Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம். மனித வாழ்வை முழுமையாக புரிந்து கொள்ள உதவும் ஒரு தத்துவமாகவும் இருக்கின்றது. இந்த வகையில் மனித வாழ்வையும், அதனுள்ளான முரண்களையும், இயங்கங்களையும் புரிந்து கொள்ள மார்க்சியம் உதவுகின்றது. இது கற்பனையான வெறும் தத்துவமல்ல. இது எமக்கு வெளியில் இருந்து வருவதுமில்லை. மாறாக எம் வாழ்வின் எதார்த்தம் சார்ந்து, அதை பகுப்பாய்வு செய்யும் சமூக விஞ்ஞான முறைமையாகும்.

இயற்கைக்கு வெளியில் மனிதன் சந்திக்கின்ற வாழ்வியல் முரண்பாடுகள் ஏன்? எங்கிருந்து? எப்படி? தோன்றுகின்றது என்பதை தன் அறிதலுக்கு உட்படுத்தி, அதற்கான தீர்வையும் முன்வைக்கின்றது. அந்தத் தீர்வை எந்த நடைமுறை மூலம், எப்படி அடைய முடியும் என்பதையும் முன்வைக்கின்றது. இதில் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்வது அல்லது தேர்ந்தெடுத்துக் கொள்வது மார்க்சியமல்ல.

மார்க்சியத்தில் அறிதல் முறைக்கான அடிப்படை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். இது அனைத்தையும் பொருளாகவும், இயக்கமாகவும் பார்க்கின்றது. பொருளின்றி, இயக்கமின்றி எதுவும் உலகில் கிடையாது.

உலகில் உள்ள ஒவ்வொன்றும் இயங்கிக் கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கின்றது. இந்த இயக்கத்தையும் மாற்றத்தையும் தான், மார்க்சியம் இயங்கியலாக விளக்குகின்றது. இங்கு பொருள் இன்றி இயக்கம் கிடையாது. ஆக பொருளின்றி எதுவும் கிடையாது. ஏன் பொருள் இன்றி மனித சிந்தனை கூட கிடையாது. பொருளை மையமாக கொண்ட இயக்கம் மற்றும் சிந்தனையை தான், மார்க்சியம் பொருள் முதல்வாதமாக விளக்குகின்றது. ஆக இங்கு இயங்கியல் என்றால் என்ன? பொருள் முதல்வாதம் என்றால் என்ன என்பதைப் பார்த்தோம்.

இந்த வகையில் இவ்விரண்டையும் உள்ளடக்கியதை, மார்க்சியம் இயங்கியல் பொருள் முதல்வாதமாக விளக்குகின்றது. இந்த இயங்கியல் பொருள் முதல்வாதம் தான் மார்க்சியத்தின் அரிச்சுவடியாகும். இந்த இயங்கியல் பொருள் முதல்வாதத்தின் தர்க்கரீதியான முடிவுதான், வர்க்கங்கள் பற்றிய அறிதலும், வர்க்கமற்ற கம்யூனிச சமூகம் பற்றிய தெளிவுமாகும்.

ஆக இது எமக்கு வெளியில் இல்லை. நாம் எம்மளவில் நாமாக இல்லாமல் கற்பனையில் இருக்கவோ, வாழவோ, சிந்திக்கவோ, செயற்படவோ முடியாது. அதாவது பொருளாகவன்றி எப்படி இந்த உலகில் இருக்க முடியாதோ, அதுபோல் எமது இயக்கமின்றியும் நாம் நாமாக இருக்கவும் முடியாது. இந்த அடிப்படையில் நாம் இயங்கிக் கொண்டு இருப்பதை, நாம் மாறிக் கொண்டு இருப்பதைத்தான், மார்க்சியம் எம்மில் இருந்து அதை விளக்குகின்றது. மனிதன் இன்று வாழ்வது போல், முன்பு வாழ்ந்ததில்லை. நாளை வாழப்போவதுமில்லை. எல்லாம் இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றது.

ஆக எம்மோடு, எம்மைச் சுற்றிய அனைத்தும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டு இருக்கின்றது. இந்த இயக்கமும், மாற்றமும், அளவுரீதியானதாகவும் பண்பு ரீதியானதாகவும் வெளிப்படுகின்றது. இவ்விரண்டும் இயற்கையில் உள்ளவைதான். இது மனிதனின் செயற்கையான செயற்பாட்டுக்கும் பொருந்தும். ஆக இது எங்கும் எதிலும் எப்போதும் காணப்படுகின்றது.

