தமிழ் மக்கள் தமக்காக தாம் தான் போராடவேண்டும். சிங்கள மக்கள் இதற்கு ஆதரவாகவும், தமிழ்மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சிங்கள மக்களை அணிதிரட்டிப் போராட வேண்டும். இந்த நடைமுறைப் போராட்டம் தான், தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் இயல்பான அரசியல்ரீதியான ஒன்றிணைவை உருவாக்கும். இதைச் செய்யாது, சிங்கள புரட்சிகர சக்திகள் தமிழ் மக்களுக்காக தாம் முன்னின்று போராட முற்படுகின்றனர். இது தவறானது. தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களுக்காகப் போராடியது போல், ஜே.வி.பி சிங்கள மக்களுக்காக போராடியது போல்தான் இதுவும். மக்கள் தாம் தமக்காக போராடுவதை இது தடுத்து நிறுத்துகின்றது.
பேரினவாதம் வெற்றிடத்தில் நின்று ஒடுக்கவில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களைச் சார்ந்து நின்று, சிறுபான்மை இனங்களை ஒடுக்குகின்றது. சிங்களப் பாட்டாளி வர்க்கம் சிறுபான்மை மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக, பெரும்;பான்மை சிங்கள் மக்கள் முன் போராட வேண்டிய உண்மையை இது எடுத்துக் காட்டுகின்றது. இதைத்தான் சிங்களப் புரட்சிகர சக்திகள் செய்யவேண்டும். வடக்கு கிழக்கில் இனவாதிகள் தொடர்ந்து நடத்தும் நில ஆக்கிரமிப்புகள், மதச் சின்னங்களை பலாத்காரமாக ஆங்காங்கே நிறுவுதல் தொடங்கி காணாமல் போனவர்களுக்கான போராட்டத்தை, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டத்தை சிங்கள புரட்சிகர சக்திகள் முன்னெடுக்கும்போது, அதை சிங்கள மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களை அணிதிரட்டிப் போhராட வேண்டும். அரசு இனவொடுக்குமுறையை பெரும்பான்மை சார்ந்து செய்யும் போது, அதை முறியடிக்கும் பணிதான் சிங்களப் புரட்சிகர சக்திகளின் மைய அரசியல் பணியாக இருக்க வேண்டும்.
இதற்காக தமிழ் மக்கள் முன் நின்று தாங்கள் போராடுவதால், சிங்கள மக்கள் சார்ந்த பேரினவாத அரசியல் அடிப்படையைத் தகர்க்கமுடியாது. சிங்கள மக்கள் முன் தாங்கள் போராடுவதன் மூலம் தான், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்ரீதியான நம்பிக்கையையும் இணைவையும் உருவாக்க முடியும். அதாவது தமக்காக சிங்கள மக்கள், தங்கள் எதிரியை எதிர்த்துப் போராடுவதை தமிழ் மக்கள் நடைமுறையில் காண வேண்டும். இதைச் செய்யாது வடக்குக் கிழக்கு சென்று, இதற்காக சிங்கள புரட்சிகர சக்திகள் போராடுவது தவறானது. அது இரண்டு பிரதான தவறுகளைக் கொண்டு வருகின்றது.
1. மற்றவர்களுக்காகப் போராடும் கூலி மனப்பான்மையையும், அவர்கள் வந்து எமக்காக போராடுவார்கள் என்ற அடிமை மனப்பாங்கையும் உருவாக்குகின்றது.
2. இந்த போராட்டம் மக்கள் தமக்காக தாம் போராடுவதை தடுத்து நிறுத்தி, மக்களுக்குள் ஆள் பிடிக்கும் அரசியலாக குறுகிவிடுகின்றது.
