரோப்பிய கம்யூனிசம், அந்நியமாதல், இருத்தலியல், நவீனத்துவம், அமைப்பியல் வாதம், புதிய இடது சிந்தனைகள் போன்ற பல பிறழ்வுக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பரப்பினர். இதற்காக சார்த்தர், கிராம்சி, மார்க்யூஸ், அல்தூஸ்யர், கெம்யூ, பிராங்ஃபர்ட் சிந்தனையாளர்கள் போன்ற வகுப்பறை ”மார்க்சியக் கோட்பாட்டாளர்”களின் படைப்புகளைக் கடத்தி வந்தார்கள்.

இவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றுதான். மார்க்சிய – லெனினியம், வர்க்கம், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக வர்க்க சமரசத்தையும் பல்வேறு வகை திரிபுகளையும் முன்வைத்து மார்க்கிய லெனினியத்தின் மீதும், புரட்சிகர அமைப்புகளின் மீதும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீதும் பரந்துபட்ட மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் கட்சியின் தனிநபரின் சர்வாதிகாரம், எல்லாவற்றையும் உற்பத்தி பொருளாதாரம், வர்க்கம் என்று குறுக்கிச் சுருக்கிப் பேசும் வறட்டுத்தனம் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்கத் தூண்டுவதே.

இந்திய அரசு சாரா நிறுவனங்களின் சித்தாந்த குரு ரஜினி கோத்தாரி, மார்க்சியம் – தொழிலாளி வர்க்க சித்தாந்தம் வழக்கிழந்து விட்டது என்று வாதம் புரிந்து வந்தார். ”உலகத் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபடுவதற்கு பதில் சர்வதேச நடுத்தர வர்க்கமே தனது விடுதலையைப் பற்றிய உணர்வுகளைக் கொண்டதாக மாறிவருகிறது” என்று இவர் பிரகடனம் செய்தார்.

இவரும் பிற அரசு சாரா நிறுவன சித்தாந்திகளும் அப்போது வாதிட்டது என்னவென்றால் கம்யூனிசக் கட்சியால் தலைமை தாங்கப்படும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குப் பதிலாக உணர்வூட்டப்பட்ட நடுத்தர வர்க்கத் தொழில் முறைத் தலைவர்களால் கட்சிசாரா அரசியல் நிகழ்ச்சிப் போக்கில் மக்கள் திரளால் வழிநடத்தப்படும் இயக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதுதான்.

 

”நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, இயக்கும் அடிமட்டக் களப்பணியிலுள்ள அரசுசாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் வேண்டுமானால் ஊடுருவல், உளவு, சதி, நாசவேலை, மக்கள் இயக்கங்களை சீர்குலைவு செய்வது போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம். அத்தகைய அமைப்புகளை அம்பலப்படுத்துவதும் எதிர்ப்பதும் சரிதான்.”

”ஆனால் சி.டி.ஆர்.ஏ., ஐ.எஸ்.ஐ., ஐ.டி.யாஸ், மிட்ஸ், சாமிநாதன் ஃபவுண்டேசன் போன்ற ஆவணப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அரை அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள், அந்நிய நிதியுதவி பெற்ற பல்கலைக் கழக அரங்கங்கள் அப்படிப்பட்டவை அல்ல. விவரங்களை சேகரிக்கவும் ஆய்வுகளை நடத்தவும் முற்போக்கு இயக்கத்தவரும் பயன்படுத்தலாம்” என்று அவற்றுடன் தொடர்புடைய பலரும் நியாயம் கற்பிக்கின்றனர்.

களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக்குழுக்கள் நேரடியாக மக்கள் முன் வேலை செய்வதால் இன்றோ நாளையோ அம்பலப்பட்டுப் போவது சாத்தியம். ஆனால் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.

அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பணிகளை மதிப்பீடு செய்து கண்காணிப்பது; பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் போக்குகளைப் பற்றிய விவரங்கள் சேகரித்து, ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பிப்பது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்குத் திட்டப் பணிகளைப் பரிந்துரை செயவது போன்ற வேலைகளை இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்கின்றன.

உதாரணமாக, இந்தியாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான நெல் மூலக்கூறு (ஜீன்ஸ்)களைக் கடத்திக் கொண்டு போய் ஏகாதிபத்திய பன்னாட்டு விதை, உரம், பூச்சி மருந்து, இரசாயன ஊக்கி உற்பத்தித் தொழில்கள் புரியும் பன்னாட்டு தேசங்கடந்த தொழில் நிறுவனங்களுக்கு விற்பது முதல் நாட்டுப்புற கலை – இலக்கிய மரபுகளைக் கொள்ளையிடுவது வரை சாமிநாதன் ஃபவுண்டேசன் செய்கிறது.

இதேபோல மொழி, மரபுகள், தொற்று நோய்கள் பரவுதல், சிறுவர் – கொத்தடிமை உழைப்பு போன்ற பல ஆராய்ச்சிகளும் ஏகாதிபத்திய பன்னாட்டு தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குப் பயன்படுகின்றன. இவையெல்லாம் எப்படி அவற்றின் தொழில்களுக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கும், இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எப்படிப் பயன்படுகின்றன என்பது நேரடியாகத் தெரிவதில்லை.

