"நான் வந்து உழைச்சு உங்களை காப்பாத்துவன் என்று சொன்னான், இப்ப எல்லாமே போச்சே"..... மரியதாஸ் நேவிஸின் அழுகுரலால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறை வாசலை ஏககாலத்தில் ஓராயிரம் கண்கள் நிலைகுத்தி நின்றன. அவர்கள் எல்லோருக்கும் ஆச்சரியம் என்னடா திடீரென இங்கு தமிழ் குரல் கேட்குதே என்று. அவ்வளவுதான். அடுத்தகணம் ஏதும் வாகன விபத்தில் ஆரும் தமிழர்கள் செத்திருக்கலாம் என்று ஒவ்வொருத்தரும் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு போயிருக்கலாம். அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தங்களின் உறவுகளால் அடித்துக் கொல்லப்பட்ட டில்ருக்‌ஷனின் தந்தையின் அழுகுரல்தான் அது என்று.

யூலைமாசம் 28ந் திகதி மரியதாஸ் மகனை ராகம வைத்திய சாலையில் பார்த்த போது, டில்ருக்‌ஷனுக்கு தலை அசைவு இருந்தது. வைத்தியரும் சொல்லியிருந்தார் "முன்னேற்றம் இருப்பதாகவும், தாங்கள் அவனுக்கு தண்ணீர் கொடுத்திருக்கிறம் என்று" இது அவருக்கு பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது. அந்த சந்தோசத்தோடு மகனுக்கு கொடுப்பதற்கு இளநீரும், மகனை துடைப்பதற்கு கொலோனும் வேண்டிக் கொடுத்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போயிருந்தார்.

ஒற்றை ஆளின் உழைப்பில் நாலுபேர் கொண்ட அந்த குடும்பம் ஓடவேணும். மரியதஸின் மனைவி கலிஸ்ரா ஒரு நோயாளியும்கூட. மரியதாஸ் ஒரு நேரம் தொழிலுக்கு போகா விட்டாலும் குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேணும். இந்த நிலைமையில்தான் தனது மூத்த மகனைப் பார்கவும் வரவேணும். கடந்த யூன் மாதம் 29ம் திகதி வவுனியா சிறைச் சாலையில் மகனைப் பார்த்த மரியதாஸ், திரும்பவும் யூலை மாசம் 17ந் திகதி ராகம வைத்திய சாலையில்தான் டில்ருக்‌ஷனை மரணப்படுக்கையில் பார்த்தார். கோமாவில் இருந்த டில்ருக்‌ஷனால் அப்பாவை பார்க்க முடியவில்லை. அன்றிலிருந்து தனது வீட்டுக் கஷ்ட்டத்தையும் பொருட்படுத்தாது வாரத்தில் இரண்டு தடவைகள் வைத்திய சாலைக்கு வந்து போவதை வழக்கமாக்கி கொண்டார். தனக்கு மொழி தெரியாததால் நண்பர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொள்வார். உறவினர்கள்தான் டில்ருக்‌ஷனை வைத்தியசாலையில் பார்க்க முடியும் என்ற சிறைச்சாலை உத்தரவிற்கமைய நண்பரையும் உறவினர் என்று சொல்லி மகர சிறைச்சாலையில் அனுமதி எடுத்துக் கொள்வார்.

டில்ருக்‌ஷனை வைத்திய சாலையில் பார்க்கப் போகும் போதெல்லாம் மரியதாஸ் ஒரு நாளும் மனைவியை கூட்டிச் சென்றது கிடையாது. மரணப் படுக்கையில் கிடக்கும் மகனின் காலில் விலங்கிட்டு கட்டிலில் பிணைத்திருக்கும் கொடுமையை எந்த தாயாலும் தாங்கமுடியாது என்பதனாலேயே அவர் மனைவியை கூட்டிச் செல்வதை தவிர்த்து வந்தார். ஆனாலும் கடைசியாக தான் பார்த்தபோது மகன் டில்ருக்‌ஷனின் தலைப்பகுதி அசைவிருந்ததாலும், இந்த பத்து நாளில் மகன் கொஞ்சமாவது தேறியிருப்பான் என்ற எண்ணத்தோடும்தான் மனைவியையும் சேர்த்துக் கூட்டிப் போனார்.

