"பிரிவினைவாதம்" பற்றியும், "பயங்கரவாதம்" பற்றியும் மட்டும் பேசிய ஜே.வி.பி., இனப்பிரச்சனை பற்றிப் பேசவில்லை. "பிரிவினைவாதத்தையும்", "பயங்கரவாதத்தையும்" சோசலிசத்துக்கு முன்னமே ஒழிக்கவும் கோரி அதற்கு உதவியவர்கள், பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவில்லை. மாறாக இனப்;பிரச்சனையை தாம் சோசலிசத்தில் ஒழித்து விடுவோம் என்று கூறியதன் மூலம், இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாது அதற்கு மறைமுகமாக உதவினர். இப்படி இனவொடுக்குமுறையை எதிர்த்துப் போராடாது இனவொடுக்குமுறைக்கு மறைமுகமாக உதவியவர்கள் தான், தாங்கள் இனவொடுக்குமுறையில் ஈடுபடவில்லை என்றும் கூறினர். இதுதான் ஜே.வி.பி.யும், அதன் அரசியலும். இந்த அரசியல் வழிமுறை லெனினிய வழிமுறையல்ல. மாறாக திரோஸ்கிய வழிமுறையாகும். ஜே.வி.பி.யின் இந்த அரசியல் பின்புலத்தில் லெனினின் சுயநிர்ணயத்தை மறுத்தவர்கள், திரோஸ்கிய சுயநிர்ணய மறுப்புக் கோட்பாட்டையே தமதாக்கினர். இந்த அரசியல் போக்கு, இன்றும் பரவலாகவே பல தரப்பிடம் தொடர்ந்து காணப்படுகின்றது.
இப்படி இலங்கையில் நீடித்த பாட்டாளி வர்க்க விரோத, திரோஸ்கிய அரசியல் பின்புலத்தில் தான், இலங்கை பேரினவாதவொடுக்குமுறை செழித்து வளர்ந்தது. லெனினியத்தை மறுத்ததன் மூலம் உருவான பாட்டாளி வர்க்கத்தின் செயலற்றதனம் தான், இனவாதிகளின் செயல்பூர்வமாக செயலாகியது.
இப்படிப் பாட்டாளி வர்க்கத்தை செயலற்ற தனத்துக்கு வளர்த்தெடுத்தது, இலங்கையில் செல்வாக்கு வகித்த திரோஸ்கியக் கோட்பாடாகும். இலங்கையின் பிரதான முரண்பாடு மீது, பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமான தன் செயலை மறுத்த போது, இலங்கையில் வர்க்கக் போராட்டத்துக்கு இடமில்லாமல் போனது. லெனினைத் திரித்து முன்வைக்கும் திரோஸ்கிய கோட்பாட்டு அரசியல் பின்புலத்தை புரிந்து அதை அரசியல் ரீதியாக நிராகரிப்பதன் மூலம் தான், லெனினிய புரட்சிகரக் கட்சியைக் கட்டமுடியும். வெறுமனே சிவப்புக் கொடிகள், மார்க்சிய தலைவர்களின் படங்களும் செயல்பூர்வமான புரட்சியை நடத்தாது. சரியான புரட்சிகர கோட்பாடும், அதன் அடிப்படையில் புரட்சிகர யுத்ததந்திரமுமின்றி புரட்சியை நடத்த முடியாது.
புரட்சிகர யுத்த தந்திரத்தில், அதன் நடைமுறையில் புரட்சியில் பல கட்டங்கள் இருப்பதை மறுத்தல், இலங்கை இடதுசாரிய அரசியலில் பொதுவில் காணப்படுகின்றது. இலங்கை வர்க்கப் போராட்டக் கட்சியை உருவாக்குவதற்குரிய தடையான அரசியல் கூறுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அரசியல் கூறு அராஜக கோட்பாடு (அனாஸ்சிட்) சார்ந்தும், திரோஸ்கிய நிரந்தரப் புரட்சி கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டது.
