இனம் சார்ந்து குறுகிய இன அடையாளம் மூலம் இயங்கியவர்கள், இயங்குபவர்கள், தம்மை இனம் சார்ந்து மற்றவர்கள் கேலி செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். தீப்பொறி அமைப்பையும், பொது இடது அரசியலையும், அது சார்ந்த நபர்களையும் புலியிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்கள், தம்மை அரசிடம் காட்டிக்கொடுத்ததாகக் கூறுகின்றனர். புலிகள் காலாகாலமாகச் செய்து வந்த அரசியல் இது. புலியை அடையாளமாகக் கொண்டு உருவான "மே18" ஜ அடிப்படையாகக் கொண்ட ரகுமான் ஜான் தலைமையிலான அரசியலும் இதுதான்.
"மே18" காரர் கனடாவில் நடந்த கூட்டம் ஒன்றில், தம்மை "தமிழரங்கம்" காட்டிக் கொடுத்ததாகக் கூறி, அங்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் ஒருவரின் கருத்துச் சொல்லும் உரிமையை தடுத்து நிறுத்தினர். அங்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள "கனடாவில் "முன்னேறிய பிரிவினரின்" ஜனநாயக மறுப்பு! "என்ற கட்டுரையைப் படியுங்கள்.
கருத்துச் சொல்லும் உரிமையை மறுத்தவர்கள் வேறு யாருமல்ல. மே18 பின், புலியின் (பிரபாகரனின்) வாரிசாகக் காட்டிக் கொண்டு, தம்மை "மே18" இன் தொடர்ச்சி என்று தம்மை தாம் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் தான். இன்று புலியின் அதே பாணியில் மற்றவர்களின் கருத்துச் சுந்திரத்தை மறுக்கின்றனர். காட்டிக் கொடுத்ததாகக் குற்றஞ் சாட்டுகின்றனர். இனம் சார்ந்து கேலி செய்ததாகக் கூறுகின்றனர். புலிப்பாணியில் இது இவ்வாறு கற்பித்து, வங்குரோத்து அரசியல் நடத்த முனைகின்றனர்.
முதலில் இவர்களே தான், தங்களைத் தாங்களே யார் என்று அரசுக்கு காட்டிக் கொடுத்தவர்கள். இந்த வகையில் "மே18" முதல் தாமே தான் புலியின் வாரிசுகள் என்று கூறிக் கொண்டதன் மூலம், "மே18" இயக்கமாக பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் தம்மைத்தாமே காட்டிக்கொடுத்து கொண்டிருக்க, நாம் காட்டிக்கொடுக்க என்னதான் இங்கு மிஞ்சியிருக்கின்றது. பிரபாகரனின் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு "மே18" முதல், நான் தான் இந்த புலி அரசியல் வழிக்கும் தலைவர் என்றவர் இந்த ரகுமான் ஜான்.
இவர் வேறுயாருமல்ல, இதற்கு முன்பு "தமிழீழக் கட்சி" யின் பெயரில், புலியின் வழிகாட்டலில் ஒரு பினாமி அமைப்பை நடத்தியவர். இன்று புலிக்குப் பின் மற்றவர் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தலைமை தாங்குகின்றார். வேறு எப்படித்தான், புலி அரசியலை இவர்கள் தலைமை தாங்கிப் பாதுகாக்க முடியும்.
அன்று "தேடகம்" எதை மையப்படுத்தி போராடியதோ, அதே தேடகத்தைச் சேர்ந்த சிலர் இன்று அவற்றை மறுக்கின்றனர். இந்த வகையில் ரகுமான் ஜானின் தலைமையில் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து, புலியாட்டம் போடுகின்றனர். புலிப்பாணியில் தேடகத்தை கையகப்படுத்தும் தங்கள் சதிப் பின்னணியில், "மே18" ஆட்டம் அன்று வெளிப்படையாகவே அரங்கேறியது.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கனடாவில் இயங்கத் தொடங்கியது முதல், அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளமுடியாது போன "மே18" காரர், காட்டிக்கொடுப்பு பற்றி பேசுகின்றனர். கருத்துச் சொல்ல முனைந்த தோழரை, இனவாதியாகச் சித்தரிக்கின்றனர். தாங்கள் இனவாத அரசியலை நடத்தியபடி இவ்வாறு சொல்வதுதான், இங்குள்ள வேடிக்கை. புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் மீது செயலாற்ற முடியாதவர்கள், தங்கள் புலித் தேசிய அரசியல் மூலமான வன்முறையை நாடுகின்றனர்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழர் பேச முற்பட்ட விடையத்தைத் தடுக்க, "தமிழரங்கம்" "காட்டிக்கொடுத்தது" பற்றி பேசுகின்றனர். அண்மையில் நான் கனடா சென்ற போதும் சரி, அங்கு ஒரு கூட்டத்தில் உரையாற்றிய போதும் சரி, பின் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் அறிமுகத்தின் போது கூட, இது பற்றி எவரும் என்னுடன் பேச முற்படவில்லை.
