Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலி பாசிசத்தை நியாயப்படுத்த எத்தனை குறுக்கு வழிகள். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இவர்கள் குற்றம்சாட்டும் ஒரு விடையத்தைக் கொண்டு, தமிழ் (புலிப்) பாசிசத்தை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனத்தை தம் பாசிச நடைமுறை அரசியலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் தங்களை அறிவாளியாக, ஜனநாயகவாதிகளாக, விமர்சகர்களாக தம்மை காட்டிக் கொள்ள முனைகின்றனர். தமிழ் (புலி) பாசிசத்தை நியாயப்படுத்த, சோசலிச நாடுகளிலும் கொலைகள் நடந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இப்படித்தான் இவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அவதூறுடன், தங்கள் பாசிசத்தை நியாயப்படுத்தத் தொடங்குகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான ஒரு பட்டியலை முன்வைத்து, குறுக்கு வழிகளில் தங்கள் பாசிசத்தை நியாயப்படுத்துகின்றனர்.

முதலில் இந்த தமிழ் வலதுசாரிய பாசிட்டுகள் எங்கிருந்துதான், இந்தத் தகவலை பெறுகின்றனர்? ஏகாதிபத்தியம் முதல் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ ஆட்சிகள் வரை, கம்யூனிசத்துக்கு எதிராக முன்வைக்கின்ற பிரச்சாரத்தில் இருந்துதான் இதை எடுத்து இவர்கள் முன்வைக்கின்றனர். அமெரிக்கா முதல் பேரினவாத இலங்கை ஆட்சியாளர்களின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தில் இருந்து எடுத்து இதை முன்வைக்கின்றனர்.

இந்த வகையில் தமிழ் (புலிப்) பாசிட்டுகளின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரமும், அமெரிக்கா முதல் மகிந்தா அரசின் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரமும் ஒன்றுபட்ட வகையில், ஒரே தகவலை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு வெளியில் அல்ல. இதற்கு வெளியில் வேறு நோக்கமும் கூட கிடையாது. மக்களை ஒடுக்குவதை தவிர, தாங்கள் ஒடுக்கியதை நியாயப்படுத்துவதை தவிர, இதில் வேறு சமூக நோக்கம் கிடையாது.

தமிழ் பாசிட்டுகளின் இந்த எதிர்வாதம் மீதான அதன் நோக்கத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் விவாதித்து, அரசியல் ரீதியாக அதை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இங்கு அவர்கள் இதை முன்வைப்பதன் நோக்கம், இதன் மூலம் புலிப் பாசிசத்தை நியாயப்படுத்தி அதைப் பாதுகாப்பதுதான். இந்த வகையில்

1. இதன் மூலம் தமிழ் பாசிசம் இன்று கம்யூனிட்டுகளிடம் இருந்து எதிர்கொள்கின்ற எதிர்ப்பை, இந்த எதிர்வாதம் மூலம்; நியாயப்படுத்திவிட முனைகின்றனர்.

2.கம்யூனிஸ்டுகள் செய்தது போல் தான், நாங்களும் செய்தோம். இதில் என்ன தவறு என்ற எதிர் தர்க்கத்தை கொண்டு எம்மிடம் வாதிட முனைகின்றனர்.

3. தாங்கள் தவறானது என்று கூறும் விடையத்தை கூறி, தங்கள் தவறை நியாயப்படுத்துகின்றனர்.

இந்த வகையில் இவ் இரண்டும் ஒன்றா? முதலாளித்துவ கம்யூனிச எதிர்ப்பிரச்சாரத்தில் இருந்து பொறுக்கித் தரும் தகவல்கள் சரியானதா? கம்யூனிசம் வன்முறையை எப்படி நோக்குகின்றது?

