இன்று பேரினவாத மஹிந்த ராஜபக்ஷாவின் அரசு இலங்கை முழுவதும் தனது ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசானது இன்று தனது பாசிசப் பயங்கரவாதத்தை அனைத்து மக்கள் மீதும் ஏவிவிட்டுள்ளது. அதேவேளை, தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றது.

 

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னாடியும், எம் மக்களின் அவலங்கள் தொடர்கின்றன. அரச பாசிசத்தால் நடாத்தப்படும் கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், விவசாய, மீன்பிடி தொழில்களுக்கான தடையால் ஏற்படும் பட்டினிச்சாவுகள் எம் மக்களை வாட்டுகின்றது. அத்துடன் யுத்தத்தின் பாதிப்பால் ஏற்படும் சமூக - உளவியல் அவலங்களான உளவியல் பாதிப்புகள், போதைவஸ்துப் பாவனை, கொலைகள், தற்கொலைகள், பாலியல்வன்முறை, பெண்கள் சிறுவர்கள் மீதான வன்கொடுமை, திருட்டு, குற்றவியல் செயற்பாடுகளும் சமூக இயக்கத்தையும் தனி மனிதத்தையும் சீரழிக்கின்றது. இன்று தமிழ் மக்களின் ஒரே அரசியல் பிரதிநிதியென தம்மைக் காட்டிக் கொள்ளும் தமிழ் மேலாதிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம் தேசமக்களின் அவலங்களையும், சீரழிவுகளையும் கண்டு கொள்வதில்லை. அதற்கெதிராக எந்தவித உடனடி நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. ஒன்றைத்தவிர, அதாவது சர்வதேச மட்டத்தில் அரசியலாக்குகின்றோம் என்ற போர்வையில் எம் மக்களின் துயரங்களை பாவித்து தமது நலனுக்காகவும், தமது அரசியல் இருப்புக்காகவும் அமெரிக்காவையும், இந்தியாவையும் முன்னிறுத்தி அரசியல் செய்வதாகும்.


இந்த நிலையில் புலம்பெயர் சமூகத்தில் இருந்து மட்டும்தான், இந்தக் கொடுமைகளுக்கு எதிராக குரல்கள் எழ முனைகின்றன. அவையும் மக்களுக்கானதல்ல. புலம்பெயர் புலிப்பினாமிகள் தம் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைக்கும் துரோக அரசியலுக்காகவே மக்களின் துயரங்களை பாவிக்கின்றனர். தமது கடந்தகால தவறுகளை திரும்பிப் பார்க்காத, அதே மக்கள் விரோத அரசியல், மக்களை பணயம் வைத்து, அவர்களை பலியிட்டு நடத்திய அதே பாசிச அரசியல் புலம்பெயர் நாடுகளிலும் தொடர்கின்றது. இன்று, யுத்தக் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற போர்வையில், அந்த குற்றங்களின் பெரும் பங்குதாரர்களான இந்தியா, அமெரிக்கா, நோர்வே, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை தமது பாசிச அரசியலுக்கு துணையாக அழைக்கின்றனர், இந்தப் புலம்பெயர் மேலாதிக்க புலிப்பினாமிகள்.


அதேவேளை இடதுசாரிகள் என தங்களை அடையாளப்படுத்தியபடி, புதிதாக புலம்பெயர் மக்கள் மத்தியில் அரசியல் செய்ய வந்துள்ளவர்கள் சிலரும் பொய், புரட்டு, பித்தாலாட்டத்துடன் கூடிய அரசியல் கூத்துகளையே அரங்கேற்றுகின்றனர். நெருக்கடியில் இருந்து, நம் மக்கள் சுயமாக சொந்தப் போராட்ட வழிகளில் போராட உதவுவதற்கு பதிலாக இவர்கள், புலிகளின் அரசியலுக்கே முண்டு கொடுக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, சாதிய அரசியல், இலக்கியம், மனித உரிமை, புலி எதிர்ப்பு கதைத்தபடி மற்றொரு கும்பல் மஹிந்த பாசிச அடிவருடிகளாக தேசத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமது துரோகத்தனமான பாசிச அடிவருடி அரசியலை அதிவேகமாக முன்னெடுக்கின்றனர்.

இன்று முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னால் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ் தேசியத்தின் பெயரால் பலியிடப்பட்ட ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் தியாகங்கள் மேற்படி மக்கள் விரோத சக்திகளால் கொச்சைப்படுத்தப்பட்டு அரசியல் வியாபாரமாக்கப்படுகின்றது. உயிரோடுள்ள முன்னாள் போராளிகளின் துயரங்கள், அவலங்கள், அவர்கள் மீதான அரச ஒடுக்குமுறையால், சமூகவொடுக்குமுறையால் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அவர்களின் தியாகங்கள் மறக்கப்படும் நிலையில் உள்ளன.


இன்றுள்ள இந்த அரசியல் சூழ்நிலையில்,


1. அனைத்து போராளிகளின் தியாகங்களுக்கும் தலைவணங்குகின்றோம் !


2. போராட்டக்களத்தில் தமிழ் தேசியத்தின் பெயரால் உயிர்த்தியாகம் செய்த அனைத்து பொது மக்களுக்கும் எமது அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம் !


3. தேசவிடுதலையின் பேரால் மக்களும் போராளிகளும் செய்த தியாகங்கள் வீண்போகாது என உறுதியளிக்கின்றோம் !


4. தேசவிடுதலையின் பால் பற்றுக்கொண்ட அனைத்து சக்திகளையும் எம் மக்கள் நலம் சார்ந்து போராட, எம்முடன் இணைத்து போராட அறைகூவல் விடுக்கின்றோம் !

-புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
(முன்னணி இதழ் -05)