"இலங்கையில் தொடரும் பௌத்த சிங்கள பேரினவாதத் தாக்குதலைக் கண்டித்து" மே 06, 2012 கனடாவில் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்கள் அநாகரிக தர்மபாலாவில் தொடங்கி 1915 இல் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைக்கூடாக தம்புள்ளவில் சிங்கள பேரினவாதம் வந்தடைந்திருப்பதை கோடிட்டுக் காட்டினர். இலங்கையின் வரலாற்றில் நாம் கடந்துவந்த, கடந்துகொண்டிருக்கின்ற ஒரு அரசியல் போக்கே சிங்களப் பேரினவாதம் என்பதில் ஐயமில்லை. ஆனால் சிங்கள பேரினவாதத்துக்கு இணையாக வளர்ந்துவிட்டிருந்த தமிழ் குறுந்தேசிய வாதம் குறித்தோ அல்லது இந்த குறுந்தேசிய இனவாதம் இனவெறியாக மாறி முஸ்லீம் மக்களை நூற்றுக்கணக்கில் பலிகொண்டுவிட்டதையோ, தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்கில் நடைபெற்ற இனச் சுத்திகரிப்பு குறித்தோ பேச்சாளர்கள் எவரும் பெருமளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.

உகண்டா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த இடி அமின் அங்கு குடியேறியிருந்த இந்திய வம்சா வழியினரை உகண்டாவை விட்டு வெளியேற மூன்று மாத கால அவகாசம் வழங்கி இருந்தான். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளோ மூன்று மணித்தியால அவகாசத்துக்குள் வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை முற்றாக அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இருந்து வெறுங்கையுடன் விரட்டியடித்திருந்தனர். இலங்கை வரலாற்றில் முஸ்லீம் மக்கள் தமது பூர்வீகப் பிரதேசங்களிலிருந்து நிரந்தரமாக உடமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதும், பெருமளவுக்கு கொலை செய்யப்பட்டதும் தமிழ் தேசியத்தின் பெயரால் தான் என்றால் அது மிகைப்படுத்தப்பட்டதாகாது.

இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் சிங்கள பேரினவாதத்தால் மட்டுமல்லாமல் தமிழ் குறுந்தேசிய இனவாதத்தாலும் பாரியளவில் பாதிக்கப்பட்டவர்களாக, இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பதே உண்மையானதாகும்.

தமிழ் குறுந்தேசிய இனவாதிகள் முஸ்லீம் மக்கள் மேலான தமிழீழ விடுதலைப் புலிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை குறித்தோ அல்லது முஸ்லீம் மக்கள் இன அழிப்புக்குள்ளானது குறித்தோ இதுவரை மௌனம் காத்தவர்களாக அல்லது அதை நியாயப்படுத்துபவர்களாகவே காணப்படுகின்றனர். இத்தகைய செயற்பாடுகள் அனைத்தையும் திட்டமிட்டுச் செயற்படுத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு "தேசிய சக்திகள்" என்ற பெயரிட்டு வழிபாடு செய்கின்றனர். சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லீம் மக்கள் மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தாக்குதலையும் தாம் கண்டிப்பதாகக் கூறும் இந்தப் பேர்வழிகள் தமிழ் இனவாதத் தலைமைகளால் முஸ்லீம் மக்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களையும், இனச் சுத்திகரிப்பையும் "துன்பியல்" சம்பவம் என விளக்கம் கொடுக்கின்றனர்.

இவர்கள் ஒட்டுமொத்தத்தில் தமிழ் இனவாதத் தலைமைகளால் முஸ்லீம் மக்கள் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களை மூடி மறைக்கும் கைங்கரியத்தைச் செய்கின்றனர் என்றே கூறவேண்டும்.