"மகர சிறைச்சாலைக்கு போய் அனுமதி எடுத்திட்டு வைத்தியசாலைக்குப் போய் போன் பண்ணுறன் நீ ஆட்டோவை பிடித்திட்டு அங்கு வா" என்று கூறி, மனைவியை நேரடியாக சிறச்சாலைக்கு கூட்டிப் போகாமல் தெரிந்த வீட்டில் நிறுத்திவிட்டுத்தான் மரியதாஸ் சிறைச்சாலைக்கு போயிருந்தார். வழமைக்கு மாறாக மரியதாஸை சிறைச்சாலைக்குள் வரவழைத்த அதிகாரிகள் இருக்கையும் கொடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் வழமைக்கு மாறாக இருந்ததாலும், " வந்து வந்து பழக்கப்பட்டதால இண்டைக்கு நான் தனியாக வந்ததால நேரத்துக்கு அனுமதியத்தந்து விடப்போறாங்கள் போல" என்று நினைத்துக்கொண்டு தனக்கு வந்த பதட்டத்தையும் ஒரு வாறு சமளித்துக் கொண்டிருக்க, மொழிபெயர்ப்புக்கு ஒரு பெண்ணையும் கூட்டிக் கொண்டு அதிகாரி ஒருவர் வந்து மரியதாஸ் இருந்த கதிரைக்குப் பக்கத்துக் கதிரையில் அமர்ந்தார்.

மரியதஸுக்கு பக்கத்திலமர்ந்த அதிகாரி சிங்களத்தில் சொல்ல, "ஐயா உங்கட மகன் இன்றைக்கு கலையில இரண்டரை மணிக்கு இறந்துவிட்டார்" என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த மொழி பெயர்க்கும் பெண் மொழிபெயர்த்துச் சொன்னாள். மரியதாஸுக்கு தொண்டை வரை வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் ஓவென கதறினார். "என்ர மகனுக்கு இப்படி நடந்திருக்குமெண்டு நான் கனவினிலும் நினைத்துக் கொண்டு இங்கு வரல்ல" என்று அழுது கொண்டிருக்கும் போதே அதிகாரி நகர்ந்து சென்றார்.

"ஐயா நீங்கள் கொஞ்சம் வெளியே நில்லுங்கள் நாங்கள் சீக்கிரத்தில் அலுவல்களை முடித்து கடிதம் தருகின்றோம் நீங்கள் போய்ப் பார்க்கலாம்" என்று அந்த பெண் சொல்ல, மரியதாஸும் சிறைச்சாலை கதவை தண்டி வெளியே வந்தார்.

மரியதாஸுக்கும் மகர சிறைக்குமான தொடர்பை அந்த சிறை அதிகாரிகள் இன்னும் சிறிது நேரத்தில் முடித்து வைக்கப் போகிறார்கள். ஆனால் இன்னும் எத்தனை "மரியதாஸ்" இங்கு வந்து போகப் போகிறார்களோ?.

மரியதாஸ் வெளியே வந்து முதல் வேலையாக தனது சட்டத்தரணியை தொடர்பு கொண்டு விஷயதை சொல்லிவிட்டு, சிறைச்சாலைக் கடிதத்துடன் வைத்திய சாலைக்கு செல்ல, அவர்களும் வருவதற்கு நேரம் சரியாக இருந்தது.