இப்படி இருக்க புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கனடாவில் இயங்குவதும், தேடகத்தை புலிப் பாணியில் தமதாக்கும் சதியை தடுக்கும் எமது போராட்டத்திற்கான அவர்களின் எதிர்வினை தான், "காட்டிக்கொடுத்தது" என்ற "மே 18" இன் கூச்சல்.
எதைத்தான் நாம் காட்டிக் கொடுத்தோம்!?
பிரபாகரனுக்கு பின் நான் தான் தலைவர் என்று "மே 18" என்ற பெயரில் தன்னை பிரகடனப் படுத்தியவர் ரகுமான் ஜான். இப்படிப் புலியின் பின் இடதுசாரிய அரசியலை தடுத்து நிறுத்தி, வலதுசாரி தமிழ்தேசியத்தை பாதுகாக்கும் பொறுப்பை பிரகடனப்படுத்திக் கொண்டவரை காட்டிக்கொடுக்க என்ன இருக்கின்றது ? "இடதுசாரியம்" மூலம் புலிக்கு பின் அதை மீள நிறுவ முனைந்து நிற்கும் அரசியல் பின்புலத்தில், எம்மை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களின் எமக்கு எதிரான அரசியற் பிரச்சாரம் தான்; "காட்டிக்கொடுப்பு" என்றதான அவதூறு. எம் அரசியல் மீது எப்போதுமே எதிர்வினையாற்ற முடியாதன் விளைவு தான்.
இந்த ரகுமான் ஜான் வேறுயாருமல்ல. தீப்பொறியை புலியின் அரசியல் தேவைக்கு ஏற்ப காட்டிக்கொடுத்து, அதை "தமிழீழக் கட்சி" என்ற பெயரில் புலியின் பினாமி அமைப்பாக சதி குழுவாக உருவாக்கியவர். இந்த அரசியல் பின்புலத்தில் காட்டிக்கொடுப்பை செய்தவர் இந்த ரகுமான் ஜான்.
இந்த வகையில்
1.தீப்பொறியையும், அதன் அரசியலையும் புலிக்குக் காட்டிக்கொடுத்து, அதனிடத்தில் புலியின் பினாமி அமைப்பான "தமிழீழக் கட்சி" என்ற சதிக்குழுவை உருவாக்கியவர்.
2.இந்த "தமிழீழக் கட்சி" மூலம் புலத்தில் இருந்த இடதுசாரிய அரசியலை சிதைத்து, ஒரு அரசியல் காட்டிக்கொடுப்பைச் செய்தவர்.
3.இந்த "தமிழீழக் கட்சி" மூலம் புலிக்கு எதிரான இடதுசாரிய அரசியலை முன்வைத்த நபர்களை, புலிக்கு காட்டிக் கொடுத்தனர்.
இதைத்தான் ரகுமான் ஜானின் தமிழீழக் கட்சி செய்தது. தமிழீழக் கட்சிக்கும் - புலிக்கும் இருந்த உறவு இந்த அடிப்படையிலானதுதான். புலிகள் இவற்றைத் தாண்டி எதையும் அணுகாது என்பது, இதன் பின்னுள்ள மற்றொரு வெளிப்படையான அரசியல் உண்மை. புலி தன் ஆட்களை, தமிழீழக் கட்சிக்குள் வைத்து இயக்கியது, புலிக்கு எதிரான புலம்பெயர் நபர்களை படமெடுத்து வன்னிக்கு கொடுத்தது வரை, ஒரு சதியே இதன்பின் முழுமையாக அரங்கேறியது. எல்லா இடதுசாரிய அரசியல் அடிப்படைகளையும் அரசியல் ரீதியாக சிதைத்த பின், இந்த அமைப்பு தானாக காணாமல் போனது. இதில் இயங்கிய சிலர் வன்னி சென்று, புதிய சதிகளுடன் மீண்டனர்.