யுத்தத்தின் முன் இருந்த இத் தன்மையை, யுத்தத்தின் பின்பு புதிய சக்திகளும் இதையே தொடர்வதை இன்று இனம் காணமுடிகின்றது. பேரினவாத அரசு ஒரு தீர்வு மூலம் தமிழ் மக்களை வெல்வதற்கு பதில், ஆள்பிடிப்பதன் மூலம் மக்களை அடிமைப்படுத்த முனைகின்றது. இதே போல் புரட்சிகர பிரிவுகளும் புரட்சி செய்வதற்கு, ஆள்பிடிக்கும் அரசியலையே செய்ய முனைகின்றனர்.
இதற்கு மாறாக பேரினவாதம் எந்த சிங்கள மக்களைச் சார்ந்து நின்று இந்த ஒடுக்குமுறைகளைச் செய்கின்றதோ, அந்த மக்களை இதில் இருந்து விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை இல்லாதாக்க முடியும். இதைத்தான் சிங்கள புரட்சியாளர்கள் சிங்கள மக்கள் முன் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவை பாவித்து அரசியல் செய்வது என்பது அடிப்படையில் தவறானது. மாறாக பாதிக்கப்படாத மக்கள் முன் அதை கொண்டு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடவேண்டும். குறிப்பாக சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்காக போராடவேண்டும். அதை செய்வதன் மூலம், தமிழ் மக்களை வென்று எடுக்கவேண்டும்;. இதே அடிப்படையில் குறுந் தமிழ் தேசிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்காக தமிழ் மக்கள் போராட வேண்டும்;.
தமிழ் மக்களுக்காக சிங்கள் மக்களை அணிதிரட்டிப் போராடுவதன் மூலம் தான், வடக்கு கிழக்கில் நடக்கும் போராட்டதிலும் பங்கு கொள்ள முடியும். இதைப் போன்று தான் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள குறுகிய இனவாதம் சார்ந்த போக்குக்கு எதிராக, தமிழ் புரட்சிகர சக்திகள் போராடவேண்டும்.
அண்மையில் தம்புள்ளை, தெகிவளை, அனுராதபுரம் … என்று பல இடங்களில், மதம் சார்ந்தும் இனவாதம் தூண்டப்பட்டது. இந்த நிலையில் சிங்கள புரட்சிகர பிரிவுகள் அதை எதிர்த்து, அங்கு எங்கும் போராட்டத்தை நடந்தவில்லை. ஆனால் வடக்கு கிழக்கு சென்று போராட்டத்தை நடத்துகின்றனர். இங்கு தான் இதன் பின்னான தவறான அரசியல் வழிமுறைகளைச் சுட்டிக் காட்டுவது அவசியமாகின்றது.
தமிழ் மக்களின் உரிமை பற்றி சிங்கள மக்களின் தப்பபிப்பிராயங்களை களைவது யார்? இன மத குறுகிய வாதங்கள் சிங்கள மக்கள் மேல் திணிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவது யார்? சிங்கள புரட்சிகர சக்திகள் தான், தங்கள் மக்கள் முன் இதற்காக போராட வேண்டும். இதன் மீது வெறும் கண்டனங்கள் மூலமல்ல, மக்களை இதற்கு எதிராக தொடர்ச்சியாக அலையலையாக அணிதிரட்டிப் போராட வேண்டும்.
இதை நாம் செய்தால், இன மத உணர்வு பெற்ற சிங்கள மக்களில் இருந்து அன்னியப்பட்டு விடுவோம் என்று கருதுகின்ற இடதுசாரிய கண்ணோட்டம், அடிப்படையில் இனவாதம் மதவாதம் சார்ந்தது. இது தமிழ் மக்களை ஒடுக்குகின்ற இனவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் துணை போவதாகும். இதை சிங்கள புரட்சிகர சக்திகள் இனம் கண்டு போராடாமல் இருப்பது தான், முதன்மையான தவறாக இருக்கின்றது.
பி.இரயாகரன்
19.06.2012
5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05
6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 06
7. "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07
8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 08
9. இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 09
10. இனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 10