“கூட்டத்தில் பேச முனனர், பேசியது என்ன என்று தெரிய முன்னர் எப்படிக் குற்றம்சாட்ட முடியும்?” என்று கேட்டு அ.மாhஸ்சை காப்பாற்ற முனையும் சோபாசக்தி, அவர் என்ன பேசினார் என்று தெரிந்து கொண்டு இந்த கேள்வியினை எழுப்பவில்லை. அ.மார்க்ஸ்சை காப்பாற்றும் அவரின் தர்க்கத்தின் அரசியல் முரணே இதுதான். அ.மார்க்ஸ்சின் தத்துவம், மகிந்தாவின் நடைமுறையுடன் பொருந்தியதன் அடிப்படையிலான அரசியல் அம்பலப்படுத்தல் இது. இது தவறானது என்று சோபாசக்தியால் கூறமுடியாது என்பதால், "வர்க்க அணித்திரட்சியை ஊடுருவித் தாக்கி அழிப்பதே இரகசிய ஏஜண்ட் அ.மார்க்ஸ் 007னின் திட்டம்" என்று கதை சொல்லி புலம்ப முடிகின்றது. அ.மார்க்ஸின் அரசியல் பாட்டாளி வர்க்கம் சார்ந்த அரசியலா? அல்லது பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து, பிளக்கும் அரசியலா? கடந்த 30 வருடங்களாக அவர் எதனை முன்னெடுத்துச் செல்கின்றார்?
அரசின் துணையுடன் மக்கள் விரோத அரசியத் தொடருகின்ற கருணா, கேபி, பிள்ளையான் .. போன்று, இலக்கிய அரசியல் செய்பவர்களுடன் கூடி அ.மார்க்ஸ் நடத்தும் இந்த "புரட்சிகர" பயணத்தை, அவர் பேசுவதில் இருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமோ?. அரசின் தயவில் தயா மாஸ்ட்டரின் ஊடாக சுதந்திரம் போன்று, அரசின் புனர்வாழ்வு இலக்கியங்களை படைப்போருடன் சேர்ந்த அ.மார்ஸ்சின் பயண நோக்கத்தினை நாம் புரிந்து கொள்ள முடியாதோ? அவரின் தத்துவத்தில் இருந்து, அவரின் நடைமுறையை தெரிந்து கொள்ள முடியாதோ? சொல்லுங்கள்.
அ.மார்க்ஸ் பேச முன்னர், பேசியது என்ன என்று தெரிவதற்கு முன்னர், எப்படிக் கருத்துக் கூற முடியும் என்பதே, அ.மார்க்ஸ் தினம் தினம் தொழுது வாழும் சோபாசக்தியின் புராணம். ஆக இதன் மூலம், அவர் அ.மார்க்ஸ் சந்தர்ப்பவாதியாக சூழலுக்கு எற்ப பேசக் கூடியவர் தான் என்கின்றார். இந்த அடிப்படையில் அ.மார்க்ஸ்சை காப்பற்ற சோபாசக்தி முனைகின்றார். அவரின் தத்துவத்தில் இருந்தல்ல. இந்த வகையில் அ.மார்ஸிற்க்கு சந்தர்ப்பவாதியாக செயற்படும் மற்றொரு முகம் இருப்பதனை, உலகறிய சோபாசக்தி அடையாளம் காட்டியதற்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் பேச முன்னர், செயற்பட முன்னர், அவரைப் பற்றி கருத்துக் கூற முடியாது என்று கூறுகின்றனர். இது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தன் கருத்தை மாற்றிப் பேசக் கூடியவர்கள், செயற்படக் கூடியவர்களின நடந்ததை பற்றியது. இதனைத்தான் சோபாசக்தி தலைகீழாக நின்று எமக்கு கூறமுனைகின்றார்.
அ.மார்க்ஸ் தொடர்ந்து மாக்ச்சிய விரோதக் கருத்துக்களை முன்வைத்து வருபவர் என்ற வகையில், அந்த கருத்துகள் சார்ந்து அவரையும் அவரின் செயற்பாட்டையும் மதிப்பிட முடியும். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க அரசியலை எதிர்ப்பதும், ஒடுக்கப்பட்ட மக்களை பிளக்கும் பிளவுவாத அரசியலையே, தன் அரசியலாக கொண்டதுமே அ.மார்க்ஸின் செயல்பாடுகள ஆகும். இவரின் கடந்தகால செயற்பாட்டுகள் மற்றும் இவரின் தத்துவ கண்ணோட்டங்களின் அடிப்படையில், இலங்கை சூழலுக்குள் இவரின் அரசியல் எப்படி செயற்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அம்பலப்படுத்தப்பட்டது தான் எனது முன்னைய கட்டுரையாகும்.
