அண்மையில் கோட்பாடற்ற பிரதிநிதிகளின் வெளியீடாக பிரான்சில் இருந்து எக்ஸில் தனது முதலாவது இதழ் வெளியீட்டிருந்தனர். இவ்விதல் கோட்பாடற்ற நிலைக்கூடாக எதை நியாயப்படுத்துகின்றனர் என அவர்களின் வரிகளுடாக எக்ஸிசில், தனது முதல் ஆசிரியத் தலையங்கத்தில் என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்.
"புகலிடத்து வாழ்வில் இருந்து புறப்படுகிறோம். ஏவரும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். எங்கிருந்தேனும் எந்த மொழியிலும் எம்மிலும் முகம் பார்த்துக்கொள்ளட்டும். மீண்டும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்". கருத்துக்கள் இலக்கியங்கள் எதுவாயினும் எம்மிலும் பட்டுத் தெறிக்கட்டும். எக் கருத்துக்கும் மதிப்பழிக்கும் மனப்பக்குவம் எமக்குண்டு. எதையும் தவிர்த்து உண்ணும் பாங்கு எம்மிடம் இல்லை. கிடைப்பதைப் பகிர்ந்து உண்ணும் காகங்களாய்." என்ற தமது விபச்சாரத்தை துல்லியமாக அம்பலப்படுத்துகின்றனர். இது எப்படியென ஆராய்வோம்.
காகங்கள் சேர்ந்து உண்ணுகிறது என்பது உண்மையே. அதனால் மனிதனாகிய நாமும் சேர்ந்து உண்ணுவோம் என்கின்றனர். எடுத்த எடுப்பில் பார்த்தால் உயர்ந்த மனிதவிழுமியமாக இருக்கும். காகம் போல் வாழவேண்டும் என இலங்கை பாடப் புத்தகத்திலேயே இப்படித்தான் உள்ளது. இதை மீள இவர்களும் வைப்பதன் நோக்கம் என்ன?
காகங்கள் மனிதனைப் போல் ஆண் பெண் வேறுபாட்டை பேணுவதில்லை. பள்ளன், பறையன் என சாதியால் பிளந்து ஒடுக்குவதில்லை. ஒருவன் உழைப்பை ஒருவன் சுரண்டி கொழுப்பது போல் செய்வதில்லை. இப்படி மனிதன் பிளவுகள் போல் காகங்கள் இல்லாததால் அவை கூடியுண்டு கூடிவாழ்கின்றன. மனிதனும் காகம் போல் பிளவின்றி இருப்பின் இப்படி ஆசிரியர் தலையங்கம் எழுதியேயிருக்க முடியாது.
இப்படி இல்லாத போது அதை மனிதனுக்கு கோருவது என்பது, ஒடுக்குபவனை எதிர்த்துப் போராடாத கூடி வாழ்வைக் கோருவதே. குருசேவ் முன்வைத்த "சமாதான சகவாழ்வு" எதோ அதைத்தான் இவர்கள் கூடிவாழ்வும் கூடிஉண்ணவும் கோருகின்றனர். கூடிவாழ்வோம் கூடிக் குடிப்போம் என மனிதர்களைப் பார்த்து கோரும் போது முரண்பாடுகளை கைவிடு என்கின்றனர். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை கொடு எதிர்த்து போராடதே என்ற தத்துவத்தை மீள மக்களுக்கு முன்வைக்கின்றனர். இன்று சமுதாயத்தில் வன்முறையை யார் எதிர்க்கின்றனர். ஆளும் வர்க்கமும் அதன் பிரதிநிதிகளான சுரண்டும் வர்க்கமும் தான் இருக்கும் இவ்வமைப்பை தொடர்ந்து பேண வன்முறையை எதிர்க்கின்றனர். இங்கு ஆளும்வர்க்கம் தனது அமைப்பை வர்க்க எல்லை கடந்ததாக ஐனநாயக அமைப்பாக கூறுகின்றனர். தனது ஆளும் அதிகாரத்தை வன்முறையற்றதாக காட்டுகின்றது. எதிர் வன்முறைதான் வன்முறைக்கு அடிப்படையானதாக மீளமீள காட்டுவதன் மூலம் வன்முறையற்ற கூடிவாழ்வை முன்வைக்கின்றனர். இந்த சமுதாயத்தின் ஒடுக்குமுறை, அமைதியாக கூடிவாழ முடியாதவாறு ஒடுக்கப்படுபவன்தான் எப்போதும் எதிர்வன்முறையை ஒடுக்குமுறைக்கு எதிராக கையாள்கின்றான்.
