எனது மூன்று வயது மகன் "எனது பைத்தியம் எங்கே?" என தனது பொம்மை மாட்டைக் குறித்து கேட்க்குமளவுக்கு "மாட்டுப் பைத்தியம்" நோய் ஐரோப்பாவையும், உலகையும் உலுக்கி எடுக்கின்றது. உண்மையில் "மாட்டுப் பைத்தியம்;" என்பது உண்மைக்கு மாறானது, மாறாக மூலதனத்துக்கு பைத்தியம் என்பதே சரியான அரசியல் உள்ளடக்கமாகும்.

"மாட்டுப் பைத்தியம்" என்பது இயற்கையை அதன் மரபில் இருந்து அழிப்பதில் தொடங்கியது. இது மக்களையே பீதிக்குள்ளாக்கியுள்ளது. ஏன் இந்த இயற்கை அழிக்கப்படுகிறது என ஆராயின், இது மூலதனக் குவிப்புக்கான பைத்தியமே இதன் அடிப்படையாக உள்ளது. மாட்டுக்கு தனது சொந்த இறைச்சி உட்பட வழங்கப்பட்ட தாவரவியல் அல்லாத உணவுகளே இந்த பைத்தியத்துக்கு மூலமாக உள்ளது. மூலதனப் பைத்தியம், குழந்தையை பெற்றெடுக்கும்  பெண்களின் தொப்புள் கொடியைக் கூட மிருகங்களுக்கு உணவாக்கிய சம்பவங்கள் ஐரோப்பாவில் அண்மையில் அம்பலமாகியுள்ளது. மாட்டை குறுகிய காலத்தில் கொழுக்க வைப்பதன் மூலம், மூலதன பைத்தியங்களின் பைகளை கொழுக்க வைப்பதை அடிப்படையாக கொண்டே, இயற்கைக்கு விரோதமான உணவை கட்டாயப்படுத்தி திணிப்பதில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் எதிரான தலையாய குற்றவாளியாக இந்த ஜனநாயக அமைப்பு காணப்படுகின்றது. இவை இன்று மாட்டுடன் மட்டும் மூடிமறைக்கப்பட்ட நிலையில் இது கோழி, ஆடு, பன்றி, குதிரை, மீன் என்று அனைத்து வளர்ப்பு உயிரினத்தின் மீதும் விரிந்தளவில், இந்தக் குற்றம் இழைக்கப்பட்டு தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றது. மாட்டு இறைச்சி மீது விதிக்கப்பட்ட தடை, பால் மற்றும் மாடு சார்ந்த எந்த உற்பத்தி மீதும் செய்வதை திட்டமிட்டே மறைத்து, மக்களின் அறியாமையில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது. தொடர்ந்தும் மூலதனப் பைத்தியத்துக்கு பக்க வாத்தியம் வாசித்து அதை பாதுகாப்பதில், இந்த ஜனநாயக அமைப்பு மூலதன பைத்தியத்தின் சர்வாதிகாரமாக மக்களுக்கு மேல் திணிக்கின்றது.

இங்கு விரைவான, அதிகரித்த உற்பத்தி மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இருந்து உருவாகவில்லை. மாறாக மூலதனத்தின் குவிப்பு இதன் மையமான நோக்கமாகும். தாவரங்களின் மரபு அணுக்கள் அழிக்கப்பட்டு உருவாக்கப்படும் உணவுகள், பக்கவிளைவுகளுடன்  மனிதனை நோக்கி பூதாகரமான அபாயத்தை உள்ளடக்கி, மூலதனச் சந்தையில் குவிக்கப்படுகின்றது. மறுதளத்தில் இறைச்சியின் உபரி உற்பத்தி அழிக்கப்பட்டும், அதை மீள அதற்கே உணவாக்கியும், மக்களை பட்டினியில் தள்ளியபடியே தான், ஜனநாயக சுதந்திரம் பூத்துக் குலுங்குகின்றது. மூலதனப் பைத்தியத்தின் கொழுத்துப் போகும் சுரண்டலை மூலதனமாக கொண்டே, இந்த மனித விரோதம் அரங்கேறுகின்றது. இன்று இந்த இறைச்சி உற்பத்தியில் தொடர்ச்சியாக பல்வேறு மனிதவிரோத, இயற்கை விரோத குற்றங்கள் இழைக்கப்பட்டு, தொடர்ச்சியாக மூலதனப் பைத்தியத்தை காப்பாற்ற  மூடிமறைக்கப்படுகின்றது. கோழி வளர்ப்பு முதல் வளர்ப்பு உயிர் இனத் தொகுதியின் உயிர் வாழும் தற்காப்பு அழிக்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவாக அதிக நிறை கொண்ட மூலதனத்துக்கான இறைச்சியை இழப்பின்றி தயாரிக்க, ஒவ்வொரு