இந்த அரசியல் பின்புலத்தில் ரகுமான் ஜான் இருந்தார். இவை எவைகளையும் பற்றிய சுயவிமர்சனம் என்றும் எங்கும் செய்தது கிடையாது, விமர்சனம் கூடச் செய்தது கிடையாது. இதில் ஈடுபட்டவர்கள் உள்ளடங்க, மீண்டும் திடீரென (குறைந்தது 10 வருடங்களின் பின்) "மே 18" இயக்கமாக திடீரெனக் களமிறங்கினர். இடதுசாரிய அரசியலை காயடிக்கும் முயற்சி தான், இவர்களின் இன்றைய மைய அரசியல்.
இதன் மீதான எமது எதிர்வினையின் போது, எமது கட்டுரைக்குள் வெளியிட்ட நிழற்படம் ஒன்று பிரசுரமானது தன்னை காட்டிக் கொடுத்துவிட்டதாகக் கூறுகின்றார். நாம் வெளியிட்ட பல ஆவணப்படங்களில் இதுவும் ஒன்று. வேறு யாரும் இவ்வாறான நிழற்படங்கள் தம்மைக் காட்டிக் கொடுத்ததாக இதுவரை கூறவில்லை. எமது ஆவணப்பகுதி பல ஆயிரம் நிழற்படங்களைக் கொண்ட து. பார்க்க. இதில் புளட்டின் 50 நிழற்படங்கள் அடங்கும். இதில் சிலவற்றை நாம் கட்டுரைக்குள் பயன்படுத்தினோம். இந்த நிழற்பபடம் ஒன்றில் தான் இருப்பதாகவும், அது தன்னைக் காட்டிக் கொடுப்பதாகவும் கூறுகின்றார். சரி இது எப்படி காட்டிக்கொடுப்பாகும்?
இந்தப் படத்தில் இருப்பது ரகுமான் ஜான் என்பது எனக்குத் தெரியாது. நான் 2009 இல் ரகுமான் ஜானைச் சந்திக்கும் வரை அவரைக் கண்டதே கிடையாது. நிற்க அவரின் இளமையான படத்தைக் கொண்டு யாரும் அதை ஒப்பிட்டுக் கூட அடையாளம்; காணமுடியாது. இது ரகுமான் ஜான் என்பதை, தேசம்நெற்றும் ரகுமான் ஜானும் சேர்ந்து அது நானே தான் என்று கூறியபோது தான், அதை நான் தெரிந்து கொண்டேன். இது போலவே தான் பலரின் நிலை. கட்டுரையில் படம் வர முன் இவர் தான் ரகுமான்ஜான் என்று எனக்கு தெரிந்திருந்தால், அவரின் "மே18" புலி அரசியலுக்கு ஏற்ற "கோதாரி" றோவுடன் சேர்த்து நடத்திய ஈழ அரசியலையும் அம்பலப்படுத்தி இருப்பேன்.
நிற்க படத்தில் இருப்பது நான்தான் என்று ரகுமான் ஜானும் தேசம்நெற்றுடன் கூடி இதை காட்டிக்கொடுப்பாக உளறிய பின்னணியில் இருந்த அரசியல்
1. இதன் மூலம் பிரபாகரனைப் போல் தலைமை தாங்கும் இராணுவத் தகுதி தனக்கு இருக்கிறது என்பதை நிறுவ முற்பட்டனர்.
2.தமிழரங்க அரசியலை எதிர்கொள்ள முடியாததால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதன் மூலம் அரசியல் நடத்துவது.