இன்று வன்முறையை கோருவது ஒடுக்கப்படும் வர்க்கமாகவும் வன்முறை எதிர்ப்பது ஒடுக்கும் வர்க்கமாக (சுரண்டும் வர்க்கம்) இச்சமுதாயச் சுரண்டலை அசைவின்றி பாதுகாக்க வன்முறை பற்றிய கோட்பாட்டையும் கூடி வாழ்வதைப் பற்றியும் பேசுகின்றனர்.
இன்றைய உலகில் பிளவுபட்டுள்ள மனிதஇனத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் வாழ்வென்பது வன்முறை என்ற ஒரேயொரு வழியில் அதாவது வன்முறையில் மட்டும்தான் நீடிக்கின்றது. இங்கு நான் வன்முறை என அடையாளப் படுத்துவது மனிதனின் சுரண்டும் அனைத்துவகை ஒடுக்குமுறைக்கு எதிராக மனிதர்கள் மனிதனுக்கு எதிராக வெளிப்படுத்தும் சிறிய அசைவு முதல் உடல் மீதான வன்முறை ஈறாக உள்ளடக்கியதே. வன்முறை என்பதை சிலர் உடலால் மட்டும் வரையறுப்பது மோசடியாகும். வன்முறை இந்த வர்க்க சமுதாயத்தில் மனிதனின் எல்லா கருத்து செயல் தளத்துக்குள்ளும் எல்லா மனிதர்களுகிடையில் விதிவிலக்கின்றி நீடிக்கின்றது. இவ்வன்முறை செயலுக்கு செயல் வடிவத்துக்கு வடிவம் என பலதளத்தில் பண்பால் மட்டும் வேறுபடுகின்றது.
வன்முறையின் எதிராளராக காட்டி நடிக்கும் பலர் சமுதாய இயங்கியலை, பொருட்களின் இயங்கியலை மறுத்து இருக்கும் ஒடுக்குமுறையை பாதுகாக்க வன்முறை எதிர்ப்பு வேடம் தேவையாகின்றது. பொருட்களின் எல்லா இயக்கமும் இயற்கையில் மற்றதன் மீது வன்முறையை கையாள்கின்றது. பொருட்கள் சுயாதீனமாக ஒன்றையும் சார்ந்து இருக்காத ஒரு நிலையில் மட்டும்தான் வன்முறை இருக்க முடியாது. ஆனால் சுயாதீனமாக ஒரு பொருள் இருக்க முடியாத நிலையில் எல்லா அசைவும் எல்லா இயக்கமும் வன்முறையின்றியிருக்க முடியாது. இது உயிரினத்தில் விதிவிலக்கின்றி உள்ளதுடன் உணவுக்காக மற்றைய உயிரினம் மீது வன்முறை உயிர்வாழ்வதற்கான நிபந்தனையாக உள்ளது. இது மனித இனத்துக்குள் எடுக்கும் போது மனிதர்களின் சிறுபான்மை பிரிவு சூறையாடலுக்கூடாக பெரும்பான்மை பிரிவை வன்முறைக்குள்ளாக்கிய இருத்தலை வன்முறையற்றதாக காட்டுவதன் மூலம் வன்முறை எதிர்ப்பை முன்வைக்கின்றனர்.
பெரும்பான்மை மக்களின் வாழ்வு என்பது சிறுபான்மை சூறையாடலுக்கு எதிரான வன்முறையூடாக மட்டும்தான் உயிர்வாழ்தல் சாத்தியமாகின்றது.
ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்விடுதலை ஆணாதிக்கத்துக்கு எதிரான வன்முறையாக உள்ளது. பார்ப்பணியத்துக்கு எதிரான தாழ்த்தப்பட்ட பள்ளர் பறைய மக்களின் போராட்டம் பார்ப்பணியத்துக்கு எதிரான வன்முறையாக உள்ளது. முதலாளிக்கு எதிரான தொழிலாளர் வார்க்க போராட்டம் முதலாளிக்கு எதிரான வன்முறையாக உள்ளது. இது எல்லா போராட்டத்திலும் எல்லா செயல் தளத்திலும் விதிவிலக்கின்றியுள்ளது.
இருப்பதை எல்லோரும் அவர்அவர் தேவைக்கு ஏற்ப எடுக்கும் ஒருநிலையில் மட்டும் வன்முறை மனிதர்களுக்கு இடையில் தேவையற்றதாக மாறிவிடுகின்றது.
