Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தத் தத்துவம் படைப்பாளி படைப்புக்கு பொறுப்பல்ல என்ற, இலக்கியப் பொறுக்கித் தனத்தில் இருந்து உருவாகின்றது. சமூகத்தில் இருந்து விலகி நிற்கின்ற, தன் கருத்து சார்ந்த மக்களை அமைப்பாக்கும் சமூகப் பொறுப்புகளையும் கடமைகளையும் நிராகரிக்கின்ற, பிரமுகர்களின் இருப்பியல் சார்ந்த தத்துவம் தான் இது. இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான், புலியின் பாசிச நடத்தைகளுக்கும் அவர்கள் பொறுப்பல்ல என்று புது அரசியல் விளக்கம் கொடுக்கின்றனர்.

இந்தக் கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அண்மையில் குருபரன் தனது "மௌனம் கலைகிறது- 9" என்ற தனது இணையத் தொடரில் எழுதுகின்றார் "இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும்" என்கின்றார். ஆக இதற்கு வெளியில் அல்ல என்று இவர்கள் சொல்ல வருகின்றனர். இது தான் சமூக இயல்பு, இதை மீறி எதுவும் இந்தச் சமூக அமைப்பில் நடந்துவிடவில்லை என்று கூற முற்படுகின்றனர். புலியை நியாயப்படுத்தும் புலியை விட, இந்தச் சருகு புலி அரசியல் சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புத்தனத்தை அடைப்படையாகக் கொண்ட வியாபாரத்தன்மையுடன் அரசியலாகின்றது.

புலிகளின் வன்முறையை தமிழரின் "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"லும் தேடுவது ஒருபுறம் இருக்கட்டும், இந்த வன்முறைக்கு காரணமாக இவர்கள் கூறுகளாகக் காட்டுகின்ற கருதுகோள்கள் தென்னாசியச் சமூகங்களிலும் தான் இருக்கின்றது. ஏன் இதையொத்த சமூகக் கட்டமைப்பைக் கடந்து வந்த, உலகின் எல்லா நாடுகளிலும் தான் இது இருந்து வந்தது, இருக்கின்றது. இப்படியிருக்க புலியினதும், மற்றைய குழுக்களின் நடத்தையை, "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"ற்குள் இருப்பதாக காட்டி தப்புவது, நியாயப்படுத்துவது திட்டமிட்ட அரசியல் திரிபாகும். ஏன் அந்த சமூகத்தில், இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய சமூகத்தில் வன்முறை இருக்கவில்லை. புலியின் வன்முறையை "கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"ல் தேடுவது அபத்தமானது.

இது ஒருபுறம் இருக்க உடனுக்குடன் சூட்டுடன் சூடாக செய்தி வெளியிட்டதாக பெருமையுடன் மார்பு தட்டிக் கூறும் குருபரன், புலிகளின் மனிதவுரிமை மீறல்களை அப்படி கொண்டு வந்தாரா என்றால் இல்லை. நாம் இதை எந்தக் "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"  ல் தேடுவது. இதை குருபரன் தான் சொல்ல வேண்டும். இங்கு குருபரன் புலிகளுடனான தேனிலவு நீடித்த அரசியல் பின்புலத்தில், அதை இன்றும் மூடிமறைத்துக் கொண்டு பெருமை பேச முடிகின்றது. எதை என்றால், மக்களிடம் உண்மையைக் கூறாத தன் சுய தணிக்கை விபச்சாரத்தைப் பற்றித்தான். புலிப் பாசிசத்தை மூடிமறைக்கும் இணக்கமான சுய தேன் நிலவும், அரசு வழங்கிய ஜனநாயக கட்டமைப்புக்குள்ளான ஊடக சுதந்திரத்துக்குள் தாங்கள் புளுத்த பெருமையுடன் கூறுகின்றனர். இங்கு மக்களுக்கு எதிரான புலிப் பாசிசம் சார்ந்த உண்மைகள் புதைக்கப்பட்டது. அரசும் புலியைப் போல், பாசிச வடிவம் எடுத்தபோது, தொடர்ந்து ஊடக பெருமை பேச, அதை வக்கரித்துக் காட்ட எதுவும் அங்கு மிஞ்சியிருக்கவில்லை. பாசிசத்துடனான சமரசம், அதனுடன் கொண்டிருந்த உறவு, சூட்டுடன் சூடாக செய்தியாகியது. புலிப் பாசிசத்தை சூட்டுடன் சூடாக செய்தியாக்கினார்களா எனின் இல்லை.

இந்த உண்மையை ஓத்துக்கொள்ளாத பிழைப்புவாத அரசியல் பின்புலத்தில் நின்று தான் "இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும்" என்று கூறுகின்றனர். இங்கு இது தமிழ் சமூகத்திற்கான பொதுக் கூறல்ல. மறுதளத்தில் இதை ஒத்த சமூகத்தினதும், அங்கு போராடிய கூறுகளினதும் ஒரு பொதுப் பண்புமல்ல.