கம்யூனிசமும் வன்முறையும்

சுரண்டலான இன்றைய வர்க்க அமைப்புக்குப் பதில் சுரண்டலற்ற வர்க்க அமைப்பை நிறுவுவது தான் கம்யூனிச தத்துவ சாரம். இதன் மூலம் வர்க்கமற்ற அமைப்பை உருவாக்குவதை தான், மார்க்சியம் தன் கொள்கையாக கொண்டு இயங்குகின்றது. இதை நிறுவும் தனது இடைக்காலத்தில், சுரண்டiலை தடுக்க உருவாகும் வர்க்க அமைப்பை கம்யூனிசத்துக்கு முந்தைய சோசலிச அமைப்பாக நீடிக்கின்றது. இங்கு நீடிக்கும் வர்க்கப் போராட்டம், வன்முறை வன்முறையற்ற இரண்டு வழிகளைக் கொண்டது.

இங்கு யாருக்கு எதிரான வன்முறை என்பதில் தொடங்கி அதன் நோக்கம், அதன் இயல்பு, அதன் பண்பு அனைத்தும் பாசிச அரசியலுக்கு நேர் எதிரானது. பாசிச வன்முறை சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை பாதுகாப்பதற்கானது. இந்த வகையில் முதலாளித்துவ ஜனநாயக சுரண்டல் அமைப்பின் அளவு ரீதியான பண்பு ரீதியான மாற்றம் தான் பாசிசமும், அதன் வன்முறையும். இங்கு பாசிசம் கையாளும் வன்முறையின் நோக்கம், உழைக்கும் மக்களுக்கு எதிரானது. இதற்கு மாறாக சோசலிச அமைப்பில் நடைபெறும் வன்முறை. அது கம்யூனிசத்தை நோக்கி வர்க்கமற்ற சமூகத்தை நிறுவும் போதான வன்முறையின் நோக்கம், உழைக்கும் மக்கள் சார்பானது. இப்படி வன்முறையின் நோக்கம் அடிப்படையில் வேறுபட்டது.

இந்த வகையில் பாசிச வன்முறையை நியாயப்படுத்துபவர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள். கம்யூனிச வன்முறையை எதிர்ப்பவர்கள் உழைக்கு மக்களுக்கு எதிரானவர்கள். இப்படித்தான் அரசியல் உள்ளடக்கமும், நடைமுறையும் உள்ளது.

சோசலிச அமைப்பில் வன்முறைகள் சரியாக கையாளப்பட்டதா?

தவறான எந்த வன்முறையும் கம்யூனிசத்தின் இலட்சியத்துக்கு எதிரானது. அது எதிர் விளைவுகளை கொடுக்கும். இந்த வகையில் எந்தத் தவறையும், கம்யூனிஸ்டுகள் என்றும் நியாயப்படுத்துவதில்லை. அதை விமர்சனம் செய்கின்றது, சுயவிமர்சனம் செய்கின்றது. இதன் மூலம் அதைத் திருத்துகின்றது. இந்த வகையில் கடந்தகால சோசலிச ஆட்சிகளில் தவறான அரசியல் வன்முறை கூறுகள் இருந்ததையும், தவறுகள் இழைக்கப்பட்டதையும் மார்க்சியம் விமர்சனத்துக்கும் சுயவிமர்சனத்துக்கும் உள்ளாக்கி வந்திருக்கின்றது. இந்த வகையில் கூட பாசிசத்தில் இருந்து தன்னை வேறுபடுத்துகின்றது. தன் நடைமுறைகளை தொடர்ச்சியாக மறுபரிசீலனைக்கு உள்ளாக்கி தவறுகளை இனம் கண்டு திருத்துகின்றது.

மார்க்கியம் வன்முறையைத் திணிக்கின்றதா!?

மார்க்சியம் வன்முறையை எதன் மேல் செய்கின்றது என்பதை புரிந்தால்தான், எது தவறு என்பதை நாம் இனம் காணமுடியும்.