வர்க்க சமுதாயத்தில் எல்லாவற்றுக்கும் மதிப்பளிப்பது என்பது உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கும் சிறுபான்மைக்கும் நடக்கும் வன்முறைப் போராட்டத்தில், கருத்துப் போராட்டத்தில் நடுநிலை சாத்தியமில்லை. மாறாக இருக்கும் ஒடுக்கும் சமுதாயத்தை பாதுகாக்க கையாளும் நடுநிலை வேஷமாக கபடத்துடன் கூடிய மோசடியாக உள்ளது. இதைத் தான் முதலாளித்துவ பராளுமன்றங்கள் ஒடுக்கும் வர்க்கங்கள் வீதியில் இறங்கி போராடும் போது முன்மொழிகின்றன. போராட்டங்களின் போது ஒடுக்குபவன் மக்களை பேசித் தீர்க்க முடியும் வெளியில் போராடவேண்டாம் என்கின்றனர். தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணைய வேண்டாம் என இவர்களைப் போல் கோரும் முதலாளிகள், மாற்றாக பரஸ்பரம் பங்குபற்றும் அமைப்பு முறையை முன்வைக்கின்றனர். முதலாளிகள் தம்மில் முகம்பார்த்தும் தெறிக்க கோரி போராட்டங்களை சமபந்தி நடத்தியதன் மூலம் தமது சமபந்தி (பகிர்ந்துண்ணும்) நோக்கத்தின் ஊடாக அம்மக்களை ஏமாற்ற முடிந்தது. தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, இவர்களைப் போல் அமைப்பு வடிவங்களை விதிவிலக்கின்றி வைத்திருப்பதன் மூலம் மக்களைச் சூறையாடுகின்றனர். எல்லா முதலாளியும் விதிவிலக்கின்றி பகிர்ந்துண்ண விரும்புவதாக பிரகடணம் செய்வதுடன், தான் கொடுக்கும் சம்பளத்தை பகிர்ந்துண்ணும் வெளிப்பாடாகவே இவர்களைப் போல் பிரகடணம் செய்கின்றனர். ஏகாதிபத்தியம் ஏழை நாடுகளுக்கு வழங்கும் கடன்கள் உதவிகளை பகிர்ந்துண்ணும் விடையமாக இவர்களைப் போல் விதிவிலக்கின்றி முன்வைக்கின்றனர். பகிர்ந்துண்ணல் என்பதை இந்த வர்க்க சமுதாயத்தில் சுரண்டுவோரே மீளமீள முன்வைப்பதை இவர்கள் மீளயெடுத்து முன்வைக்கின்றனர். எல்லோருக்கும் எல்லாம் இருப்பின் பகிர்ந்துண்ணல் சாத்தியமில்லை. இல்லாது இருப்பதால் மட்டும்தான் முதலாளிகள் பகிர்ந்துண்ணலை பிரேரிப்பதன் மூலம் தமது சூறையாடலை பாதுகாக்க முனைகின்றனர். இதுபோல் எல்லா துறையிலும் முதலாளிகள் விதிவிலக்கின்றி முன்வைப்பதன் மூலம் ஒடுக்கப்பட்டவனை சமாளிக்க பகிர்ந்துண்ணலை பட்டுத் தெறிக்கும் வழியை பிரகடனம் செய்கின்றனர். இதுமட்டும்தான் சொத்துரிமையை தனது எல்லா ஆதிக்கத்தையும் பாதுகாக்கவும் தொடரவும் முன்வைக்கும் பாதையாக உள்ளது. பகிர்ந்து உண்ணலை கோருபவன் தன்னிடம் உள்ள ஆதிக்கத்தில் நின்றுதான் இல்லாதவனை பார்த்து பகிர்ந்து கொள்ளத் தயார் என்கின்றான். ஆணாதிக்கவாதி பெண் போராடும் போது பெண்ணிடம் பகிர்ந்து கொள்ள முன்வருகின்றான். இதுமட்டும்தான் ஆணாதிக்கத்தை தகர்க்காது. இப்பகிர்ந்துண்ணும் வடிவத்தைதான் கூட்டணி முதல் எல்லா ஆதிக்க சக்திகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வைத்து சமபந்தி நடத்தியதன் மூலம் தமது சமபந்தி (பகிர்ந்துண்ணும்) நோக்கத்தின் கூடாக அம்மக்களை ஏமாற்ற முடிந்தது. மக்களுக்கு பிச்சையிட்டு பகிர்ந்து கொடுத்தும் மக்கள் போராட்டங்களை தணித்துவிட எல்லா முதலாளித்துவாதிகளும் மீளமீள செய்வதையே எக்ஸில் ஆசிரியர் குழுவும் விசுவாசமாக பிரகடணம் செய்கின்றனர்.