இந்த வன்முறை என்பது வர்க்க அமைப்பு சார்ந்தது. எந்த வர்க்கத்தை சார்ந்து போராடுகின்றது என்பதை பொறுத்து. வன்முறை இங்கு இருந்துதான், தன்னை துருத்தி வெளிப்படுத்தியது. சுரண்டும் வர்க்கத்தை சார்ந்து, அதைப் பாதுகாக்கும் பண்புரீதியான அளவுரீதியான மாற்றம் தான் பாசிசமாக வெளிப்பட்டது. யாருக்கு எதிராக, சொந்த மக்களுக்கு எதிராக. இது தனக்குத் தானே சுய வன்முறையை ஏவியதாக காட்டும் அரசியல் பித்தலாட்டம், "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"ன் மேலும் குற்றஞ்சாட்ட முனைகின்றது.

நிலவும் சுரண்டும் அமைப்பு சார்ந்த "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"னை பாதுகாக்கும், பண்புரீதியான அளவுரீதியான ஒடுக்குமுறை வடிவம் தான் மக்கள் மேலான வன்முறை. இதை சமூகமயமாக்கும் போது பாசிசமாகின்றது. இந்தப் பாசிச அரசியல் பின்புலத்தில் அதிகாரம், மாபியாத்தனம், அராஜகத்தனம் .. என அனைத்தும் வெளிப்பட்டது. சுரண்டும் வர்க்கம் சார்ந்த "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"னையும், சுரண்டும் வர்க்கத்தை மறுத்து எழுந்த போராட்டங்களை ஒடுக்க, உருவானதுதான் இந்த வன்முறையும் அது சார்ந்த பாசிசமயமாக்கலும்.

சுரண்டும் வர்க்கம் சாராத வேறு எந்தக் காரணத்துக்காகவும், இந்த வன்முறை ஏவப்படவில்லை. "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"லான சமூகத்துக்கு எதிராக, இந்த வன்முறை ஏவப்பட்டது என்றால், அது இந்த சமூகத்தின் இயல்பான போக்கிலிருந்து விலகிய அன்னியமான அரசியல் வடிவமாகும். இது சமூகத்தினுள் நிலவிய முரண்பாட்டின் ஒரு பிரிவைச் சார்ந்து, மற்றைய பிரிவை ஒடுக்குவதில் இருந்த தோன்றியது. சமுகத்தினுள்னான ஒடுக்கப்பட்ட பிரிவுகள் மேலான வன்முறை தான் இது. இது சமூகத்தின் பொது இயல்பில் இருந்து விலகிய வன்முறை கொண்டு ஒடுக்கிய போது, பாசிசமாகின்றது. இதற்கான முழுப் பொறுப்பும், அந்த இயக்கத்தைச் சாரும்.

சமூகத்தை இதன் "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"ல் இருந்து மாற்ற வேண்டியவர்கள், அந்த மாற்றத்தை தடுத்து பாதுகாக்க நடத்திய வன்முறை தான் இது. மாற்றத்தைத் தடுக்க, வன்முறை ஏவப்பட்டது. இந்தப் பின்புலத்தில் தான், அதிகார மோதல்களும், யுத்தங்களும் வெளிப்படையாக அரங்கேறியது. இந்த அரசியல் பின்புலத்தில் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதும் என்ற இருமுனைத் தாக்குதலை நடத்தியது.

இந்தக் கோட்பாட்டின் மற்றொரு திரிபு, வாழ்நிலைதான் சமூக உணர்வுகளை தீர்மானிக்கின்றது என்பதை மறுப்பதாகும். "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"ன் பரம்பரைக் கூறாக வன்முறையைக் காட்டுவது அபத்தமாகும். இது தன்னளவில் எல்லா ஒடுக்குமுறைகளையும் இதன் கூறாகக் காட்டி நியாயப்படுத்துவதாகும்;.

சாதி ஒடுக்குமுறைக்கு காரணம் அதில் ஈடுபடுவன் அல்ல, அவனின் பரம்பரைக் கூறு தான் ("கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"ன் கூறு) என்று கூறுவது. ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு இதில் ஈடுபடும் ஆண் காரணமல்ல என்ற கூறுவதற்கு ஒப்பானதாகும். சாதிய சித்தாந்தத்தில் இருந்து, ஆணாதிக்க சித்தாந்தத்தில் இருந்து … இதில் ஈடுபடும் தனி மனிதனை விடுவித்து விடுகின்றது. இங்கு வாழ்நிலைதான் சமூக உணர்வுகளைத் தீர்மானிக்கின்றது என்பதை இது மறுத்துவிடுகின்றது. "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"னை பரம்பரை கூறாக அனைத்தையும் காட்டுவதன் மூலம் மாற்றத்தையும், அதற்கான கூறுகளையும் மறுத்துவிடுகின்றனர்.

சாராம்சத்தில் வன்முறை "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டி"ன் இயல்பான, அந்த சமூகத்தின் சொந்த அரசியல் வெளிப்பாடாக நியாயப்படுத்தப்படுகின்றது. கோட்பாட்டு ரீதியாக திரித்துக் காட்டுவதன் மூலம், வன்முறையை ஏவியவர்களுடன் நின்று மீண்டும் கொக்கரிக்கின்றது. "கலாச்சாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும்" தான் வன்முறைக்கு காரணம் என்று கூறி, புலியையும் பிரபாகரனையும் குற்றவாளியல்ல என்று காட்டும் கோட்பாட்டின் மற்றொரு திரிபு தான் இது.

பி.இரயாகரன்

30.04.2011