கூட்டத்தில் சமூகமளித்திருந்தவர்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்த போதும் மிக அண்மையில் இலங்கையிலிருந்து வந்திருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லீம் நண்பர் ஒருவர் வடக்கு-கிழக்கு உட்பட இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த யதார்த்த பூர்வமான தீர்வுகள் மற்றும் நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்திருந்தார். இதன்பின் எனது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முற்பட்ட போது அங்கு புகைப்படங்களை பிடித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் என்னையும் படம் பிடிக்க தயாரான போது அதனை தவிர்க்கும்படி அவரிடம் நான் விடுத்த வேண்டுகோளை நாகரீகமாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தவர்களில் ஒருவரான கோணேஸ் தனது இருக்கையிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக எழுந்து ரகுமான ஜானின் புகைப்படத்தை " தமிழரங்கம்" இணையத் தளத்தில் வெளியிட்டு அவரை இலங்கை அரசுக்குக் காட்டிக்கொடுத்ததாக என் மீது குற்றஞ்சாட்டியதுடன் என்னைப் பேசவிடாதும் தடுத்தார். கோணேஸினுடைய இரத்தக் கொதிநிலை குறையமுன்பே ரகுமான் ஜான் தனது இருக்கையிலிருந்து தூக்கிவீசப்பட்டவர் போல முன்னே வந்து தனது இராணுவ உடையணிந்த புகைப்படத்தை "தமிழரங்கம்" இணையத்தளத்தில் வெளியிட்டு தன்னை இலங்கை அரசுக்குக் காட்டிக்கொடுத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டியதுடன் நான் பேசமுடியாதவாறு கோணேஸும் ரகுமான் ஜானும் கூட்டத்தில் கலவரம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக ரகுமான் ஜானை ஒரு முஸ்லீம் என்ற வகையில் கேலி செய்து "தமிழரங்கம்" இணையத்தளத்தில் நீங்கள் எழுதியது உண்மையா இல்லையா என இப்பொழுதே சொல்லவேண்டும் என சேனா என்னை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தம்மை "முன்னேறிய பிரிவினர்" என அழைத்துக்கொள்ளும் இந்தக் குழுவினர் தம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தைத் தாமே கேலிக்குள்ளாக்கிக் கொண்டிருந்தனர். முஸ்லீம் மக்கள் மீதான தம்புள்ள தாக்குதலைக் கண்டிப்பதை நோக்கமாகக் கொண்டு கூட்டிய கூட்டத்தை அந்த நோக்கத்திலிருந்து திசைதிருப்பி தமது குறுகிய தனிநபர், குழு நலன்களுக்குப் பயன்படுத்தினர். இவ்வேளையில் ரகுமான் ஜானும் கோணேஸும் கூட்டத்தில் என்னைப் பேச விடாது தடுத்தது தவறானதென்றும் அதற்காக அவர்களைக் கூட்டத்தில் மன்னிப்புக் கோருமாறும் மீரா பாரதி, மயில் உட்பட பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரகுமான் ஜான் தான் கூட்டத்தில் நடந்து கொண்ட முறை தவறென மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அதேவேளை கோணேஸ் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில் அழிந்துபோன ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் குருதி அந்த மண்ணில் காயமுன்னே "மே 18 இயக்கம்" என்று பெயரிட்டு புலம் பெயர் அரசியலுக்குள் நுழைந்து "எஞ்சியுள்ள போராளிகளை அரவணைத்துக் கொண்டு" ஈழப் போரை தொடரப் போவதாகக் கூறி ஆதாயம் தேட முற்பட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் புலிகளின் அழிவின் பின் புலிகளின் ஜனநாயக மறுப்பை தமதாக்கித் கொண்டனர். "முன்னேறிய பிரிவினர்" என தமக்குத் தாமே நாமம் சூட்டிக்கொண்டவர்கள், குறைந்தபட்சம் தமது கூட்டத்தில் ஒருவர் கருத்துச் சொல்வதை அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை என்பதை அன்றைய கூட்டத்தில் தெளிவாகக் காட்டியிருந்தனர். "முன்னேறிய பிரிவினர்" என தம்மை அழைக்கும் இவர்கள், தமது கூட்டத்திலேயே ஜனநாயகத்தை வழங்கத் தயாரில்லாதவர்கள், சிறீலங்கா அரசிடமிருந்து ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது வேடிக்கையானது.

