சரிநிகர் 126 இல் தங்கத்துரை கொலை தொடர்பாக நாசமறுப்பான் எழுதிய தொடர்ச்சியின் இறுதியில் 'தங்கத்தரை அவர்களது மரணம் துயர் தருவது. யார் செய்திருந்தாலும் அது கண்டனத்தக்குரியதே. அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் மக்களுக்கும் எமது அநுதாபங்கள்' எனக் குறிப்பிட்டு, கூட்டணி என்ற தரகு முதலாளித்துவ கட்சிக்கு அநுதாபம் தெரிவித்ததன் மூலம், தமது அரசியல் குத்துக்கரணங்களை இனம் காட்டியுள்ளனர்.

பிரேமதாச, காமினி, இந்திரா, ராஐPவ், கெனடி, மகாத்மா காந்தி, என்ற மக்கள் விரோதிகளுக்கு, அவர்களின் படுகொலையின் போது அஞ்சலி செலுத்தி துயர் தீர்த்தும், கட்சிக்கு அநுதாபம் தெரிவிப்பதன் மூலம், அவர்களையும் அவர்களது மக்கள் விரோத அரசியலையும் நியாயப்படுத்தும் அரசியல், அண்மைக்காலமாக சரிநிகரில் வெளிவரத் தொடங்கியுள்ளது.

அரசியல் படுகொலை தனிநபர்  பயங்கரவாத அரசியலுக்குள் நடக்கும் போது, அவ்வரசியல் விமர்சனத்துக்குரியது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. அவ்வரசியல், அந்தப் போக்கு என அனைத்தும் விமர்சனததுக்குரியவை.

அதே நேரம் இப்படுகொலைகளில் கொல்லப்படும் நபரின் அரசியல் மற்றும் நடவடிக்கைகள் நியாயப்படுத்தும் அளவுக்கு எல்லா நேரமும் இருந்து விடுவதில்லை என்பதை நாசமறுப்பான் மறந்து போன இன்றைய அரசியல் தான் என்ன?

மிக மோசமான மக்கள் விரோதிகள், மக்களை ஏமாற்றும் பேர்வழிகள் என அரசியல் பிழைப்புவாதம் உள்ளபோது கொல்லப்பட்டவர் நியாயப்படுத்த முடியாத நபராக இருந்து விடுகிறார். அதே நேரம் கொலையாளியின் தனிநபர் அரசியல் கடும் விமர்சனத்துக்குரியது தான்.

இந்நிலையில் தங்கத்துரை என்ற நபரும், அவரின் கட்சியும் தமிழ்மக்களின் போராட்டத்தை தின்று ஏப்பம் விட்டவர்கள். அன்னிய நாட்டுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து, ஆக்கிரமிக்க வைத்தும், அதில் பிழைப்பு நடத்தியும்  பொறுக்கி அரசியல் செய்தவர்கள். செய்கின்றார்கள்.

மக்கள் தொடர் துன்பத்தில் உழன்று கொண்டும், கொல்லப்பட்டுக் கொண்டுமிருக்கும் இன்றைய நிலையில், திருகோணமலையில் சிங்களமயமாகி வரும் இனவாத அடாவடித்தன ஆக்கிரமிப்பை எல்லாம் கண்டும் காணாது கண்மூடி சுகபோகத்துக்கு அலைந்து துணைபோனவர்கள்.

இவர்களின் அரசியல் கட்சிக்கும், இவர்களுக்கும்  அநுதாபம் தெரிவித்து துயர் கொள்வது என்பது, கொலையாளியின் மிக மோசமான அரசியல் நடத்தைக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல.

இங்கு இரண்டு பக்க அரசியலும் விமர்சனத்துக்குரியதே ஒழிய அநுதாபத்துக்குரியதோ துயரத்துக்குரியதோ அல்ல.

சரிநிகருக்குள்ளும், கொழும்பிலும், தங்கள் சிலந்தி வலையை விரித்துள்ள சர்வதேச நிதி அமைப்புக்கள், (Nபுழு) தன்னார்வக்குழுக்கள் மூலம், எப்படி எல்லாம் அரசியல் கருத்தைச் சிதைக்கத் தொடங்கியுள்ளது என்பதற்கு நாசமறுப்பான் ஒரு நல்ல உதாரணமாகும்.