இந்த வகையில் பொருள் மற்றும் இயக்கம் எங்கும் இருப்பதால், இது உலகம் தளுவியதாக உள்ளது. இந்த வகையில் இயங்கியல் பொருள்முதல் வாதமே உலகம் தளுவிய கண்ணோட்டமாகவும் இருக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த தத்துவத்தின் தர்க்கம் தான், மார்க்சியமாகியது. மார்க்ஸ் இதை முரணற்ற வகையில் விஞ்ஞான பூர்வமாக விளக்கியதால், மார்க்சின் பெயரில் இது மார்க்சியமாகியது. உண்மையில் மார்க்சியம் சமூக விஞ்ஞானமாகும். எமது வாழ்க்கை, எம்மை சுற்றிய இயக்கங்களை, எம்மைச் சுற்றிய முரண்பாடுகளை விஞ்ஞானபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும் தொகுத்து, அதை முழுமையில் நடைமுறையுடன் விளக்கி கூறுவதுதான் மார்க்சியம். எம் வாழ்வை தொகுத்து கூறும் சமூக விஞ்ஞானமாக, தத்துவமாக உள்ள மார்க்சியத்தை, நாம் புரிந்து கொள்வதில் உள்ள தடை என்ன? தடை எம் அறிவின் பாலான இடைவெளியாகும். எம் சொந்த அறிவை, எம் சொந்த நடைமுறை வாழ்வுடன் இணைத்தும், அதை சமூகத்துடன் இணைந்தும் புரிந்து கொள்வதன் மூலம், எம் வாழ்வு பற்றிய மார்க்சிய தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது எம் அறிவை சமூகத்தின் சமூக வாழ்வு சார்ந்த அறிவாக எம்மில் வளர்த்துக்கொள்வதன் மூலம், சமூக விஞ்ஞானமான மார்க்சியத்தை புரிந்துகொள்ள முடியும்.

எம் அறிவு என்பது என்ன? நாம் எமது கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கால் நுகர்வது, தொட்டுணர்வது, சுவைத்து அறிவது என்ற எம் புலனறிவுக்கு உட்பட்டது. இந்த வகையில் எம்மைச் சுற்றியவற்றை நாம் தெரிந்து கொள்ளுகின்றோம். எம் புலனுணர்வுக்கு உட்பட்ட எல்லைக்குள், எம் அறிவு மட்டுப்படுத்தப்பட்டது. ஒரு இயக்கம் பற்றிய, ஒரு பொருள் பற்றிய அறிவு, எம் புலனுணர்வுக்குள் மட்டும் நாம் தெரிந்து கொள்ளும் போது அது குறுகியதாக இருக்கும் போது, புலனுணர்வுக்கு அப்பாற்பட்டவை புரிய முடியாத ஒன்றாக மாறுகின்றது. இதுதான் மார்க்சியத்தை புரிதலில் உள்ள இடைவெளியாகும். தனிமனித புலனுணர்வுக்கு அப்பால் முழு உலகம் தளுவியதாக மனித வாழ்வை புரிந்து கொள்ள நாம் முனையும் போது, எம் அறிவு பல மடங்காகின்றது. மார்க்சியத்தை புரிந்து கொள்வது என்பது எம் வாழ்வு பற்றிய அறிவை சமூக வாழ்வு சார்ந்த அறிவாக விருத்திசெய்வது தான்.

இங்கு இதை முழுமையாக புரிந்து கொள்ளுவதற்கு கூட, எம் அடிப்படை அறிவு சிரமப்படுகின்றது. எம் அடிப்படை அறிவு, சொந்த வாழ்வை கற்றுக் கொள்வதை தெரிந்து கொள்வதை மறுப்பதையே சாரமாகக் கொண்டது. இதற்கு மாறாக நாம் கற்றல், கற்றுக் கொடுத்தல் மூலம் மட்டும் இதை முழுமையில் தெரிந்து புரிந்துகொள்ள முடியாது, மாறாக அதை நாம் நடைமுறை வாழ்வில் பரிசோதித்துப் பார்க்கவேண்டும். ஆக இங்கு மார்க்சியம் வெறும் தத்துவமல்ல, வாழ்வு பற்றிய சமூக விஞ்ஞானமாக, நடைமுறை வழிகாட்டியாகவும் கூட இருக்கின்றது.

ஒன்றில் இருந்து ஒன்றையொன்று பிரித்து இதை புரிந்துகொள்ள முடியாது. எம் வாழ்வை நாம் முழுமையில் புரிதல் அவசியமானது. இங்கு எமது புரிதல் எங்கிருந்து எமக்கு கிடைக்கின்றது?

பி.இரயாகரன்

03.08.2012

தொடரும்