நாளும் தற்காப்பு கொண்ட அதி உயர் நோய் எதிர்ப்பு (அன்ரிபைற்றிக்) மருந்து உணவுடன் சேர்த்து வழங்கப்படுவது அம்பலமாகியுள்ளது. இந்த நோய்த் தடுப்பு மருந்தும் கூட, மனிதருக்கு கொடுக்கப்படும் அதே நோய்த்தடுப்பு மருந்து என்பது, இந்த ஜனநாயக அமைப்பின் நிர்வாணத்தை வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதன் மூலம் மனிதனுக்கு பயன்படுத்தும் நோய்த் தடுப்பு என்பதை கேள்விக்குள்ளாக்கி, மனித இனத்தை மூலதன ஜனநாயகத்தின் அடிமையாக்கி பலியிடுகின்றனர். நோய்த் தடுப்பின்றி உலகில் வருடம் தோறும் கோடி கோடியாக மக்களை கொன்று போடும் இந்த ஜனநாயக அமைப்பில், மூலதன பைத்தியத்தின் மூலதனத்தை பாதுகாக்க மனிதனுக்கு பயன்படுத்தும் நோய்த்தடுப்பை இயற்கைக்கு விரோதமாக பயன்படுத்தி, மனித விரோத வக்கிரங்களில் ஈடுபடுவதே ஜனநாயகத்தின் பொதுப் பண்பாகும்;. இது தவிர கொழுக்க வைக்கும் மருந்து ஐரோப்பாவில் மக்களின் போராட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை போதைக்கு ஒத்த வகையில் சர்வதேச மாபிய கும்பலால் கடத்தப்பட்டு ஊடுருவுகின்றது. இதை சட்டவிரோதமாக வழங்கும் மூலதனப் பைத்தியங்களை கண்டு பிடிக்கும் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட தொடர்ச்சியான நிகழ்வுகள், ஐரோப்பிய ஜனநாயகத்தில் பூத்துக் குலுங்குகின்றது. கொழுக்க வைக்கும் மருந்துக்கு எதிராக போராட்டமற்ற மக்களின் மலட்டுத்தனத்தால், அமெரிக்காவில் மூலதனப் பைத்தியம் சார்ந்து சட்டபூர்வமாக அங்கீகரித்து, மிருகங்கள், வரைமுறையற்ற வகையில் வீங்க வைத்து கொழுக்க வைக்கப்படுகின்றது. கொழுக்க வைக்கும் மருந்தை உண்டு உருவாக்கிய இறைச்சியை உண்ணும் மனிதன், இறைச்சியின் ஊடாக அதே மருந்து மனித உடலில் இனைவதால், இயற்கைக்கு புறம்பாக கொழுத்து மனித ஆற்றலை இழந்து சீரழிவது அம்பலமாகியுள்ளது. உலகில் எங்குமில்லாத அளவுக்கு அமெரிக்காவில் அதிகரித்துச் செல்லும் கொழுத்த மனிதர்களின் வரைமுறையற்ற வீக்கம், அவர்களின் வாழ்வை அவலமாக்கின்றது. மூலதனப் பைத்தியம் இதை இட்டு அலட்டிக் கொள்வதில்லை. ஜனநாயக அமைப்பு இதை முண்டு கொடுத்து, இதை எதிர்ப்பதை ஜனநாயக விரோதமாகவும், பைத்தியமாகவும் சித்தரிக்கின்றது. எதிர்ப்பது மக்களின் சர்வாதிகாரம் என்றும், மூலதனச் சுதந்திரத்துக்கு எதிரானதாகவும் சித்தரிக்கின்றது. அதே நேரம் மூலதனப் பைத்தியம் மெலிவதற்கான மருந்தைக் கண்டு பிடித்துவிட தலைகீழாக நிற்கின்றது. இதன் மூலம் ஜனநாயக அமைப்பின் மூலதனப் பைத்தியங்களின் சுதந்திரத்தை பாதுகாக்க, அறிவை மக்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றது. உண்ணும் உணவில் கூட இயற்கையான சுதந்திரத்தை மூலதனத்தின் பைத்தியதால் மனிதன் இழந்து போனான். இயந்திரமாகிய மனிதன்  தனது சொந்த உழைப்புச் சுதந்திரத்தை இழந்து, மூலதனத்தின் விரிவாக்கத்தை உற்பத்தி செய்யும் உறுப்பாக மாறியது மட்டுமின்றி, இயந்திரத்தின் விளைவுகளையும் திண்டு தீர்க்கும், பண்ணை வளர்ப்பு சுதந்திர அடிமைப் பிராணியாகியுள்ளான். இந்த ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமின்றி, இந்த மூலதனப் பைத்தியங்களின் மக்கள் விரோத சுதந்திரத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.