Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொலை செய்வதே புலியின் அரசியலாக முதலில் இனம் கண்டு கொண்ட ஐயர், அதை நிராகரித்தார். ஐயரின் நூலை அறிமுகம் செய்த தமிழ் பாசிட்டுகள், ஐயரின் இந்த முடிவுக்குக் காரணம் பார்ப்பனியத்தின் "கருணை" சார்ந்த அவரின் பிறப்பு சார்ந்த ஒன்றாக விளக்கம் கொடுத்தனர். இப்படிக் குறுகிய விளக்கம் கொடுக்கும் வண்ணம், நூலில் அரசியல் காணப்படுகின்றது. இந்த நூல் புலிகளை அரசியல் ரீதியாக அல்லாது, புலிகளை "குறைபாடு" கொண்ட "தவறுகள்" கொண்ட ஆனால் திருத்தக்கூடிய ஒன்றாக காட்டமுனைகின்றது.

இந்த வகையில், புலி அரசியலை, இந்த நூல் புலியின் வலதுசாரிய அரசியலாக இருப்பதை கண்டுகொள்ளவில்லை. மறுதளத்தில் இதற்கு முரணாக ஐயரின் நடைமுறையும், அவரின் தொடர்ச்சியான போராட்டமும் வலதுசாரியத்துக்கு எதிராகவே பயணித்தது. நூலினுள் "இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது." என்கின்றது. புலிகள் "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக்" கொண்ட இயக்கமா? அல்லது வலதுசாரிய இயக்கமா? வலதுசாரி அரசியலில் தன் வழியை அடைய வன்முறையைத் தேர்ந்தெடுக்கும் போது, அதன் மக்கள்விரோத வழியில் இவை "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக்" கொண்டதல்ல. அது அப்படித்தான் இருக்கும். இங்கு இடதுசாரியம் தான், மக்களைச் சார்ந்து இதை விமர்சிக்கின்றது. இதை இந்த நூல் நிராகரிக்கின்றது.

"இன்று மறுபடி" என்றபடி, இதை அரசியல் ரீதியாக முற்றாக நிராகரிப்பதை நூல் மறுக்கின்றது. ஐயர் இந்த அரசியல் வழிமுறைக்கு மாறாக மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு இயங்கியதை, அவரின் தகவல்களை தொகுத்தளிக்கும் அரசியல் மூலம் மிக நுட்பமாகவே மறுதலிக்கின்றது. மாறாக "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள" கூடிய வகையில், புலியின் வலதுசாரிய அரசியலை சரியாக இட்டுக்கட்டிக் காட்ட முனைகின்றது.

புலியின் அரசியல் என்பதே "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக்" கொண்டது. இது இந்த அரசியலில் தவறேயல்ல. மாறாக அதன் கொள்கையாகும். "கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்" என்று கூறி பிரபாகரனை உருவாக்கிய இந்த அரசியல், "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக்" கொண்டதல்ல. மாறாக அதன் அரசியல் வழிமுறை அதுவேயாகும். இந்த வலதுசாரிய அரசியல் வழிமுறை இயல்பிலேயே மக்களுக்கு எதிரானது. வன்முறையைத் தன் வழியாக தேர்ந்தெடுக்கும் போது, மக்களை ஒடுக்கும் பண்பு மிகக் கொடூரமாக வெளிப்படுகின்றது. இந்த அரசியல் வழி தான் இங்கு நிராகரிக்கப்பட வேண்டும். இந்த வழியை "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக்" கொண்ட ஒன்றாகக் காட்டிப் பாதுகாக்க முடியாது.

இந்த வகையில் இரண்டு நேர் எதிரான வழிமுறைகள் இருந்ததை இந்த நூல் மறுதலிக்கின்றது. இடதுசாரியம் விமர்சனம், சுயவிமர்சனம் அடிப்படையில் அல்லாது, வலதுசாரிய அடிப்படைக்குள் புலியை மீளவும் சரியான ஒன்றாக காட்டமுனைகின்றது. "இன்று மறுபடி"யும் இதுதான் ஐயரின் நிலை என்றால், ஐயர் புலியில் இருந்த போது மார்க்சியத்தை கற்றதன் மூலம் அவர் நடத்திய போராட்டம் முதல் அதன் பின் மார்க்சிய அமைப்புகளில் இயங்கிய அரசியலை "இன்று மறுபடி" காணத் தவறியதும், காட்டத் தவறியதும் என்பதே, ஐயரின் தகவல் மீது நூல் முன்வைக்கும் மறைமுக அரசியலாகும்.