புரட்சிக்குப் பல கட்டங்கள் இருப்பதையும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வான சமூகப் படிநிலை இருப்பதையும் மறுதலித்தல் ஆகும். இலங்கையில் ஜனநாயகப் புரட்சிக் கடமையை மறுத்தல் தொடங்கி சுயநிர்ணயத்தை முன்வைத்துப் போராட மறுக்கும் வரையான பல கூறுகளை இனம் காணமுடியும். இந்த அரசியல் என்பது லெனினிய அடிப்படையை நிராகரிக்கும், திரோஸ்க்கிய கோட்பாடாகும். புரட்சியின் கடமைகளை ஓரேயடியாக ஓழித்து விடலாம் என்ற, திரோஸ்கிய மார்க்சிய விரோதப் போக்காகும். சமூக ஒடுக்குமுறைகளை சோசலிசத்தில் ஒழித்துவிடலாம் என்று கூறி, சோசலிசத்துக்கு முந்தைய வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கும் திரோஸ்கிய நிரந்தர கோட்பாடாகும். சோசலிசத்துக்கு முந்தைய வர்க்கக் போராட்டதை சுரண்டல் மீதானமதக மட்டும் முன்னிறுத்தி, சமூக ஒடுக்குமுறைகள் மீது மறுத்தல்.
இதன் மூலம் தாம் சோசலிச ஆட்சிக்கு வருவதன் மூலம், சமூக முரண்பாடுகளைத் தீர்க்கலாம் என்கின்றனர். இதன் மூலம் அதற்கு முந்தைய வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்றனர். ஜே.வி.பி. அரசியல் இந்த திரோஸ்க்கிய கோட்பாட்டையை அடிப்படையாக கொண்டது. தாம் ஆட்சிக்கு வரும் குதிரைகளாகவே மக்களைக் கருதினர். அப்படி இருக்குமாறு கோரினர். மக்கள் தமக்கான வர்க்கப் போராட்டத்தை, தாமே நடத்துவது என்பதை மறுதலிக்கின்றனர்.
மக்கள் தமக்கான வர்க்கக் போராட்டத்தை நடத்துவது என்பது, தமக்கு இடையேயான சமூக முரண்பாடுகளை முரணற்ற வகையில் தமக்குள் தீர்ப்பதன் மூலம் தொடங்குகின்றது. இந்த வகையில், அனைத்துத் துறையிலும், வர்க்கப் போராட்டம் புரட்சிக்கு முன்பு இருந்தே தொடங்குகின்றது. எந்த வர்க்க கடமையையும், புரட்சிக்கு பின் ஒத்திப் போடுவது வர்க்கப் போராட்டமல்ல. இது திரோஸ்கிய வர்க்க விரோத, நிரந்தரப் புரட்சிக் கோட்பாடாகும்.
சமூக முரண்பாடுகள் புரட்சிக்கு பின்தான் தீர்க்கப்படும் என்பது, புரட்சிக்கு முன் வர்க்கப் போராட்டமற்ற ஆட்சியைக் கைப்பற்றும் சதிக் குழுவைத்தான் உருவாக்கும். ஜே.வி.பி.யின் வரலாற்றை எடுத்தால், திரோஸ்கிய வழிவந்த இந்த அரசியலை எங்கும் காணமுடியும்.
புரட்சிக்கு பின் இதையும், அதையும் தங்கள் தீர்ப்பதாக கூறுகின்ற மக்கள் விரோதப் போக்கை காணமுடியும். புரட்சிக்கு முன்பு இருந்தே, மக்கள் தமக்குள் தாம் தீர்க்க முற்படுவதை எதிர்க்கின்றனர். அதை முன்னின்று அரசியல் ரீதியாக வழிகாட்டுவதை எதிர்க்கின்றனர். இந்த வகையில் லெனினிய வழியை மறுத்து, திரோஸ்கிய வழியை முன்னிறுத்தினர். இதுதான் ஜே.வி.பி.யின் அரசியல். புரட்சிக்கு முன்பு இருந்தே அரசியல் கிளர்ச்சியாக முன்வைத்து போராடும் லெனினிய வழியை மறுத்த திரோஸ்கிய போக்கை இங்கு நாம் இனம் காணமுடியும்.
சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவது என்பது, ஒடுக்குமுறையுடன் தொடங்கி விடுகின்றது. ஒடுக்குமுறையை அனுபவிக்கும் மக்கள், அதை உணரும் மக்கள் ஒத்திப் போடுவதில்லை. இப்படி இருக்க இலங்கையின் பிரதான முரண்பாடான இன முரண்பாட்டை ஜே.வி.பி., புரட்சிக்கு பின் தனது சோசலிச ஆட்சியில் தீர்ப்பதாகக் கூறியது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை லெனினிய வழியில் எதிர்கொள்வதை மறுத்து, அதற்கு திரோஸ்கிய வழியில் விளக்கம் கொடுத்தது. சுயநிர்ணயத்தை மறுத்த திரோஸ்கிய கோட்பாட்டை முன்னிறுத்தி, லெனினின் சுயநிர்ணயத்தை மறுத்தனர்.
தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை தங்கள் சோசலிச அமைப்பில் தீர்ப்பதாக கூறியவர்கள். இந்தப் புரட்சிகர கூறற்ற இனவாத அரசியலால், ஜே.வி.பி இரண்டாக உடைந்தது. ஒருபுறம் பேரினவாதிகளாகவும், மறுபக்கத்தில் புரட்சிகர சக்திகளையும் கொண்ட பிரிவை முன்னிறுத்தி உடைவாகியது. இறுதியில் சீரழிந்த புரட்சிக்கர கூறுகளற்ற ஜே.வி.பி. எஞ்சியுள்ளது.
இப்படி இருக்க இனவொடுக்குமுறைக்கு உள்ளான மக்கள், இவர்கள் புரட்சி செய்து தீர்க்கும் வரை காத்திருக்க வேண்டும் என்ற கூறுகின்ற திரோஸ்க்கிய வக்கிரத்தை எப்படிக் காண்பது? புரட்சிக்கு முன் சுயநிர்ணயத்தை மறுத்த அதன் செயலற்றதனம் மூலம் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தை மௌனமாக இருக்கக் கோரியது ஜே.வி.பி. இந்த இனவாதத்தை சிங்களப் பாட்டாளி வர்க்கம் இனம் காணாமல் வர்க்கக் கட்சியைக் கட்டமுடியாது.
திரோஸ்கிய வழிவந்த இந்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் மறைமுகத் துணையுடன், பேரினவாதம் தன் ஒடுக்குமுறையை அரங்கேற்றியது, அரற்கேற்றுகின்றது. இப்படி இருக்க ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் மத்தியில் இருந்து, வெவ்வேறு வர்க்கங்கள் தத்தம் வர்க்கக் கோசத்துடன் போராடத் தொடங்கியது. பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சி வரை காத்திருக்கக் கோரும் அரசியல் பின்புலத்தில், ஒடுக்குமுறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் செயலற்றுப் போனது.
லெனினிய வர்க்கக் கடமையை மறுத்த அரசியல் பின்புலத்தில், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக புலிகள் போன்ற வலதுசாரிய பாசிசக் குழுக்களின் போராட்டம் முன்னுக்கு வந்தது. இந்த நிலையில் ஜே.வி.பி. "பிரிவினைவாதம்" பற்றியும், "பயங்கரவாதம்" பற்றியும் பேசியது. இதை தங்கள் சோசலிசப் புரட்சியின் பின் தீர்ப்பதாக கூறவில்லை. இப்போதே தீர்க்க, அரசின் பின் சென்றது. இது தான் திரோஸ்கிய ஜே.வி.பி. வழியாகும்.
சுயநிர்ணயத்தை மறுக்கும் திரோஸ்கிய வழியில் இனவொடுக்குமுறைக்கு உதவுவதாகும். லெனினிய சுயநிர்ணய வழியில், இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடாமல் இருப்பதும் ஜே.வி.பி. அரசியல் வழியாக இருந்தது. இந்த திரோஸ்கிய இனவாத அரசியல் வழி, சிங்கள இடதுசாரிகள் மத்தியில் இன்னமும் செல்வாக்கு வகிக்கின்றது. ஜே.வி.பி. உடைவின் பின்னான புதிய புரட்சிகர கட்சிக் கூறுகளில் கூட, தொடர்ச்சியாக இன்று வரை இந்த திரோஸ்கிய கூறு முதன்மை பெற்று வெளிப்படுகின்றது.
பி.இரயாகரன்
11.05.2012
5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05