இலங்கைப் பாசிச அரசின் வெளிப்படையான நடைமுறையிலான அரசியல் செயற்பாடும், அ.மார்ஸ்சின் தத்துவ அரசியலும் பொருந்தி வருவது இங்கு வெளிப்படையானது. அரசு இதை வெளிப்படையாக செய்வதால், அ.மார்க்ஸ் ஒளித்து செய்யும் தத்துவமும் பொருந்தி அம்பலமாகின்றது.
இதை மீறி இந்த சூழலுக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப தன் தத்துவ அடிப்படைகளை மூடிமறைக்க கூடியவர் என்று கூறமுனையும் சோபாசக்தி, அவர் இதற்கு எற்ப பேசி இருப்பார் என்கின்றார். பாம்பின் காலை பாம்பு தான் அறியும் என்பார்கள். அ.மார்க்ஸ் வழமை போல், ஒடுக்கப்பட்ட வர்க்க அரசியலை எதிர்த்து, பிளவுவாத அரசியலை செய்தபடி, ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்கள் பற்றி அறிக்கை விடுவதன் மூலம் அவர்கள் மேல் தனக்கு அக்கறை உள்ளதாக காட்டுவதே அவரின் அரசியல் பித்தலாட்டம். இந்த அரசியல் பித்தலாட்ட உத்தியைத்தான் தன்னார்வக் குழுக்கள் தொடங்கி பில்கேட்டின் நிதி உதவி வரை நாம் காணமுடியும்.
மகிந்த தமிழின அழிப்பை நடத்திய படி, புலிகள் மறுத்த ஜனநாயகத்தை பேசுவது போன்றது தான் இது. புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்க உதவிய படி, தமிழ் மக்களின் மேல் அக்கறை இருப்பதாக கூறிக்கொண்டு இயங்கிய உலகம் போல் தான் அ.மார்கஸின் செயற்ப்பாடுகள்.
இதுதான் அ.மார்க்ஸ் நீண்ட காலமாக செய்து வந்த அரசியல் வக்கிரம். இதனை இலங்கையில் அவர் மீளவும் செய்வார், செய்கின்றார். சோபாசக்தி இங்கு அ.மார்க்ஸ் தன் அடிப்படைத் தத்துவத்தையும், அதன் கண்ணோட்டத்தையும் மறுத்து தான் கருத்துச் சொல்லி இருப்பார் என்கின்றார்! அ.மார்க்ஸ் அப்படித்தான் செய்யப் போவாதாகக் கூறியதன் அடிப்படையில் தான், நீங்கள் இந்த பயண எற்பட்டை செய்தீர்களா? என்பதை நாம் புலனாய்வு செய்ய முடியாது.
நீங்கள் சந்தர்ப்பவாதமாக எப்படி கருத்தை முன்வைப்பது என்பது பற்றி முன் கூட்டியே பேசினீர்களா என்பதை நாம் அறியோம். இப்படி இருக்க, பேச முன்னர், பேசியது என்ன என்று தெரிய முன்னர், நாம் முன்வைத்த கருத்தை எப்படி தவறு என்று உங்களால் கூறமுடியும்!? அதை தெரிந்து கொள்ளாத நீங்கள், எப்படி இதை எதிர்த்து குதர்க்கம் செய்ய முடியும்!?
நாங்கள் அ.மார்க்ஸின் தத்துவம் மற்றும் நடைமுறை சார்ந்து சொன்ன கருத்து தவறு என்றால், அதை சுட்டிக்காட்டி விவாதிக்கலாமே. அதனை விடுத்து அ.மார்க்ஸினை காப்பாற்றும் போக்கில், பேச முன்னர், பேசியது என்ன என்று தெரிய முன்னர் எப்படி கருத்துக் கூறமுடியும் என்பது, நாம் முன்வைக்கின்ற விமர்சனத்தினை திசை திருப்பும் வக்கிரமே தவிர வேறேதுமில்லை.
அ.மார்க்ஸினது தத்துவ அரசியல் கோட்பாடு மற்றும் அடையாளத்தை தாண்டி ஊர் உலகத்தை ஏமாற்றமுடியாது.
பி.இரயாகரன்
11.07.2012