அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். இயல்பாக நாம் ஏற்றுக் கொண்ட, எம்மைச் சுற்றிய வாழ்க்கையை இது புரட்டி போடுகின்றது. தன்னில் தாழ்ந்தவனை குற்றவாளியாக்கும் எமது அறத்தையும், எமது மௌனங்களையும், வெறும் அனுதாப உணர்வுகளையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கின்றது. இந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு சினிமா, தன் கலை உணர்வுடன் அழகியலுடன் வெளிவந்திருக்கின்றது.

புதிய நடிகர்களைக் கொண்டு வெளியான இந்த சினிமா, வழமையான "அழகிய" முகங்களைக் கொண்ட மேற்தட்டு வர்க்க கவர்ச்சி சார்ந்த அழகியல் இந்த படத்தில் கிடையாது. தனிமனிதன் சார்ந்து கதாநாயகத்தனத்தை மட்டுமல்ல, தனிமனிதன் சார்ந்த வில்லன் தனத்தையும் கடந்த, சமூக எதார்த்தம் சார்ந்த ஒரு படம். சமூகத்தில் ஏற்றத்தாழ்வான மூன்று பொருளாதார சமூகப் பிரிவினரின் வாழ்க்கையையும், அதற்குள்;ளான உறவுகளில் ஏற்படும் பரஸ்பர தாக்கங்களை மிகைப்பாடு இன்றி வெளிக்கொண்டு வந்;திருக்கின்றது இந்த சினிமா. இந்த சமூக அமைப்பில் மூன்று வர்க்கப் பிரிவுகள் எப்படி வாழ்கின்றனர் என்பது தொடங்கி, உயர் வர்க்கம் சார்ந்தவர்கள் அடிநிலை வர்க்கத்தை எப்படி பயன்படுத்தி வாழ்வதுடன் எப்படி அவர்களை குற்றவாளியாக்கின்றது என்பதை கலைத்தனத்துடன் எடுத்துக்காட்டி இருக்கின்றது.

மேற்தட்டு வர்க்கம், நடுநிலை வர்க்கம்;, அடிநிலை வர்க்கத்தின் நுகர்வு தொடங்கி அதன் பாலியல் உணர்வுகள் வரை, எப்படி எதனடிப்படையில் வேறுபடுகின்றது என்பதையும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தையும் எந்த மிகைப்படுத்தல் இன்றி சினிமாவாக்கி காட்டி இருக்கின்றது.

வாழ்க்கையை புரட்டிக் காட்டுவது மார்க்சியம் என்பதால், அதை ஒரு காட்சி மூலம் எந்த சமூகத் தொடர்புமின்றி வலிந்து மிகைப்படுத்திய குறைபாட்டைத் தாண்டி, வாழ்க்கையை அதன் எதார்த்தமே புரட்டிக் காட்டும் காட்சிகளாலானது இந்தச் சினிமா.

இந்த மனித வாழ்வுக்கு சமூகம் ஒரு பார்வையாளனாக, குற்றவாளியாக இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஆளும் வர்க்கமும், அரச இயந்திரமும் எப்படி இதைச் சார்ந்து இயங்குகின்றது என்பதை, சினிமா என்ற கலைக்கு ஊடாக மிக அழகாக கொண்டு வந்திருக்கின்றது. சட்டம், நீதி, அதிகாரம்,அரசு.. எப்படி யாருக்கு சேவை செய்கின்றது என்பதை, எதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கின்றது.

மறுதளத்தில் வர்த்தக ரீதியாக இந்த படத்தின் தோல்வி கூட, சமூகத்தின் குறைபாட்டுடன் தான் தொடங்குகின்றது.

1. பழக்கப்படுத்தப்பட்ட ரவுடித்தமான சினிமா கலாச்சாரத்தையும், அதன் ஆபாசத்தையும், அதன் கவர்ச்சி சார்ந்த அழகியலையும் கொண்டிராத காட்சிகள், அதையே சினிமாவாக ரசித்த ரசிகனுக்கு முன் இந்தப் படம் இயல்பாகவே அன்னியமாகிவிடுகின்றது.

2.சினிமாவை தன் வாழ்வூடாக வாழ்க்கையாக காணமுடியாத கனவுக் காட்சிக்குள் கட்டுண்டு போன சமூகத்தின் பொதுப்புத்தி கூட, இந்தப் படத்தை தோற்கடிக்கின்றது.

3.அன்றாட வாழ்வில் இதையே வாழ்வாக வாழ்க்கையாகக் கொண்ட பாத்திரங்களில் உயர் வர்க்கம் தன் கோணங்கித்தனமான பகட்டுத்தனமான வாழ்வியல் நெறிகள் இயல்பாக அம்பலமாவதால், இந்தச் சினிமாவை தன் வர்க்கக் கண்ணோட்டத்துடன் அது சார்ந்த அதன் சமூக மேலாண்மையுடன் இந்தப் படத்தை தோல்வியடையச் செய்கின்றனர்.