யாழ்ப்பாணம் பாசையூரில் மாசி மாதம் 26ந் திகதி 1976ம் ஆண்டு ஒரு மீனவக்குடும்பத்தில் பிறந்த டில்ருக்‌ஷன் தனது ஆரம்ப கற்கையை சென் ஜோசப் கல்லூரியிலும், உயர் தர கலைப் பிரிவை சென் பற்றிக் கல்லூரியிலும் தொடர்ந்திருந்தான். டில்ருக்‌ஷன் எழுதிய பரிட்சை முடிவை பார்த்துக் கொண்டு 1995 ஐப்பசியில் டில்ருக்ஷன் குடும்பத்துடன் பூநகரி நாச்சிக்குடாவுக்கு இடம் பெயர்ந்தார்.

டில்ருக்‌ஷன் தகப்பனுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட பெரிதும் விருப்பம் காட்டவில்லை. மரியதாஸும் தனது இரண்டவது மகனுடன் சேர்ந்து  கடற்தொழிலில் ஈடுபட, டில்ருக்‌ஷன் நாச்சிக்குடாவிலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டராசியராக பணியாற்றினான். தனக்கு கிடைத்த மீதி நேரத்தை வீட்டுத் தோட்டங்கள் செய்வதிலும் செலவழித்தான்.

குடும்பச் சூழ்நிலை தொண்டராசிரியப் பணியில் டில்ருக்‌ஷனை தொடர்ந்து நிலைத்திருக்கவிடவில்லை. 1998இல் விடுதலைப் புலிகளின் சூழல் பல்பொருள் வாணிபத்தில், வருமானத்தை அடிப்படியாகக் கொண்ட ஒரு ஊழியராக சேர்ந்து கொண்டார். ஆனாலும் காலச் சூழல் டில்ருக்ஷனையும் தவிர்த்துவிட விரும்பவில்லை. 2000ம் ஆண்டு டில்ருக்ஷன் விடுதலைப் புலிகளின் முழுநேர உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

டில்ருக்‌ஷன், குடும்பம்பத்திலிருந்து தன்னை தனிமையாக்கிக் கொண்டான். 2009ம் ஆண்டு முள்ளி வாய்க்கால் போரின் போது டில்ருக்‌ஷனின் குடும்பம் தப்பித்து கடல்வழியாக பருத்துதுறையை வந்தடைந்த போது இராணுவத்தினரால் கைது செய்து செய்யப்பட்டு சாவகச்சேரி பெண்கள் பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். இடைத்தங்கல் முகாமில் இருந்தவர்களை சுமூகவாழ்வுக்கு திரும்புவதற்கு இராணுவம் அனுமதித்த நேரத்தில் மரியத்தாஸ் குடும்பமும் அதில் சேர்க்கப்பட்டிருந்தது.

2009ம் ஆண்டு கடைசிப் போரின் போது வவுனியாவுக்கு தப்பி வந்த டில்ருக்‌ஷன் சக நண்பர்களால் இரணுவத்திடம் காட்டிக்கொடுக்கப்பட்டு வவுனியாவில் இராணுவத்தால் தேடப்படும் ஒரு நபராக மாறியிருந்தார். 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் 17ந் திகதி வவுனியாவில் வைத்து டில்ருக்‌ஷன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டான். அங்கிருந்தே தனது குடும்பத்துக்கு கடிதமூலம் தொடர்பை ஏற்படுத்தியிருந்தான்.

ஜோசப் இராணுவ முகாமில் வைத்து பல வகையான சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்ட பின், டில்ருக்‌ஷன் வவுனியா சிறைக்கு மாற்றப்பட்டான். வவுனியா சிறையில் இருக்கும் போதே டில்ருக்‌ஷனை அப்பாவும் அம்மாவும் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சந்தித்துள்ளனர். கடைசியா யூன் மாதம் 17ந் திகதி டில்ருக்‌ஷனை பார்க்க சென்ற அம்மாவிடம் "எனக்கு விரைவில் வழக்கு முடிந்துவிடும், நான் வந்து உழைத்து உங்களைப்  பார்ப்பன்" என்று கூறியிருக்கிறார். ஆனால் கடைசியாக மகனின் பிணத்தைத்தான் வீட்டுக்கு கொண்டு வந்திருக்கின்றார் அந்த அம்மா.