இந்த வகையில் தேசம்நெற்றில் இந்தப்படத்தில் இருப்பது ரகுமான் ஜான் தான் என்று ஒருபுறம் கூடி கூட்டாக தம்பட்டமடித்தனர், மறுபக்கம் காட்டிக்கொடுப்பு என்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ரகுமான் ஜான் தேசம்நெற்றில் இந்த பிரசுரிக்கப்பட்ட நிழற்படத்தில் இருப்பது தானே என விளம்பரப்படுத்திய பின்னணியில், பலரும் அதனைத் தெரிந்து கொண்டனர். இதை நான் தெரிந்து கொண்டுதான் வெளியிட்டேன் என்றால், இதனைக் காட்டிக் கொடுப்பு என்று சொல்வது அர்த்தமற்றது. நீங்களே "மே 18" எதிர்கால வாரிசாக பிரகடனப்படுத்திய பின், காட்டிக்கொடுக்க மற்றவர்கள் முன் புதிதாக எதுவும் இல்லை. இந்த ஆவணங்கள் நிழற்படங்கள் எங்கும் உள்ளவைதான். றோவுடன் சேர்ந்து நீங்கள் எடுத்த பயிற்சிகள், அவர்களும் சேர்ந்து எடுத்த படங்கள் தான் இவை. ரோவிடமும், இலங்கையிடமும் இல்லாத ஒன்றையா நாங்கள் வெளியிட்டோம்? இவ்வாறான நிழற்படங்கள் ஆதாரங்களாக வெளியிட்டேயாக வேண்டியவைதான். இப்படியான நிழற்படங்களை வைத்து கடந்தகால மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் என்றால், அதை செய்வோம். நாங்கள் இது போன்ற 10000 க்கும் மேற்பட்ட கடந்தகால ஆவணங்களைக் (http://www.padippakam.com/) களஞ்சியப்படுத்தி இருக்கின்றோம். இதை காட்டிக்கொடுப்பு என்று சொல்லும்( உங்கள் அரசியல் வங்குரோத்தை மட்டுமல்ல, இந்த ஆவணப்படுத்தலை தடுக்க ரகுமான் ஜான் செய்த முயற்சிகளையும், திருகுதாளங்களையும், எமக்கு அவை கிடைக்காத வண்ணம் ஆவணங்களை கையகப்படுத்தியதையும் கூட நாம் அறிவோம்.
இப்படி இருக்க இதைக் காட்டிக்கொடுப்பு என்று கூறுகின்ற அரசியல் வங்குரோத்தைக் காண்கின்றோம். இது போல்தான் தன்னை இனம் சார்ந்து "தொப்பிபிரட்டி" என்று நேசன் எழுதியதாக இட்டுக்கட்டி காட்டுகின்றனர்.
ரகுமான் ஜானை ஒரு முஸ்லீம் என்ற வகையில் நேசன் கேலி செய்தாரா!?
நேசன் முன்பு எழுதியது என்ன? " …இரண்டாவதாக "சிங்கக் கொடி போட்ட ரீசேட் போட்டது" என்று சொல்வதன் மூலம் என்னை "மகிந்தாவின் ஆள்", அல்லது "மகிந்தாவின் அடிவருடி" என்று காட்ட முற்படுகிறார். புலிகள் எப்படி தமக்கு வேண்டாதவர்கள் எல்லோரையும் "அரசின் கைக்கூலிகள்" "துரோகிகள்" என்று முத்திரை குத்தினார்களோ அதே தந்திரோபாயத்தை தான், இங்கு ரகுமான்ஜான் கையாளுகிறார். ரகுமான்ஜான் கருத்து, நடைமுறையில் "புலிகளின் மறு விம்பமே". ஆனால் ரகுமான்ஜான் "முன்னேறிய பிரிவினர்" என்ற போர்வைக்குள் மறைந்து நின்று இதைச் சாதிக்கிறார். மனோரஞ்சனையும், கண்ணாடி சந்திரனையும் சிறிலங்கா அரசின் அடிவருடிகளாக, "மகிந்தவுக்கு காவடி தூக்குபவர்களாக" பட்டியலிட்டு விட்ட ரகுமான்ஜான், "சிங்கக் கொடி போட்ட ரீசேட்" போட்டதென்று சொல்லி என்னையும் மூன்றாவது ஆளாக அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளார். இப்படி செய்வதன் மூலம் புலிகளின் தலைமை அழிந்தாலும் புலிகளின் கொள்கை வழியே தான் செல்வதென்று கங்கணம் கட்டி நிற்கிறார் ரகுமான்ஜான். இவ்வளவற்றையும் கூறிவிட்ட ரகுமான்ஜான், "ஸ்ரீ லங்கா அரசின் அடிவருடிகளான மனோரஞ்சன் கோஸ்டியுடன் இணைந்து செயற்படும் இவர்களின் அரசியலானது எமது தேசம் சார்ந்த அரசியலுக்கு நேரெதிரானது" என்று கூறும் ரகுமான்ஜான், அடுத்த பந்தியிலேயே, தனது தொப்பியை மாற்றிக் கொண்டு, "இப்போதுங் கூட மகிந்த சார்பு அரசியலை செய்பவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் தங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைக்கட்டும் நாம் எமது கருத்துக்களை முன் வைப்போம்" என குழம்பியவராக முரண்பாடாக பேசுகிறார். ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்படக்கூடிய ஒரு அவல நிலைதான் இது! "அரசின் அடிவருடிகள்" என்கிறார்; "அரசின் கைக்ககூலிகள்" என்கிறார்; "தேசம் சார்ந்த அரசியல்" என்கிறார்; "கருத்துக்களை முன் வைக்க" சொல்கிறார்; "விவாதம் நடத்துவோம்" என்கிறார்; எப்படியெல்லாம் குழம்பி பேசுகிறார்! ரகுமான்ஜான் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்." இதுதான் நேசன் எழுதியது.