4.நடுத்தர வர்க்கம் தனக்கு இதற்கும் சம்பந்தமில்லாததாகக் காட்டி நடிக்கும் தன் சொந்த வேசம் மூலம், இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பாக நடிக்கும் அற்ப புத்தியுடன் இதை தோற்கடிக்கின்றனர்.

5.அடிநிலை வர்க்கங்கள் தங்கள் வாழ்வு சார்ந்த இயல்பான இந்தத் துயரங்களை, சினிமாவாக மீள ரசிப்பது என்பது சாத்தியமற்றது.

இப்படி இந்தச் சினிமா வர்த்தகரீதியாக தோற்கடிக்கும் சமூகப் பின்னணியில் தான் இந்த படத்தின் வெற்றியும் அடங்கி இருக்கின்றது. சமூகப் பொறுப்புணர்வுடன் அணுகிய படம், அதே சமூகப் பொறுப்புணர்வுக்கு முன் வெற்றி.

சினிமா தன் கலைக்குரிய சமூக உள்ளடக்கதில் இந்த படம் வெற்றிபெற்று இருக்கின்றது. இந்தக் காட்சிகள் யாரை வென்று இருக்கின்றது என்பதில் தான், இதன் வெற்றியே அடங்கி இருக்கின்றது.

1.இந்த சமூக அமைப்பு பற்றி வெகுளித்தனமாக வாழ்ந்தவர்களுக்கு, வாழ்பவர்களுக்கும் முன் ஒரு அதிர்ச்சியை இது ஏற்படுத்தி இருக்கின்றது. வாழ்க்கைக் காட்சிகளைக் கொண்ட எதார்த்தம், அதன் பின்னான சமூக அவலத்தை ஒரு புள்ளியில் குவித்துக் காட்டி அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.

2.சமூகம், அதன் உறுப்பினர் என்ற வகையில் இதற்கு உடந்தையாகவும், மௌனமாகவும் இருப்பதன் மூலம் உதவுகின்ற சுய குற்ற உணர்வால் உந்தப்பட்டவர்கள், இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்க போராடவேண்டிய சமூகப் பொறுப்புணர்வை அவர்களுக்கு புகட்டி இருக்கின்றது.

3.அடிநிலை வர்க்கத்தை சார்ந்தவர்கள் தங்கள் அறியாமையால், இயலாமையால், அப்பாவித்தனத்தால் குற்றவாளியாக்கப்;படுகின்ற போது, தனிமனிதன் தன் குறைந்தபட்ச எதிர்ப்பை வெளிப்படுத்த கூடிய வகையில் வழிகாட்டி இருக்கின்றது.

இதைவிட படத்தை பாருங்கள். வாழ்வதற்காக உழைப்பவர்கள் சந்திக்கின்ற அவலத்தையும் துயரத்தையும் மட்டுமின்றி நுகர்வதற்கான சுரண்டலையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. பொருள் பயன்பாட்டுக்கும் நுகர்வுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டையும், அதன் குற்றத் தன்மையும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. உழைத்து வாழும் இயல்பான வாழ்வின் உண்மைத் தன்மைக்கும், இயல்பற்ற மற்றவர்களை ஏமாற்றி நுகர்ந்து வாழ்வதற்காக நடிக்கும் ஏமாற்றுத்தனத்தை, அதன் எதார்த்த இயல்புடன் போட்டுடைத்து இருக்கின்றது. பெண்ணின் உணர்ச்சி சார்ந்த பாலியல் மீதான நுகர்வின் மேலாதிக்கத்தையும், பெண்ணின் தற்காப்பு உணர்வையும் வர்க்க வேறுபாட்டுடன் வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. விபச்சாரம், கஞ்சா தொடங்கி ஆபாசம் வரையான வர்க்க ரசிப்பை மட்டுமின்றி காதல் உழைப்பு, பணம், உதவி, மனிதாபிமானம் தொடர்பான வர்க்கரீதியான அணுகுமுறையை முகத்தில் அடித்தாற் போல் சொல்லி இருக்கின்றது. வாழ்வதற்காக போராடுவது தான் வாழ்வின் கல்வி என்பதையும், கல்விக்கூடங்கள் எதை எப்படி நுகர்வுக்கு எஏற்ப உற்பத்தி செய்கின்றது என்பதையும் காட்சியாக்கி இருக்கின்றது.

கலை மனித வாழ்க்கையை புரட்டி போடுவதற்கு தான். பணம் சம்பாதிக்கவும், மக்களை அடிமைப்படுத்தவுமல்ல என்பதற்கு இந்த "வழக்கு எண் 18ஃ9" என்ற சினிமா ஒரு எடுத்துக்காட்டு.

 

பி.இரயாகரன்

17.06.2012