கனடாவில் மார்கழி 2004 இல் மனிதவுரிமைகள் காப்பகத்தால் நடைபெற்ற மனிதவுரிமைகள் குறித்த கூட்டத்தில் அதன் பேச்சாளர்களின் ஒருவரான பொப் ரேயை பேசவிடாமல் புலிகளின் அடிவருடிகள் கூச்சலிட்டுத் தடுத்திருந்தனர். ரொறன்ரோவில் அமைந்துள்ள ஸ்காபரோ சிவிக் சென்றலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கனடாவின் பிரபல அரசியல்வாதியான பொப் ரேயை அவர் பிறந்து வளர்ந்த நாட்டிலேயே பேசவிடாமல் தடுத்து ஜனநாயகத்தின் மேலான தமது எதிர்ப்பை காட்டுமிராண்டிகள் போல் புலிகளின் அடிவருடிகள் காட்டியிருந்தனர். மறுநாள் பொப் ரே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது தனது 25 வருடகால பொதுவாழ்க்கையில் முன்எப்பொழுதுமே தனது கருத்தை வெளியிடுவதிலிருந்து ஒருபோதும் தடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் கனடாவில் வாழும் தமிழர்கள் தான் முதன்முதலாக தனது பேச்சுச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்தினர் என்றும் கவலை தெரிவித்திருந்தார். ஒரு ஜனநாயக நாட்டில் வந்து குடியேறிய புலிகளின் அடிவருடிகள் கனடாவிலேயே அந்த நாட்டுக் குடிமகனின் ஜனநாயக உரிமையை மறுத்து காட்டுத் தர்பார் நடத்தி தமது காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

ஆனால் "முன்னேறிய பிரிவினர்" என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு அதே காட்டுமிராண்டித்தனத்தை ரகுமான் ஜானும் அவரது வாரிசுகளும் அன்றைய கூட்டத்தில் நிகழ்த்தியிருந்தனர். இத்தகைய பேர்வழிகள் முஸ்லீம் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிப் பேச கூட்டத்தை கூட்டியது உள்நோக்குடனான செயலேயன்றி வேறல்ல. கனடாவில் "முன்னேறிய பிரிவினர்" என்று வேசமிட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், மக்களுக்கு முற்போக்குத் தலைமை கொடுக்கப் போவதாக பீற்றிக் கொள்ளும் இந்தப் பேர்வழிகள், மக்களுக்கு முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் வழியையே மீண்டும் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.

ஐயரின் நூல் வெளியீடு மாசி 2012 ரொறன்ரோவில் நடைபெற்றபோது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனநாயக மறுப்பை மட்டுமே கொண்டிருந்தார்கள் என ரகுமான் ஜான் விளக்கமளித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ இயக்கப் போராளிகளை கொன்றொழித்து வீதிகளில் ரயர் போட்டு கொழுத்தியதையும், ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்ததையும், வடக்கில் முஸ்லீம் மக்களை அவர்களது சொந்தப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்ததுடன் கிழக்கில் அவர்களை பள்ளிவாசல்களிலும் குடியிருப்புகளிலும் கொன்றொழித்ததையும், அப்பாவிச் சிங்கள மக்களையும், சிங்கள கிராமவாசிகளையும் நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்ததையும், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வதைமுகாம்களை உருவாக்கி ஆயிரக்கணக்கான சக இயக்கப் போராளிகளையும் அப்பாவி மக்களையும் கொன்று குவித்ததுடன் புலம் பெயர் நாடுகளிலும் தமது கொலைவெறிச் செயல்களைத் தொடர்ந்து பிரான்ஸில் சபாலிங்கம், கஜன், நாதன் போன்றவர்களை கொன்றதையும், கனடாவில் தமிழர் வகை துறை வள நிலையத்தை (தேடகம்) தீக்கிரையாக்கியதையும் வெறும் "ஜனநாயக மறுப்பு" என்றும், அது பாசிசமல்ல புலிகளை பாசிஸ்ட்டுக்கள் என எவரும் கூறமுடியாது எனவும் புலிகளின் பாசிசச் செயற்பாடுகளுக்கு விளக்கம் கொடுத்த ரகுமான் ஜானும் அவரது "அரசியல் வாரிசுகளும்" தம்மால் ஒழுங்குசெய்யப்பட்ட முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதலை எதிர்த்த கண்டனக் கூட்டத்திலேயே அனைவரும் அறிய "ஜனநாயக மறுப்பை" அரங்கேற்றியிருந்தனர். இவர்களது இந்த "ஜனநாயக மறுப்பும்" பிழைப்புவாத அரசியலும் இலங்கையில் நடைபெற்ற கொடிய போரின் அழிவில் பாதிக்கப்பட்டு ஒருவேளை உணவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களுக்கோ, சிங்கள பேரினவாதத்திற்கும், தமிழ் குறுந்தேசிய இனவெறிக்கும் இடையே இரட்டை ஒடுக்குமுறையை முகம் கொடுக்கும் முஸ்லீம் மக்களுக்கோ அல்லது தம்புள்ளவில் பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கோ எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.