பின்குறிப்பு: முதலாளியும் தொழிலாளியும் சேர்ந்துண்ண அழைப்புவிடுவதை விமர்சனமாக நேரடியாக குறிப்பிட்டு, இதை ஒட்டிய விமர்சனம் ஒன்றை சமரில் எழுதுவதாக எக்ஸில் பிரதான கோட்பாட்டாளருக்கு குறிப்பிட்டிருந்தேன். இதை அடுத்து மற்ரொருவர் மூலம் எனது கருத்துச் சுதந்திரத்துக்கு மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார். தமது கூடித் தின்னும் முதலாளித்துவ கோட்பாடுகளை விமர்சித்தால் எனது தனிநபர் நடவடிக்கை என சிலவற்றைக் குறிப்பிட்டு அதை எழுதுவேன் என்று கூறி மறைமுகமாக மிரட்டியுள்ளார்.. நேரில் எப்போதும் நடிப்பதும் பின்னால் சேறுயடிப்பதும், சாடைமாடையாக பேசுவதும் என தொடரும் இந்த தனிநபர் தாக்குதல் அரசியல் பிழைப்புத்தனத்தை, நேரில் கேட்டால் அப்படி பேசவேயில்லை என மறுக்கும் தொடர்ச்சியில், என்மீது முதுக்குப்பின்னால் கதைப்பவைகளை தொகுத்து அவர்கள் முன்னும் உங்கள் முன்னும் வைக்கின்றேன். எனது தனிப்பட்ட பிரச்சனைகளை இதில் தொகுத்து வைப்பது அவசியமா என்ற கேள்வி என் முன்னும் உள்ளது. இதையே சிலர் அரசியல் விடையமாக மாற்றி வம்பளப்பதாலும், இதை தொகுத்துவைப்பதன் மூலம் இது போன்ற அரசியல் வம்பளக்கும் போக்கை நிறுத்தி அரசியல் தளத்துக்குள் மாற்ற முடியும் என நம்புகின்றேன். இதுபற்றி பின்புறம் பேசுவதை விடுத்து ஆதாரமாக அரசியல் ரீதியில் முன்வைத்து வம்பளப்புக்கு பதில் விவாதிக்க கோருகின்றேன். மறுபுறம் உங்கள் முதலாளித்துவ கோட்பாடுகளை நாம் விமர்சிக்கும் போது அதை விஞ்ஞான பூர்வமாக மறுக்க முடிந்தால் மறுங்கள், இதை விடுத்து தனிநபர் மீதாக முதுகுக்கு பின்னோ, எழுத்திலோ மாற்றாக முன்வைக்காதீர்கள். தனிநபர் மோசடியாக இருந்தால் அதை தனியாக அரசியல் ரீதியில் அம்பலப்படுத்துங்கள் வரவேற்கின்றோம்.
என்மீதான அவதூறாக, முதுக்கு பின் நான் போராடத் தொடங்கிய காலம் முதல் கற்பனையாக வைக்கப்பட்டவைகளை, நான் அறிந்தவைகளை மட்டும் எனது அபிப்பிராயத்துடன கீழ் தொகுக்கின்றேன். விடுபட்டவை எனக் கருதக் கூடிய எதாவது தெரிந்தால் எழுதி அனுப்புங்கள்.