குறிப்பாக, ஏகாதிபத்திய உலகமயமாக்கம், மறுகாலனியாக்கம் என்ற கொள்கையின் கீழ் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் இத்தகைய நிறுவனங்கள் மேலும் புதிய தகுதிகளைப் பெற்றுள்ளன.

கட்டுமான மறுசீரமைப்புத திட்டங்களால் உலகின் பல நாடுகளில் பஞ்சம் – பசி – பட்டினிச் சாவுகள், ஆலைகள் மூடி வேலை இழப்பு – வேலையில்லாத் திண்டாட்டம் பன்மடங்கு பெருகி பரந்துபட்ட மக்கள் ஆத்திரமும் கோபமும் கொண்டுள்ள இந்தச் சமயத்தில் அவர்கள் போராட்டத்தில் கிளர்ந்தெழுவதை திசை திருப்புவதற்கு  அரசு சாரா நிறுவனங்கள் முக்கியக் கருவிகளாகப் பயன்படுகின்றன.

80 நாடுகளின் அரசு சாரா நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி நிதியுதவி செய்து, ”பசி, உலக வறுமையின் அடிப்படைக் காரணங்கள் குறித்து விவாதங்கள் புரியவும், ஒரு பொதுத்துறை தனியார் வளர்ச்சி உதவித் திட்டத்துக்கான தொகுதியை விரிவுப்பத்தவும், உறுதியூட்டவும்,இந்த வளர்ச்சித் திட்டக் கல்வியில் ஈடுபடும் நிறுவனங்களின் வலைப்பின்னலை வளர்க்கவும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவனம் பணியாற்றியது. (வளர்ச்சிக்கான வழிகாட்டும் கல்வித்திட்ட உதவிகள், 1987 பொருளியல் ஆண்டு அறிக்கை)

கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் அரசுகளின் பங்கு – பாத்திரங்களை வெட்டிவிட்டு அதற்கு மாற்றாக ”சமூகப் பங்கேற்பு” ”அடிமட்டத் திட்டமிடுதல்” ”வளர்ச்சியில் பங்குதார்கள்” என்ற பெயரில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. சமூக நலப்பணிகளுக்கு இனியும் அரசு அதிகாரபூர்வ சட்டபூர்வ அமைப்புகள் பொறுப்பல்ல; அவை மக்களின் சொந்தப் பொறுப்புதான் என சுமையை – பழியை மக்கள் மீதே மாற்றுவதுதான் இதன் நோக்கம்.

அவை மாற்றுப் பொருளாதாரத்திட்ட உருவரைகள் – வரவு செலவுத் திட்டங்கள், மாற்றுப் பொருளாதார உச்சி மாநாடுகள் நடத்துகின்றன. ஐ.எம்.எஃப் – உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் ஆண்டுக் கூட்டங்களுக்குப் ”போட்டி”க் கூட்டங்கள் நடத்துகின்றன. சூழலுக்குத் தகுந்த பாரிய மதிப்புகளின் அடிப்படையிலான மாற்றுப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடித்து நிற்கும் வாய்ப்புடைய வளர்ச்சி திட்டங்கள் மூலம் கட்டுமான மறுசீரமைப்பு, உலகமயமாக்குதலை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றன.

ஆனால் இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்குவதற்கே கூட அதே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தாம் நிதியுதவி செய்கின்றன. அதனால்தான், இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்கும் எல்லா நாடுகளிலும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் மேலும் மேலும் முற்றி மீளமுடியாத கட்டத்தை எட்டிய போதும், இந்த நாடுகளில் அரசியல் வாழ்வில் பண்பாட்டுச் சீரழிவும், கிரிமினல் மயமாவதும், இலஞ்ச ஊழலும் தலைவிரித்தாடிய போதும், அந்தந்த நாட்டு அரசுகளைத் தகர்ப்பது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி இந்த அரசு சாரா நிறுவனங்கள் தப்பித் தவறி மேலெழுந்த வாரியாகக் கூட மூச்சு விடுவதே கிடையாது.

”மதபோதனையோ, மத மாற்றமோ கண்காணிப்பும் கிடையாது. ஏராளமான ஆய்வு வசதிகளும், நிதியும் கணிசமான ஆள்பலமும் உள்ள அரசு சாரா – தன்னார்வக் குழுக்களை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, திறந்த மனதுடன் இருக்கும் தங்களிடம் ஒரு உரையாடலை ஏன் நடத்தக் கூடாது” என்று புரட்சி சக்திகளுக்கு இந்தக்குழுக்கள் தூண்டில் வீசுகின்றன. நடுத்தர வர்க்க ஊசலாட்ட நபர்கள் ஓடிப் போய் அந்தத் தூண்டிலைக் கவ்விக் கொள்கின்றனர்.

புரட்சிகர அறிவுஜீவிகளைக் கூட நிரந்தர உரையாடலில் நிறுத்தி வைப்பதுதான் அக்குழுக்களின் நோக்கம். புரட்சியின் மீதும் கட்சியின் மீதும் ஐயவாதத்தை விதைத்து செயலிழக்க வைப்பதுதான் அவற்றின் இலக்கு.

இறுதியாக, அவை அரசு சாரா நிறுவனங்கள் என்று தான் சொல்லிக் கொள்கின்றனவே தவிர அரசு எதிர்ப்பு நிறுவனங்கள் அல்ல என்கிற ஒரு உண்மையே போதும், – அவை மண் குதிரைகள் தாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு!

_______________________________________

புதிய கலாச்சாரம், மே 1997.