கம்யூனிச ஆட்சியில் ஒருவர் மற்றவனைச் சார்ந்து வாழ்வதையும், ஒடுக்கி வாழ்வதையும், சுரண்டி வாழ்வதையும் சட்டப்படி தடுக்கின்றது. இந்தச் சட்டத்தை மறுக்கின்ற போதுதான், சோசலிச அமைப்பில் வன்முறை தோன்றுகின்றது. ஒரு வர்க்கப் போராட்டம் நடக்கின்றது. இதுதான் சோசலிச அமைப்பில் வன்முறைக்கான அரசியல் சாரம்;.

சோசலிச அமைப்பு ஒவ்வொரு மனிதனையும் சமூக உயிரியாக அங்கீகரித்து, சமூகத்தின் ஒரு உறுப்பாக உழைத்து வாழக் கோருகின்;றது. தனிச் சலுகையைக் கொண்டு வாழ்வதை மறுக்கின்றது. சக மனித உழைப்பைச் சார்ந்து வாழ்வதை மறுக்கின்றது. ஒவ்வொரு மனிதனையும் தனக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்து வாழக்கோருகின்றது. இதை ஏற்றுக்கொள்ளாத வன்முறை தான், சோசலிசத்தின் எதிர் வன்முறையாகின்றது.

இந்த வகையில் சக மனிதனைச் சுரண்டி வாழ்வதை ஒழிக்கின்றது. சாதி மூலம் ஒடுக்கி வாழ்வதை குற்றமாக்குகின்றது. ஆணாதிக்கம் மூலம் பெண்ணைச் சுரண்டுவதை தடைசெய்கின்றது. இப்படி நிறம், மதம், இனம், … என்று, மக்களை எந்த வகையில் இழிவுபடுத்திப் பிரிப்பதையும், அதைக் கொண்டு அவர்களைச் சுரண்டுவதை சட்டம் மூலம் தடைசெய்கின்றது. மனிதனிடம் அனைத்து ஏற்றத் தாழ்வைக் கற்பிப்பதையும் தடைசெய்கின்றது.

இன்று அடிமைகளை வைதிருக்கவும், 2ம் உலக யுத்தத்தின் பின் இன நிறவாதத்தை ஐரோப்பாவில் பேச முடியாத வண்ணம் எப்படி சட்டம் தடைசெய்கின்றதோ, தண்டிக்கின்றதோ அதைப் போன்ற சட்டம் தான் சோசலிச நாட்டிலும் அமுலுக்கு வருகின்றது. சோசலிச நாட்டில் அனைத்து மனித ஏற்றத் தாழ்வையும், அதன் அடிப்படையிலான மனித உறவுகளையும் தடைசெய்கின்றது. இதற்கு எதிரான எதிர்ப்பும், அதன் வன்முறையும் தான், சோசலிசத்தின் எதிர் வன்முறையாகின்றது.

இந்த எதிர்ப்பும், அதன் எதிர் வன்முறையும் இல்லாது சோசலிச சட்டத்துக்குக் கட்டுப்பட்டால், சோசலிச நாட்டில் வன்முறைக்கு இடமில்லை. சுரண்டலை, ஆணாதிக்கத்தை, சாதிய மேலாதிக்கத்தை, இனவாதத்தை, நிறவாதத்தை, மதவாதத்தை சோசலிச சட்டத்துக்கு கட்டுப்பட்டு தாமாக அதைக் கைவிட்டால், கம்ய+னிச அமைப்பு நோக்கிய இதன் பயணத்தில் வன்முறைக்கு இடமில்லை. இது அமைதியான வர்க்கமற்ற அமைப்பாக மாறும்.

இதை மறுக்கும் எதிர் வன்முறைதான், கம்யூனிச அமைப்பு நோக்கிய அதன் பயணத்தில் உருவாகும் வன்முறையாகும். மற்றைய மனிதனை தாழ்த்தி வாழ முனையும், சட்டத்துக்கு எதிரான வன்முறைதான் சோசலிச அமைப்பில் உருவாகும் எதிர் வன்முறை.