நிமலரூபனை காலை உடைத்து, கையை உடைத்து, நெஞ்சை பிளந்து காயப்படுத்தி மரணத்துக்கு ஆளாக்கினார் அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர்.

டில்ருக்ஸனின் தலையில் புத்தகதை வைத்து பொல்லால் ஓங்கி அடித்து மரணப்படுக்கைக்கு தள்ளினார் அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர்.

இதே சிறைச்சாலை அத்தியட்சகரால், தாக்கப்பட்டு மரணப் படுக்கையில் மகர சிறைச்சாலை வைத்திய சாலையில் இருக்கும் சசி, ஜெபநேசன் இன்னும் எத்தனை நாளுக்கு......

மகர சிறைச் செல்லில் யாரும் பார்க்க முடியாது, இடது கால் உடைந்து நடக்க முடியாமலும், முழங்கை பிரண்டு ஏற்பட்ட காயத்துக்கு யூன் மாதம் 31ந் திகதி கட்டிய மருந்துக்கு இன்னும்(09.08.12) மாற்று மருந்து இல்லாமலும், முள்ளந்தண்டு பாதிப்புடனும் இருக்கும் குகேந்திரன், வயிற்றில் ஏற்பட்ட பெரிய காயத்துக்கு போட்ட கட்டுடனும், கால் நடக்கமுடியாமலும் இருக்கும் புவநேந்திரன்....

வவுனியா சிறையிலிருந்து மகர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு மீதமிருக்கும் கருணன், கெளதமன், குருபரன், பிரசாந், செல்வகுமார், குகேந்திரன், அஜித்பொன்சேகா, கட்டை லோகேஸ்வரன், சிவாநந்தன், கந்தசாமி, புஸ்பேந்திரன், குஜேந்திரன், ஜோசப் அழகரெத்தினம், வரதராஜ், அந்தோனிப்பிள்ளை, சந்திரசேகரன், ஜெபநேசன், சசி ஆகியோர் நரக வேதனையே அனுபவிக்கின்றனர். வேண்டுமென்றே மலசலகூட கழிவுக்குழியின் மேல் வைத்து உணவு வழங்குகின்ற நிருவாகம், துவேசத்தை கக்கும் ஊழியர்கள், போதிய மருத்துவமற்ற நிலை. இவை எல்லாமே இவர்களை மன நிலை பாதிக்கப்பட்டவர்களாக உருவாக்க இந்த அரசு முன்னெடுக்கும் முன்நகர்வுகளே.

தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கி விட வேண்டும் என்று கனவு கண்ட இராஜேஸ்வரி இலங்கை அரசால் நிர்க்கதியாக்கப்பட்டாள்!

தங்களை உழைத்து காப்பாற்றுவான் டில்ருக்‌ஷன் என்று நம்பியிருந்த மரியதாஸ் குடும்பம் இலங்கை அரசால் நிர்க்கதியாக்கப்பட்டார்கள்!

நிமலரூபனுக்காகவும், டில்ருக்‌ஷனுக்காகவும் இன்னும் சிறைக்கைதிகளுக்காகவும் மனிதநேய அமைப்புக்களாலும், அரசியற் கட்சிகளாலும் செய்யப்படும் எதிர்ப்புப் போராட்டம், மக்களை எப்போதும் அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வோடும், கொதி நிலையிலும் வைத்திருக்க உதவும். ஆனாலும் மனித அவலத்தில் ஜனநாயகம் பேசும் அரசிடம் நியாயம் காண்பது என்பது அரிதானதே.

சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களுக்கூடாக இலங்கை அரசியற் கைதிகளின் பிரச்சினைகளை சர்வதேச அளவில் வெளிக்கொணர்வதற்காக, ஒருதரமேனும் இந்த அமைப்புக்களை தெருவில் இறக்கி தமிழ் அரசியற் கைதிகளின் பிரச்சினைகளை சொல்ல வைக்க முடியுமானால் அதுதான் இந்த போராட்டங்களின் வெற்றி.