இங்கு "இன்னொரு போராட்டம் எழுந்தால் இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு." என்பது, இங்கு "இன்னொரு போராட்டம்" இங்கு மீண்டும் ஒரு புலியையே குறிக்கின்றது. எங்கும் போராட்டம் இருந்ததையும், தொடர்வதையும் மறுக்கின்றது. புலியின் போராட்டம் தான், போராட்டம் என்று காட்ட முனைகின்றது. மறுதளத்தில் அன்று முதல் புலிக்கு எதிரான தொடர் போராட்டத்தை இது மறுக்கின்றது. இதன் மூலம் "இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு." என்பது, இந்தப் பாதைக்கு எதிரான தொடாச்சியான போராட்டத்தை மறுதலிக்கின்றது. மறுதளத்தில் புதிதாக "கற்றல்" பற்றி திடீரெனப் பேசுகின்றது. புலிப் பாசிசத்தின் பின் நின்றவர்கள், நிற்பவர்கள் மட்டுதான் இன்று இப்படிக் கூறமுடியும். ஐயர் இந்தப் பாதை தவறு என்று கருதி, "இன்னொரு போராட்டம்" என்ற வழி ஒன்றை முன்னின்று தேர்ந்தெடுத்தவர். அப்படியிருக்க "இன்னொரு போராட்டம் எழுந்தால்" என்ற கூற்று, ஐயரையே ஐயரின் நூல் மூலம் மறுதலிக்கின்றது. இன்னுமொருமுறை புலி "தவறுகளை களைந்துகொள்ள" இது உதவுகின்றது என்றால், கொலைகளை நிறுத்தி ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மத்தியில் வேலைசெய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று காட்டவும் கூறமுனைகின்றது. இப்படி புலியின் பாதையில் "இன்னொரு போராட்டம்" குறித்து பேசுவது இங்கு அபத்தமானது.

புலிகள் "வரித்துக்கொண்ட வழியும், புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம்." என்பதன் மூலம், நியாயப்படுத்த எதுவும் இங்கு கிடையாது. இந்த "வழி" "புரிந்துகொண்ட சமூகம்" என்பன தவறானதல்ல. இப்படிக் "தவறானதாக" காட்டுவது தான் இங்கு தவறானது. அந்த வர்க்கம் தன் "வழி"யையும், தன் "சமூக"த்தையும் சரியாக புரிந்துகொண்டு தான் இருந்தது. மறுதளத்தில் இந்த வழியை அவர்கள் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்த வரை, அதை நியாயப்படுத்த இங்கு எதுதான் எஞ்சி இருக்கின்றது. இங்கு "தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள்" என்பதால் இதை நியாயப்படுத்த முடியுமா? முள்ளிவாய்க்கால் வரை "தேவைப்பட்ட போராட்டம்" ஒன்றுக்குரிய பலிக்குரிய "முன்னோடிகள்" தொடர்ந்து பலியிடப்பட்டனர். இங்கு நியாயப்படுத்த எந்த அடிப்படையும் கிடையாது. இந்த அரசியலின் முன்னோடிகள் கூட்டணியாகும். இந்த வகையான அழிவு அரசியல் போராட்டமும், அதை வன்முறை மூலம் முன்னெடுத்த "முன்னோடிகள்" இங்கு இனத்தை படுகுழியில் தள்ளியிருக்கின்றனர். இந்தப் போராட்டம் இங்கு கூறுவது போல் "தேவைப்பட்டு" இருக்கவில்லை. "தேவைப்பட்ட போராட்டம்" ஒன்று மக்களுக்கு தேவைப்பட்டு இருந்தால், மக்கள் தான் போராடி இருக்கவேண்டும். மக்கள் போராடாத வரை, இது மக்களுக்குத் "தேவைப்பட்ட போராட்டம்" அல்ல.