நான் இயக்கத்தில் இருந்த போது இயக்கப்பணத்தை கையாடினேன் என்ற அவதூறு தொடர்பாக இதற்க்கு முன் நான் சமரிலும் ஆதாரம் கேட்டு எழுதியிருந்தேன். nஐயபாலனின் கோட்பாட்டை விமர்சிக்கப் போன என்னை நோர்வை சுவடுகளில் இதே குற்றச் சாட்டை முன்வைத்த போது என்ன ஆதாரத்தில் எழுதினீர்கள் எனக் கேட்டு எழுதிய பின் மௌனம்தான் நீடிக்கின்றது. என்.எல்.எப்.ரி. மற்றை இயக்கம் போலல்லாது அதன் கணக்கு வழக்கு இந்தியா, N.L.F.T, P.L.F.T என மூன்று இடத்திலும் இருந்ததுடன், இயக்கம் இருந்த காலத்தில் மூன்று முறை கணக்கு சரி பார்க்கப்பட்டது. அங்கு இருந்து கணக்கு கொப்பியில் இருந்து இக்குற்றச் சாட்டு ஆதாரங்கள் உடன் முன்வைக்கப்படவில்லை. மாறாக எனது அரசியல் நிலைகள் மீதுமட்டும் அவதூறாகவே முளைத்தெழுகின்றது. இந்தக் கதை கட்டுக்கு முன் ஊரில் நான்இயக்கத்தில் வேலைசெய்த போது, நான் இருந்த வீட்டை இயக்கப் பணத்தில் கட்டியதாக நான் எதிர்த்துப் போராடிய பிரிவுகள் கதைகட்டித் திரிந்தது. இந்தளவுக்கும் எனது குடும்பத்துக்கு அன்றும், இன்றும் சொந்த வீடு கிடையாது என்பதுதான் இதில் வேடிக்கை. ஆனால் அவதூறுக்கு எல்லையிருக்கவில்லை முடிவிருக்கவில்லை தொடர்கின்றது.
அடுத்து நான் பிரான்ஸ் நாட்டில் பிரஐhவுரிமை பெற்றதால் எனக்கு கருத்து சுதந்திரமும் விமர்சிக்கும் உரிமையும் கிடையாதாம், இது எப்படி?. பிரஐhவுரிமை பெறுவதற்க்கு நியாயமான காரணங்கள் உள்ள போதும், இது பிழை என எடுப்பின் எனக்கு கருத்துச்சுதந்திரம், விமர்சிக்கும் சுதந்திரம், அதுவும் முதலாளித்துவ கோட்பாட்டுக்கு எதிராக எப்படி இல்லாமல் போய்விடும் என்பது பின்நவீனத்துவ அதீதஐனநாயகத்தில் பிடிபடவில்லை, முடிந்தால் சொல்லுங்கள்.
அடுத்து ஊரில் எனது குடும்பம், குடும்ப மோதல்களில் (இம் மோதல் தொடங்க காரணம் கொம்யூனிச கட்சிக்கு எனது அப்பா ஆதரித்தது, கூட்டணி செல்வநாயகத்தை எதிர்த்த போராட்டத்தில் எழுந்ததே. தாழ்த்தப்பட்ட கிராமத்தில் கொம்யூனிச கட்சிக்கு வாக்களிக்க கோரியதுடன் அப்பா பின் அணிதிரண்டதை சகிக்காத நிலையில் 1972இல் உமாமகேஸ்வரன் கும்பல் இரவில் தாக்கி, அடுத்த நாள் சுவர்களில் இத்தாக்குதலை பறைசாற்றினர்.) சிக்கியிருந்த நிலையை இன்று கூறி, அதை ரவுடித்தனமாக அதே குடும்ப மோதலில் எதிர்த்தரப்பில் இடுபட்டோர் இன்று சித்தரித்து, எனது எழுத்து ரவுடித்தனமானது எனக் காட்டி முதலாளித்துவ கோட்பாட்டை பாதுகாக்க பின்நிற்காத அவதூறுக்குள் இறங்கியுள்ளனர். இது எப்படி எனப் புரியவில்லை புரிந்தால் அறிவியுங்கள்.
நான் யாழ்ப்பல்கலைக் கழகத்தில் இருந்த போது தமிழ்பேசும் மக்களின் ஐனநாயகத்துக்காக நான் முன்னின்று நடத்திய இறுதியனாதும் மிகப் பெரியதுமான போராட்டத்தில், புலிகள் என்னையும் முன்நின்றவர்களையும் சதிகாரர் என்றும், தீயசக்திகள் என்று கூறிய அவதூறுகளின் பின் மக்களின் ஐனநாயகத்தை கொடுக்க மறுத்து கூறிய போக்கு சரியானதா என உங்களிடம் கேட்கின்றேன்.