இதில் வரும் ".. அடுத்த பந்தியிலேயே, தனது தொப்பியை மாற்றிக் கொண்டு" என்ற பதத்தை ( இவ்வாறு ஜரோப்பிய மொழிவழக்கில் கூட நேரத்துக்கு ஒரு கருத்தைக் கூறுபவர்களை அழைப்பர்) கூறுவதை, தன் இனம் சார்ந்து "தொப்பிபிரட்டி" என்று கூறியதாக இட்டுக் காட்டுகின்றார்.
"காகம் இருக்க பனம் பழம் விழுந்த" கதைதான், ரகுமான்ஜானின் குற்றச்சாட்டின் அரசியல் அடிப்படையாகும். நீங்கள் கூறும் இந்த அடிப்படையில் இந்த வரிகளை தான் கூறவில்லை என்று நேசன் கூற, இல்லை என்று கூறுகின்ற அரசியல் வங்குரோத்தைக் காண்கின்றோம். நேசனின் அரசியலை எதிர்கொள்ள முடியாதவர்கள், இந்தக் கூற்றுக்கு அர்த்தம் கற்பித்து அதில் தஞ்சமடைகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தீப்பொறியின் மத்திய குழுவில், நீங்களும் நேசனும் இருந்த போது, உங்களுடன் முரண்பட்டபோதெல்லாம் நேசன் இனம் சார்ந்தா உங்களை எதிர்கொண்டார், இல்லையே. அங்கு இல்லாத இனவாதத்தை, இந்த வரிக்குள் இனம் சார்ந்ததாக அர்த்தம் கற்பிக்கின்ற பொறுக்கித்தனமான அரசியலைத் தவிர, இது வேறு எதுவுமல்ல.
இது ஒருபுறம் இருக்க தீப்பொறியில் இருந்த சுனிமெல் (பார்க்க) என்ற சிங்கள தோழர்களை உங்கள் குறுகிய இன உணர்வு சார்ந்து நீங்கள் வெளியேற்றிய போது, இதை எதிர்த்த நேசனா உங்களை இனம் சார்ந்து எழுதினார். சொல்லுங்கள்! மாறாக இனம் சார்ந்த உங்கள் குறுகிய கண்ணோட்டமும், உங்கள் அரசியலும் தான், இதற்கு இனம் சார்ந்த குறியீட்டு அர்த்தத்தைக் கற்பிக்கின்றது. குறுகிய புலி அடையாளப்படுத்தல் அல்லவா. புலி வாரிசாக பிரகடனப்படுத்திய "மே18" அரசியல் அடையாளமே, குறுகிய இனம் சார்ந்ததல்லவா.
"காட்டிக் கொடுத்ததாக" கூறுவது முதல் "இனம் சார்ந்ததாக" அர்த்தம் கற்பிக்கின்ற அரசியலின் பின், புலியின் தொடர்சியான "மே18" புலி அரசியல்தான் இருக்கின்றது. புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அரசியலை எதிர்கொள்ள முடியாத வங்குரோத்து தான், இட்டுக்கட்டி அர்த்தம் கற்பிக்கும் அவதூறு அரசியலில் ஈடுபடுகின்றது. அதன் பண்பு ரீதியான வெளிப்பாடு தான், கருத்தை சுதந்திரத்தை மறுக்கும் வன்முறையாக மாறுகின்றது.
பி.இரயாகரன்
12.05.2012