தமிழ் தேசியத்தின் ஊடாக, இனமுரண்பாட்டையும், சிங்கள தேசியத்தையும் பார்த்தல் மார்க்சியமல்ல. மாறாக ஆளும் வர்க்கத்தின் பெரும் தேசிய வர்க்க உணர்வுகளின் மூலமும், சிங்கள தேசிய இன உணர்வுகளின் மூலமும் உருவானதே இனமுரண்பாடு. இப்படித்தான் இதை இனம் காணவேண்டும். இப்படி இனங்கண்டு போராடுவதே சர்வதேசிய உணர்வாகும்.
தமிழ் தேசியத்தின் ஊடாக இனமுரண்பாட்டை புரிந்து, அதற்கு ஏற்ப அரசியல் ஓட்டுப்போட முடியாது. மாறாக சிங்களப் பாட்டாளி வர்க்கம் தன்னை அரசியல் மயப்படுத்துவது என்பது, சிங்கள தேசியத்துக்கு எதிரான சர்வதேசியத்தை உருவாக்குவதன் மூலம தன் சொந்த வர்க்கப் போராட்டத்தை அது நடத்த வேண்டும். சிங்கள தேசியத்துக்கு பதில் சர்வதேசியத்தை உயர்த்துவதைத் தவிர, வேறு எந்தத் தேசியமும் இருக்க முடியாது. இங்கு தமிழ் தேசியம் பற்றிய விடையம், இங்கு இரண்டாம் பட்சமானவை. சிங்கள தேசியம் பற்றிய விடையமே முதன்மையானது. அதனூடாகவே இன முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்.
சிங்களப் பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய உணர்வு பெற்றுப் போராடுவது என்பது, சிங்கள தேசியத்தை எதிர்த்துப் போராடுதல் தான். பிரதான முரண்பாடான இனமுரண்பாடு உருவாக்கும் சிங்களப் பெருந்தேசிய கண்ணோட்டத்துக்கு எதிராக, சர்வதேசியக் கண்ணோட்டத்தை பிரச்சாரமாக கிளர்ச்சியாக சிங்கள மக்கள் முன் முன்னெடுக்கவேண்டும்.
லெனின் இதற்குத் தெளிவாக வழிகாட்டுகின்றார். "பூர்சுவா தேசியவாதமும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதமும் இணக்கம் காணமுடியாத பகைமை கொண்ட இரு வேறு கோசங்களாகும்" என்ற லெனினின் இக் கூற்றை, இலங்கைப் பாட்டாளி வர்க்கம் தன் அரசியலாக நடைமுறையாக முன்னெடுத்தல் அவசியமாகும். சிங்களப் பாட்டாளி வர்க்கம் இதைச் செய்யத் தவறியதால் தான், இலங்கையில் பிரதான முரண்பாடாக இனமுரண்பாடு இன்று வரை தொடருகின்றது. பெரும்பான்மை இனமான சிங்கள இனம் சார்ந்து இலங்கை ஆளும் வர்க்கம் முன்னெடுக்கும் அரசியல் அடித்தளமான தேசியத்தை, சிங்களப் பாட்டாளி வர்க்கம் எதிர்த்துப் போராடாத வரை, பாட்டாளி வர்க்கக் கட்சியை அது கட்டமுடியாது.
சிங்கள மக்களை தன் சொந்த பூர்சுவா தேசிய சிந்தனைக்கு எதிராக சர்வதேசிய உணர்வுடன் அணிதிரட்டாத வரை, பாட்டாளி வர்க்கம் என்று சொல்லிக் கொள்ளும் அருகதை யாருக்கும் கிடையாது.
சிங்கள மக்களை அதன் தேசிய உணர்வில் இருந்து சர்வதேசிய உணர்வுக்கு அணிதிரட்டும் அரசியல் தான், இனமுரண்பாட்டுக்கான தீர்வை முன்வைக்குமாறு நிர்ப்பந்திக்கின்றது. தமிழ் தேசியமோ, சிறுபான்மை இனமோவல்ல. இங்கு தீர்வு என்பது முரணற்ற ஜனநாயகத்தை முன்வைப்பதுதான். அதாவது இங்கு முரணற்ற ஜனநாயகம் மட்டும் தான் தேசிய இனப்பிரச்சனைக்கான ஒரேயொரு தீர்வாகும்.
முரணற்ற இந்த ஜனநாயகம் தான், சுயநிர்ணயம் என்ற மார்க்சியக் கோட்பாட்டைத் தருகின்றது. இது இன ஐக்கியத்தை விரும்பி ஏற்பதா அல்லது அதை பலாத்காரமாக திணிப்பதா என்பதை வரையறுக்கின்றது. சர்வதேசிய உணர்வுக்குப் பதிலான, பெரும் தேசிய உணர்வுதான் பலாத்காரமான ஐக்கியத்தை திணிக்கின்றது. இது தான் பிரிவினைவாதமாக மாறுகின்றது. இதற்கு மாறாக சர்வதேசியமோ விரும்பி ஏற்கும் ஐக்கியத்தை முன்வைக்கின்றது. இதன் மூலம் பலாத்காரமான ஐக்கியம் உருவாக்கிய பிரிவினையை மறுதளித்து விட முடியாது. மாறாக பிரிவினைக்குப் பதில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய ஐக்கியத்தை முன்வைப்பதன் மூலம் அதை சர்வதேசிய உணர்வாக்கவேண்டும். இதுதான் முரணற்ற ஜனநாயகத்தின் அரசியல் சாரமாகும்.
பி.இரயாகரன்
14.08.2012
1. இனவொடுக்குமுறையையும் பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
2. தமிழ் சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
7. "கோத்தாவின் யுத்தம்- ஒரு நல்வரவு சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
9. இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்
10. இனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 10
11. தமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா ? இல்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்