என்னை புலிகள் உரிமை கோராது கடத்திச் சென்று கொல்ல வைத்து இருந்த போது 80 நாள் சித்திரவதைக்கு உள்ளாகி இருண்ட சிறையில் இருந்து நான் தப்பி வந்தேன். இதன் பின் பல்கலைக் கழகம் எனக்காக போராடிய நிலையில், புலிகள் எனது உயிர்ருக்கு உத்தரவாதம் அளித்துப் பேசிய மேடையில் என்னை சமூகவிரோதி என மறைமுகமாக கூறிச் சென்றனர். நான் அன்று தலைமறைவில் இருந்து வெளிவந்து அதே மேடையில் பல்கலைக்கழக மற்றும் மக்களின் ஆதரவுடன் பேச முற்பட்ட போது புலிகள் பகிஸ்கரித்து இறங்கிச் செல்ல, நான் புலிகளை நோக்கி நான் சமூகவிரோதிய என பலவற்றை எழுப்பினேன். ஆனால் இதுவரை இவ் அதூறுக்கு பதிலாளிக்கப் படவில்லை.
நான் புலிகளிடம் பிடிபட்டிருந்த நிலையில் என்னை இடையில் ஒரு வீட்டுக்கு சில பொருட்களை எடுக்க கொண்டு சென்றனர். அப்போது அங்கு அகதியாக பலர் வந்து நின்றனர். புலிகள் தம்மை N.டு.கு.வு என்று கூறி நான் நிதிக்கையாடல் செய்ததாக அதனால் கைது செய்து விசாரிப்பதாகவும் கூறிச் சென்றனர். இது காட்டுத் தீய் போல் பரவியதுடன் நான் தப்பிவரும் வரை இப்படிதான் நம்பியது. இதற்க்கு சிகரம் வைத்தாள் போல் அங்கு கிண்டி யெடுத்த பொருளை மூட்டை மூட்டையாக பணமும் நகையும் எடுத்ததாக யாழ் முழுக்க கதைக்கப்பட்டது. அப்படித்தான் ஊரும்உலகும் நம்பியது. இந்த அவதூறுக்கு நான் தப்பிய பின் புலிகள் பகிரங்கமாக என்ன என்னிடம் எடுத்தது என அறிவித்து, யாழ் பாத்திரிகையில் வெளியிட்ட செய்திதான் அவதூற்றை முடிவுக்கு கொண்டுவந்தது. ஆணால் சிலருக்கு இன்னமும் இதில் தெளிவு வராத அவதூற்றை தொடர்கின்றனர். ஏன்?
எனது ஊரில் நான் உட்பட சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுகுள் சென்று அவர்களை வர்க்கப் போராட்டத்துக்கு அணிதிரட்ட போராடினோம். இந்தப் போக்கில் அவர்கள் மீதான சாதிய ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடினோம். இதன் அங்கமாக எனது உறவினர்ரையும் எனது உறவினருமான உமாமகேஸ்வரின் பிளாட் இயக்கத்தை எதிர்த்தும் கோயில் நுளைவுப் போராட்டத்தையும் அதே நேரம் அங்கு நடந்த உணவு பரிமாற்றத்தில் பலாத்காரமாக சமபந்தி நடத்தி (இப் போராட்டம் சண் தலமையிலான வர்க்கப் போராடத்தின் பின் நடந்த மிக முக்கியமான ஓரிரு போராட்டங்களில் கூறிப்பிடக்கூடிய போராட்டம்.) வெற்றி பெற்ற இப்போராட்த்தை எதிர்த்த பிரிவுகள், என்னை பள்பள்ளிகளுடன் திண்று படுப்பவன் என அவதூறு கூறி கதைகட்டிய அவதூற்று அரசியல் நோக்கம் என்ன என்பது புரியவில்லை.
நான் யாழ் பலகலைக்கழகம் புகுந்த போது ராக்கிங்க்கு எதிரான போராட்டத்தில் தனித்து போராட வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியில் ஒரு துண்டுப்பிரசுரத்தை எனது இயக்க உறுப்பினரூடாக எழுதி (இந்தப் பிரசுரத்தை சஞ்சீவி இதழ் மிக அண்மையில் வெளியிட்டிருந்தது.) நான் தனியாக விநியோகித்தேன். இத்துண்டுப் பிரசுரம் பெண்களிடம் எப்படி குளித்துவிட்டு உடுப்பு மாத்துவீர்கள் என்பதை செய்து காட்டுங்கள் என்பது முதல் உள்ளாடையின் நிறம் என்ன எனக் கேட்கும் ராக்கிங் ஆணாதிக்க வக்கிரங்களை கேட்டு, தெரிய சொந்த அக்கா அம்மா இடம் கேளுங்கள் அப்போது புரியும் என அம்பலட்படுத்தினோம். இதற்கு அந்த ஆணாதிக்க வக்கிரங்கள் தந்த அவதூறு "பல்கலைக்கழகத்தில் மனநோயாளர் ஒருவர்" என்று துண்டுப் பிரசுரம் அடித்து வெளியிட்டதுடன் அதை ஈழநாடு தனது ஆணாதிக்க வக்கிரத்துடன் தனது பத்திரிகையில் பெருமைபட வெளியிட்டது. இதனால் பல்கலைக்கழகம் இரண்டானது மட்டுமின்றி பல்கலைக்கழகம் சிலநாள் வகுப்புகள் ஆணாதிக்க வக்கிர வானரங்களால் பகிஸ்கரிக்கப்பட்டது. இந்த மனநோய்பற்றி அவதூறு எதற்காக என்பது அதன் அரசியல் நோக்கமும் புரியவில்லை என்பது சிலரின் வாதம் புரிந்தால் அறிய ஆவலாக உள்ளேன்.