மற்றைய மனிதனை சுரண்டி வாழ முனையும் வன்முறை மூர்க்கமாக மாறும் போது, இதனால் சோசலிச எதிர் வன்முறை மூர்க்கமாக மாறுகின்றது. இதன் போது தான் வன்முறையும், தவறுகளும் நடக்கின்றது.

சோசலிசத்தில் இருந்து வர்க்கமற்ற கம்யூனிசத்துக்கு செல்லும் பாதையில், வர்க்க மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளை கடக்கும் போதான எதிர்ப்புத் தன்மையை கையாளும் உத்தியில் தான் தவறுகள் ஏற்படுகின்றது. 2000 வருடமாக மனித ஏற்றத்தாழ்வைப் புகட்டி அது சார்ந்து வாழ்ந்து மனிதக் கூறுகளுக்கு, சமூகப் பொருளாதார நடைமுறையூடாக கல்வி புகட்டவும் கற்றுகொள்ளவும் வழிகாட்டவேண்டும். மறுதளத்தில் எதிர் வர்க்கத்தின் பிரதிநிதிகளையும் (வன்முறை மற்றும் தத்துவார்த்தக் கூறுகள்) தனியாக இனம் கண்டு வேறுபடுத்தத் தவறும் போது, தவறான வன்முறைக்கும் தவறுகளுக்கும் வழிகாட்டிவிடுகின்றது.

மக்களைச் சார்ந்து அவர்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டி அவர்கள் போராடாத அரசியல் பின்புலத்தில், அதிகார வர்க்கங்கள் தோன்றுகின்றது. இதன் மூலமான தவறு மற்றொரு எதிர்விளைவைக் கொண்டு வருகின்றது. இப்படி தவறுக்கான கூறுகளை மார்க்சியம் இனம் காண்கின்றது.

இப்படி சோசலிச அமைப்பின் தவறுகள் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் மார்க்சியத்தின் உள்ளார்ந்த அடிப்படைகளில் ஒன்று. இப்படியிருக்க முதலாளித்துவ ஜனநாயக சுரண்டல் அமைப்பு பிரதிநிதிகள் முதல், அதன் பண்பு ரீதியாக அளவு ரீதியாக வேறுபடும் பாசிட்டுகள் வரை, சோசலிச சமூகம் பற்றிய குற்றச்சாட்டுகள் பல இட்டுக் கட்டப்பட்டவை. பொய்ப் புரட்டுகளால் ஆனவை. ஆதாரமற்றவை, அறிவுபூர்வமற்றவை.

முடிவாக

சோசலிச அமைப்பில் சுரண்டலுக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக, நிறவாதத்துக்கு எதிராக … எதிர் வன்முறை இருக்கும். இந்த வகையில் வன்முறை இருந்தது உண்மை. இதனால் இங்கு தவறுகள் நடந்தது உண்மை. ஆனால் இவர்கள் சொல்லும் நோக்கில் அல்ல. இவர்கள் இட்டுக்கட்டிக் கூறும் தரவுகள் மற்றும் நோக்கின் அடிப்படையில் அல்ல.

சரி இவர்கள் கூறுவதன் அடிப்படையில் தான் சோசலிச நாட்டில் நடந்தது என்று எடுத்தால், அதை சொல்லி தமிழ் பாசிசத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்? சொல்லுங்கள்! இவர்கள் எவ்வளவு பெரிய மனித விரோதப் பொறுக்கிகள். கடைந்தெடுத்த பாசிச பித்தலாட்டப் பேர்வழிகள் அல்லவா இவர்கள்;. சொந்த மக்களை கொன்று குவித்த தமிழ் பாசிசத்தை சரி என்று நியாயப்படுத்தும், மகிந்த வகையான மனித விரோதிகள் தான் இவர்களும்;. இதுதானே உண்மை.

 

பி.இரயாகரன்

05.05.2012