மக்களைப் போராட்டத்தில் இருந்து அன்னியமாக்கும் "முன்னோடிகள்" உருவாகினர். இப்படி மக்களில் இருந்து அன்னியமானவர்கள், தங்களுக்கு "தேவைப்பட்ட போராட்டம்" என்று கருதியதொன்றை மக்கள் மேல் திணித்தனர். இப்படி இருக்க அவர்களை முன்னிலைப்படுத்தி அதன் "முன்னோடிகள்" என்று அவர்களை நியாயப்படுத்த முனைகின்ற, வலதுசாரிய அரசியல் கேலிக்கூத்தை இங்கு காண்கின்றோம். "தேவைப்பட்ட போராட்டம்" என்று இவர்கள் கருதி அதை இங்கு காட்டுவதும், அதை மீள முன்வைப்பதும் மக்களுக்கு எதிரானது.

இந்த "தேவைப்பட்ட" மக்கள் விரோத போராட்டத்துக்கு எதிராக, மக்களைச் சார்ந்த போராட்டமும், தியாகமும், அர்ப்பணிப்புகளும் தொடர்ந்து இருந்ததை இந்த அரசியல் கேலிக்கூத்து மறுதலிக்கின்றது.

"தேவைப்பட்ட போராட்டம்" ஒன்றின் "முன்னோடி"களின் ஒரு பகுதியினர் தமது "போராட்டத்திற்கான எமது திசைவழி தவறானது என்ற முடிபிற்கு நான் உட்பட பெரும்பாலோனோர் வந்தடைகிறோம்" என்கின்றார். "முடிபிற்கு நான் உட்பட பெரும்பாலோனோர்" வந்த நிலையில், அதை முன்னின்று முன்னெடுத்த ஒருவர் எப்படி "வரித்துக்கொண்ட வழியும், புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம்." என்ற கூறி அதை நியாயப்படுத்த முடியும்!? "போராட்டத்திற்கான எமது திசைவழி தவறானது" என்றதன் பின், அது "தேவைப்பட்ட போராட்டம்" என்று எப்படிக் கூற முடியும்!? இதன் பின் அதுவும், இதன் வழியும் "தேவைப்பட்ட போராட்டம்" அல்ல. இவர்கள் "முன்னோடிகளும்" அல்ல. அழிவுப் போராட்டத்தை நடத்தி இனத்தை அழித்த "முன்னோடிகளாக"வே உள்ளனர்.

"எமது திசைவழி தவறானது" என்று கருதியவர்கள் தான், ஒரு சரியான போராட்டத்தின் முன்னோடிகள். ஐயர் பிரபாகரனுக்கு எழுதிய கடிதம் "ஆக அந்தக் கடிதத்தில் ஒன்றை மட்டும் தான் குறிப்பிடுகிறேன். நாங்கள் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறை தவறானது. அழிவுகளை ஏற்படுத்த வல்லது." என்ற பின், அதுவே இன்று வரலாற்று உண்மையானதாகிய பின், "தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகளாக" எப்படி பிரபாகரன் இருக்க முடியும்!?

இந்த நூலை தொகுத்தவருக்கு இது "தேவைப்பட்ட போராட்டமாகவும்", இவர் ஆதரிக்கும் புலிக்கு "முன்னோடி"யாக பிரபாகரன் இருக்க முடியுமே ஒழிய, எப்படி இந்த "எமது திசைவழி தவறானது" என்ற கூறி இந்த அரசியல் வழிமுறையை நிராகரித்த ஐயருக்கு பிரபாகரன் முன்னோடியாக இருக்க முடியும்!?

 

தொடரும்

பி.இரயாகரன்

30.05.2012

1. எதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது? – "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 01

2.புலிக்குள் இடதுசாரியத்தை முன்வைத்தவரைக் கொன்றுவிட்டு, இடதுசாரியம் மீதான வசைபாடல் "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 02

3. புலிகள் "தவறு" இழைத்ததாக கூறும் அரசியல் திரிபானது "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 03