மக்களின் ஐனநாயக உரிமைக்காகவும், இயக்க அராஐகங்களுக்கு எதிராகவும், இந்தியாவின் தயவில் மக்களை ஒடுக்க, எலும்பு நக்கி காவி திரிந்த ரெலோ இயக்கத்தை நானும் எமது அமைப்பினரும் 1984 இல் யாழ் தமிழ் பிரதேசங்களில் அம்பலப்படுத்தினோம். இதை சகிக்க முடியாத இந்தியக் கைக்கூலிகள் என்னை கைது செய்ய முனைந்து தோல்வி பெற்ற நிலையில், வேறு சிலரை கைது செய்ததுடன் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்ல உத்தரவு வழங்கி தேடியலைந்தனர். இதற்கு அவர்கள் இட்டுக்கட்டியது நான் சமூக விரோதியென்று. கைது செய்தவர்களை விடுவிக்க நான் வேலை செய்த ஊர் தாழ்த்தப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுந்ததுடன், இப்போராட்டம் தான் தமிழ் பிரதேசத்தின் முதல் இயக்கத்துக்கு எதிரான ஐனநாயக போராட்டமாகும். சமூகவிரோதி என்ற அரசியல் நோக்கம் புரியாது மீன்டும் அதை கூறுவதன் நோக்கம் என்ன?
நானும் இயக்க நன்பர்களும் எனது ஊரில் பள்ளர் சமூகத்தை அணிதிரட்டி எனது ஊர் வெள்ளாள சாதித் திமிருக்கு எதிராகவும், இயக்கம் மறுத்த ஐனநாயகத்தையும் கோரியும், இலங்கை அரசின் இனவெறித்தாக்குதலை எதிர்த்தும் போராடிய போது, முன்னால் சாதிதிமிர் பிடித்து பல சாதி தாக்குதலில் முன்னின்று நடத்திய எனது உறவினர்ரும், பிளாட் இயக்க தலைவருமான உமாமகேஸ்வரனுக்கு, அதுவும் அவரின் சொந்த ஊரில் நான் பள்ளர் சமூகத்தை அணிதிரட்டியது சகிக்க முடியாது என்னைக் கொல்ல வாமதேவனை அனுப்பினார். தேசவிடுதலையை பிளக்கும் மக்கள் விரோதி என முத்திரை குத்தி இந்த சதியை பிளாட்டில் இருந்த அரசியல் பிரிவுகளின் மூலம் தெரிந்த நான், அதை மக்கள் மற்றும் பிளாட்டின் முன் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதால் கைவிட்டு சென்றர். இதையே இன்று சிலர் வேறு வார்த்தையில் கூறுவது நடக்கின்றது.
நான் புலிகளில் இருந்து தப்பிய பின் இந்திய இராணுவம் யுத்தத்தை தொடங்கிய பின் இந்தியா இராணுவத்தை எதிர்த்து முதல் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை பல்கலைக்கழகம் ஊடாக தலைமையேற்று நடத்தியதுடன் மட்டுமின்றி ஐனநாயகத்துக்காக தனியாக, எனது இயக்கத்துடன் முற்றாக முரண்பட்ட நிலை போராடிக் கொண்டிருந்த போது விமேலேஸ்வரனை புலிகள் சுட்டுக் கொன்றனர். இச்சடலத்தை பல்கலைக்கழகம் கொண்டுவர முயன்ற போது, அவரின் புலி உறவினர் கொல்லப்பட்ட இடத்தில் முன்கூட்டியே புலிகள் அழைத்து வந்து சடலத்தை தர மறுத்த நிலையில், அடுத்த நாள் நான் முன்நின்று பல்கலைக் கழக பகிஸ்கரிப்பை நடத்தினேன். அன்று தலைமறைவான என்னை அடுத்தநாள் கொல்ல தேடி பல இடத்தில் விசாரித்த போது அவர்கள் அங்கு கூறியவை இயக்கக் கணக்கு வழக்குகளை காட்டவில்லை தாம் என்.எல்.எப்.ரி என்று கூறிய அவதூறுக்கு பின் உள்ள அரசியல் நோக்கம் புரியவில்லை என்பது சிலரின்வாதமாக உள்ளது. அதையே சிலர் மீளக் கூறுகின்றனர்.
பிளாட் இயக்கம் 1984 இல் தனது இயக்க உறுப்பினர் ஒருவரை தாக்கி அவரை இயக்க விரோதியாக தனது இயக்கம் முன் கூறி சித்திரவதையை நடத்தியதுடன், அவரை அங்கு இருந்தோர் துப்பியே குளிப்பாட்டுவர். இந்த தாக்குதலால் இன்று அவரின் பல மூளை நரம்புகளை செயல் இழக்கப் பண்ணியதுடன் உயிர்வாழ போராடும் சமூக அக்கறைக்குரிய அந்த மனிதனின் நரம்புகளை சரி செய்ய நரம்புகளுக்கு விலை பேசப்பட்ட நிலையில் என்னிடம் உதவி கோரினார். பெரும் தொகையை தனிப்பட என்னால் கொடுக்க முடியாத நிலையில், பணத்தைச் சேர்ப்பின் எதிர்காலத்தில் இதையே அவதூறாக காட்டத்தயங்காத இந்த முற்போக்கு ஐனநாயக அமைப்பை புரிந்து கொண்டு, மனிதனுக்கு உதவுவது என்ற அடிப்படையில் நிதியுதவியை பகிரங்கமாக எழுத்தில் கேட்டேன். பணம் சேர்க்க முன்பே அவதூறு வந்து சேர்ந்தது. நான் மனிதாபிமானி என நிறுவத்தான் இதைச் செய்வதாகவும், அவருக்கும் அவரின் நண்பர்களுக்கும் கொடுத்த வேண்டுகோள் கடிதத்தை குப்பையில் போட்டுவிட்டதாக பிரகடனம் செய்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் அவரைத்தாக்கிய பிளாட்டுக்குள் அன்று இவர்களை துரோகி எனச் சொல்லத் தயங்காத செயல் தளத்தில் இருந்ததுடன், தாக்குதலுக்கு துணையாக இருந்தவர். இன்று ஐனநாயகத்துக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் அவரும் அவரின் நன்பர்களுக்கும் தான் இந்த குற்றுயிராக கிடந்த மனிதனுக்கு உதவுவார் என எதிர்பார்ப்பது நடைமுறை. ஆணால் அவதூறு ஊடாக இதை சேறுயடித்து மறுத்ததன் மூலம் மீள ஒருமுறை அந்த மனிதனை மறைமுகமாக தாக்கியதுதான் நிகழ்ந்துள்ளது. ஆணால் இந்தமாதிரியான ஐனநாயக மனிதர்களை விட மக்கள் நேர்மையானவர்கள் என்பதற்க்கு, இதற்க்கு கிடைத்த எதிர்பாராத கைகொடுப்பு அவதூறுகளுக்கு சிறந்த பதிலாக உள்ளது. அவதூறு அரசியல் நோக்கம் என்ன என்பதை உங்கள் முன் விட்டுவிடுகின்றேன்.
அண்மைக்காலமாக தமிழ் பேசும் மக்களுக்குள் எற்பட்டுவரும் சமூகச் சீரழிவை சுட்டிக்காட்டி துண்டுப்பிரசுரம் ஒன்றை சேர்ந்து விட்டிருந்தேன். இதே சமரில் அத் துண்டுப் பிரசுரம் மறுபிரசுரமாகியுள்ளது பார்க்கவும். மக்களின் பிரச்சினையை சொல்லி தின்ன குடிக்க கூத்தடிக்க சுகிக்க அழைத்தபோது அதை விமர்சித்த துண்டுப்பிரசுரத்துக்கு பதிலளிக்காது அவதூறுகள் மட்டுமே பதிலாக தனிப்பட்ட அவதூறுக்கு மேல் உள்ளதை உள்ளடக்கி முன்வைக்கப் பட்டது. இந்த அரசியல் என்ன?.